கணம்தோறும் பிறக்கிறேன் 

Monday, December 26, 2022

ஆன்லைன் அலப்பறைகள்!

 ஆன்லைன் அலப்பறைகள்!


எழுபதுகளின் துவக்கத்தில்தான் திருச்சியில் முதன்முதலாக சிந்தாமணி சூபர் மார்கெட் வந்தது. அதுவரை செட்டியார் அல்லது நாடார் கடைகளில் மளிகை சாமாங்களை வாங்கிய மக்களுக்கு பிளாஸ்டிக் கவர்களில் பேக் செய்யபட்ட துவரம் பருப்பு, கடலைப் பருப்பு எப்படி இருக்குமோ? என்ற சந்தேகம் இருந்தது.  

அப்போதெல்லம், ஏன் எண்பதுகளில் கூட வருடாந்திர சாமான் என்று ஒரு வருடதிற்கு தேவையான பருப்பு, புளி, மிளகாய் வற்றல், போன்றவற்றை மொத்தமாக பங்குனி, அல்லது சித்திரை மாதங்களில் வாங்கி வெய்யிலில் காய வைத்து, பரணில் பெரிய பானைகளில் வைத்து அவ்வப்பொழுது எடுத்து பயன் படுத்துவார்கள். வீடுகள் சிறியதாக ஆக பரண் என்னும் சங்கதி வழக்கொழிந்து போனது. இப்போதைய லாஃப்டுகள் பரணுக்கு அருகே வர முடியாது.      

அதன் பிறகு மாதந்திர சாமான்கள் வாங்கும் வழக்கம் வந்த பொழுது, நாடார் கடைகளில் பேப்பரை கூம்பு வடிவத்தில் செய்து அதில் மடித்து தரும் து.பருப்பு, க.பருப்பு, ப.பருப்புகளை கையால் தொட்டுப் பார்த்து வாங்குவதில் கிடைக்கும் திருப்தி, பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் சீல் செய்யப்பட்டு விற்கப்படும் பண்டங்களை வாங்குவதில் இல்லை என்று அப்போது நினைத்தார்கள். நாளடைவில் நாடார் கடைகளிலும் நெகிழி பைகளே உபயோகத்திற்கு வந்தன.

அதைப் போலத்தான் ஆன் லைன் வர்தகங்கள். 55+ல் இருக்கிறவர்கள் வேண்டுமானால் ஆன் லைன் வியாபாரத்தில் விருப்பம் காட்டாமல் இருக்கலாம். இளைய தலைமுறை பெரும்பாலும் ஆன் லைன் வர்த்தகத்தைத்தான் விரும்புகிறார்கள். அதுவும் கொரோனா உபயத்தால் ஆன்லைனுக்கு அடிமையாகி விட்டார்கள் என்றே சொல்லலாம். எங்கள் உறவில் ஒருவர் அமெரிக்காவில் வசிக்கிறார். சமீபத்தில் தன் மகனுக்கு  திருமணத்தை அங்கேயே நடத்தினார். கல்யாண ஜவுளி, நகை எல்லாவற்றையும் ஆன் லைனிலேயே முடித்து விட்டாராம்.   

எங்கள் வீட்டைப் பொருத்தவரை இப்போதெல்லம் எல்லாம் ஆன் லைனில்தான். போக்குவரத்து நெரிசலில் அவதிப்பட வேண்டாம். இரண்டு மூன்று சைட்டுகளில் விலையை ஒப்பிட்டு பார்த்து ஆர்டர் செய்கிறார்கள். பொருள்கள் தரமாக இருக்கின்றன. காய்கறிகள் கூட நன்றாகத்தான் இருக்கின்றன. மேலும் காய்கறிகளை கொடுத்து விட்டு,” நன்றாக இருக்கிறதா? என்று செக் பண்ணிக் கொள்ளுங்கள், உங்களுக்கு திருப்தியாக இல்லையென்றால் வேறு மாற்றிக் கொண்டுவந்து தருகிறோம்” என்பதோடு அவர்களின் கைபேசி எண்ணை தந்து விட்டு, “தயவு செய்து இந்த எண்ணிற்கு போன் பண்ணுங்கள், காய்கறிகள் சரியில்லையென்று அலுவலகத்திற்கு போன் பண்ணி விடாதீர்கள், எங்கள் வேலைக்கு பிரச்சனையாகிவிடும்” என்று ஒருவர் கூறியபொழுது கஷ்டமாக இருந்தது.

மகன் வரவழைத்த ஜம்போ சைரஸ் சாம்பிராணி கூம்பும் புகை படர்ந்திருக்கும் எங்கள் வீடும் 

சமீபத்தில் என் மகன் சாம்பிராணி கூம்பு ஆன் லைனில் ஆர்டர் பண்ணிய பொழுது ஜம்போ சைஸ் என்பதை கவனிக்கவில்லை. அட்டைப் பெட்டியை திறந்து பார்த்தால் ஒரு சிறிய பூ தொட்டி போல சாம்பிராணி கூம்பு! அதை ஏற்றி வைத்தால் வீடு ஏதோ பூத் பங்களா செட் போட்டது போல ஆகி விடுகிறது. வெளி நாடுகளாக இருந்தால் fire alarm அலறியிருக்கும். இப்படி சில பாதகங்கள்.  

புது வருடம் பிறக்கப் போகிறது. எனக்கு டெய்லி ஷீட் காலண்டர் அவசியம் வேண்டும். மகன், மகள் குடும்பத்திற்கு காலண்டர் அனாவசியம். செல்ஃபோன் இருக்க காலண்டர் எதற்கு?” என்பார்கள். எனக்கு காலை எழுந்து, பல் தேய்த்தவுடன் அந்த தேதியை கிழிக்க வேண்டும். அதில் வெறும் தேதி மட்டுமா இருக்கிறது? நட்சதிரம், திதி, போன்றவைகளையும் தெரிந்து கொள்ளலாமே?

அன்று இந்திராநகர் செல்ல வேண்டியிருந்தது. அதற்கு அருகில் இருக்கும் திப்பஸந்திராவில் தமிழ் காலண்டர்கள் கிடைக்கும் என்பதால் அங்கு சென்று காலண்டர் வாங்கி வரலாம் என்றேன். மகனும்,மருமகளும் சிரித்து விட்டு, “ஆன்லைனிலேயே ஆர்டர் பண்ணலாம்” என்று கூறியதோடு, மருமகள் உடனே ப்ரௌஸ் பண்ணி என்னிடம் காட்டி,”உங்களுக்கு எந்த மாதிரி வேண்டும்?” என்று கேட்டு, உடனே ஆர்டர் செய்தாள். இரண்டு நாட்களுக்குள் வந்து விட்டது.

ஆன்லைனில் வந்த காலண்டர்.

அப்பா அம்மா தவிர பாக்கி அத்தனையையும் ஆன் லைனில் வாங்கிவிடலாம். என்றாள் மறுமகள். அதையும்தான் வாங்கிவிட முடிகிறதே.. சர்ரகேட் மதர்!!


Tuesday, December 6, 2022

தப்பிச்சேண்டா சாமி

 தப்பிச்சேண்டா சாமி

நாங்கள் பெங்களூர் வந்த புதிது, ஹொரமாவு என்னும் இடத்தில் இருந்தோம். எங்கள் வீட்டிற்கு அருகில் மெயின் ரோடில் ஒரு‌ கடையில் ஃப்ரெஷ் காய்கறிகள் புதன்கிழமையன்று வரும். நான் புதனன்று அங்கு சென்று காய்கறிகள் வாங்கிக் கொண்டு, பக்கத்தில் ஒரு கடையில் மங்கையர் மலர், சிநேகிதி போன்ற புத்தகங்களையும் வாங்கி வருவேன்.
எங்கள் அப்பார்ட்மெண்டிலேயே என் நாத்தனாரின் பெண்ணும் இருந்தாள். அவளுடைய ஸ்கூட்டரில் தான் செல்வேன். அப்பொழுது அங்கு அண்டர் பாஸ்(நாம் சப்வே என்பதை பெங்களூரில் அண்டர்பாஸ் என்கிறார்கள்) கட்டிக் கொண்டிருந்தார்கள்.
நான் எப்போதும் போல் ஒரு பெரிய கட்டைப் பை நிறைய காய்கறிகள் வாங்கி அதை ஸ்கூட்டியின் முன் பக்கத்தில் வைத்துக்கொண்டு வந்து கொண்டிருந்தேன். அண்டர்பாஸ் வேலைகள் நடந்து கொண்டிருந்ததால் அந்த இடமே குண்டும் குழியுமாக இருந்தது. இடது பக்கம் பெரிய பள்ளம். தோண்டப்பட்டிருந்தது. என்னைத் தாண்டி ஒரு கார் வேகமாக சென்றது. நான் ப்ரேக் போட்டு இடது காலை ஊன்றிக் கொள்ளலாம் என்றால் பள்ளம், வலது காலை ஊன்றினேன். இடது பக்கம் அளவிற்கு பள்ளமாக இல்லாவிட்டாலும் பள்ளம்தான். வலது பக்கம் அதிகமாக சரிய, பேலன்ஸ் இழந்த நான் வேகமாக வந்து கொண்டிருந்த ஒரு ஆட்டோவிற்குள் விழுந்து விட்டேன். ஆட்டோ டிரைவர் ப்ரேக் பிடித்து வண்டியை நிறத்தியதால் தப்பித்தேன். ஆட்டோவில் பயணித்த பெண்மணி என்னை தாங்கி கொண்டதாலும் அடி படாமல் தப்பித்தேன்.
நான் ஆட்டோவிற்குள் விழாமல் அதற்கு முன்னால் விழுந்திருந்தாலோ, வந்தது ஆட்டோவாக இல்லாமல் காராக இருந்திருந்தாலோ மிகப் பெரிய விபத்தை சந்தித்திருப்பேன். இறையருளால் தப்பித்தேன்.

Saturday, December 3, 2022

ஸ்ரீ திருமலாகிரி லக்ஷ்மிவெங்கடேஸ்வரஸ்வாமி கோவில் ஜே.பி.நகர், பெங்களூர்

 ஸ்ரீ திருமலாகிரி லக்ஷ்மிவெங்கடேஸ்வரஸ்வாமி கோவில் 
ஜே.பி.நகர், பெங்களூர் 


சமீபத்தில் மத்யமர் மூலம் அறிமுகமானவர்களில் ஒருவர் ரேவதி ஜானகிராமன். இந்தியன் வங்கியில் உயரதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கலகல, பரபர, சுறுசுறு வார்த்தைகளுக்கு சொந்தக்காரர். பெங்களூரில் எங்கள் வீட்டிற்கு கொஞ்சம்  அருகாமையில் இருக்கிறார். ஓலா ஆட்டோவில் சென்றால் ரூ,130 ஆகும். 

சென்ற வாரம் சந்தித்தப் பொழுதே கோவில்கள் எங்காவது சேர்ந்து செல்லலாம் என்றார்.  "3.12.22, சனிக்கிழமை, ஏகாதசி இரண்டும் சேர்ந்து வருகிறது, கார்த்திகை மாதத்து ஏகாதசியை குருவாயூர் ஏகாதசி என்பார்கள், எனவே அருகில் ஏதாவது குருவாயூரப்பன் கோவில் இருந்தால் போகலாமா?" என்று கேட்டேன். 

அவர் குருவாயூரப்பன் கோவிலுக்கு பதிலாக ஜே.பி.நகரில் இருக்கும் லட்சுமி வெங்கடேஸ்வரா பெருமாள் கோவிலுக்குச் செல்லலாமா? என்று கேட்டார். ஏதோ ஒரு பெருமாள் கோவில் ஓ.கே. என்று சொல்லி விட்டேன். 

