கணம்தோறும் பிறக்கிறேன் 

Tuesday, January 1, 2019

சந்தைக்குப் போகலாமா?

சந்தைக்கு போகலாமா?


கீதா ரங்கனின்  'நானும் சந்தைக்கு போனேன்' பதிவை படித்ததும் என்னுடைய சந்தை அனுபவங்களையும் எழுதலாமே என்று தோன்றியது. 

நாங்கள் திருச்சி உறையூரில் இருந்த பொழுது எப்போதாவது அம்மா கறிகாய் வாங்கி வரச்சொல்லுவாள். நானும் என் அக்காவும் உறையூர் மார்க்கெட் சென்று அம்மா என்ன காய் வாங்கி வரச்சொன்னாளோ அதை மட்டும் வாங்கி வருவோம். பேரமெல்லாம் பேசத் தெரியாது. இப்போதும் பேரம் பேசத்தெரியாது. சில சமயம் எங்களுடைய மூன்றாவது அக்காவின் சிநேகிதி எங்களுக்காக பேரம் பேசி கறிகாய்கள் வாங்கித்தருவாள். அவள் பிரபல மிருதங்க வித்துவான் திருச்சி சங்கரனின் கடைசி சகோதரி. எங்கள் வீட்டிற்கருகில்தான் வசித்தார்கள்.   

திருச்சியில் பெரிய மார்க்கெட் என்று அழைக்கப்படும் காந்தி மார்க்கெட்தான் ஹோல்சேல் மார்க்கெட். அங்கு ஊரிலிருந்து தேங்காய்களை விலைக்குப்போட மாமாக்கள் வருவார்கள். நாங்கள் சென்றதில்லை. ஆனால் சில சமயம் அந்த வழியாகச் செல்லும் பொழுது அம்பாரமாக குவித்து வைக்கப்பட்டிருக்கும் சிவப்பு மிளகாய்களையும், லாரி நிறைய இருக்கும் வெல்லத்தின் மீது ஏறி நின்று மண்வெட்டியால் அதை வெட்டிப் போடும் கூலி ஆட்களையும் பார்த்து பிரமித்திருக்கிறேன். திருச்சி யின் காந்தி மார்க்கெட் பற்றி ஒரு முறை ஆனந்த விகடனில் கூட கவர் ஸ்டோரி வெளியிட்டிருந்தார்கள்.

ரொம்ப ஸ்வாரஸ்யமான ஒரு சந்தை என்றால் அது மஸ்கட்டில் இருக்கும் வாடி கபீர் வெஜிடபிள் மார்கெட் எனலாம். அங்கிருந்த முகமது என்பவரின் காய்கறி கடையில்தான் பெரும்பான்மையான தமிழர்கள் காய் வாங்குவார்கள். அவரை ஹிந்து, முஸ்லிம் ஒற்றுமைக்கு உதாரணமாக சொல்லலாம்.  ஒவ்வொரு வருடமும் அங்கு நடக்கும் ஐயப்பன் பூஜையில் பிரசாதம் தயாரிக்க தேவையான தேங்காய்களை இலவசமாக வழங்குவார். "உங்களுக்கு கோகுலாஷ்டமியா? ஶ்ரீஜெயந்தியா?" என்று கேட்குமளவிற்கு எல்லா ஹிந்து பண்டிகைகளும் மட்டுமல்லாது எந்த பண்டிகைக்கு எது தேவை என்பதும் அத்துப்படி.

பண்டிகைகளை கொண்டாடாத ஒரு பெண்மணியிடம்,"உங்கள் வீட்டில் யாராவது இறந்து போய் விட்டார்களா? எந்த பண்டிகைக்கும் விசேஷமான காய் எதுவும் வாங்குவதில்லையே?" என்று கேட்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.  வரலக்ஷ்மி நோன்பிற்கு சிறு வாழைக்கன்று, வெற்றிலை,பாக்கு, பூ என்று அத்தனையையும் வரவழைத்து கொடுப்பார். இத்தனைக்கும் அப்போது சென்னைக்கு டைரக்ட் ஃபளைட் கிடையாது.

