கணம்தோறும் பிறக்கிறேன் 

Sunday, June 2, 2024

அலைகடலும்,ஆராவமுதனும்

அலைகடலும்,
ஆராவமுதனும்




சென்ற மாதம் சென்னை வந்திருந்த பொழுது மெரீனா பீச் சென்றிருந்தேன். ஓடி வந்து நம் கால்களில் மோதும் அலைகளில் நனைவது எப்போதுமே மிகவும் பிடிக்கும். ஏதோ சத்தியம் செய்து கொடுத்ததைப் போல எல்லை மீறாமல் நிற்கும் சமுத்திரத்தின் கட்டுப்பாடு எப்போதுமே வியக்க வைக்கும். ஒரு முறை மீறிய பொழுது நிகழ்ந்த பாதகங்களை பார்த்தோமே! வங்க கடலுக்கு கொஞ்சம் ஆக்ரோஷம் அதிகம்தான். அமைதியாக எழும்பி அடங்கும், ஆர்ப்பரித்து பயமுறுத்தும் அந்த அலைகள் எப்போதோ கேட்ட ஜெயராம சர்மா அவர்களின் உபன்யாசத்தை நினைவூட்டின. திருமாலின் பத்து அவதாரங்களை கடலின் அலைகளோடு அழகாக ஒப்பிடுவார்.

கடலின் நடுவில் தோன்றி, எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல், கரைக்கும் வராமல், தோன்றிய இடத்திலேயே மறைந்து விடுபட போன்றவை மச்ச, கூர்ம, வராக அவதாரங்கள்.

சில அலைகள் நடுக்கடலில் தோன்றி அங்கேயே உயர்ந்து ஆர்ப்பரித்து அங்கேயே அடங்கி விடும். அதைப் போன்றது நரசிம்ம அவதாரம்.

சில அலைகள் வரும்பொழுது சிறியதாக வந்து, கரையைத் தொடும் பொழுது திடீரென்று உயர்ந்து நம்மை நிலைகுலையச் செய்யும். அதைப் போன்றது வாமனனாக வந்து, திரிவிக்கிரமனாக வளர்ந்த அவதாரம். 

சில அலைகள் பெரிய அலையோடு வந்து கரையைத் தொட்டுவிட்டுச் சென்றாலும் பெரிய பாதிப்பு இருக்காது. அவை போன்றவை ராம,கிருஷ்ண அவதாரங்களோடு சேர்ந்து வந்த பரசுராம, பலராமா அவதாரங்கள். 

சில அலைகள் நிதானமாக, கரையின் வெகுதூரம் வந்து நனைத்துவிட்டுச் செல்லும். இந்தியாவின் வடக்கே அயோத்தியில் பிறந்து, இந்தியாவின் தென்கோடி வரை நடந்த ராம அவதாரம் அதைப் போன்றது.

சில அலைகளோ கரையில் நிற்பவர்களை அப்படியே இழுத்து மூழ்கடித்து தன்னோடு ஐக்கியப்படுத்திக் கொண்டுவிடும். அதைப்போல கிருஷ்ணனோ தன்னை சரணடைபவர்களை தன்னிடமே ஐக்கியப்படுத்திக் கொண்டு விடுவான்.

ராதே கிருஷ்ணா!