காலை எட்டரைக்குள் கோவிலில் இருக்கும்படி வரச் சொன்னார். எங்கள் வீட்டிலிருந்து கோவிலுக்குச் செல்ல நாற்பது நிமிடங்களாகும் என்று கூகுள் சொன்னாலும், ஒரு மணி நேரம் ஆனது. 

கோவில் ரொம்ப பெரியது என்று சொல்ல முடியாது, ஆனால் விநாயகர், யோக நரசிம்மர், வெங்கடேச பெருமாள், லக்ஷ்மி, பள்ளிகொண்ட பெருமாள் மூர்த்தங்கள் பெரிதாகத்தான் இருக்கின்றன. 


முதலில் விநாயகர், ஆஞ்சநேயர், காளிங்க நர்த்தன கிருஷ்ணர் சந்நிதிகள் அடுத்தடுத்து அமைந்துள்ளன. பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரை பிரதி எடுத்ததை போன்றே இரண்டு கரங்கள், வலது கரத்தில் சிவலிங்கத்தோடு காட்சி அளிக்கிறார். இன்று வெள்ளிக்கவசம் சாற்றியிருந்தார்கள். 

ஆஞ்சநேயரும், கிருஷ்ணரும் அளவில் சற்று சிறிய மூர்த்தங்கள். காளிங்க நர்தனருக்கு கீழே வேலோடு முருகன்!! ஆச்சர்யமாக இருந்தது.

அந்த சன்னதிகளில் தரிசனம் செய்து விட்டு பள்ளிகொண்ட பெருமாள் சன்னதிக்கு பிரதட்சிணமாக சென்றால் வலது பிரகாரத்தில் ஒரு சிறிய ஜன்னல் போன்ற அமைப்பின் வழியாக பெருமாளின் திருவடியை மட்டும் சேவிக்க முடிகிறது.(நவதிருப்பதிகளில் ஒரு கோவிலில் இப்படியிருக்கும்). சயனித்திருக்கும் பெருமாளின் காலடியில் மஹாலக்ஷ்மி தாயாரும், ஆண்டாளும் எழுந்தருளியிருக்கிறார்கள்.  


இந்த தரிசனங்களை முடித்துக் கொண்டு வெங்கடேச பெருமாளின் சந்நிதிக்கு வருகிறோம். சாஷாத் திருப்பதி பெருமாள். சங்கு, சக்கரம், வட்சஸ்தலம், வெள்ளியில் யக்னோபவீதம்(பூணூல்), சாளக்கிராம மாலை, என்று அற்புதமாக காட்சியளிக்கிறார். 

ரேவதியின் மகன் சிறப்பு தரிசன டிக்கெட் வாங்கி வைத்திருந்தார். எனவே உட்கார்ந்து உற்சவருக்கு நடந்த பால் அபிஷேகம்  பார்க்க முடிந்தது. அர்ச்சனை, தீபாராதனை முடிந்து ஸ்வாமிக்கு வெகு அருகில் சென்று தரிசிக்க அனுமதித்தார்கள். பெருமாளின் காலடியில் சிறிய கருடாழ்வாரையும் தரிசிக்க முடிந்தது. பெருமாளுக்கு அடுத்து தனி சந்நிதியில் தாயாரையும் தரிசித்து வெளியே வந்தோம். சிறப்பு தரிசன டிக்கெட் வாங்கியவர்களுக்கு ஒரு டப்பா நிறைய புளியோதரை பிரசாதம் கொடுத்தார்கள். மனதிற்கு நிறைவைத் தந்த தரிசனம்!


ரேவதியும் நானும் 

Monday, November 7, 2022

பேத்திகளின் அலப்பறைகள்

பேத்திகளின் அலப்பறைகள்:

என் பேத்தியின் தோழி ஒரு நாள் ப்ளே டேட்டிற்காக எங்கள் வீட்டிற்கு வந்திருந்தாள். அதாங்க ஃபிரண்ட் வீட்ல போயி விளையாடுவதை தான் அங்கே பிளே டேட் என்கிறார்கள் இரண்டு பேரும் விளையாடிவிட்டு சாப்பிட வந்தார்கள். என் பேத்தியின் தோழி சாதத்தை மட்டும் சாப்பிட்டுவிட்டு காய்கறிகளை சாப்பிடவில்லை உடனே என் பேத்தி என்னிடம், "விச் காட் கிவ்ஸ் அஸ் ஃபுட்?" என்று கேட்டாள். நான் அன்னபூரணி என்றேன் உடனே அவள் தன் தோழியிடம்,"இப் யு டோன்ட் ஈட், அன்னபூரணி வில் கர்ஸ் யூ" என்றாள். அந்த குழந்தை உடனே "அன்னபூரணி கிவ்ஸ் அஸ் ரைஸ் ஒன்லி ஐ ஏட் ரைஸ்" என்றதும் என் பேத்தி அவளிடம், "தட் இஸ் ஹாஃப்
அன்னபூரணி ஒன்லி, யு ஹவ் டு ஈட் வெஜிடபிள்ஸ் ஆல்ஸோ" என்றாளே பார்க்கலாம் எனக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை.
*******""
எங்கள் வீட்டில் நாளைக்கு என்று சொல்ல மாட்டோம். பிச்சைக்காரனுக்கு என்றுதான் கூறுவோம். உதாரணமாக "நாளைக்கு கோவிலுக்கு போகலாம் என்பதற்கு பதிலாக "பிச்சைக்காரனுக்கு கோவிலுக்கு போகலாம்" என்போம். சமீபத்தில் என் பேத்திக்கு பிறந்த நாள் வந்தது. அதற்கு முதல் நாள் அவளோடு தொலைபேசியில் பேசிய பொழுது, "பிச்சைக்காரனுக்கு உனக்கு பர்த்டே வா?" என்று கேட்டேன் அவள், "நோ பாட்டி நாளைக்கு எனக்கு தான் பர்த்டே பிச்சைக்காரனுக்கு இல்லை" என்றாள். பிச்சைக்காரனுக்கு என்று ஏன் சொல்கிறோம் என்று சில வருடங்கள் கழித்து அவளுக்கு விளக்க வேண்டும். 
*****
இரண்டு வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் என் இன்னொரு பேத்திக்கு சில சமயங்களில் வாயில் விரல் போட்டுக் கொள்ளும் பழக்கம் இருக்கிறது. அதை மாற்ற வேண்டும் என்று நினைத்த என் மகனும் மருமகளும் ஒருநாள் அவள் கட்டை விரலில் காபி பவுடரை தடவி விட்டார்கள் அது காபி பவுடரை ருசித்து விழுங்கிவிட்டு, மீண்டும் தடவுவதற்காக  விரலை நீட்டியதும்  இவர்களுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. 

இன்னொரு முறை என் மகன் மருமகளிடம், "நான் வாயில் விரல் போட்டுக் கொள்கிறேன் நீ என் விரலை எடுத்து விட்டு அவளிடம், "பாரு அப்பா வாயிலிருந்து விரலை எடுத்து விட்டார் நீயும் வாயில் விரல் போட்டுக் கொள்ளக் கூடாது" என்று சொல்லு என்று கூறிவிட்டு அவன் வாயில் விரலை போட்டுக் கொண்டான் என் மருமகள் என் மகனின் விரலை எடுத்து விட்டு பேத்தியிடம், பார் அப்பா "வாயிலிருந்து விரலை எடுத்து விட்டார்" என்று கூறியதும், என் பேத்தி என் மருமகளின் கையை சட்டென்று இறுக்கிப் பிடித்துக் கொண்டாள் இவர்கள் இரண்டு பேருக்கும் சிரிப்பு வந்துவிட்டது.
******

Monday, October 3, 2022

கொலுவின் பரிணாமம்

 கொலுவின் பரிணாமம் 

எங்கள் வீட்டு குட்டி கொலு 

நவராத்திரி என்பதில் ஆஷாட நவராத்திரி,சாரதா நவராத்திரி, பௌஷ்ய அல்லது மக நவராத்திரி, வசந்த நவராத்திரி என்று நான்கு இருந்தாலும், வட இந்தியாவில் வசந்த நவராத்திரியும், தென்னிந்தியாவில் சாரதா நவராத்திரியும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. 

புரட்டாசி மாத அமாவாசைக்குப் பிறகு சாரதா நவராத்திரி துவங்குகிறது. இதில் பொம்மை கொலு என்று மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது என்று ஒற்றைப் படையில் படிகளை அமைத்து அதில் பொம்மைகளை வைத்து வழிபடுவது என்பது தமிழ் நாட்டில் மட்டுமே இருக்கும் பழக்கம் என்று நினைக்கிறேன். 

இந்த பொம்மை கொலு வைக்கும் பழக்கம் எப்போது தொடங்கியது என்று சரியாகத் தெரியவில்லை. சில நூற்றாண்டுகளுக்கு முன் தொடங்கியிருக்கலாம். முதலில் மரப்பாச்சி பொம்மைகள் வைப்பதுதான் வழக்கமாக இருந்திருக்கிறது. இப்போதும் கூட கண்டிப்பாக இரண்டு மரப்பாச்சி பொம்மைகளையாவது வைக்க வேண்டும் என்பது ஒரு சம்பிரதாயம். எங்கள் அப்பா முதலில் மரப்பாச்சியைத்தான் வைக்க வேண்டும் என்பார். அதை இன்று வரை நாங்கள் கடை பிடிக்கிறோம். 

எங்கள் தாத்தா வீட்டு பொம்மைகளெல்லாம் இரண்டு அடி உயரம். அப்போதைய கிராமத்து வீடுகளின் பெரிய கூடங்களுக்கு ஏற்ப பெரிய பொம்மைகள், அவற்றை வைக்க பிரும்மாண்ட படிகள். அதற்கு அடுத்த கால கட்டத்தில் நகரத்து வீடுகளுக்கு ஏற்ப ஒரு அடியாக குறைந்தன. அடுக்கு மாடி குடியிருப்புகள் வந்ததும் பொம்மைகளும் சிறியதாகி விட்டன.  இப்போது எடை குறைந்த, சுலபத்தில் பொருந்தக்கூடிய ஃபைபர் படிகள் வந்து விட்டன. 

அப்போதெல்லாம் பெரும்பான்மையான வீடுகளில் கொலுப்படிகள் கிடையாது, வீட்டில் இருக்கும் பலகைகள், பெஞ்சுகள், ட்ரம்கள், அட்டைப் பெட்டிகள், போன்றவற்றைக் கொண்டு படிகளை கட்டுவார்கள். சில சமயம் "அம்மா அது என்னோட புக்.." என்று நாங்கள் அலறுவதை பொருட்படுத்தாமல்  முட்டுக் கொடுக்க எங்கள் புத்தகங்களைக் கூட  அம்மா எடுத்துக் கொண்டு விடுவாள்.  

அப்போதெல்லாம் கொலு வைப்பார்களே தவிர ஒரு சில வீடுகளைத் தவிர பெரும்பாலானோர்  பேக் ட்ராப் என்பதை பற்றியெல்லாம் பெரிதாக அலட்டிக் கொள்ள மாட்டார்கள். அலங்காரங்களும் குறைவுதான். 

எழுபதுகளின் துவக்கத்தில் அழகான கொலுவிற்கு பரிசு கொடுக்கும் பழக்கம் துவங்கியது. அதன் பிறகே தோரணங்கள் கட்டுதல், டிஸ்கோ அலங்காரம் போன்றவை நவராத்திரி கொலுவில் இடம் பிடிக்க ஆரம்பித்தன. தீமட்டிக் கொலு என்னும் கான்செப்ட் வந்தது.

