கனடா போனாலும் கரெண்ட் கட் விடவில்லை!
![]() |
| முதல் படத்தில் தெரிவது மியூசியம் |
நேஷனல் வார் மெமோரியல் அருகே வந்த பொழுது தூறல் தொடங்கியது. ஆலங்கட்டி மழை போல பெரிய பெரிய மழைத்துளிகள் பெருத்த ஓசையோடு கார் மீது விழுந்தன. அன்றைய வானிலை அறிக்கையில் மூன்று மணிக்கு மழை என்று இருந்ததால் நாங்கள் குடைகள் எடுத்துக் கொண்டிருந்தோம். ஆனால் அன்று பெய்த மழைக்கு இந்த குடைகள் உதவியிருக்காது. அப்படி ஒரு பேய் மழை. கார் ஓட்டுவது மிகவும் கஷ்டமாக இருந்தது. எதிரே சாலை தெரியவேயில்லை. பக்கவாட்டில் மரங்களின் ஆட்டம் பயமுறுத்தியது. எப்படியோ மாப்பிள்ளை சமாளித்து ஓட்டினார். ஜி.பி.எஸ் வேலை செய்யாததால் வழி காட்ட யாருமில்லை. ஒரே இடத்தையே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தோம். இந்த மழையில் போட்டிங் இருந்தால் கூட போக வேண்டாம் என்று தோன்றியது.
ஒரு வழியாக மழை விட்டது. நாங்கள் ரைட்யூ கேனால் வந்து சேர்ந்தோம். க்ரூஸ் கிளம்பும் இடத்திற்கு வந்து சேர்ந்த பொழுது ஒரு க்ரூஸ் கிளம்பிச் சென்றதை பார்த்தோம். என் மகள் அதன் ஆர்கனைசர்களை தொடர்பு கொண்ட பொழுது நாங்கள் புக் பண்ணியிருந்த 4:30 மணி க்ரூஸ் கேன்சலாகி விட்டதாகவும் 5:30 மணி க்ரூஸில் இடம் இருந்தால் எங்களை ஏற்றுக் கொள்வதாகவும், இல்லாவிட்டால் பணம் திருப்பித் தரப்படும் என்றும் கூறினர்.
![]() |
| அலெக்ஸாண்ட்ரா பாலத்தை கையில் அடக்குவதை போல என் மகள் எடுத்த படம் |
அந்த க்ரூஸ் பயணம் ஒன்றரை மணிநேரம். நாங்கள் அவசரத்தில் குழந்தைக்கு உணவு எதுவும் கையில் எடுத்துக் கொள்ளவில்லை. டயபர் வேறு மாற்ற வேண்டும். அதுவும் கையில் இல்லை. எனவே மிகவும் எதிர்பார்ப்போடு இருந்த க்ரூஸ் பயணத்தை ரத்து செய்து, சில புகைப்படங்கள் மட்டும் எடுத்துக் ஹோட்டலுக்குச் சென்றோம்.
செல்லும் வழியில் சாலையில் சிக்னல்கள் எதுவும் வேலை செய்யவில்லை. என்ன காரணம் என்பது ஹாலிடே இன் சென்ற பிறகுதான் தெரிந்தது. சற்று முன் மழை பெய்த பொழுது ஒரு பெரிய இடி இடித்தது, அதில் ஆட்டவா முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு விட்டதாம். "சிஸ்டம் வேலை செய்யாததால் இப்போது செக் இன் செய்வது கடினம்". என்றார்கள்.
