கணம்தோறும் பிறக்கிறேன் 

Wednesday, October 9, 2024

பெண்கள் திருவிழா

பெண்கள் திருவிழா


எனக்கும் என் தோழிக்கும் ஒரு விஷயத்தில் ரொம்ப ஒற்றுமை. எங்கள் இருவருக்குமே ஏதோ அந்தக் காலம் பொற்காலம் போலவும், அதில் தவறுகளே இல்லை என்றும், இன்றைய இளைய தலைமுறையை குறை கூறுவதும் கொஞ்சம் கூட பிடிக்காது. அப்படிப்பட்ட பதிவுகளை படிக்கும் பொழுதெல்லாம் நழுவி விடுவோம். எல்லா காலங்களிலும் நன்மை,தீமை இரண்டும் கலந்துதான் இருக்கும். இளைய தலைமுறையினார் எத்தனையோ விஷயங்களில் தெளிவாக இருக்கிறார்கள். அவர்களை நம்பி ஒரு வேலையை ஒப்படைக்கும் பொழுது, பொறுப்பு எடுத்துக் கொண்டு சிறப்பாக செயலாற்றுவார்கள் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் கிடையாது. என்னுடைய இந்த நம்பிக்கை எங்கள் காலனியில் நடந்த நவராத்திரி விழாவில் நிரூபிக்கப்பட்டது.


நான் 2019ல் நான் ஸ்ரீராம் சம்மிட்டிற்கு வந்தேன். அந்த வருடம் எந்த விழாவிலும் பங்கு கொள்ள முடியவில்லை. 2020ல் பரிச்சயமான சிலர் நவராத்திரியின் பொழுது தாம்பூலம் வாங்கிக் கொள்ள அழைத்தார்கள். ஐந்து வீடுகளில் லலிதா சஹஸ்ரநாம பாராயணம் (+பிரசாதம்) செய்தோம். அடுத்த வருடம், ஒன்பது வீடுகளில் பாராயணம்+பிரசாதம். அதற்கு அடுத்த வருடம், நவராத்திரி பாராயணம் என்று வாட்ஸாப் க்ரூபில் அறிவிப்பு வெளியான உடனேயே எல்லா நாட்களுக்கும் புக் ஆகி விட்டது.

கன்யா பூஜை

அந்த சமயத்தில் கல்யாணி மாமி என்பவர் ஸ்ரீராம் சம்மிட்டிற்கு வந்தார். அவரும், உமாதேவி என்பவரும் “நவராத்திரியின் பொழுதுதான் லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம் பண்ண வேண்டுமா? ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மாலையும் எங்கள் வீட்டில் பாராயணம் வைத்துக் கொள்ளலாமே?” என்று அழைக்க கல்யாணி மாமி வீட்டில் வெள்ளிக்கிழமை லலித சஹஸ்ரநாம பாராயணம் தொடங்கப் பட்டது. பின்னர்,மற்றவர்களும் தங்கள் வீடுகளில் வைத்துக் கொண்டனர்.


இந்த குழுவில் இருந்த பத்மாவதி இதை அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்றார். அவருடைய ஆலோசனையின் பேரில் சென்ற வருடம் எங்கள் சொசைடியில் இருக்கும் கம்யூனிடி ஹாலை அரை நாள் மட்டும் எடுத்துக் கொண்டு பூஜை செய்தோம். பிரசாதங்கள் நாங்களே ஒவ்வொருவர் ஒவ்வொரு ஐட்டம் என்று செய்து கொண்டு வந்தோம். பூஜை மிகவும் சிறப்பாக நடந்தது.