அப்போதெல்லாம் வருபவர்களுக்கு வெற்றிலை பாக்கு, பழத்தோடு நியூஸ் பேப்பரில் மடித்துக் கொடுக்கும் சுண்டல் மட்டுமே. பயத்தம் பருப்பு, கடலைப் பருப்பு என்று துவங்கும் சுண்டல் மெதுவாக வெல்லம் போட்டு காராமணி சுண்டல், புட்டு அல்லது ஒக்காரை, பட்டாணி என்று மொமண்டத்தை எட்டி, கொத்துக் கடலை சுண்டலோடு முடியும். கொத்துக் கடலையும் அப்போதெல்லாம் கருப்பு கொத்துக் கடலை தான் இப்போது போல வெள்ளை காபூலி சன்னா கிடையாது. 

இப்போது சோஷியல் மீடியாக்களில் நவராத்திரியின் 
முதல் நாள் என்ன கலரில் உடை அணிந்து கொள்ள வேண்டும், இரண்டாம் நாள் என்ன கலரில் உடை அணிந்து கொள்ள வேண்டும் என்று வருகின்றன. பெண்களும் அந்தந்த கலரில் புடவை கட்டிக்க கொண்டு செல்ஃபி எடுத்து ஃபேஸ்புக்கிலும், இன்ஸ்டாகிராமிலும் பகிர்கிறார்கள். 

அதைப்போல இப்போது நவராத்திரி கிஃப்ட் என்று கொடுப்பது போல் முன்பெல்லாம் கொடுக்க மாட்டார்கள். தாம்பூலத்தோடு கண்ணாடி, சீப்பு , ரவிக்கைத் துணி இவைகள் வைத்து கொடுப்பது நலம் என்பதால் அவைகளை வைத்துக் கொடுக்க ஆரம்பித்தார்கள், அந்த ரவிக்கைத் துணி சுற்றி வரத் தொடங்கியதாலும், இப்போது வரும் புடவைகளில் ரவிக்கையும் சேர்ந்து வருவதாலும் அதை தவிர்த்து விட்டு வேறு ஐட்டம்களுக்குத் தாவினார்கள். முதலில் எவர்சில்வர் கிண்ணங்களை கொடுத்தார்கள், இரும்பு தானம் செய்வது நல்லதில்லை என்று சொல்லப்பட்டதால் இப்போது பிளாஸ்டிக் கிண்ணங்கள், தட்டுகள், டப்பாக்கள், ஃபைபரில்  குட்டி குட்டி சுவாமி  விக்கிரகங்கள் இவற்றைத் தருகிறார்கள். எவ்வளவு ஸ்வாமி விக்கிரகங்களை வீட்டில் வைத்துக் கொள்ள முடியும்? பழையபடி வெற்றிலை பாக்கு, பழம், சுண்டலோடு நிறுத்திக் கொள்ளலாம். 

ரேவதி பாலாஜி வரைந்திருப்பது போல முன்பெல்லாம் சிறு பெண்கள் அழகாக பாவாடை,சட்டை அணிந்து கொண்டு எல்லா வீடுகளுக்கும் சென்று,"எங்காத்துல கொலு வெச்சிருக்கோம், வெற்றிலை பாக்கு வாங்கி கொள்ள வாங்கோ என்று அழைத்து விட்டு, தெரிந்த இரண்டு பாடல்களையே எல்லா வீடுகளிலும் வெட்கப்படாமல் பாடி வெற்றிலை பாக்கு, சுண்டல் வாங்கி கொண்டு வருவார்கள். நாங்களெல்லாம் அப்படித்தான் செய்தோம். துணைக்கு சகோதர்களை அழித்துச் செல்வதுண்டு. அவர்கள் உள்ளே வராமல் வாசலிலேயே அமர்ந்து கொள்வார்கள். மாமிகள் அவர்களுக்கு சுண்டல் மட்டும் கொடுப்பார்கள். கிருஷ்ணர், ராதை, பட்டு மாமி என்றெல்லாம் வேஷங்கள் போட்டுக் கொள்வதுண்டு. 

இப்போது எந்தக் குழந்தையும் அப்படி அழைக்கச் செல்வதில்லை. சில வருடங்களுக்கு முன்பு எந்த நாளில் தாம்பூலத்திற்கு வர வேண்டும் என்று போஸ்ட் கார்டில் அழைப்பு விடுத்தார்கள். இப்போது வாட்ஸாப்பில் அழைக்கிறார்கள். 

பல மாநிலத்தவர்களும் வாழும் எங்கள் குடியிருப்பு போன்ற இடங்களில் தாண்டியா போன்ற நிகழ்ச்சிகளில் எல்லா மாநிலத்தவர்களும் கலந்து கொள்கிறார்கள். அதற்கான பயிற்சிகளும் மேற்கொள்ளப் படுகின்றன. 

ஒரு பக்கம் பூஜை, இன்னொரு பக்கம் நண்பர்கள், உறவினர்கள் வீடுகளுக்குச் செல்வது, அவர்களை நம் வீட்டிற்கு அழைப்பது, வீட்டையும், தன்னையும் அழகாக அலங்கரித்துக் கொள்வது, ரங்கோலி, அழகான கோலம் இவைகள் வரைவதன் மூலம் தன்  திறமையை காட்டுவது, பாட்டுப் பாடுவது, விதம் விதமாக சுண்டலும், சிற்றுண்டிகளும் செய்வது போன்ற பெண்களின் பன்முகத் திறமைகளை வெளிக்கொணரும் ஒரு சிறப்பான  கொண்டாட்டம்  நவராத்திரி.  மாறுதல்களுக்கு உட்பட்டாலும், நவராத்திரி என்னும்  இந்த அழகான, பண்டிகை தொடர்ந்து கொண்டாடப்படுவது சந்தாஷம்தான். 

Sunday, September 11, 2022

விருத்தாசலம் விசிட்டும், மத்யமர் மீட்டும்

 விருத்தாசலம் விசிட்டும், 

மத்யமர் மீட்டும்

எனக்கு ஒரு பிராது கொடுக்க வேண்டியிருந்தது, அட! மத்யமரில் இல்லைங்க, விருத்தாசலத்தில் குடி கொண்டிருக்கும் கொளஞ்சியப்பரிடம். அதற்காக பெங்களூரிலிருந்து நானும், என் மகனும் செல்லலாம் என்று 
முடிவெடுத்த இரண்டு நாட்களிலும் செல்ல முடியவில்லை. ஆறாம் தேதி மாலை சென்னையிலிருக்கும் என் சினேகிதி ஒருவர் ஃபோனில் அழைத்து, அவரும் இன்னொரு தோழியும் எட்டாம் தேதி கொளஞ்சியப்பர் கோவிலுக்கு செல்ல விருப்பதாகவும், விரும்பினால் நானும் அவர்களோடு சேர்ந்து கொள்ளலாம் என்றும் கூறினார். அதனால் ஏழாம் தேதி பகல் 11:50 பஸ்ஸுக்கு டிக்கெட் புக் பண்ணி கொடுத்தார் மகன். 

சாதாரணமாக இரவில் கிளம்பும் பேருந்துகள் எலக்ட்ரானிக் சிட்டிக்கு கொஞ்சம் தாமதமாகத்தான் வரும். இது பகல் நேரம் என்பதாலோ என்னவோ அன்று டாணென்று வந்து விட்டது. ஆனால் (மிகப்பெரிய ஆனால்) 6:45க்கு வடபழனியை அடைய வேண்டிய பஸ் எட்டே முக்காலக்குத்தான் வட பழனியை அடைந்தது. வழியில் மழை மற்றும் வாகன நெரிசல் தாமதத்திற்கு காரணம் என்றார்கள். நான் கிண்டியில் இறங்கி வேளச்சேரியில் இருக்கும் என் தோழியின் வீட்டை அடையும் பொழுது கிட்டத்தட்ட பத்து மணியாகி விட்டது. 

மறுநாள் காலை 5:30க்கு கிளம்பினோம். வழியில் காலை உணவை முடித்துக் கொண்டோம். இதற்கிடையில் நான் விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவிலுக்குச் செல்லப்போவதை ஒரு காலத்தில் விருத்தாசலத்தில் வசித்த மத்யமராகிய திருமதி.சியாமளா வெங்கட்ராமன் அவர்களிடம் கூறியிருந்தேன். அவர் தற்சமயம் அங்கு வசிக்கும் மத்யமராகிய சந்திராவிடம் தெரிவித்திருக்கிறார்.  அவர் நான் பெங்களூரிலிருந்து வரும் பொழுதே என்னை கை பேசியில் அழைத்து நான் நேராக அவர் வீட்டிற்கு வர வேண்டும் என்று அன்போடு அழைத்தார். ஆனால் என்னோடு வந்தவர்கள் நேராக கோவிலுக்குச் சென்று விடலாம் என்றதால் நேராக கோவிலுக்குச் சென்று விட்டோம். அங்கே எங்களுக்கு முன்பே அவர் வந்து காத்திருந்தார். அந்த கோவிலின் நடைமுறைகளை எங்களுக்கு விளக்கி எங்களை உள்ளே அழைத்துச் சென்றார். விநாயகருக்கும், கொளஞ்சியப்பருக்கும் அர்ச்சனை செய்து பிறகு வெளியில் இருக்கும் முனீஸ்வரன் சன்னதிக்கு எங்களை போகச் சொன்னார்கள். முனீஸ்வரனுக்கு தீபாராதனை காண்பித்த பிறகு எங்கள் பிராது எழுதப்பட்ட சீட்டுகளை முனீஸ்வரன் சன்னதிக்கு எதிரே இருக்கும் மரத்தில் கட்டிய அர்ச்சகர் இரண்டு எலுமிச்சம் பழங்களை அங்கிருக்கும் சூலங்களில் குத்தி வைக்கப் சொன்னார். 

பிராது சீட்டுகள் கட்டப்பட்டிருக்கும் மரம்

ஒரு காலத்தில் கொளஞ்சி மரக்காடாக இருந்த இடத்தில் ஒரு பசு மாடு தன் காலால் ஒரு மேட்டை சிராய்த்து விட்டு பால் சொறிவதைக் கண்ட கிராம் மக்கள் அந்த இடம் தெய்வீக சக்தி பொருத்திய இடமாக இருக்க வேண்டும் என்று தீர்மானித்து, பலிபீடம் போன்ற அமைப்பை வழிபடத் தொடங்கி யிருக்கிறார்கள். உருவம் இல்லாவிட்டாலும் எந்த தெய்வ சாந்நித்தியம் கொண்டதாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள விரும்பி, ஆராய்ந்த பொழுது சுந்தரமூர்த்தி நாயனார் திருமுதுக்குன்றம் என்னும் இந்த இடத்தில் முதியவர்களாக இருக்கும் இவர்கள் நமக்கு என்ன பொருள் கொடுத்துவிட முடியும்? என்று நினைத்து வராமல் செல்கிறார். உடனே இங்கே உறையும் சிவபெருமான் தன் மகனாகிய முருகனிடம்,"சுந்தரன் என்னை மதிக்காமல் செல்கிறான், அவனை இங்கே வரச்செய்"  என்று பிராது கொடுத்தாராம். அந்த இடம் விருத்தாசல கோவிலுக்கு மேற்கே இருக்கும் மணவாளநல்லூர் எல்லை என்பது தெரிந்தது. எனவே இங்கு குடிகொண்டிருப்பது முருகன் தான் என்ற முடிவுக்கு வந்தார்களாம். தற்சமயம் அந்த பலிபீடத்திற்கு மேல் கிரீடம் ஒன்று வைத்து, வெள்ளியில் கண்களும் பொருத்தி, வேலும் சார்த்தியிருப்பதால் முருகனாக நம்மால் உருவகிக்க முடிகிறது.