அவர் காய்கறிகளை எடை போடும் அழகே அழகு! நம் கையில் ஒரு பேப்பர் பென்சில் கொடுத்து எழுதிக்கொள்ளுங்கள் என்று கூறி விட்டு, நாம் எடுத்து வைத்திருக்கும் காய்கறி பாக்கெட்டுகளை ஒவ்வொன்றாக கையில் எடுப்பார், எடை பார்க்கும் மிஷினில் வைக்காமலேயே கத்தரிக்காய் 800/, அவரைக்காய் 450/ தக்காளி 700/ ஒரு கிலோவா வாங்கிக்கிறீங்களா? என்று கூறியபடியே அதனதற்குண்டான விலையையும் கூறுவார். நாம் கூட்டி முடிக்கும் முன்பே மொத்த தொகை எவ்வளவு என்று அவர் சொல்லி விடுவார். எடையும் துல்லியமாக இருக்கும்.  கிரிக்கெட் வெறியரான அவருக்கு இந்தியா தோற்று விட்டால் அவ்வளவுதான் தாங்கவே தாங்காது. புலம்பித்தள்ளி விடுவார். அதுவும் பாகிஸ்தானோடு மாட்ச் என்றால், "பச்சை பச்சை" என்று புலம்பல் அதிகமாக இருக்கும். 

பின்னாளில் சென்னைக்கு டைரக்ட் ஃப்ளைட் விட ஆரம்பித்த பிறகு கீரை, வாழைத்தண்டு, வாழைப்பூ உட்பட பல காய்கறிகள் சூப்பர் மார்க்கெட்டுகளில் கிடைக்க ஆரம்பித்தன.  லூலு, கேர்ஃபோர் போன்ற மெகா மார்க்கெட்டுகள் வந்து சிறிய கடைகளை முழுங்கின. போதும் போதாதற்கு விசா கெடுபிடிகள். வாடிகபீர் மார்க்கெட்டும் முற்றிலும் ஏ.சி. செய்யப்பட்டு நவீனமய- மாக்கப்பட்டது. ஆனால் அங்கு நம் நண்பர் முகமது இல்லை. நாடு திரும்பி விட்டார் என்றார்கள்.

வாடி கபீரில் காய்கறி சந்தை தவிர  ஃப்ரைடே மார்க்கெட் என்று ஒன்று உண்டு. அதில் செகண்ட் ஹேண்ட் காரிலிருந்து வீட்டு உபயோக பொருட்கள் வரை பலதும் விற்பனைக்கு வரும். எல்லாமே செகண்ட் ஹேண்ட்தான். இப்பொழுது இருக்கிறதா என்று தெரியவில்லை.

பங்களூரில் சந்தை என்பதை சந்தே என்கிறார்கள். திப்பசந்ராவில் இருந்தபொழுது பக்கத்தில் இருந்த வெஜிடபிள் மார்க்கெட்டில் ஃப்ரஷ் காய்கறிகளை பார்த்ததும் ஆர்வ கோளாறில் எக்கச்சக்கமாக வாங்கி விட்டேன். 

பி.காம். படித்த பொழுது 'மணி,பாங்கிங் அண்ட் இண்டர்நேஷனல் ட்ரேட் என்னும் பாடப்பிரிவில் வந்த லண்டன் மணி மார்க்கெட்டும், நியூயார்க் மணி மார்க்கெட்டும் என்னை மிரட்டியிருக்கின்றன.

