கணம்தோறும் பிறக்கிறேன் 

Saturday, March 6, 2021

சுந்தர் நர்சரி & ஹுமாயூன் டோம்ப்

 சுந்தர் நர்சரி & ஹுமாயூன் டோம்ப் 


டில்லியில் இருந்த சொற்ப நாளில் பதிவர் வெங்கட் நாகராஜ் அவர்களின் டில்லி உலாவை படித்து விட்டு, சுந்தர் நர்சரிக்கு செல்ல முடிவெடுத்தோம்.







 நகரின் மையத்தில் இத்தனை பெரிய பூங்கா அமைந்திருப்பது ஆச்சர்யம்தான். அது நன்றாகவும் பராமரிக்கப்படுகிறது. 





நாங்கள் உள்ளே சென்ற பொழுது அழகாக அலங்கரித்துக் கொண்ட ஒரு யுவனும்,யுவதியும் புகைப்பட கலைஞர் தொடர உள்ளே வந்தனர். போட்டோ ஷூட் ஆக இருக்கும் என்று தோன்றியது. இன்னொரு பக்கத்தில் ஒரு மரத்தின் ஒரு பக்கத்தில் நீல நிற பலூன்கள், மற்றொரு பக்கத்தில் பிங்க் நிற பலூன்கள் கட்டி தொங்கவிடப்பட்டிருக்க கர்ப்பமாக இருக்கும் ஒரு பெண்ணை விதம் விதமாக புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தது ஒரு சீக்கிய குடும்பம். வெட்டிங் போட்டோ ஷூட் போல, இந்த ப்ரெக்னென்சி போட்டோ ஷூட்டும் இப்போது பிரபலமாகிக் கொண்டு வரும் ஒரு விஷயமாச்சே!



நடந்து கொண்டிருந்த பொழுது கண்களை மூடி அமர்ந்திருந்த ஒரு சீக்கியர் கண்ணில் பட்டார். அவரை ஓவியமாக இரண்டு பேர் வரைந்து கொண்டிருந்தார்கள். 




வெளியேறும் வழியில் ஒரு மரத்தடியில் முதியவர்கள் கூட்டம்... ரீ யூனியனாக இருக்கும் என்று நினைத்தேன். 


இறந்து போன தங்கள் உறவினர்கள் நினைவாக பார்க்குகளில் பெஞ்சுகள் அமைக்கும் பழக்கம் லண்டனில் உண்டு என்று ஏஞ்சல் ஒரு முறை தன் வலை தளத்தில் எழுதியிருந்தார். அதைப் போல சுந்தர் நர்சரியிலும் சில பெஞ்சுகளை பார்க்க முடிந்தது. 


அங்கு வந்த பெரும்பாலானோர் ஒரு பெரிய பை, பாய் இவைகளோடு வந்தனர். பாயை விரித்து  கொண்டு சாப்பாட்டு கடையை விரிகின்றனர். நமக்கு சோறு முக்கியம்.  மஸ்கெட்டில் ஒரு முறை டீப் சீ டைவிங் சென்றிருந்தோம். நடுக்கடலில் நாங்கள் சென்ற படகை நிறுத்தி, "லைஃப் ஜாக்கெட் இருக்கிறது, அதை அணிந்து கொண்டு நீங்கள் கடலில் குளிக்கலாம் என்றதும்,  அந்தப் படகில் இருந்த ஒரு ஐரோப்பிய குடும்பம் மட்டுமே கடலில் இறங்கியது. இந்தியர்கள் எல்லோரும் குறிப்பாக வட இந்தியர்கள் சாப்பாட்டு கடையை விரித்து விட்டார்கள்.   

அழகழகான பூக்கள். ரோஜாக்களின் சைஸ் மிரட்டியது. ஹை ப்ரடாக இருக்குமோ? 