சிவபெருமானே இங்கே பிராது கொடுத்திருப்பதால் மக்களும் தங்களுடைய நியாயமான கோரிக்கைகள் நிறைவேற இங்கே பிராது கொடுக்கும் பழக்கம் வந்திருக்கிறது.

திருமுதுகுன்றம் கோவில்


கண்டராதித்தன் கோபுரம் என்றதும் பொ.செ.தான் நினைவுக்கு வந்தது.

எங்கள் பிராத்தனையை அங்கு முடித்துக் கொண்டு வெளியே வந்த பொழுது நெய்வேலி ஜவஹர் பள்ளியில் கெமிஸ்ட்ரி ஆசிரியராக பணியாற்றிய திரு. நாகசாமி அவர்களும் அங்கு வந்தார். மத்தியமராகிய அவர் எங்கள் சந்திப்பை பற்றி ஏற்கனவே மத்யமரில் எழுதி விட்டார்.


நாங்கள் எல்லோரும் சந்திரா அவர்களின் வீட்டிற்குச் சென்றோம். என் தோழிக்கு முதலில் அங்கு சென்றால் நேரமாகி விடும் என்ற தயக்கம் இருந்தது. ஆனால் சந்திராவின் அன்பான உச்சரிப்பில் மனம் குளிர்ந்து விட்டார். அதிலும் தன் வீட்டில் விளைந்த வெள்ளை வெற்றிலையையும், எலுமிச்சம் பழத்தையும் சந்திரா கொடுத்த பொழுது என் தோழி குஷியாகி விட்டார். அவரிடமிருந்து வெற்றிலைக் கொடியை வேறு வாங்கிக் கொண்டார். திரு.நாகசாமி அவர்களோ, சகோதரிகளுக்கு சீர் கொடுப்பதை போல ஒரு தட்டு நிறைய பழங்களையும், பூவையும் எங்களுக்கு திருப்பாவை பாசுரம் ஒன்றைக் கூறி வழங்கினார். 

ஆழ்ந்து பிள்ளையார் கோவில்

நாங்கள் விருத்தகிரீஸ்வரர் கோவிலுக்குச் சென்று விட்டு ஊர் திரும்ப வேண்டும் என்பதால் அவர்களோடு அமர்ந்து ஆற அமர உரையாட முடியவில்லை என்பது கொஞ்சம் குறையாகத்தான் இருந்தது. இன்னொரு முறை நிதானமாக சென்று, விருத்தாசலம் மட்டுமல்லாமல் சுற்றியிருக்கும் தலங்களையும் தரிசித்து விட்டு வர விருத்தாம்பாள் சமேத விருத்தகிரீஸ்வரரும், ஆழத்து பிள்ளையாரும் அருள வேண்டும். 

பிரும்மாண்டமான விருத்தகிரீஸவரர் கோவிலையும் கூட அவசர அவசரமாகத்தான் தரிசனம் செய்தோம். திரும்பும் வழி முழுவதும் இன்னொரு தோழியாகிய ராணி ராம திலகம், "மத்யமர் இவ்வளவு பெரிசா? நாம் யார் என்றே அவர்களுக்குத் தெரியாது, மத்யமர் என்பதால் பாசத்தோடு நமக்கு இத்தனை உதவிகள் செய்திருக்கிறார்கள்!" என்று வியந்து கொண்டே வந்தார். 

யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே!’’ மத்யமரால் என்று கூறலாம்.

Monday, August 29, 2022

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று.

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று. 


நான் கனடா சென்று நாலாவது மாதத்தில் என் மகன் வயிற்று பேத்திக்கு ஆண்டு நிறைவு வந்ததால் அதில் கலந்து கொள்ள முடியவில்லை.  குழந்தைக்கு முடி காணிக்கை கொடுப்பதற்காவது நான் வரும் வரை காத்திருக்க சொன்னேன். 

எங்கள் குடும்பத்தில் முதல் மொட்டை ஒரு குறிப்பிட்ட கோவிலில்தான் அடிக்க வேண்டும் என்னும் பழக்கம் கிடையாது. நாங்கள் எங்கள் குழந்தைகளுக்கு திருப்பதியில் முதலில் முடியிறக்கினோம். அதனால் பேத்திக்கும் அங்கேயே முடியிரக்கலாம் என்று தோன்றியது. 

என் மகன் நான் அங்கிருக்கும் பொழுதே,"நீ இங்கே வந்தவுடன் திருப்பதி சென்று வந்து விடலாம், நாள் பார்த்து சொல் நான் புக் பண்ணி விடுகிறேன்" என்றான். ஆனால் நான் பார்த்து சொன்ன நாட்கள் அவர்களுக்கு அலுவலகத்தில் பிஸியான நாட்களாக இருந்தது. 

புரட்டாசியில் முதல் மொட்டை அடிக்க மாட்டார்கள். பெண் குழந்தை என்பதால் செவ்வாய், வெள்ளி நோ! சனி,ஞாயிறில் திருப்பதியில் கும்பல் அதிகம் இருக்கும். மகனுக்கும், மருமகளுக்கும் அலுவலகத்தில் விடுமுறை எடுக்க முடிய வேண்டும், மருமகளின் மாதாந்திர அசௌகரியத்தை பார்க்க. வேண்டும். 21.8.22, திங்கள் கிழமை எல்லாவற்றிர்க்கும் ஈடு கொடுத்தது. 

மகன் புக் செய்த டிராவல் ஏஜெண்ட் ஞாயிறு இரவு 11:45க்கு டயோட்டா இடியாஸ் காரில் எங்களை பிக் அப் செய்தார்.  விடியல் காலை 4:30க்கு கீழ் திருப்பதியில் ஒரு ஹோட்டலில் எங்களை இறக்கி விட்டு எங்களுக்கு குளித்து ரெடியாக ஒரு மணி நேரம் தந்தார்.

நாங்கள் நேராக மலையேறி, குழந்தைக்கு மொட்டை அடித்து, சுவாமி தரிசனத்தையும் முடித்திருக்க வேண்டும். அப்படி செய்யாமல் முதலில் அலமேலுமங்காபுரம் சென்றோம். அங்கு அப்போது நடை அமைத்திருந்தார்கள். 7:30க்கு அஷ்ட தள பத்மார்ச்சனை சேவைக்கு ரூ.300க்கு டிக்கெட் வாங்கினால் அம்மனுக்கு முன்னால் உட்கார வைப்பார்கள் என்றதால் அந்த சேவைக்கான டிக்கெட் வாங்கி தரிசித்தோம். 

பின்னர் காலை உணவை முடித்துக் கொண்டு மேலை சென்ற பொழுது 10:30 ஆகி விட்டது. அங்கே கும்பலான கும்பல். குழந்தைக்கு மொட்டை அடித்துக் கொண்டு வருவதற்கு 12 மணியாகி விட்டது. பின்னர் முன்னூறு ரூபாய் டிக்கெட் வரிசை துவங்கும் இடத்தில் எங்களை இறக்கி விட்டார். 

செல்ஃபோன் அனுமதிக்க மாட்டார்கள் என்று தெரியும். ஸ்மார்ட் வாட்சிற்கும் அனுமதி இல்லை என்பதை முன்னரே கூறி விட்டதால் என் மகன், மருமகள் இருவரும் தங்கள் ஸ்மார்ட் வாட்சுகளை கட்டிக்கொண்டு வரவில்லை. ஆனால் மெட்டல் ஸ்டார்ப் வாட்சுகளுக்கும் அனுமதி இல்லை என்றார்கள். அதனால் எங்கள் கை கடிகாரங்களை காரிலேயே வைத்தோம்.

அதே போல் டிரஸ் கோடும் கொடுத்திருந்தார்கள். ஆண்கள் என்றால் வேஷ்டி, சட்டை அல்லது அங்கவஸ்திரம், பெண்கள் என்றால் புடவை அல்லது துப்பட்டாவோடு சூடிதார். என் மருமகள் துப்பட்டாவை மறந்து விட்டாள். மறுபடியும் காருக்குச் சென்று எடுத்து வர வேண்டுமோ? என்று திகைத்தோம். வாயில் காப்பானாகிய பெண், "இங்கே கடையிலேயே, துப்பட்டா விற்கிறார்கள், வாங்கிக் கொள்ளுங்கள்" என்றாள். அங்கிருந்த கடைகளில் கலர் கலராக  துப்பட்டாக்கள் தொங்கிக் கொண்டிருந்தன. ஒன்று வாங்கிக் கொண்டாள். நல்ல வியாபாரம்! நாங்கள் ஆளுக்கு ஒரு மாஸா குடித்து விட்டு, நடந்து,  நடந்து ஒரு ஹாலை அடைந்து, அங்கு எங்கள் அடையாள அட்டை, டிக்கெட் காண்பித்து மீண்டும் நடந்துட நடந்து நடந்து 26ம் எண் கூண்டில் சென்று அமர்ந்து பொழுது மணி ஒன்று. பசி மற்றும் நெரிசலில் அழத்தொடங்கிய குழந்தைக்கு செரிலாக் கொடுக்கலாம் என்று அங்கிருந்த பொருள்களை ஸ்கேன் செய்யும் இடத்திற்கு அருகில் இருந்த நாற்காலிகளில் அமர்ந்து கொண்டோம், அப்போது அங்கு வந்த ஒரு அதிகாரி," இங்கு உட்காரக் கூடாது என்று விரட்டினார்.  வரிசையில் எங்களுக்குப் பின்னால் இருந்த பெண்மணி, இரண்டு பிஸ்கெட்டுகளைத் தந்தார். அதை சாப்பிட்ட குழந்தை உறங்கியது.  

திருப்பதி சந்திரனுக்கு உரிய தலம் என்பதால் அங்கு திங்கள் கிழமை செல்வது விசேஷம், அதோடு ஏகாதசியும் சேர்ந்து கொண்டதாலோ என்னவோ கும்பல் கொஞ்சம் அதிகம்தான். எப்படியோ பெருமாளை சேவித்து வெளியே வந்த பொழுது மணி நான்கு. மலை மேல் இருந்த உணவகங்களில் சாப்பாட்டு கடை முடிந்து விட்டது. "கீழே ஹோட்டல் மயூராவிற்குச் செல்லுங்கள், டிபன் கிடைக்கும் என்றேன்".  மயூராவின் டொமாடோ ஆம்லெட்டிற்கு மனம் ஏங்கியது.  ஆனால் அந்த டிரைவரோ," போகும் வழியில் ஹை வேயில்  நல்ல ஹோட்டலில் சாப்பிடலாம்" என்றார். 

கீழே இறங்கும் பொழுதே நான் உறங்க ஆரம்பித்து விட்டேன். ஹை வேயில் சரவணபவனில் சப்பாத்தி சாப்பிட்டு விட்டு மீண்டும் நல்ல உறக்கம். வீடு வந்து சேர்ந்த பொழுது இரவு மணி பதினொன்று. எப்போதாவது புயல் அடிக்கும் ஒரு நாள் திருப்பதி சென்றால் நல்ல தரிசனம் கிட்டலாம். முன்பெல்லாம் ஒரு முன்னூறு ரூபாய் டிக்கெட்டிற்கு இரண்டு லட்டுகள் தருவார்கள். இப்போது ஒரு டிக்கெட்டிற்கு ஒரு லட்டுதான், அதுவும் அளவும் குறைந்து விட்டது. சுவை? அது குறைந்து பல ஆண்டுகள் ஆகி விட்டதே.

சரி, தலைப்பை நியாயப்படுத்தவே இல்லையே? என்கிறீர்களா? இதோ வந்து விட்டேன். 