கறிகாய் சந்தையை தவிர மாட்டுச்சந்தை, குதிரை சந்தை இவையெல்லாம் தெரியும். திருவண்ணாமலையில் இவை பிரபலம். நகைச்சந்தை தெரியுமா? துபாயில் கோல்ட் சூக் (சூக் என்னும் அரபி வார்த்தைக்கு சந்தை என்று பொருள்)என்று ஒரு இடம் உண்டு. அந்த தெரு முழுக்க நகைக்கடைகள்தான். நடு இரவில் கூட அங்கிருக்கும் கடைகளில் கண்ணாடி பெட்டியில் விதம்விதமான தங்க நகைகள் விளக்கு வெளிச்சத்தில் ஜாஜ்வல்யமாக ஜொலித்து கொண்டிருப்பதை காணலாம்.

துபாய் நகை சந்தையின் ஒரு தோற்றம் 


கடையில்  நகைகள் 


கின்னஸில் இடம் பெற்ற விலை உயர்ந்த மோதிரம். 
இவையெல்லாம் லௌகீக சந்தைகள். ஆன்மீகத்திலும் ஒரு சந்தை இருக்கிறதாம். அது பண்டரிபுரம் என்றும் அங்கு விட்டல் என்னும் நாமத்தை கொடுத்து, மஹாவிஷ்ணுவின் மற்ற நாமாக்களை வாங்கலாம் என்று ஒரு பஜனை பாடல் இருக்கிறது. 'நாமாச்சா பஜார் பண்டரி நாமாச்சா பஜார்' என்னும் பாடலை உடையாளூர் கல்யாணராமன், ஈரோடு ராஜாமணி, விட்டல்தாஸ் மகராஜ் போன்றவர்கள் பாட கேட்காதவர்கள் கேட்டுப்பாருங்கள்.


படங்கள்: நன்றி கூகுள் 

27 comments:

 1. இனிமை உங்கள் வாழ்வில் பெருக்கட்டும் வசந்தத்தின் வாசம் எந்நாளும் வீசட்டும்.இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி! உங்களுக்கும் இனிமையான புத்தாண்டு அமைய வாழ்த்துகிறேன்.

   Delete
 2. சந்தை அனுபவங்களை சந்தைப்படுத்தி விட்டீர்களா? ஹா... ஹா... ஹா... சுவாரஸ்யமாய் இருந்தது.

  ReplyDelete
 3. தஞ்சையில் ஈவினிங் பஜார் என்று அழைக்கப்படும் காய்கறிச் சந்தைக்குச் சென்று பலமுறை காய்கறி, கீரை வாங்கிய அனுபவம் உண்டு. பறித்தவுடன் நேரடியாக கடைக்கு வரும் அங்கு பார்த்ததுபோல நல்ல காய்கறிகளை இதுவரை வேறெங்கும் பார்க்கவில்லை.

  ReplyDelete
 4. மதுரையில் பி 4 போலீஸ் ஸ்டேஷன் அருகே நடக்கும் சந்தைக்கு பலமுறை சென்றிருக்கிறேன். சைக்கிளில் செல்வோம். அது ஒரு அனுபவம். அங்கு காய்கறி கீரை பழங்கள் தவிர வேறு பொருட்களும் கிடைக்கும். மதுரையில் மாடுகள் விற்கப்பட்ட சந்தையே மாட்டுத்தாவணி என்று சொல்வார்கள்.

  ReplyDelete
 5. சென்னையில் அந்தக் காலத்திலிருந்தே மாம்பழம் காய்கறி பஜார் சென்றதுண்டு. க்ரோம்பேட் ராதா நகர் பக்கம் செல்லும்போது காய்கள் வாங்கியதுண்டு. மற்றபடி மெகாமாலில் போண்டா இடங்களில் எல்லாம் காய்கள் வாங்கி இருந்தாலும் அவ்வளவு சுவாரஸ்யமில்லை! உங்கள் கபீர் கடை நினைவுகள் சுவாரஸ்யம்.

  ReplyDelete
  Replies
  1. மன்னிக்கவும், மாம்பழம் அல்ல, மாம்பலம்!