சுந்தர் நர்சரியை முடித்து விட்டு ஹுமாயூன் டோம்ப் சென்றோம். இதை முன் மாதிரியாக வைத்துதான் தாஜ் மஹால் கட்டப்பட்டிருக்குமோ என்று தோன்றியது. மொகலாய மன்னர்கள் கட்டிய கட்டிடங்களின் சிறப்பு என்னவென்றால் பிரதான வாயிலிருந்து குறிப்பிட்ட கட்டிடத்தை அடைவதற்கே நீண்ட தூரம் நடக்க வேண்டும். தாஜ் மஹாலும் சரி, ஹுமாயுன் டோம்பும் சரி, அதன் தோற்றத்தை  கெடுக்கும் வண்ணம் இடையில் வேறு எதுவும் வர முடியாது. நம்முடைய கோவில்களை நாம் அப்படியா வைத்திருக்கிறோம்? சுற்றி கடைகள். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆலய கோபுரத்திற்கு அடுத்த பெரிய கோபுரம் திருவண்ணாமலை கோபுரம். ஆனால், அதன் முழு தோற்றமும் நம்மால் பார்க்க முடியாது. முன்னால் இருக்கும் கடைகளின் கூரைகள் அந்த தோற்றத்தை மறைத்து விடும்.     







ஹுமாயூன் கல்லறை 



கல்லறையின் மேல் விதானம் 

ஹுமாயூன் டோம்பிலிருந்து கன்னாட் பிளேஸ் சென்று ஒரு பஞ்சாபி உணவகத்தில் உணவருந்தி விட்டு, ஜன்பத் மார்க்கெட்டில் குட்டியாக ஒரு ஷாப்பிங் செய்து விட்டு, இந்தியா கேட் சென்றோம். 


இந்தியா கேட் அருகே  அனுமதிக்கவில்லை. அதற்கு எதிரே இருந்த பெரிய திடலில் ஏதோ திருவிழா போல் கும்பல். பெரும்பாலானோர் மாஸ்க் அணிந்திருக்கவில்லை. அங்கு இருந்த ஒரு நீர்நிலை சரியாக பராமரிக்கப் படாமல் ஒரே குப்பையும், கூளமுமாக இருந்தது. ஸ்வட்ச் பாரத் என்று பிரதமர் சொல்லிக் கொண்டிருக்க, தலைநகரின் பிரதான இடம் இப்படி இருப்பது  யார் கண்ணிலும் படாதது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. 


தாயின் மிகப்பெரிய மணிக்கொடி பாரீர்


  


 


Monday, March 1, 2021

பெயர் சூட்டும் வைபவம்

பெயர் சூட்டும் வைபவம் 


என் மருமகளுக்கு பேறு காலம் பிப்ரவரி கடைசி வாரத்திலிருந்து, மார்ச் முதல் வாரத்திற்குள் என்றுதான் முதலில் கூறினார்கள். ஆனால் ஜனவரியில்,  பிப்ரவரி 16லிருந்து எப்போது வேண்டுமானாலும் எதிர்பார்க்கலாம் என்று சொல்லி விட்டதால், நானும் என் மகனும் பிப்ரவரி 14 பெங்களூரிலிருந்து, டில்லிக்கு பயணப்பட்டோம். அதன்படியே பிப்ரவரி 17 காலை அவளுக்கு பனிக்குடம் உடைந்துவிட, மருத்துவமனையில் அனுமதித்தோம். அங்கு அவளை அப்சர்வேஷனில் வைத்து, ட்ரிப் ஏற்றி, இயற்கையான முறையில் பிரசவம் நிகழுவதற்காக வலி வரவழைக்க என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யத் தொடங்கினார்கள். 