பெரிய பணக்காரர்கள் ஆடம்பரமாக செய்யும் பூஜையில் படைக்கப்படும் உயர் ரக உணவை ஏற்காமல் அருகில் ஒரு ஏழை படைக்கும் கூழை விரும்பி கடவுள் உண்பதாக திரைப்படங்களில் பார்த்திருக்கிறோம், கதைகள் படித்திருக்கிறோம். மகாபாரதத்தில் கூட துரியோதனின் அரண்மனையை தவிர்த்து விட்டு, விதுரரின் வீட்டில்தான் கிருஷ்ணர் தங்கியதாக வரும். 

எங்கள் வீட்டில் என் மருமகள் தன் குழந்தைக்கு சிறந்த உணவை கொடுக்க வேண்டும் என்பதற்காக எல்லோரிடமும் விசாரித்து, யூ டியூபில் தேடி பார்த்து பார்த்து தயாரித்து கொடுக்கும் உணவை என் பேத்தியை சாப்பிட வைப்பதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது. ஆனால் அதை பார்த்துக் கொள்ள வரும் பெண்மணி கொண்டு வரும் உணவை, "ஐயோ இது பேடா, இது காரா.." என்று அந்தப் பெண்மணி தடுத்தாலும் எந்த பிகுவும் இல்லாமல் எடுத்து உண்கிறது.    


Saturday, August 20, 2022

மறக்க முடியாத வசனங்கள்.

மறக்க முடியாத வசனங்கள். 

முன்பெல்லாம் வீடுகளில் தாத்தா,பாட்டி, சின்ன தாத்தா, சின்ன பாட்டி, அத்தை பாட்டி, அத்தை என்று நிறைய பெரியவர்கள் இருப்பார்கள். அவர்கள்  பேசும் பொழுது நிறைய பழமொழிகளை கூறுவார்கள். அவற்றை வசனங்கள் என்பார்கள். அதாவது இப்போதய பஞ்ச் டயலாக் போல. பேச்சு வழக்கில் போகிற போக்கில் இந்த வசனங்கள் தெறித்து வரும். பல வசனங்கள் அர்த்தத்தோடும், நகைச்சுவையோடும், சில அடல்ட் ஜோக் வகையைச் சேர்ந்ததாகவும் இருக்கும்.  

எங்கள் இரண்டாவது அத்தை இப்படிப்பட்ட வசனங்கள் கூறுவதில் வல்லவர். எங்கள் அம்மா செயல் திறன் மிக்க மல்டி டாஸ்கர். ஒரே சமயத்தில் பல வேலைகளை அனாயசமாக செய்வார். எங்கள் அம்மாவின் செயல் திறன் எப்படி பட்டது என்று அத்தை ஒரு வசனம் கூறுவார்.

'சீதை திரண்டு புழக்கடையில் நிற்கிறாள் 
செல்லப் பெண்ணுக்கு சீமந்தம் 
மாரிமுத்துக்கு மசக்கை 
எட்டு பெண் எருமை ஈதெடுத்து(ஈற்றெடுத்து) நிக்கறது 
ஆத்துக்காரர் வந்து அடியே அடியே என்கிறார் இதற்கு நடுவில் 
உடன் பிறந்தவன் வந்து,"திருவேங்கடத்துக்கு திரு விளக்கு ஏற்றப் போகணும் வாடி அக்கா" என்று கூப்பிட, அவள் அத்தனை வேலைகளையும் முடித்து விட்டு உடன் பிறந்தவனோடு திருவேங்கடத்திற்கும் போய் விட்டு வந்து விட்டாளாம்'... அவ்வளவு திறமை! என்பார். 

அதைப் போல யாரையாவது நாம் நன்றாக சமைப்பார்கள் என்றால் உடனே, "சமையல் என்ன பிரமாதம்? புளிக்கு ஏற்ற உப்பு, உப்புக்கேற்ற மிளகு பொடி, அஞ்சும் மூணும் உட்கூட்டிருந்தால் அறியாப் பெண்ணும் சரியா சமைக்கும்" என்பார்.

அவர் கூறும் இன்னொரு வசனம், "மயிருள்ள சீமாட்டி இடக்கொண்டை போட்டாலென்ன? வலக்கொண்டை போட்டாலென்ன?" என்பது.

எங்கள் அம்மாவும் சில பழமொழிகள் சொல்வார்கள். காமா சோமாவென்று ஒரு வேலையை செய்தால், " யாரோ ஒருத்தன் சொன்னானாம் 'எப்படியோ ஊராரின் தயவில் என் மனைவி கர்ப்பவதி ஆனாள்' என்று அந்த மாதிரி இருக்கு. என்பார்.

நிர்பந்தம் காரணமாக ஒரு வேலையை செய்ய நேர்ந்து, அது நல்ல விதமாகவும் முடிந்தால், "ஆம்படையான் அடிச்சாலும் அடிச்சான், கண்ணு பூளை கரைஞ்சாலும் கரைஞ்சது" என்பார்.

என் அம்மாவின் இன்னொரு சிறப்பான குணம் தன்னைப்பற்றிய விமர்சனங்களுக்கெல்லாம் கவலைப்பட மாட்டார். அம்மாவை மோசமாக நடத்தியவர்களும் ஒரு இக்கட்டில் இருக்கிறார்கள் என்று தெரிந்தால் ஓடிப்போய் உதவுவார். இதற்கு நாங்கள் ஏதாவது சொன்னால், " 'குப்பையை தள்ளி விட்டு கோலத்தை போட வேண்டும்' மற்றவர்களிடம் இருக்கும் குறைகளை பெரிது படுத்தக் கூடாது" என்று கூறுவார். அம்மாவின் இந்த குணத்தை இன்றளவும் உறவுகளும்,நட்பும் கூறிக்கொண்டிருக்கிறார்கள். அதையே நாங்களும் கடைப்பிடிப்பதால் சொந்தங்களோடு பேச்சு வார்த்தை இல்லை என்று சொல்பவர்களை பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கும். 

உலக நாயகனுக்கு, தெரியாது, இல்லை என்னும் இரண்டு வார்த்தைகளும் பிடிக்காதாம். என் பாட்டிக்கும் அப்படிதான். "இருக்கறது வெச்சுண்டு சமைக்கணும், இது இல்ல, அது இல்ல என்று சொல்லுவாளா?" என்பார். நாம் சரியாக செய்யாத ஒரு செயலுக்கு ஏதாவது சாக்கு சொன்னால், "ஆடத் தெரியாத நாட்டியக்காரி மித்தம்(முற்றம்) கோணல்னு சொன்னாளாம். என்பாள்.   

சேமிப்பின் அவசியத்தை வலியுறுத்த என் பாட்டி, " ஒண்ணு ஒண்ணா சேர்த்தா(ல்) காசா? ஒருமிக்க சேர்த்தா(ல்) காசா?" என்று கேட்பார். அனாவசியமாக செலவழிப்பது அவருக்குப்  பிடிக்காது. 

நம்மோடு வம்பு வளர்பவர்களோடு வாதம் செய்யக் கூடாது என்பதற்கு, " கிடக்கு விடு, எச்சக்கலைக்கு எதிர்க்கலை போடுவாளா?" என்று கேட்பார். 

இவைகளைப் போல 'காம்பும் அருகல், தோண்டியும் பொத்தல், கிணறும் பாழும் கிணறு' 

'சுண்டைக்காய் கால் பணம், சுமை கூலி முக்காப் பணம்'
போன்றவை சகஜமாக புழங்கப்பட்ட வசனங்கள். 

சமையலறையை சுத்தமாக வைத்துக் கொள்வதற்காக கூறப்பட்டதாக இருக்கலாம். (சமையல்)ஆக்கிட்டு துடைத்தால் ஐஸ்வர்யம் பொங்கும், தின்னுட்டு துடைத்தால் தரித்திரம் புடுங்கும்' என்பார்கள்.

இப்போதெல்லாம் இப்படிப்பட்ட வசனங்களை யாரும் கூறுவதில்லை. மறக்கப்படும், மறைந்து வரும் பல விஷயங்களில் இப்படிப்பட்ட பழமொழிகளும் சேர்ந்து விடும் போலிருக்கிறது. இப்போது சினிமாக்களில் வந்த,"ஆணியே புடுங்க வேணாம்"  "உனக்கு வந்தா ரத்தம், மத்தவங்களுக்கு னா தக்காளியா?" போன்றவைகளைத்தான் கூறுகிறார்கள்

Friday, July 29, 2022

பிரமிக்க வைத்த நயாகரா

பிரமிக்க வைத்த நயாகரா

நயாகரா பெண்ணைப்போல, ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு அழகு! என்றார் என் மாப்பிள்ளையின் தோழர். உண்மைதான். குளிர் காலத்தில் இரண்டு முறை அங்கு சென்றேன். கிருஸ்துமஸ் சமயத்தில் அங்கு செய்யப்பட்டிருக்கும் விளக்கொளி அலங்காரங்களையும், வாண வேடிக்கைகளையும் பார்ப்பதற்காக இரவில் ஒரு முறை சென்றோம். பகலில்தான் அருவியின் அழகு தெரியும் என்றாள் என் மகள். அதை ரசிப்பதற்காக பகலில் ஒரு முறை சென்றோம். 

வாண வேடிக்கைகள் பிரமாதம் என்று கூற முடியாது. தீபாவளியின் பொழுது நாம் வெடிக்கும் ஃபேன்ஸி வெடிகள் மாதிரிதான். அதே போல் அருவியும் பெரிதாக என்னை வசீகரிக்கவில்லை. அருவி தொடங்கும் இடத்திலிருந்து பார்த்தது காரணமாக இருக்கலாம். 

நீர்வீழ்ச்சி என்றால் மலையிலிருந்து தொபேலென்று கீழே விழ வேண்டும், ஹோவென்ற ஓசை எழுப்ப வேண்டும். நீர்த்திவலைகள் சாரலாக நம்மை நனைக்க வேண்டும். இந்த அனுபவங்களைத் தராத அருவியில் என்னதான் வினாடிக்கு 2800க்யூபிக் மீட்டர் நீர் கொட்டினாலும் அது மலையிலிருந்து நீர் வழிவதாகத்தான் தோன்றுகிறதே ஒழிய குற்றாலமோ, பாபநாசமோ தந்த சந்தோஷத்தை தரவில்லை என்று நான் கூறி விட்டதில் என் மகளுக்கு சற்று வருத்தம்தான். 

மேலே நான் சொன்ன அனுபவங்கள் கிடைக்காததற்கு குளிர் காலத்தில் நயாகராவுக்கு சென்றது ஒரு காரணமாக இருக்கலாம். "குளிருக்கு அடக்கமாக லேயர்கள் அணிந்து கொண்டு அதன் மீது ஓவர் கோட், தலைக்கு குல்லாய், கால்களில் கம்பூட்ஸ், காதுகளையும் மூடிக்கொண்டு, இத்தனையும் 

போதாதென்று கொரோனாவிற்காக மாஸ்க்...இத்தனையையும் மீறி சாரல் அடிக்கவில்லை, சத்தம் 

கேட்கவில்லை என்றெல்லாம் சொல்வது நியாயம் கிடையாது. சம்மர் வரட்டும் அப்போது நயாகராவுக்குச் செல்லலாம்" என்றாள் மகள். 

சனி, ஞாயிறு என்றால் மிகவும் கும்பலாக இருக்கும் என்பதால் வெள்ளியன்று கிளம்பினோம். நாங்கள் வசிக்கும் இடத்திலிருந்து நயாகராவிற்கு இரண்டு மணி நேர பயணம்.‌ காலை ஆறு மணிக்கு வீட்டை விட்டு கிளம்பி விட்டோம். அதற்கு முன்னாலேயே பார்க்கிங் உட்பட போட்டிங், ஜர்னி பிஹைண்ட் த ஃபால்ஸ், வொயிட் வாட்டர் வாக், ஃப்ளவர் ஷோ, பட்டர் ஃப்ளை சாங்சுரி என்ற எல்லாவற்றிர்க்கும் ஆன் லைனில் டிக்கெட் வாங்கியாகி விட்டது. இதில் என்ன வேடிக்கை என்றால் ஆன் லைனில் டிக்கெட் வாங்கியவர்கள் வரிசைதான் நீளமாக இருந்தது. நேரிடையாக வந்து நுழைவுச்சீட்டு வாங்கியவர்கள் காத்திருக்க தேவையிருக்கவில்லை.