   Delete
  2. வாங்க ஸ்ரீராம். சாதாரணமாக ஒரு பின்னூட்டம், அதிக பட்சமாக இரண்டு பின்னூட்டங்கள்தான் போடுவீர்கள். உங்களை நான்கு பின்னூட்டங்களுக்கு மேல் போட வைத்து விட்டதா சந்தை! நன்றி!

   Delete
 6. ஹை பானுக்கா உங்க சந்தை நினைவுகள் வந்துருச்சா..இதோ வாசித்துட்டு வரேன்..

  கீதா

  ReplyDelete
 7. அக்கா சந்தை என்று வேர்ல்ட் டூரே அடிச்சிட்டீங்க!! ஹா ஹா

  அமெரிக்காவிலும், கனடாவிலும் ஃபார்மர்ஸ் மார்க்கெட் உண்டு. அது தவிர ஃபார்ம் மார்க்கெட் நாஏ தோட்டத்துள் சென்று நமக்கு எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு எடுத்துக்கலாம் 5 டாலர் கொடுத்துவிட்டு பெரிய பையைக் கொண்டு போனால் எவ்வளவு ஆப்பிள், ஸ்ட்ரா பெர்ரி, கார்ன் என்று ஏதேனும் ஒரு தோட்டம் ...கார்ன் ஃபீல்டில் போயே பறிக்கலாம்...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. நம் ஊருக்கு இவையெல்லாம் சரி படுமா? முதல் ஆளே சுத்தமாக மொட்டை அடித்து விடுவார்.

   Delete
 8. ஆமாம் அக்கா இங்கு சந்தே என்றுதான் சொல்லுறாங்க. கே ஆர் மார்க்கெட் பத்தியும் இங்கு சொல்லுவாங்க...ஆனா அதுக்குப் போய் வர சார்ஜ் நேரம் எல்லாம் யார்?

  அக்கா வாடி கபீர் (ஆ இதை பிரித்து நம் ஸ்டைலில் வாசித்துப் பார்த்தால் ஆ வாடி!! கபீர்!! ஹா ஹா) கடை செமையா இருக்கு. அதுவும் முகமது ஆச்சரியப்படுத்துகிறார். இங்கும் கூட நாம் எடுக்கும் காய்கள் அரை கிலோ என்று சொன்னால் சில சமயம் வெயிட் பார்க்காமலேயே எடுத்துக்கோன்னு சொல்லிடறாங்க. வீட்டுக்கு வந்து வெயிட் பார்த்தால் அரைக்கிலோவுக்குக் கொஞ்சம் கூடுதலா இருக்குமே அல்லாமல் குறைவாக இருப்பதில்லை..

  நகைச் சந்தைப் பற்றி கேள்விப்பட்டிருக்கேன்..ஜொலிக்குது!.படங்கள் ப்ளஸ் அந்த மோதிரம் யமமடியோவ்...!!!

  உங்க சின்ன வயது அனுபவம் ஸ்வாரஸ்யம்..

  சரி கடைசியா ஒரு கேள்வி.....கோகுலாஷ்டமி, ஸ்ரீ கிருஷ்ணஜெயந்தி வித்தியாசம் உண்டா என்ன?...ஓ புரியுது அஷ்டமியில் செய்வது கோகுலாஷ்டமி அண்ட் நட்சத்திரத்தில் கொண்டாடுவது ஸ்ரீஜெயந்தியா? கரெக்ட்டா?

  நல்ல ஸ்வாரஸ்யமான பதிவு..அக்கா..


  ReplyDelete
  Replies
  1. ஆம், எங்களைப்போன்ற ஸ்மார்த்தர்கள் கோகுலாஷ்டமியையும், உங்களைப்போன்ற வைணவர்கள் ஸ்ரீ ஜெயந்தியையும் கொண்டாடுவோம்.வருகைக்கு நன்றி.

   Delete
 9. சந்தை நல்ல சந்தை...

  அன்பின் ஸ்ரீராம் சொல்லியதைப் போல
  தஞ்சை மாலைநேர காய்கறி அங்காடிகள் வெகு பிரசித்தம்...

