Thursday, September 19, 2024

கொச்சிக்கு வந்த கொச்சு கிருஷ்ணனும் அம்மா கொண்டாடிய பொம்மை கிருஷ்ணனும்

 கொச்சிக்கு வந்த கொச்சு கிருஷ்ணனும் 

அம்மா கொண்டாடிய பொம்மை கிருஷ்ணனும்



கொச்சி விமானத்திற்காக லவுன்சில் காத்திருந்த பொழுது அந்த இளம் பெண்ணை பார்த்தேன். கையில் ஒரு சிறிய அழகிய பிரம்பு கூடையோடு நடந்து கொண்டிருந்தாள்(ர்). யாருக்கோ அன்பளிப்பாக கொடுக்க கொண்டு செல்கிறாள் என்று நினைத்தேன்.

விமானத்தில் எனக்கு அடுத்த இருக்கைகளில் அவளும், அவள் அம்மாவும் அமர்ந்து கொண்டிருந்தார்கள். அம்மாவும் பெண்ணும் ஏகப்பட்ட செல்ஃபி எடுத்துக் கொண்டார்கள். விமானம் புறப்படும் நேரம் செல்ஃபோன், மடிக்கணிணி எதையும் பயன்படுத்தக் கூடாது என்னும் அறிவிப்பை சட்டை செய்யாமல் வீடியோ எடுப்பது, வீடியோகால் பேசுவது போன்ற செயல்களில் ஈடுபட்டது எரிச்சலைத் தந்தது.

ஒரு குட்டித் தூக்கம் போட்டுவிட்டு முழித்துக் கொண்ட பொழுது அந்த பக்கத்து இருக்கை பெண் தன்னுடைய பிரம்புக் கூடையை சாப்பாட்டு மேஜையின் மீது வைத்து, அதன் மூடியை திறந்து வைத்திருந்தாள். அழகாக அலங்கரிக்கப்பட்ட சிறு விக்கிரகம்.

“துர்கையா?” என்று கேட்டேன்.

“இல்லை, கிருஷ்ணா” என்றாள்

“யாருக்காவது பரிசளிக்கப்போகிறாயா?” என்று கேட்டதும்

“மதுராவைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?” என்று என்னிடம் வினவினாள்.

“ஓ! ஒரு முறை சென்றிருக்கிறேன்.பர்த் ப்ளேஸ் ஆஃப் கிருஷ்ணா”

“அதுதான் என்னுடைய சொந்த ஊரும் கூட. இந்த கிருஷ்ணர் பதினைந்து வருடங்களாக எங்களோடு இருக்கிறார், எங்கள் குடும்பத்தில் ஒருவர். லட்டு கோபால்ஜி என்போம். லட்டு என்பது குழந்தைகளை செல்லமாக அழைப்பது. கோபால்ஜியை நாங்கள் செல்லமாக லட்டு கோபால்ஜி என்போம். இவருக்கு தினசரி உடை மாற்றுவோம், நாங்கள் சாப்பிடுவது எல்லாவற்றையும் இவருக்கும் கொடுப்போம்”. என்று கூடைக்குள் காட்டினாள். ஒரு கு..ட்..டி வெள்ளி டம்ப்ளர், இரு டப்பாக்கள். அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்த கிருஷ்ண விக்கிரகம்.





அந்தப் பெண்ணோடு மேலும் பேசிக் கொண்டிருந்ததில் அவர் ஒரு மருத்துவர் என்பது தெரிந்தது. நீட் எழுதி பெங்களூர் மெடிக்கல் காலேஜில் மருத்துவம் படித்தாராம். இப்போது மருத்துவத்தில் பி.ஜி. படிப்பதற்காக நீட் தேர்வுக்கு தயாராகி வருகிறாராம். இவருடைய கிராமத்தில் இவர்தான் முதல் மருத்துவராம். எதிர்காலத்தில் தன்னுடைய சொந்த ஊரில் மருத்துவமனை வைக்க ஆசையாம். இதற்குள் கொச்சி வந்துவிட, அந்தப் பெண்ணுக்கு வாழ்த்து சொல்லி விடை பெற்றேன்.

அந்தப் பெண்ணுக்கு கண்ணன் மீது இருப்பது பக்தியா பாசமா? என் அம்மா கூட இப்படித்தான். கண்ணன் மீது பாசம் கொண்டவள். எங்கள் வீட்டில் ஒரு கிருஷ்ணர் பொம்மை உண்டு. அம்மா ரோஜாப் பூவை அந்த கிருஷ்ணன் பொம்மைக்கு வைத்து விட்டு, “கிருஷ்ணனுக்கு ரோஜா பூ வைத்தால் எவ்வளவு அழகாக இருக்கு!’ என்று ரசிப்பாள். கோகுலாஷ்டமிக்கு எத்தனை விதமான பட்சணம் செய்தாலும் போதும் என்றே தோன்றாது. தன்னுடைய குழந்தைக்கு ஆசை ஆசையாக செய்வது போலத்தான் செய்வாள். மாவடு போட்டால் உடனே தயிர் சாதம் பிசைந்து மாவடுவோடு நைவேத்தியம் செய்வாள். தினசரி நைவேத்தியம் உண்டு.

ஒரு முறை அம்மா ஊருக்குச் சென்றிருந்தபொழுது நான் குளிக்காமல் சமைத்தேன். அதனால் சுவாமிக்கு நைவேத்தியம் செய்யவில்லை. முதல் நாள் எதுவும் தெரியவில்லை, இரண்டாம் நாள் கிருஷ்ணன்(பொம்மை) முகம் சற்று வாடியிருப்பது போல தோன்றியது. மூன்றாம் நாள் இன்னும் அதிகமாக வாடி, குறிப்பாக பசியால் வாடியது போல தோன்றியதும் குற்ற உணர்ச்சி தோன்றி விட்டது. “ஐயோ! மூன்று நாட்களாக கிருஷ்ணரை பட்டினி போட்டு விட்டோமே?” என்று அடுத்த நாள் குளித்துவிட்டு சமைத்து, நைவேத்தியம் செய்ததும், நம்புங்கள் அந்த கிருஷ்ணன்(பொம்மை என்று சொல்ல மனம் வரவில்லை) முகம் மலர்ந்தது. அதுவும் பசியால் அழுத குழந்தைக்கு ஆகாரம் கொடுத்ததும் ஒரு மலர்ச்சி வருமே.. அதே மலர்ச்சி. அம்மா தன் பக்தியால் பொம்மைக்கு உயிர் கொடுத்து விட்டாளோ?