இந்த வருடம் ஒரு நாள் முழுவதும் ஹாலை எடுத்துக் கொண்டோம். ஞாயிறு அன்று பூஜை. ஆனால் எங்களுக்கு சனிக்கிழமை இரவு 8:45க்குத்தான் ஹால் கிடைத்தது. மழை வேறு. எங்கள் குழுவின் இளம் பெண்கள் ரங்கோலி போடுவது(ராதா,சிவசங்கரி), ஹால் அலங்காரம், பேக் ட்ராப் (ஜெயஸ்ரீ,மாயா, ஸௌரா,அபூர்வா), அம்மன் அலங்காரம் (துர்கா, கீதா,பாரதி) போன்றவர்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டார்கள். குழந்தை பிறந்து சொற்ப காலமே ஆகியிருந்தாலும் ஷோபனா என்பவர் கைக்குழந்தையை கணவரிடம் விட்டு விட்டு இங்கே வந்து பிரசாதம் வினியோகித்தல் போன்றவற்றை செய்தார்.

ஜீன்ஸ், பேண்ட்,டீ ஷர்ட், த்ரீ ஃபோர்த்,டீ ஷர்ட் அணிந்து கொண்டு வேலை செய்த இதே பெண்கள் காலையில், பட்டுப் புடவை, திலகம், பூ என்று மங்களகரமாக அமர்ந்து பூஜை செய்தார்கள். ஸமஸ்கிருத ஸ்லோகங்களை பிழையின்றி கூறினார்கள், பஜனை பாடல்களை ஸ்ருதியும், தாளமும் பிசகாமல் பாடினார்கள். இவர்களே மாலையில் குஜராத்தி பாணியில் சேலை கட்டிக் கொண்டு தாண்டியா ஆடிய அழகை ரசிக்காமல் இருக்க முடியுமா? எல்லா ஏற்பாடுகளும் பெண்களால் மட்டுமே செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்க அம்சம்.

Backdrop தயாராகிறது

இதில் என்னை ஆச்சர்யப்படுத்திய விஷயம், இரவில் வேலை செய்த பொழுது, எந்தவித பதட்டமும் இல்லாமல் நிதானமாக, விரைவாக நேர்த்தியாக செய்தார்கள். எல்லோரும் வீட்டிற்கு தூங்கச் சென்ற பொழுது இரவு 1:30க்கு மேல் ஆகியிருக்கும். மறுநாள் முகத்தில் எந்தவித சோர்வும் இல்லாமல் எப்படி இருந்தார்கள்? அந்த உற்சாகமும், மகிழ்ச்சியும் நாள் முழுவதும் எப்படி இருந்தது? அதைத்தந்தது அவர்கள் ஆர்வமா? இறையருளா? முதல் நாள் மாங்கு மாங்கென்று செய்த அலங்காரங்களை மறுநாள் வெகு இயல்பாக கலைத்தார்களே அந்த பக்குவம் என்னை வியக்க வைத்தது. இதிலிருந்து எனக்கு ஒன்று புரிந்தது. இளைஞர்கள் சரியாகாகத்தான் இருக்கிறார்கள். கோவில்களுக்கும், புனித நிகழ்ச்சிகளுக்கும் செல்லும் பொழுது தலையை விரித்துப் போட்டுக் கொண்டு செல்லாதீர்கள் என்று நாம் சொன்னால் நிச்சயம் கேட்பார்கள். வேர்கள் மண்ணில் ஆழமாக புதைந்துதான் இருக்கின்றன, கிளைகள் வளைந்திருந்தால் என்ன?   


இளைய தலைமுறையை சிலாகிப்பதற்காக எழுதப்பட்டிருக்கும் இந்த பதிவில் யுவதிகளுக்கு ஆலோசனை கூறி வழிநடத்தியது, பஜனை, ஸ்லோகங்கள் முதலியவைகளை பயிற்றுவித்தது போன்றவைகளில் அவர்களுக்கு உதவிய சீனியர்களை நான் குறிப்பிடவில்லை. அவர்களும் அதைத் தவறாக நினைத்துக் கொள்ள மாட்டார்கள் என்று நம்புகிறேன். அதைப்போல இளைய தலைமுறையினரில் யார் பெயரையாவது குறிப்பிட விட்டுப் போயிருந்தால் மன்னிக்கவும்.

படிப்படியாக வடிவம் பெற்ற அம்மன்:














The entire team