  யாருக்கும் பிறந்த மண்ணை விட்டுக் கொடுக்க மனம் வராது....

  இங்கேயும் அதைப் போலத்தான்...

  தஞ்சாவூரு...ன்னா தஞ்சாவூர் தான்!..

  நல்ல காய்கறிகள் வாழ்க..
  நலந்தரும் சந்தைகளும் வாழ்க...

  ReplyDelete
  Replies
  1. வாங்க துரை சார். அவரவர்களுக்கு, அவரவர் ஊர் பாசம். நல்லதுதான். வருகைக்கு நன்றி.

   Delete
 10. லூலு, கேர்ஃபோர் போன்ற மெகா மார்க்கெட்டுகள் வந்து சிறிய கடைகளை முழுங்கின/

  பானுக்கா இந்தக் கருத்தை நான் அப்படியே வழி மொழிகிறேன். ஆமாம் சந்தைப் பொருளாதாரத்தில் இது சமீபத்தில் நம்மூரிலும் மிகவும் தாக்கிய ஒன்று...நம்மூரில் மால்களை விடுங்கள், பெரிய பெரிய செயின் ஷாப்ஸ் மற்றும் டிப்பார்ட்மென்டல் ஸ்டோர்ஸ், அப்புறம் ஆன்லைன் காய் மார்க்கெட், பலசரக்கு மார்க்கெட்...என்று...

  கீதா

  ReplyDelete
 11. நான் முடிந்தவரை சிறு வியாபாரிகளிடம் வாங்குவதை வழக்கமாக கொண்டிருக்கிறேன்.

  ReplyDelete
 12. உறையூர்,திருச்சி எனப் புறப்பட்டு, மஸ்கட், லண்டன், திருவண்ணாமலை, துபாய் வழியாக பண்டரிபுரத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறீர்களே.. நெடும்பயணம்!

  ReplyDelete
  Replies
  1. எழுத ஆரம்பித்தேன், அது இழுத்துக்கொண்டு போய் விட்டது. வருகைக்கு நன்றி!

   Delete
 13. வணக்கம் சகோதரி

  தாங்கள் சந்தையை பற்றி கூறிய தகவல்கள் ஸ்வாரஸ்யமாக இருந்தது. மிகவும் அழகாக, விஸ்தாரமாக வர்ணித்திருக்கிறீர்கள. துபாய் நகைக்கடை சந்தையைப் பற்றியும் அறிந்து கொண்டேன். தங்கள் மலரும் நினைவுகள் அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும், கருத்து பதிவிற்கும் நன்றி!

   Delete
 14. லௌகிகத்தில் ஆரம்பித்து ஆன்மிகத்தில் முடித்து விட்டீர்கள். எங்க வீட்டில் என்னை எல்லாம் சந்தைக்கோ, காய்கறி வாங்கவோ அனுப்ப மாட்டார்கள். என்றாலும் அப்பாவுக்குத் தெரியாமல் (ஹிஹிஹி!) மதுரை தமிழ்ச்சங்கம் ரோடு கடைசியில் இருந்த சந்தைக்கு 2,3 தரம் சிநேகிதியோடு போயிருக்கேன். அங்கே யாரானும் அப்பாவுக்குத் தெரிஞ்சவங்க வந்துடப் போறாங்களேனு பயம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா இருக்கும். வடக்காவணி மூலவீதி சென்ட்ரல் மார்க்கெட்டுக்கு அக்கிக்கு எழுதிக்கத் தான் போயிருக்கேன். காய்கறி வாங்க அல்ல. அப்புறமாக் கூட அங்கே உள்ள பூ மார்க்கெட்டில் தேவையான பூக்களை வீட்டுக்கார மாமி பெண்கள் வாங்கிக் கொடுத்துடுவாங்க. ஆக, மொத்தம் நான் சந்தைக்கே போனதில்லை எனலாம். மதுரை சின்னக்கடை மார்க்கெட் ரொம்பச் சின்னது என்றாலும் கீரை, பச்சை மொச்சை, பட்டாணி, பட்டர் பீன்ஸ், டபுள் பீன்ஸ் எல்லாம் புத்தம் புதிதாகக் கிடைக்கும்.