Rainbow bridge

நயாகரா நீர்வீழ்ச்சியை கனடா, அமெரிக்கா என்ற இரண்டு நாடுகளிலிருந்தும் கண்டு ரசிக்கலாம். உண்மையில் நயாகரா அருவி என்பது நோ மேன்ஸ் ஏரியா எனப்படுகிறது.‌ இந்த இரு நாடுகளையும் ரெயின்போ ப்ரிட்ஜ் என்னும் பாலம் இணைக்கிறது. அமெரிக்காவில் இருப்பது பிரைடல் ஃபால்ஸ் என்னும் அளவில் கொஞ்சம் சிறிய அருவி. கனடாவில்தான் ஹார்ஸ் ஷு என்னும் குதிரை லாடத்தைப்போல

வளைந்திருக்கும் பெரிய பகுதி. இதற்கு அருகாமை வரை சிறிய கப்பலில் செல்ல முடியும். 

அந்த கப்பலில் பயணிக்கும் பொழுது அருவியிலிருந்து அடிக்கும் சாரலில் நாம் நனைந்து விடாதிருக்க சிவப்பு நிறத்தில் மெல்லிய ரெயின் கோட் தருகிறார்கள். கனடாவிற்கு நேர் எதிர் பகுதியில் அமெரிக்காவிலிருந்தும் சிறிய கப்பல்களில் சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். அங்கிருந்து வருபவர்கள் நீல நிற ரெயின்கோட் அணிந்திருக்கிறார்கள். படகு பயணத்தில் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்று கண்டு பிடிக்கவே இப்படி வித்தியாசமான நிறங்களில் ரெயின் கோட் வழங்கும் ஏற்பாடாம்.

கப்பல் நகரத் தொடங்கி சிறிது நேரத்தில் ஹோவென்ற பேரிரைச்சலோடு தண்ணீர் நம்மீது தெளிக்கிறது, இல்லையில்லை பலத்த மழை போல நம்மை தொப்பலாக நனைக்கிறது. படகில் இருக்கும் அத்தனை பேரும் மகிழ்ச்சியில் உற்சாகமாக ஆரவாரம் செய்கிறார்கள். நடுவில் வானவில் வேறு தெரிய அதை படமெடுக்க போட்டி. 

ஜர்னி பிஹைண்ட் த ஃபால்ஸ் என்பதும் ஒரு அற்புதமான அனுபவம். நுழைவிடத்திலிருந்து நம்மை மின்தூக்கியில் 125 அடி கீழே அழைத்துச் செல்கிறார்கள். அங்கிருந்து ஒரு நீண்ட குகையில் நடந்து சென்றால் நயாகரா பூமியில் விழுவதை அருவிக்கு பின்புறமிருந்து பார்க்கலாம். 

அந்த குகையில் கொஞ்சம் நடந்தால் வலதுபுறம் ஒரு பிரிவு செல்கிறது. அங்கு நயாகரா பற்றிய விவரங்கள், நயாகராவில் சாகஸ முயற்சிகள் செய்தவர்களின் விவரங்கள், அங்கு விஜயம் செய்த பிரபலங்கள் யார் யார் என்ற தகவல்கள் புகைப்படங்களோடு காணக்கிடைக்கின்றன. அங்கு இரண்டு சாளரங்கள் வழியே அருவியை அருகில் பார்க்க முடியும். கையை நீட்டி மழை போல கொட்டும் அருவியின் சாரலை அனுபவிக்க முடியும். அங்கிருந்து மீண்டும் டன்னலில் நடந்து அருவி பூமியைத் தொடும் இடத்திற்கு வந்தால் பார்வையாளர்களுக்கு தனியாக இடம் இருக்கிறது. இங்கேயும் சாரலிலிருந்து நம்மை காக்க ரெயின் கோட் தருகிறார்கள்.அங்கிருந்து பார்க்கும் பொழுது அந்த அருவியின் பிரும்மாண்டம் தெரிகிறது. 

அருவி தந்த அந்த பரவச அனுபவத்திலிருந்து மீண்டு வொயிட் வாட்டர் வாக்ஸ் சென்றோம். ஈரி ஏரியிலிருந்து ஒண்டோரியோ ஏரிக்கு செல்லும் நீர்த்தடத்தை ஒட்டிய மரப்பாலத்தில் .07 மைல் தொலைவு நடப்பதைத்தான் வொயிட் வாட்டர் வாக்ஸ் என்கிறார்கள். இதிலும் நாம் லிஃப்டில் கீழே அழைத்துச் செல்லப்படுகிறோம். அந்த மரப்பாலத்தில் இரண்டு இடங்களில் சற்று கீழே இறங்கி நதியோட்டத்தை மிக அருகில் பார்க்க முடியும். அந்த நதியோட்டத்தில் எழும் அலைகள் நதியின் வேகத்தால் எழுபவை. ஹரித்வார், ரிஷிகேஷ் போன்ற இடங்களில் கங்கை நதியில் இப்படிப்பட்ட அலைகளை பார்க்க முடியும். 

வேர்ல்பூல் ஏரோ கார் என்பதில் 250 அடி உயரத்தில் கேபிள் காரில் பயணித்து ஒரு குறுகலான இடத்தில் சடாரென திரும்பும் பொழுது நதியில் உண்டாகும் சுழல் களை ரசிப்பது. இந்த பயணத்தில் ஒரு சுவாரஸ்யமான விஷயம் கனடாவிலிருந்து பாஸ்போர்ட் இல்லாமலேயே அமெரிக்காவின் எல்லைக்குள் சென்று திரும்பலாம்.

மொத்தத்தில் ஒரு நல்ல அனுபவம்.

"இப்போது என்ன சொல்கிறாய்?" என்றாள் மகள். என்ன சொல்வது அருவியின் பிரும்மாண்டம், அழகு, என் வாயை அடைத்து விட்டதே..!!

Wednesday, July 20, 2022

வாஷி (மலையாள திரைப்படம்)

வாஷி 

(மலையாள திரைப்படம்)


மலையாளத்தில் வாஷி என்றால் பிடிவாதம் என்று பொருள்.(அப்படித்தானே கீதா?)

இளம் வக்கீல்களான எபின் மாத்யூ
(டொவினோ தாமஸ்),  மது(கீர்த்தி சுரேஷ்) இருவரும் வெற்றிகரமான வக்கீல்களாக தங்களை நிலை நிறுத்திக் கொள்ள பாடுபடுகிறார்கள். அவர்களுடைய வெல்விஷர் மூலம் ஒரே அலுவலகத்தை இருவரும் பகிர்ந்து கொள்ளும் இருவருக்குமிடையே காதல் பூக்கிறது. 

சாராயக்கடை நடத்தும், அரசியல் செல்வாக்குள்ள சகோதரியின் கணவர் மூலம் எபினுக்கு பப்ளிக் பிராக்ஸிக்யூட்டர் பதவி கிடைக்கிறது. 

டொவினோ தாமஸ் பப்ளிக் பிராக்ஸிக்யூட்டராக வாதாடும் முதல் கேஸிலேயே அவருக்கு எதிராக அவருடைய மனைவியாகிவிட்ட கீர்த்தி சுரேஷ். இருவருக்குமே தங்களை நிலை நிறுத்திக் கொள்ள இது ஒரு முக்கியமான கேஸ். குற்றம் சாட்டப்பட்ட ஆணை காப்பாற்ற கீர்த்தி சுரேஷ் முயல, பாதிக்கப்பட்ட பெண்ணின் சார்பாக டொவினோ தாமஸ்.  இந்த வழக்கு சம்பவங்கள் அவர்கள் வாழ்க்கையையும் பாதித்து, இளம் தம்பதிகளான அவர்கள் தனித்தனியே உறங்கும் அளவிற்குச் செல்கிறது. கேஸில் யார் ஜெயித்தார்கள்? அவர்கள் வாழ்க்கை என்னவானது? என்பதையெல்லாம் மிகையில்லாமல், இயல்பாக, சுவாரஸ்யமாக சொல்லியிருக்கும் படம். 

கடைசியில் தன் வாதத்தை தொகுத்து வழங்கும் கீர்த்தி சுரேஷ்  எல்லா படங்களையும் போல உடைந்து போய் அழுது தன் வாதத்தை முடிக்கப் போகிறார் என்று நினைத்தால்.. அப்படியெல்லாம் இல்லை. 

நோ ஹீரோயிசம், நோ மெலோ டிராமா, நோ வயலென்ஸ், நோ டூயட், நோ தனி காமெடி டிராக்‌.

கட்டுக்கோப்பான திரைக்கதை, இயல்பான காட்சிகள், வசனங்கள் மற்றும் நடிப்பு.  நிச்சயமாக ஒரு முறை குடும்பத்தோடு பார்க்கலாம். 
Available in Netflix. 

Saturday, July 9, 2022

கெட்ட சொப்பனம்..


கெட்ட சொப்பனம்..

பலராலும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட அந்தப் படம் ரிலீசாகி விட்டது. திரையரங்குகளில் ஒரே கும்பல். முதல் காட்சியை என் மகள் என் சகோதரி குடும்பத்தோடு பார்த்து விட்டாள். "என்னை விட்டு விட்டு நீ மட்டும் பார்த்து விட்டாய்" என்று அவளிடம் கூறி விட்டு நான் வரிசையில் நிற்கச் செல்கிறேன். என்னோடு பாம்பே ஜெயஶ்ரீ இணைந்து கொள்கிறார். தியேட்டரில் உள்ளே வருபவர்களுக்கெல்லாம் வாழை மட்டை தட்டில் பொங்கல் தருகிறார்கள். இந்த நேரத்தில் பாம்பே ஜெயஶ்ரீ எங்கேயோ சென்று விடுகிறார். 

நான் படம் பார்த்து விட்டு Awesome என்ற ஒரே வார்த்தையை பெரிதாக என் பிளாகில் விமர்சனமாக எழுதுகிறேன். அதற்கு பின்னூட்டத்தில் ஸ்ரீராம், "அதற்குள் பார்த்து விட்டீர்களா? ஃபர்ஸ்ட் டே, ஃபர்ஸ்ட் ஷோவா?" என்று கேட்கிறார். கீதா அக்கா,"நிஜமாக வா..? நன்றாக இருக்கிறதா?" என்கிறார். எனக்கு திடீரென நாம் நிஜமாகவே படத்தை பார்த்தோமா? பாதியில் தூங்கி விட்டோம் போலிருக்கிறதே..? இதில் விமர்சனம் வேறு எழுதி விட்டோம் என்று சந்தேகம் வருகிறது. புரண்டு படுத்து முழித்துக் கொண்டு விட்டேன். 

நேற்று பொன்னியின் செல்வன் -1 டீசர் பார்த்தேன். அதற்கு இப்படி ஒரு விளைவா? சின்ன வயதில் ராத்திரி நேரத்தில் பேய்க்கதைகளை படிக்க க் கூடாது கெட்ட சொப்பனம் வரும் என்பார்கள். 

Wednesday, July 6, 2022

பிறந்த நாள் இன்று பிறந்த நாள்

 பிறந்த நாள் இன்று பிறந்த நாள்


பழைய சினிமா ஒன்று 
"விரும்பிப் போனால் விலகிப் போகும்" 
"விலகிப் போனால் விரும்பி வரும்" என்ற வாசகங்களோடு துவங்கும். அந்த வாக்கியங்களை நியாயப்படுத்தும் சம்பவங்கள்தான் கதை. 

