கணம்தோறும் பிறக்கிறேன் 

Saturday, May 11, 2024

மூன்று படங்கள் JML


ஹாட் ட்ரிக் அடிப்பது போல அடுத்தடுத்து மூன்று நல்ல படங்களை பார்த்தேன்.


ஜெ.பேபி, மஞ்சுமல் பாய்ஸ், லாப்பட்டா லேடீஸ். இதில் ஜெ.பேபிக்கு ஏற்கனவே விமர்சனம் எழுதி விட்டேன்.

மஞ்சுமல் பாய்ஸ் நிறைய பாராட்டுதல்களையும், கொஞ்சம் விமர்சனத்தையும் சந்தித்தது. இந்த படத்திற்கு ஜெயமோகனின் கண்டனத்தை படித்த பிறகு பார்க்கலாமா? வேண்டாமா? என்ற குழப்பம் இருந்தது. ஒரு வழியாக ஹாட்ஸ்டாரில் பார்த்தேன்.  படத்தை பார்த்த பிறகு ஜெமோ ஏதோ கோபத்தை பட விமர்சனம் என்ற பெயரில் ஆற்றிக் கொண்டிருக்கிறார் என்றுதான் தோன்றியது.

படத்தின் கதை என்னவென்று எனக்குத் தெரியும். இருந்தாலும் க்ளைமாக்ஸ் நெருங்க,நெருங்க சோஃபாவில் சாய்ந்து உட்கார முடியாமல், நுனிக்கு வந்து விட்டேன்.
அதிலும், நண்பனை காப்பாற்றச் சென்றவன், நண்பனோடு சேர்ந்து மேலே வர முடியாமல், பாறை இடுக்கில் சிக்கிக் கொள்ளும் பொழுது, "கயிறை கொஞ்சம் லூசாக கீழே இறக்கி, பிறகு மேலே இழுங்கடா" என்று கத்த தோன்றுகிறது. அதைப்போலவே செய்து இருவரும் மேலே வரும்பொழுது தியேட்டரில் எப்படிப்பட்ட அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கும் என்பது புரிகிறது. அதோடு படத்தை முடிக்காமல், அதன் பின் விளைவுகளையும் காட்டியிருப்பது சிறப்பு. 

அறம் படத்தையும், இதையும் சிலர் ஒப்பிடுகின்றனர்.  அதில் குழந்தை,  தெரியாமல் கிணற்றில் விழும். இதில் எல்லோரும் விவரம் அறிந்தவர்கள். தடை செய்யப்பட்ட பகுதிக்கு ஏன் செல்ல வேண்டும்? என்று ஒருவர் கேட்டிருந்தார். அது மாஸ் மெண்டாலிட்டி(குழு மனப்பான்மை) அதை சிறப்பாக இயக்குனர் கையாண்டிருக்கிறார் என்றே தோன்றுகிறது. தவற விட்டவர்கள் டிஸ்னி ஹாட் ஸ்டாரில். தமிழ் டயலாக்கோடு கிடைக்கிறது பாருங்கள், worth watching!

'லாப்பட்டா லேடீஸ்' இந்த படத்தைப் பற்றி மத்யமரில் நிறைய விமர்சனங்கள் வந்து விட்டன.  எண்பதுகளில் நடப்பதாக சித்தரிக்கப்பட்ட கதை. திருமணமாகி புகுந்த வீட்டிற்கு முன்பதிவு செய்யப்படாத ரயில் பெட்டியில் செல்லும் இரண்டு மணமகள்கள் மாறிப்போய் விடுகிறார்கள். அதில் ஒருத்தி பால்மணம் மாறாத முகம் கொண்ட, தன் ஊர், கணவன் ஊர் பெயர் கூட சொல்லத் தெரியாத அப்பாவி. இன்னொருத்தி நன்றாக படிக்கக் கூடியவள், கல்வியைத் தொடர விரும்பினாலும், அது மறுக்கப்பட்டு,  ஒரு மூர்க்கனுக்கு இரண்டாம் தாரமாக கட்டிக்கொடுக்கப் படுகிறாள். முதலாம் பெண் கணவனோடு சேர்ந்தாளா? அடுத்தவள் என்னவானாள்? அவள் ஆசைப்படி கல்வியைத் தொடர முடிந்ததா? என்பதை ஸ்வாரஸ்யமாக சித்தரிக்கும் படம்.

இந்த மூன்று படங்களுக்கும் இருக்கும் ஒற்றுமை, இந்தப் படங்களில் பெரிய ஸ்டார் வேல்யூ கிடையாது. அதனால் ஹீரோவுக்கு இண்ட்ரோ சாங் கிடையாது.  நோ வில்லன், சோ, நோ வயலன்ஸ். ரத்தம் தெறிக்கும் வன்முறை காட்சிகள் கிடையாது.  இந்தப் படங்களில் நடித்திருக்கும் நடிகர்கள் எல்லோரும் சினிமா பூச்சு இல்லாமல், நம் அக்கம் பக்கத்தில் நாம் பார்க்கும் மனிதர்களைப் போலவே இருக்கிறார்கள். மிக மிக இயல்பான காட்சிகள், வசனங்கள். இப்படிப்பட்ட படங்களும் ஜெயிப்பது ஆரோக்கியமான விஷயம்தானே?