  ReplyDelete
 15. ஒரே ஒரு தரம் சென்னை கொத்தவால் சாவடி இருந்தப்போ அங்கே நாங்க ரெண்டு பேரும் போனோம். எனக்குப் பிடிக்கலை. ஆனால் நாங்க அம்பத்தூரில் குடித்தனம் செய்தப்போ எல்லாம் நான் தான் அம்பத்தூர் ரயில் நிலையம் அருகில் உள்ள காய்கறி மார்க்கெட் சென்று காய்களை வாங்கி வந்திருக்கேன். கீரை எல்லாம் அக்கம்பக்கம் கிராமத்தில் இருந்து தலையில் சுமந்து வந்து விற்பார்கள். வாங்கலாம். அதுவே மதுரையில் நான் கல்யாணத்துக்கு முன்னால் இருந்தப்போ கீரை, பச்சைமிளகாய், தக்காளி, கருகப்பிலை, கொத்துமல்லி எல்லாம் அரிசி போட்டு வாங்குவோம். காசு கொடுத்து வாங்கியதே இல்லை!

  ReplyDelete
  Replies
  1. வாங்க கீதா அக்கா, நீங்கள் இல்லாமல் ஒரு கை குறைந்தது.
   கீரை, பச்சை மிளகாய் அரிசி போடு வாங்கியதாக நினைவு இல்லை, கறிவேப்பிலை, கொத்துமல்லி, இலந்தை பழம், ஈச்சம் பழம் போன்றவை அரிசி போட்டு வாங்கியிருக்கிறோம்.

   Delete
 16. நான் பெரிய மால்கள், சூப்பர் மார்க்கெட் போன்றவற்றிற்குப் போனதே இல்லை. என் மைத்துனர் வீட்டில் தி.நகரில் நீல்கிரிஸில் காய், பழங்கள் வாங்குவதைப் பெருமையுடன் சொல்வார்கள். ஆனால் அந்தப் பழங்களில் அவ்வளவு ருசி இல்லை என எனக்குத் தோன்றும். இங்கேயும் ஶ்ரீரங்கத்தில் பழமுதிர்சோலை மாதுளம்பழம் அத்தனை ருசியாக இருப்பதில்லை. தெருவில் வண்டிக்காரரிடம் வாங்குவது ருசியோ ருசி! உதிர்க்கும்போதே கையெல்லாம் சாறு ஒட்டும். சிவப்புன்னா அவ்வளவு சிவப்பு நிறமாகவும் இருக்கும்.

  ReplyDelete
 17. ராஜஸ்தான், குஜராத் காய்கறி மார்க்கெட்டுகளில் பச்சைக் கொண்டைக்கடலை அப்படியே தோலோடு வரும். சுட்டுச் சாப்பிட நன்றாக இருக்கும். அதே போல் துவரையும் வரும். கூட்டில் போட துவரை நன்றாக இருக்கும். அங்கே எங்கள் குடியிருப்பில் கூடத் துவரை பயிரிட்டு வளர்த்தோம். வேர்க்கடலை, பேரிச்சை போன்றவை கொத்துக்கொத்தாகக் கிடைக்கும். கொஞ்சம் சிவப்பான பேரிச்சையை வாங்கிக் காய வைத்துக் கொள்வோம்.

  ReplyDelete
  Replies
  1. எனக்கும் மால்களுக்கு செல்வதில் அத்தனை விருப்பம் இல்லை. இங்கு(பெங்களூரில்) பொழுது போக்கவும், சினிமா பார்க்கவும் செல்கிறோம். அங்கு பர்சேஸ் எதுவும் செய்வது கிடையாது.

   Delete