என் வாழ்க்கை முழுவதும் இப்படித்தான் அமைந்திருக்கிறது. எந்த விஷயத்திற்காவது அதிகம் ஆசைப்பட்டால் அது கிடைக்கவே கிடைக்காது. அந்த ஆசை அடங்கி அதை விட்டு விலகியதும் மடியில் வந்து விழும். 

பிறந்த நாள் வாழ்த்துக்களும் அப்படித்தான். சின்ன வயதில் பிறந்தநாள் கொண்டாடப்பட வேண்டும். எல்லோரும் வாழ்த்து சொல்ல வேண்டும் என்று ரொம்ப ஆசைப்பட்டிருக்கிறேன். ம்ஹூம்!  நடந்ததேயில்லை. பிறந்த நாள் என்று என்பது தெரிந்தால் தானே கொண்டாட? அது வருவதும் தெரியாது போவதும் தெரியாது. தவிர எங்கள் வீட்டில் நாம் பிறந்த தமிழ் மாதத்தில் நம்முடைய நட்சத்திரம் வரும் நாளைத் தான் பிறந்த நாள் என்பார்கள். அதைக் கூட கொண்டாடும் பழக்கமெல்லாம் கிடையாது. முடிந்தால் கோவிலுக்குச் செல்வோம். பள்ளியில் பிறந்த நாளன்று புத்தாடை அணிந்து சாக்லேட் கொடுக்கும் சில மாணவிகளை பார்க்கும் பொழுது நாமும் இப்படி கொடுக்க வேண்டும் என்று ஆசையாக இருக்கும். 

திருமணத்திற்குப் பிறகு என் கணவர் சர்ப்ரைஸ் கிஃப்டெல்லாம் கொடுத்ததில்லை.‌ என் பிறந்த நாளன்று உறவினர்கள், நண்பர்கள் யாராவது வாழ்த்தினால்  என் கணவர்,"உனக்கு இன்னிக்கு பிறந்த நாளா? சொல்லவேயில்ல..?" என்பார். போஸ்டரா அடித்து ஒட்ட முடியும்?

முதிர்ச்சி வர வர, பிறந்த நாளைக் கொண்டாடும்படி நாம் என்ன செய்து விட்டோம்? என்னும் கேள்வி பிறந்தது. ரமண மகரிஷியிடம் ஒரு முறை அவர் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக அனுமதி கேட்ட பொழுது,"பிறவி எடுத்ததற்காக வருத்தப்பட வேண்டும், அதில் கொண்டாட என்ன இருக்கிறது?" என்றாராம். அவரே அப்படி கூறியிருக்கும் பொழுது பிறந்த நாள் கொண்டாட நமக்கென்ன அருகதையிருக்கிறது? என்று அந்த ஆசை அற்றுப் போனது. 

அதன் பிறகுதான் முகநூலில் சேர்ந்தேன். பிறந்த நாளில் சிலர் வாழ்த்துவார்கள். இந்த வருடம் வாட்ஸாப், முகநூல், மெஸென்ஜர் என்று எல்லா தளங்களிலும் வாழ்த்துக்கள் வந்தன. உறவினர்கள், நண்பர்கள், நன்கு தெரிந்தவர்கள், நேரில் பார்த்து பழகாதவர்கள் என்று பலரும் வாழ்த்து தெரிவித்திருந்தீர்கள். அத்தனை பேருக்கும் நெஞ்சார்ந்த நன்றி. பெரியவர்களுக்கு என் நமஸ்காரங்கள் 🙏🙏. சிறியவர்களுக்கு ஆசிகள்.

என் மரியாதைக்குரிய பலரும் வாழ்த்தியது மகிழ்ச்சியூட்டியது.

என் பேத்தி பேப்பரைக் கொண்டு  பூங்கொத்து அவளே செய்து எனக்கு கொடுத்தாள். நிஜமான பூ என்றால் வாடி விடும். இது வாடாமலர் பூங்கொத்து! இது போதாதா?

உங்கள் அத்தனை பேரின் அன்பிற்கும் மீண்டும் நன்றி 🙏🙏❤️❤️❤️

எ.பி.வாட்ஸாப் குழுவில் எனக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டதாக அறிந்தேன். எல்லோருக்கும் நன்றி 🙏🙏

Wednesday, June 29, 2022

மனதில் நின்ற வரிகள், வசனங்கள்.அ

மனதில் நின்ற வரிகள், வசனங்கள்.

சமீபத்தில் மத்யமரில் Post of the week வாங்கிய என்னுடைய பதிவு இது. சிலவற்றை எழுதும் பொழுதே மனதிற்கு ஒரு திருப்தி வரும். அப்படிப்பட்ட பதிவு என்பதால் இங்கும் பகிர்ந்து கொள்கிறேன். 

லௌகீக வாழ்க்கையில் (material life) வெற்றி பெற்றவர்களைத்தான் திறமைசாலிகள் என்று கருதுகிறோம். அப்படி வெற்றிக் கனியை எட்டிப் பிடிக்க முடியாதவர்களை அசடு என்று சொல்லத் தயங்குவதில்லை. ஆனால் அசோகமித்திரன் ஒரு கதையில் (கதை பெயர் மறந்து விட்டது) என்ன சொல்கிறார் தெரியுமா? 

"கெட்டிக்காரத்தனம், அசட்டுத்தனம் என்றெல்லாம் கிடையவே கிடையாது. நாம் செய்யும் ஒரு காரியம் வெற்றி அடைந்து விட்டால் அதுதான் கெட்டிக்காரத்தனம், புத்திசாலித்தனம். அந்த காரியம் தோல்வி அடைந்து விட்டால் அதுவே அசட்டுத்தனம், முட்டாள்தனம் ஆகி விடும். How true! 

இதே வெற்றி, தோல்வி பற்றி ஜெயகாந்தனுடைய கருத்தையும் மறக்க முடியாது. 'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்' படத்தில் வரும் "நடிகை பார்க்கும் நாடகம் இதில் ரசிகர் எல்லாம் பாத்திரம்..." என்ற பாடலில்

"நன்மை என்பதும், தீமை என்பதும்

நாமணிந்திடும் வேடமே இதில்

வெல்வதென்னடி, தோல்வி என்னடி

மேடையில் ஒர் விளையாடலில் நாம்

மேடையில் விளையாடலில்" 

என்னும் வரிகளை மறக்கவே

முடியாது. 

ஜெயிக்கறதாவது? தோற்கறதாவது? All crap, just live the life என்று அனாயாசமாக கூறிவிட்டு சென்றுவிட்டார்.

லா.ச.ரா. அவருடைய பாற்கடல் அல்லது சிந்தாநதி இந்த இரண்டு நூல்களுள் ஏதோ ஒன்றில் 

"சிறு வயதில் கஷ்டப்படுவது பூண்டு வைத்த பாத்திரம் போல, எத்தனை தேய்த்து அலம்பினாலும் அந்த வாடை போகாது" என்று எழுதியிருந்ததையும். 

அவருடைய 'தரிசனம்' சிறுகதையில் கன்யாகுமரியை  

'அபிஷேக சுந்தரியாய் அவளின் அந்த சகிக்க முடியாத சௌந்தர்யம்!" என்று வர்ணித்ததையும்... அடடா! எப்படி மறக்க முடியும்?

சுஜாதாவின் 'சிவந்த கைகள்' கதையில் 

"பொய் சொல்லுவதற்கு அசோக்கின் இரண்டு விதிகள்

பொய் சொல்லாதே

பொய் சொன்னால் அதை உண்மையாக்கிவிடு"

எனக்கு பொய் சொல்ல வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏற்படும் பொழுதெல்லாம் இதை நினைத்துக் கொள்வேன். பொய் சொல்ல மாட்டேன்.

தி.ஜானகிராமன் மோகமுள் கதையை 

"இந்த பிரபஞ்சத்திற்கு எதுவுமே புதிதில்லை" 

என்னும் அட்சர லட்சம் பெறும் வார்த்தைகளோடு முடித்திருந்ததை மறக்க முடியுமா?

அவரே 'அன்பே ஆரமுதே' நாவலில் 

'இல்லறத் துறவு எவ்வளவு புனிதமோ அவ்வளவு புனிதம் துறவில்லறமும்'

என்று எழுதியிருந்ததும் மனதில் பச்சக்கென்று ஒட்டிக் கொண்ட வரிகள்.


சமீபத்தில் படித்த எஸ்.ராமகிருஷ்ணனின் நாவலில் காது கேட்காத ஒருவன்தான் கதாநாயகன். அதில் அவன் ,"குளிக்கும் பொழுது தண்ணீர் கீழே விழும் சத்தம் கேட்காது" என்று சொல்வதாக வரும் வரிகள் என்னை அதிர வைத்தது. இப்படி ஒரு விஷயம் இருக்கிறதா? என்ற எண்ணம் நெஞ்சை பிசைந்தது.

எவ்வளவு முயற்சி செய்தும் நாம் விரும்பும் சில விஷயங்கள் நடக்காத பொழுது 'முத்து' படத்தில் சூப்பர் ஸ்டார் சொல்லும்

"கிடைக்கிறது கிடைக்காம இருக்காது, கிடைக்காம இருக்கறது கிடைக்காது" என்னும் வசனம்தான் ஆறுதல்.

மற்றொரு மறக்க முடியாத வசனம் விருமாண்டி படத்தில் கமல் கூறும்,

"பெரும்பாலும் நாம் சந்தோஷமா இருக்கும் பொழுது நமக்கு அது தெரிவதில்லை " 

எவ்வளவு அர்த்தமுள்ள வசனம்! 

கண்ணதாசனின் இந்த வரிகளை கூறாமல் இந்த கட்டுரை நிறைவு பெறாது.

பிறப்பில் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்த பார் என இறைவன் பணித்தான்
இறப்பில் வருவது யாதெனக் கேட்டேன்
இறந்து பார் என இறைவன் பணித்தான்
மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்
மணந்து பார் என இறைவன் பணித்தான்
அனுபவித்தே தான் அறிவது வாழ்வெனில்
ஆண்டவனே நீ ஏன் எனக் கேட்டேன்
படைத்தவன் சற்றே அருகினில் வந்து
அனுபவம் என்பதே நான்தான் என்றான் 

Tuesday, June 28, 2022

Fingertip - தமிழ் வெப் சீரீஸ்- விமர்சனம்

Fingertip - தமிழ் வெப் சீரீஸ்- விமர்சனம் 

சோஷியல் மீடியா என்பது விரல் நுனியில் இருக்கும் விபரீதம். இதை Zee5 ல் வெளியாகியிருக்கும் ஃபிங்கர்டிப் என்னும் வெப்சீரீஸ் அலசியிருக்கிறது. 

சீசன் ஒன்றில் ஐந்து வெவ்வேறு கதைகளில் வெவ்வேறு நடிகர்கள் நடிக்க, சோஷியல் மீடியாவிற்கு அடிமையானவர்கள், நல்லவர்கள், அப்பாவிகள், இவர்களை சோஷியல் மீடியா எப்படி பாதிக்கிறது என்று சுவாரஸ்யமாக காட்டியிருக்கிறார்கள். ஆனால் தலைப்புகள் Greed, Rage, Betrayal, Lust, Vengeance என்று ஆங்கிலத்திலேயே இருப்பது சற்று நெருடலாக இருக்கிறது. எல்லா மொழிகளிலும் டப் செய்து வெளியிட சௌகரியமாக இருக்கும் என்பதாலோ?

சீசன் இரண்டு ப்ளாக் வெப்(black web) என்னும் பயங்கரத்தை டீல் பண்ணுகிறது. 

