கணம்தோறும் பிறக்கிறேன் 

Friday, June 21, 2024

மசாலா சாட்

மசாலா சாட்  

வில்லனான ஹீரோ!:


அனேகமாக தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன் செய்த லட்சுமிகாந்தன் கொலை வழக்கிற்கு அடுத்து பரபரப்பாக பேசப்படும் கொலை வழக்கு தர்ஷன் என்னும் கன்னட நடிகர் தன்னுடைய காதலிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய ரேணுகாசாமி என்பவரை கொடூரமாக கொலை செய்திருப்பது.

லட்சுமிகாந்தனாவது ஒரு மஞ்சள் பத்திரிகையாளர். தியாகராஜ பாகவதைரையும், என்.எஸ்,கேயையும் பிளாக் மெயில் செய்திருக்கிறார். ரேணுகாசாமியோ தர்ஷனின் ரசிகர். அவர் செய்த தவறு தன்னுடைய அபிமான நடிகருக்கு ஒரு குடும்பம், மனைவி, மகன் இருக்கும்பொழுது இன்னொரு பெண்ணிடம்(நடிகை) தொடர்பு வைத்திருந்தது பிடிக்கவில்லை. அதனால் அந்தப் பெண்ணுக்கு ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பியிருக்கிறார்.

இங்கு ஒரு விஷயம்தான் வருத்தமளிக்கிறது. ரேணுகாசாமியைப் பொருத்தவரை ஏற்கனவே திருமணமாகி மனைவி, குழந்தையோடு வாழும் தர்ஷனுக்கு எந்த குருஞ்செய்தியும் அனுப்பவில்லை. பெண்தான் தவறுக்கு காரணம் என்று தவறான எண்ணத்தில் செயல்பட்டு, அவரை நம்பி வந்த பெண்ணையும், குழந்தையையும் நடுத்தெருவில் விட்டு விட்டு சென்றிருக்கிறார். என்னத்தை சொல்வது?

ராசிபலனால் பாதிக்கப்பட்ட ஜோதிடர்:


டி.வி.யில் ஜோதிடம் சொல்லும் பலருள் முக்கியமானவர் ஹரிகேசநல்லூர் வெங்கட்ராமன் அவர்கள். அவருடைய நிகழ்ச்சியை பார்ப்பவர்களுக்கு இவர் என்ன எல்லோருக்கும் பிரமாதமாக இருக்கிறது என்கிறாரே? என்று தோன்றும். அதற்கு ஒரு சுவையான காரணம் சொல்கிறார்.

துபாயில் பணிபுரிந்து கொண்டிருந்த ஒரு ஆள், காலையில் தொலைகாட்சியில் ராசி பலன் கேட்டிருக்கிறார். அவருடைய ராசிக்கு மோசமான பலங்களை கூறியிருக்கிறார் அந்த ஜோதிடர். ஏற்கனவே வாழ்க்கையில் துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருந்த அந்த தொழிலாளி, மனமுடைந்து, தனக்கு நல்ல காலம் வராது என்று ஜோதிடர் கூறிவிட்டதால், தான் தற்கொலை செய்து கொள்வதாக எழுதி வைத்துவிட்டு, தற்கொலை செய்து கொண்டுவிட, அந்த ஜோதிடரை கைது செய்து விட்டார்களாம். அதனால் தொலைகாட்சியில் மோசமான பலன்களை சொல்ல மாட்டாராம். தனிப்பட்ட முறையில் ஜோதிட ஆலோசனை கேட்பவர்களிடம் சரியான பலனை கூறி விடுவாராம். எப்படி இருக்கிறது?

மாற்றப்பட்ட நர்சரி ரைம்:

தொலைகாட்சி என்றதும் ஒரு நல்ல விஷயம் நினைவுக்கு வருகிறது. ‘ரெய்ன் ரெய்ன் கோ அவே, கம் அகெய்ன் அனதர் டே..’ என்று ஒரு நர்சரி ரைம் உண்டு. இங்கிலாந்தில் அடிக்கடி மழை பெய்யும், அதனால் அங்கு இருக்கும் குழந்தைகள் அந்தப் பாடலை பாடுவதில் தவறு ஒன்றும் இல்லை. ஆனால் வருடத்தில் இரண்டு மாதங்கள் மட்டும் மழை பெய்யும், மழை மிகவும் அவசியமான நம் நாட்டு குழந்தைகள் அந்தப் பாடலை பாடக்கூடாது, மழை வேண்டும் என்று நோன்பு இருப்பவர்கள் நாம் என்று பலரும் பரவலாக சொல்ல ஆரம்பித்தது வீண் போகவில்லை. இப்போது அந்த ந்ர்சரி ரைம் ‘ரெய்ன் ரெய்ன் இட்ஸ் ஓகே!, வீ வில் ப்ளே ஆன் அ சன்னி டே..’ என்று மாற்றி விட்டார்கள்.

எந்த விஷயம் மாற வேண்டும் என்று நினைக்கிறோமோ, அதைப் பற்றி பொது வெளியில் அதிகம் பேச வேண்டும். அப்படி பேசிப் பேசிதான் பல நல்ல விஷயங்கள் நடந்திருக்கின்றன.