முதல் முதலா..
எங்கள் வீட்டில் என்னுடைய கடைசி அக்கா உபவாசமெல்லாம் இருப்பாள். சங்கடஹர சதுர்த்தியன்று காலையிலிருந்து எதுவும் சாப்பிடாமல், பட்டினி கிடந்து விட்டு, ராத்திரிதான் சாப்பிடுவாள் எனக்கும், என்னுடைய மூன்றாவது அக்காவுக்கும் பட்டினி கிடக்க முடியாது.”பானு உன்னாலும், என்னாலும் பட்டினியெல்லாம் கிடக்க முடியாது. அப்படிப்பட்ட பூஜையெல்லாம் நமக்கு வேண்டாம்” என்பாள்.
ஷிர்டி பாபா பட்டினி கிடக்கக் கூடாது என்று சொல்லியிருக்கிறார். என்று பாபாவை துணைக்கு அழைத்துக் கொள்வேன். எனக்கு பசியே பொறுக்காது. அப்படிப்பட்ட நான் சஷ்டியில் உபவாசம் இருப்பதால் விளையும் நன்மை பற்றி படித்து விட்டு, சஷ்டியில் உபவாசம் இருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தேன். அப்போது எனக்கு பதினெட்டு அல்லது பத்தொன்பது வயதிருக்கும்.
காலையில் கஞ்சி மட்டும் குடித்தேன். வேறு எதுவும் சாப்பிடவில்லை. வாழ்க்கையில் முதல் முறையாக மதிய உணவு உட்கொள்ளவில்லை. மூன்று மணிக்கு பசிப்பது போல இருந்தது. அதை மற, புத்தியை வேறு எதிலாவது செலுத்து என்று மனதிற்கு ஆணையிட்டேன். நேரம் ஆக ஆக, பசி அதிகரிக்க, புத்தி முழுவதும் பசிதான் இருந்தது. ஏழு மணிக்கு முகம் சுருங்கி, அழுது விடுவேன் போல ஆகி விட்டேன். என் பெரிய அக்கா, “ஏன் என்னவோ போல இருக்கிறாய்?” என்று கேட்டார். “இன்னிக்கு சஷ்டி, விரதம் இருக்கலாம் என்று நினைத்தேன், ஆனால் ரொம்ப பசிக்கிறது” என்று சொல்லும்போதே கிட்டத்தட்ட அழுது விட்டேன்.
“அட பைத்தியமே! உன்னையெல்லாம் யார் உபவாசம் இருக்கச் சொன்னது? முதலில் சாப்பிடு.” என்றதும், சாப்பிட்டு விட்டேன். அப்பாடா! உயிர் வந்தது. இப்படியாக என்னுடைய முதல் உபவாசம் பாதியில் பணால் ஆனது
எனக்கும் உண்ணாவிரத, மௌன விரத அனுபவங்கள் உண்டு. எடுத்த உடனே 100 சதவிகிதம் விரதம் இருப்பது சரியல்ல. படிப்பபடியாக வந்திருந்தால் தொடர்ந்திருக்கலாம்.
ReplyDeleteஆமாம், அப்போது தெரியவில்லை. இப்போது ஏகாதசியில் ஒரு வேளை மட்டும் சாப்பிடுவேன்.
Deleteவிரத அனுபவம் நன்றாக சொல்லி இருக்கிறீர்கள்.
ReplyDeleteபாபா மற்றும் மருத்துவர்கள் விரதம் வேண்டாம் என்று தான் சொல்கிறார்கள்.அதுவும் காலை உணவை தவிர்க்கவே கூடாது என்கிறார் மருத்துவர்.
எங்கள் அம்மா விரதம் தான் உடல், மனம் எல்லாவற்றையும் செம்மை செய்யும் . வைராக்கியம், பொறுத்து கொள்ளும் மனபக்குவம் விரதம் இருப்பதால் தான் கிடைக்கும் விரதம் இருக்கவேண்டும் என்பார்கள்.
எங்கள் அம்மா சிறு வயதிலிருந்து சோமவாரம் கார்த்திகை மாதம் விரதம் இருக்க வைத்தார்கள் எல்லோரையும் . அப்பாவை தவிர எல்லோரும் இருப்போம்.