ஆஸ்பத்திரிக்கு கிளம்பும் பொழுது நான் குளித்து விட்டுதான் கிளம்பினேன். ஆனால் என் மருமகளின் தாயார் குளிக்காமல் வந்து விட்டார். அவரிடம்,"குழந்தை பிறப்பதற்கு எப்படியும் இன்று இரவு, அல்லது நாளைக்  காலை ஆகி விடும்,ஆகவே நீங்கள் வீட்டிற்குச் சென்று குளித்து விட்டு வாருங்கள்" என்றேன். அவர் குளித்து, சமையல் செய்து விட்டு வருவதாக கூறிச் சென்றார். மாடியில் எங்களுக்காக ஒதுக்கப்பட்ட அறையில் நானும், கீழே வெளியே போடப்பட்டிருந்த ஷாமியானாவில் என் மகனும் காத்திருந்தோம். நான் கீழே சென்று என் மருமகளை பார்த்து விட்டு மேலே வந்து பத்து நிமிடங்கள் ஆகியிருக்கும், என் மகன் கைபேசியில் அழைத்தான்.  குழந்தையின் இதயத்துடிப்பு குறைந்து கொண்டே வருகிறது, இந்த நிலையில் சிசேரியன் செய்து குழந்தையை வெளியே எடுப்பதுதான் நல்லது. வெய்ட் பண்ணி பார்ப்பது கொஞ்சம் ரிஸ்க், உங்கள் மனைவியோடு டிஸ்கஸ் செய்து விட்டு கூறுங்கள் என்றார்களாம். டிஸ்கஸ் பண்ண என்ன இருக்கிறது? சிசேரியன் செய்து விடுங்கள் என்றார் கூறி விட்டேன்" என்றான். நான் உடனே கீழே இறங்கி வந்தேன். சற்று நேரத்தில் எங்களை உள்ளே அழைத்தார்கள். "பெண் குழந்தை, பாருங்கள்"என்று ஹிந்தியில் கூறி துணியை விலக்கி காண்பித்து, "உங்களுக்கு வேண்டுமென்றால் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம்" என்றார்கள். என் மகன் தன் மகளை செல் போனில் படமெடுத்து செல்(ல) மகளாக்கினான். 

என் மருமகளுக்கு பிள்ளைதான் பிறக்கும் என்று எல்லோரும் கூறியதால் அவர்கள் ஆண்  குழந்தைக்கான பெயர்களை மட்டும் யோசித்து வைத்திருக்கின்றனர். இப்போது பெண் என்றதும் என்ன பெயர் வைப்பது என்று யோசிக்க ஆரம்பித்தோம்.  என் ஒரு அக்கா, "சியாமளா நவராத்திரியில் பிறந்திருக்கிறாள், சியாமளா நவராத்திரி சரஸ்வதி தேவிக்கானது எனவே  சரஸ்வதியின் பெயர் ஏதாவது வையுங்கள்" என்றார். இன்னொரு அக்கா, "சியாமளா நவராத்திரியில் பிறந்திருப்பதால் பெயரில் ஸ்ரீ வரும்படி பார்த்துக் கொள்ளுங்கள்" என்றார். 

என்னை பொறுத்தவரை "எங்கள் ஊர் பெண் தெய்வம் ஹேமாம்பிகா, அதை அப்படியே வைத்தாலும் சரி, ஹேமா என்று சுருக்கமாக வைத்தாலும் சரி, என்று கூறி விட்டேன். அவர்கள் ஹேமாம்பிகா என்பதை தேர்ந்தெடுத்தார்கள். "உன்னுடைய கோட்டா முடிந்து விட்டது, ஒதுங்கிக்கொள்" என்றாள் மகள். 

சரஸ்வதி அஷ்டோத்திரத்தை டவுன்லோட் செய்து பார்த்தோம். அதில் 'ரிதன்யா' என்னும் பெயர் எனக்குப் பிடித்தது. இப்போ இருக்கும் ட்ரெண்ட் ,"பெயரை ஒரு முறை கேட்டால் புரியக் கூடாது, அந்த வகையில் ரிதன்யா ஓகே" என்று மகன் கிண்டலடித்தான். இருந்தாலும் ஷார்ட் லிஸ்ட் செய்தார்கள். 