தங்கள் செல்போன்களை சர்வீஸுக்கு கொடுக்கும் பெண்களின் புகைப்படங்களை மக் பண்ணி, அவர்களை விரட்டுபவன், மார்பிங் மூலம் பிரபலங்களின் பொது வாழ்வை சீர் குலைப்பவன், தாழ்வு மனப்பான்மை கொண்ட ஃபுட் டெலிவரி செய்பவன், காஸ்மெட்டிக் சர்ஜரி மூலம் தன் மூக்கை திருத்திக் கொள்ள நினைக்கும் நடிகை, எக்லிப்ஸ் என்னும் எதிக்கல் ஹாக்கர், சி.சி.டி.வி.காமிரா பொருத்த வருபவர்கள் போல வந்து தனிமையில் இருக்கும் முதியவர்களை கொலை செய்யும் ஒரு கும்பல், அதை கண்டுபிடிக்க முயலும் போலீஸ் அதிகாரி இப்படி தனித் தனியாக இருக்கும் கதைகள் ஒரு புள்ளியில் அழகாக இணைகின்றன. இதில் அந்த நடிகையின் கதை மட்டும் கொஞ்சம் ஒட்டாது போல இருக்கிறது. எல்லா நடிகர்களும் சிறப்பாக நடித்திருக்கின்றனர். குறிப்பாக மார்பிங் செய்யும் அந்த இளைஞர், சரியான வில்லன். நல்ல திரைக்கதை மற்றும் இயக்கம். இயக்குனர் ஸ்ரீனிவாசன் ஷிவகரை விரைவில் பெரிய திரையில் எதிர்பார்க்கலாம் என்று தோன்றுகிறது. 

Monday, June 20, 2022

விக்ரம்(விமர்சனம்)

விக்ரம் 


நானும் விக்ரம் பார்த்து விட்டேன். இந்த படத்தைப் பற்றி பலவிதமான விமர்சனங்கள் வந்தன. 

"பிரமாதம்.." என்று சிலரும், "ஒரே இருட்டு, டயலாக் புரியவேயில்லை" "எக்கச்சக்க வயலன்ஸ்" என்று சிலரும் எழுத, ஓ.டி.டி.யில் பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்திருந்தேன். ஆனால் நண்பர் ஸ்ரீராம் படம் நன்றாக இருக்கிறது. தியேட்டரில் பாருங்கள் என்றது நம்பிக்கை அளித்தது. 

நான் கமலஹாசனின் நடிப்பை ரசிப்பேன் ஆனால் அவருடைய ஹார்ட் கோர் ஃபேன் கிடையாது. லோகேஷ் கனகராஜின் மாநகரம் படம் மிகவும் பிடித்திருந்தது.  என் மகளுக்கும் பார்க்க வேண்டும் என்று தோன்றியதால் கிளம்பினோம்.

முதல் பாதி செம! பகத் ஃபாசில் படத்தை எடுத்துச் செல்கிறார். இடைவேளையில் ஒரு முடிச்சு அவிழ, பின்பாதி எப்படி இருக்கும் என்று புரிந்து விடுகிறது. இருந்தாலும் இரண்டாம் பாதியும் நன்றாகவே இருக்கிறது. படத்தின் நீளம் தெரியவில்லை. 

நட்சத்திர பட்டாளம், எல்லோருக்கும் பெரிய ரோல் என்று சொல்ல முடியாது, ஆனால் குறிப்பிடத்தக்க பங்கு இருக்கிறது. எல்லோரும் தங்கள் பங்களிப்பை செவ்வனே செய்திருக்கிறார்கள்.

இருட்டு, இரைச்சல் என்பதெல்லாம் கொஞ்சம் மிகையான விமர்சனம். காட்சிகள் துல்லியம். பாடல்கள் பெரிதாக மனதில் நிற்கா விட்டாலும்,  பின்னணி இசை படத்திற்கு நல்ல சப்போர்ட். 

விஜய் சேதுபதியின் அறிமுக காட்சியில் கனடாவில் கைதட்டி வரவேற்கிறார்கள்! சூர்யாவுக்கும்  அப்படியே. 

நிச்சயமாக ஒரு முறை பார்க்கலாம்.

Saturday, June 18, 2022

மனம் கவர்ந்த மாண்ட்ரியால்


மனம் கவர்ந்த மாண்ட்ரியால்



ஆட்டவாவிலிருந்து மாண்ட்ரியால் செல்வதற்கு இரண்டு வழிகளை கூகுளார் பரிந்துரைத்தார். ஒன்று ஹைவே, மற்றது சீனிக் பியூட்டி பாதை. நாங்கள் இரண்டாவதை தேர்ந்தெடுத்தோம். வழி முழுவதும் காடு, ஆறு என்று இயற்கையை ரசித்தபடி பயணித்தோம். முதல் நாள் சூறைக்காற்று சேர்ந்த மழையால் ஆங்காங்கு முறிந்து கிடக்கும் மரங்களையும் பார்க்க முடிந்தது. அகண்டு, விரிந்து ஓடும் செயின்ட் லாரன்ஸ் நதி எங்கள் திருச்சியின் அகண்ட காவேரியை நினைவூட்டியது. 

க்யூபெக் எல்லையைத் தொட்டவுடனேயே ஃபிரஞ்சு ஆதிக்கம். தெருப் பெயர்கள், சிக்னல்களில் இருந்த பெயர்ப் பலகைகள் எல்லாவற்றிலும் ஃபிரெஞ்சு, ஆங்கிலம் இரண்டு மொழிகளும் காணப்பட்டன. 






மாண்ட்ரியால் அழகும், கம்பீரமும் சேர்ந்த நகரம்.  அதுவும் ஓல்ட் மாண்ட்ரியாலில் Notredame பெசலிகா அமைந்திருக்கும் டவுன்டவுனில் எல்லா வங்கிகளின் தலைமை அலுவலகங்களும் இருக்கின்றன. எல்லாமே ஃபிரெஞ்சு கட்டிடக்கலையில் அமைந்து நம்மை நிமிர்ந்து பார்க்கத் தூண்டி சொல்லிழக்க வைக்கின்றன. 










நாற்றிடேம் (Notredame) பெசலிகா சுற்றுலா பயணிகளை கவரும் இடமாக இருக்கிறது. இதன் விதானங்களின் வேலைப்பாடுகள் கலை நயத்தோடு இருக்கின்றன. இங்கு வண்ண வண்ணமாக ஏற்றி வைக்கப் பட்டிருக்கும் மெழுகு வர்த்திகள் இங்கே பிரார்த்தனை செய்யவும் வருகிறார்கள் என்று எண்ண வைத்தாலும், பெரும்பாலும் இதை ஒரு சுற்றுலா தலமாக கருதி புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்துக் கொள்பவர்கள் தான் அதிகம். 

அங்கிருந்து மதிய உணவு சாப்பிட இந்திய உணவகத்தை  நடந்து, நடந்து தேடி கண்டுபிடித்து சாப்பிட்டு விட்டு, ஒரு ஐஸ் கிரீமையும் விழுங்கி விட்டு ஓல்ட் போர்ட் சென்றோம்.



செயின்ட் லாரன்ஸ் நதிக்கரையில் அமைந்திருக்கும் ஓல்ட் போர்ட்டில் இந்த வசந்தம் மற்றும் கோடை காலத்தில் வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்காக எக்கச்சக்க பொழுது போக்கு அம்சங்கள். ஜிப் லைன் போன்ற அட்வென்சர் விளையாட்டுகள், பெடல் போட்ஸ், சைக்கிள் இவைகளை எடுத்து ஓட்டலாம். ஒரு இடத்தில் டில்லியில் இருக்கும் சைக்கிள் ரிக் ஷாக்கள் போல வரிசையாக நிறுத்தி வைக்கப் பட்டிருந்தன.  டிக்கெட் வாங்கி கொண்டு ஏறி அதில் அந்த இடத்தை சுற்றிப் பார்க்கலாம் என்று நினைத்தேன். அதை க்வாட்ரா சைக்கிள் (qradra cycle) என்கிறார்கள். அதில் ஏறி சுற்றி வரலாம், ஆனால் நாம்தான் ஓட்ட வேண்டும். நோ ரிக் ஷாகாரர். 





நிறைய உணவு விடுதிகள், அழகு பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், டாட்டூ போட்டு விடுபவர்கள் என்று அந்த இடம் நம் ஊரின் பொருட்காட்சி நடைபெறும் இடம் மாதிரி இருக்கிறது. இரவு உணவை அங்கேயே முடித்துக் கொண்டு ஹோட்டலுக்குச் சென்றோம்.

மறுநாள் தாவரவியல் பூங்காவிற் குச் சென்றோம். முதலில் எனக்கு பெரிதாக எனக்கு எந்த அபிப்ராயமும் இல்லை. "என்ன பெரிய பொட்டானிக்கல் கார்டன்?லால்பாகை விடவா? என்று நினைத்தேன். 

ஆனால் மிகப்பெரிய, ஏறத்தாழ 22,000க்கும் மேற்பட்ட செடி வகைகள். மூலிகைச் செடிகள், நீர்த்தாவரங்கள் என்று விதம் விதமான தாவரங்கள் வளரும் மிகப் பெரிய பூங்கா. இதை சுற்றி வருவதற்கு இரண்டு மணி நேரங்கள் பிடிக்கிறது. 



இதில் சைனீஸ் தோட்டம் கணிசமான இடத்தை ஆக்கிரமிக்கிறது. அங்கு போன்சாய் மரங்களுக்கு தனி இடம். எனக்கு போன்சாயை ரசிக்க முடியாது. உயர்ந்து, பரந்து வளரக்கூடிய மரங்களை குட்டையாக வளர்ப்பது அவைகளுக்கு செய்யும் துரோகம் என்று தோன்றும்.‌ 

இந்த தாவரவியல் பூங்காவிற்கு எதிரே மாண்ட்ரியால் டவரும், ஒலிம்பிக் ஸ்டேடியமும் இருக்கின்றன. அவை பராமரிப்பு வேலைகளுக்காக மூடப்பட்டிருந்ததால் உள்ளே சென்று பார்க்க முடியவில்லை. மாண்ட்ரியால் டவரின் சிறப்பு அது 45 டிகிரி சாய்வாக கட்டப்பட்டிருப்பதுதான். 

மாண்ட்ரியால் டவர்

பூங்கா முழுவதும் சுற்றிப் பார்த்து விட்டு ஊருக்கு கிளம்பினோம். ஒரு இந்திய உணவகத்தில் மதிய உணவை கையில் வாங்கிக் கொண்டோம். வழியில் தென்னிந்திய பாணியில் கோபுரம், பளபளக்கும்  விமானத்தோடு, ஒரு கோவில் தென்பட்டது. எந்த கோவில் என்று தெரியவில்லை. அடுத்த முறை வரும் பொழுது பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டோம். ஆனால் ஆட்டவாவிற்கு தனியாக இரண்டு நாட்கள், மாண்ட்ரியாலுக்கு இரண்டு நாட்கள் பிளான் பண்ண வேண்டும் என்று தோன்றியது. 

திரும்பும் வழியெங்கும் ஒரு பக்கம் நதி, இன்னொரு பக்கம் வயல்கள். அவற்றில் மேய்ந்து கொண்டிருந்த மாடுகள், சில இடங்களில் குதிரைகள். நான் என் மகளிடம்," என் சின்ன வயதில் நான் வசித்த திருச்சி இப்படித்தான் நகரத்திற்கு நடுவிலேயே வயல்களோடு இருக்கும்" என்று கூறி பெருமூச்சு விட்டேன். வேறு என்ன செய்ய முடியும்?

பல தடங்கல்களோடு தொடங்கினாலும், இனிமையாக முடிந்த பயணம்.