காலை ஒரு வாழை பழம், பால் தருவார்கள் அவ்வளவுதான் மதியம் ஒன்றும் கிடையாது .மாலை விளக்கு முன் மாவிளக்கு வைத்து , சாதம் வைத்து கும்பிடுவார்கள் பாட்டு எல்லாம் பாடி முடித்து அக்கம் பக்கத்து வீடுகளுக்கு மாவிளக்கு பிரசாதம் கொடுத்து வந்த பின் சாப்பிட தருவார்கள்.
சிறு வயதில் எப்போ அம்மா பூஜை முடிப்பார்கள் சாப்பாடு தருவார்கள் என்று இருக்கும்.
https://mathysblog.blogspot.com/2016/12/blog-post_3.html
விரதங்களும், உடல்நலமும் என்று பதிவு போட்டு இருக்கிறேன், என் அனுபவங்களை . நேரம் இருந்தால் படித்து பாருங்கள்.
சிறு வயதில் பள்ளிக்கு போகும் போகும் போது கஷ்டமாக இருக்கும் மதியம் சேர்ந்து சாப்பிடும் தோழிகள் உங்கள் அம்மாவுக்கு தெரியவா போகிறது எங்களுடன் வந்து சாப்பிடு என்பார்கள். அம்மாவுக்கு தெரிந்தால் திட்டுவார்கள் என்பதை விட சாமி கோபித்து கொள்வார் என்ற எண்ணமே இருந்தது. அந்த விரதத்தை சிறு வயது முதலே இருப்போம், இப்போதும்.
அப்புறம் கணவருடன் ஞாயிறு காலை மட்டும் விரதம் பல காலம் இருந்தேன்.
சஷ்டி விரதமும் இருவரும் இருந்தோம். இப்போது மீண்டும் சஷ்டி விரதம் இருக்க ஆரம்பித்து இருக்கிறேன்.
சிறு வயதிலிருந்தே மன உறுதி வலுப்பட்டிருக்கிறது. காந்திஜி கூட தன் தாய் விரதமிருந்ததைப் பார்த்துதான் தானும் உண்ணாவிரதம் இருக்க பழகியதாக குறிப்பிட்டிருக்கிறார். நான் இப்போது ஏகாதசி அன்று ஒருவேளை சாதம் சாப்பிடாமல், சப்பாத்தி, உப்புமா என்று சாப்பிடுகிறேன்.
Deleteவாங்க கோமதி அக்கா. எங்கள் அம்மாவும் விரதங்கள் அனுஷ்டிப்பார். எங்களை விரதமிருக்க சொன்னதில்லை. உங்களுக்கு சிறு வயதிலிருந்தே மன உறுதியை பழக்கியிருக்கிறார் உங்கள் தாயார். இப்போது ஏகாதசியில் உபவாசம் இருக்கிறேன். அன்று ஒரு வேளை மட்டும் சப்பாத்தி, வெங்காயம் சேர்க்காத உப்புமா சாப்பிடுவேன்.
ReplyDeleteவணக்கம் சகோதரி
ReplyDeleteவிரத அனுபவங்கள் குறித்த பகிர்வு அருமை. தங்கள் அனுபவம் மாதிரி எனக்கு தெரிந்து எங்கள் சுற்றங்களில் சிலருக்கு நடந்துள்ளது. நாங்கள் வைகுண்ட ஏகாதசிக்கு மதியம் ஒரு வேளை மட்டும் டிபன் சாப்பிட்டு விரதம் இருந்துள்ளோம். பிறகு மெளன விரதம் வியாழன் தோறும் ராகவேந்திரரை பிரார்த்தனை செய்து நான் மட்டும் ஒரு வருடங்களுக்கு மேலாக இருந்துள்ளேன். அப்போதுதான் நம்மை பேச வைக்க சோதனையான நேரங்கள் வந்து சேரும். இப்போது அதுபோல் எந்த விரதமும் இருக்கவில்லை. விரதம் என்பது நம் மனக்கட்டுப்பாட்டை அளவிடும் ஒரு கருவிதானே ..! சுவாரஸ்யமான தங்கள் பதிவுக்கு நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி
Deleteவிரதம் இருந்த அனுபவம் நன்று. பொதுவாக நான் எந்த வித விரதமும் இருப்பதில்லை. தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் தானாகவே Intermittent Fasting வகையில் சில அமைந்ததுண்டு!
ReplyDeleteநல்ல விஷயம்!
Delete