அம்பாளின் பெயர்களில் எனக்கு மிகவும் பிடித்த பெயர் 'த்ரயீ' விசேஷமான பொருள் கொண்டது. ஆனால் மருமகளின் பெரியப்பா பேத்திக்கு த்ரயீ என்றுதான் பெயர். எனவே மறுதலிக்கப்பட்டது. 'வாகீஸ்வரி' என்று நான் கூறியதும், என் மகன்,"நான் வைத்து விடுவேன், கொஞ்ச நாள் கழித்து,  தந்தையே ஏன் எனக்கு இப்படி ஒரு பெயரை வைத்தீர்கள்? என்றால் என்ன செய்வது?" என்றான். மருமகளோ, "இப்படியெல்லாம் பெயர் வைத்தால் அவள் மாற்றிக் கொண்டு விடுவாள்" என்றாள். "நித்யஸ்ரீ?" நல்ல பெயர்தான். ஆனால்  பழசு" நித்யஸ்ரீயே பழசு என்பவர்கள் மருமகளின் பாட்டி கூறிய ஸ்ரீவித்யாவை ஏற்பார்களா? 

மிதாலி என்று என் மருமகள் கூறிய பெயர் ரொம்பவும் வட இந்திய வாடை வீசியதால் எனக்குப் பிடிக்கவில்லை. வேறு சில பெயர்கள் ஆந்திர பெயர்கள் போலவும், சில பெயர்கள் மலையாள பெயர்கள் போலவும் தோன்றின. என் சம்பந்தி 'அக்ஷரா' என்னும் பெயரை பரிந்துரைத்தார். என் மகன்,"பெயர் நன்றாகத்தான் இருக்கிறது, ஆனால் கமலஹாசன் மகள் பெயரை வைக்க வேண்டுமா?" என்றான். இது அம்பாள் பெயர் என்று அவனை கன்வின்ஸ் செய்தோம். அதுவும் ஷார்ட் லிஸ்டில் சேர்ந்தது. 

நிரஞ்சனா என்று ஒரு பெயர் சஜஸ்ட் செய்யப்பட்டது. "நான் இந்த புனை பெயரில்தான் ஆரம்பத்தில் எழுதி கொண்டிருந்தேன். இந்த பெயர் வைத்தால் ஒரு வகையில் பாட்டி பெயரை வைத்தது போல்" என்றேன். அதனாலோ என்னவோ அதை ஏற்கவில்லை. நிஹாரிகா என்று என் மகன் கூறியதும் நாங்கள் யாரும் பதில் பேசவில்லை. 

ஒரு பெயருக்கு இவ்வளவு யோசனையா? முன்பெல்லாம் வீடுகளில் பெரியவர்கள் இருப்பார்கள், அவர்கள் என்ன பெயர் சொல்கிறார்களோ அந்த பெயரை மறு வார்த்தை பேசாமல் ஏற்றுக் கொள்வார்கள். அது பெரும்பாலும் குல தெய்வத்தின் பெயராக, அல்லது அவர்கள் ஊர் கோவிலில் குடி கொண்டிருக்கும் சாமியின் பெயராக, அல்லது குடும்பத்தில் இருந்த யாராவது பெரியவர்களின் பெயராக, இருக்கும். இப்படி மண்டையை உடைத்துக் கொண்டிருக்க மாட்டார்கள். 

எப்படியோ பல பெயர்களை அலசி, ஆராய்ந்து சாமியின் பெயரான ஹேமாம்பிகா, சியாமளா நவராத்திரியை முன்னிட்டு அக்ஷரா, தாயும், தந்தையும் சேர்ந்து தேர்ந்தெடுத்த நவ்யா என்னும் பெயரோடு ஸ்ரீ சேர்த்து நவ்யாஸ்ரீ என்னும் பெயர்களை சூட்டினோம். இதில் நவ்யாஸ்ரீ என்னும் பெயர்தான் பிறப்பு சான்றிதழுக்கு கொடுக்கப் போகிறார்கள். நவ்யா என்றால் இளமையானவள், போற்றத்தகுந்தவள் என்று பொருளாம். 

இந்த பெயர் சூட்டும் வைபவத்திற்கு என் அழைப்பை ஏற்று நம் வெங்கட் அவர்கள் வந்து கௌரவித்தார்.