கணம்தோறும் பிறக்கிறேன் 

Monday, October 22, 2018

மீ டூ..

மீ டூ.. 

சேகருக்கு சுஜிதாவை பார்க்கும் பொழுது ஆச்சர்யமாக இருந்தது. அவர் சிறு குழந்தையாக பார்த்த பெண், இன்று கிட்டத்தட்ட அவர் தோளுக்கு வளர்ந்து நிற்கிறாள். அவர்கள் வீட்டிலேயே, சாப்பிட்டு, தூங்கி, அவர் மகளோடு விளையாடிய குழந்தை, இன்று முது கல்வியை முடித்து விட்டு, தனக்கு கிடைத்திருக்கும் இரண்டு வேலைகளில் எதை தேர்ந்தெடுப்பது என்று அவரிடம் ஆலோசனை கேட்க வந்திருகிறாள். காலம் எத்தனை சீக்கிரமாக ஓடுகிறது!

நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தித்த எல்லோரும் பழைய கதைகளை அசை போட்டபடியே சாப்பிட்டனர். டெசர்ட்டை கையில் எடுத்துக்கொண்டு ஸோஃபாவில் அமர்ந்த பொழுது பேச்சு நிகழ்காலத்திற்கு திரும்பி 'மீ டூ'வில் வந்து நின்றது. 

"ஒரு வகையில் நல்லதுதான், ஆனா, இப்படியே போனா, யார் வேணா யார் மேல வேண்டுமானாலும் பழி சொல்லி விடலாம் போலிருக்கு. ஏன் சுஜி கூட என் மேல மீ டூவில் எழுதி விடலாம்.." சேகர் விளையாட்டாய் கூற, சுஜிதா,

"கரெக்ட் அங்கிள், உங்களைப் பற்றி நான் நிஜமாவே மீ டூவில் எழுதலாம்" என்க, எல்லோரும் திடுக்கிட்டனர்.

"ஏய் யாரைப் பார்த்து என்ன சொல்ற? மூடு வாயை." என்று அவள் அம்மா அதட்டினாள்.

"நீ சும்மா இரும்மா.. உனக்கு ஒண்ணும் தெரியாது, ஆன்டிக்கு தெரியும்" என்று சுஜிதா சொல்ல, சேகரின் மனைவி ராதா குழம்பினாள்.

சுஜிதா சிரித்துக் கொண்டே, என்ன அங்கிள், ஆன்டி ரெண்டு பேரும் பயந்து போயிட்டீங்களா? சின்ன வயசில், நானும் அபியும் இங்க விளையாடி கொண்டிருப்போம், அங்கிள் ஆஃபிஸிலிருந்து வந்ததும், அபியை தூக்கி தட்டாமாலை சுற்றி இறக்கி விடுவார். நான் உடனே, அங்கிள் மீ டூ, மீ டூ, என்று என்னையும் சுற்றச் சொல்லுவேன், உடனே என்னையும் தூக்கி தட்டாமாலை சுற்றுவார்.." மறந்து விட்டதா? நான் அதைத்தான் சொன்னேன்."

"அடிப் பாவி! ஒரு நிமிஷம் எனக்கு ஹார்ட் அட்டாக்கே வந்து விடும் போல் ஆகி விட்டது, என் வாழ்கையோடு விளையாட்டிடயே?" என்று ஸோஃபாவில்  நிம்மதியாக உட்கார்ந்து, " இன்னும் ஒரு ஸ்கூப் ஐஸ் க்ரீம் போடு" என்றதும்

"மீ டூ" என்றாள் சுஜி.