⁰![]() |
| ஹோட்டலிலிருந்து வியூ |
என்ன செய்யலாம் என்று ஆலோசித்தோம். மறுநாள் செல்வதாக இருந்த மாண்ட்ரியாலுக்கு இன்றே சென்று விடலாமா? என்று தோன்றியது. அங்கு ஏதாவது ஹோட்டலில் இடம் கிடைக்குமா என்று தேடினால் எல்லா விடுதிகளுமே ஓவர் புக்ட்! சரி வெளியே சென்று சாப்பிட்டு விட்டு வரலாம். வழியில் ஏதாவது கடையில் குழந்தைகளுக்கு டெட்ராபேக்கில் பால் வாங்கிக் கொள்ளலாம் என்று முடிவு செய்தோம். ஆனால் கிரகம் விடவில்லை. மின்சாரம் இல்லாததால் எல்லா கடைகளும், மூடப்பட்டு விட்டன.
திறந்திருந்த ஒரு இந்திய உணவு விடுதியில், "ஏ.சி. போட முடியாததால் உள்ளே சூடாக இருக்கும், மெனு கார்டில் இருக்கும் எல்லா ஐட்டம்களும் கிடைக்காது" என்றார்கள். அதனால் என்ன? சாப்பிட ஏதாவது கிடைக்கிறதே என்று அங்கேயே இரவு உணவை
முடித்துக் கொண்டோம். அங்கிருந்த பெண்மணி, "நாளைக் காலை பத்து மணிக்குத்தான் மின்சாரம் வரும்" என்று குண்டைப் போட்டார். கால் நீட்டி படுக்க இடம் கிடைத்தால் போதும் என்று ஹாலிடே இன்னுக்கே திரும்பினோம்.
"உங்கள் அறை ஐந்தாவது மாடியில் இருக்கிறது. அங்கிருக்கும் செக்யூரிட்டி உங்களுக்கு அறையைத் திறந்து விடுவார். பவர் இல்லாததால் லிஃப்ட் இல்லை, நீங்கள் படியேறித்தான் செல்ல வேண்டும். சாரி ஃபார் த இன்கன்வீனியன்ஸ்" என்றார்கள். அந்த அசௌகரியத்திற்காக பில் தொகையில் இருந்து டாலர் கழித்துக் கொண்டார்கள்.
செல்ஃபோனில் இருக்கும் டார்ச்சின் உதவியோடு எங்கள் உடைமைகளையும் தூக்கிக் கொண்டு படியேறினோம். கனடா போனாலும் கரெண்ட் கட் விடவில்லை!
அறை வசதியாக இருந்தது. காஃபி மேக்கர், மைக்ரோ வேவ் அவன், அயர்ன் பாக்ஸ் என்று அத்தனையும் இருந்து என்ன பயன்? அவற்றை இயக்க மின்சாரம் இல்லையே!!
கனடா என்பதால் புழுக்கம் இல்லை. அதனால் நன்றாக தூங்கினோம். மறுநாள் காலை எழுந்து பல் துலக்கி விட்டு குளிக்கலாமா? வேண்டாமா? என்று யோசித்துக் கொண்டிருந்த பொழுது கரெண்ட் வந்து விட்டது.
அப்பாடா! வாட் எ ரிலீஃப்! முதலில் காபி குடித்தோம். காம்ப்ளிமெண்ட்ரி ப்ரேக் ஃபாஸ்ட் என்றார்கள். என்ன பிரமாதம்? இட்லி, வடை, பொங்கல், பூரியா கிடைக்கப் போகிறது? ப்ரெட், பட்டர்,ஜாம், கார்ன் ஃப்ளேக்ஸ், பான் கேக்(Pan cake), கப் கேக் இவைதானே? சாப்பிட்டு விட்டு பக்கத்தில் இருக்கும் அருவியை பார்த்து விட்டு அந்த காட்டிற்குள் கொஞ்சம் நடந்து விட்டு வரலாம் என்று சென்றோம்.
![]() |
| இதுதான் அருவியாம் |
வாட்டர் ஃபாலஸ், வாட்டர் ஃபால்ஸ் என்று என் மகள் கொடுத்த பில்ட் அப்பில் நான் குற்றாலம், பாபநாசம் ரேஞ்சுக்கு கற்பனை செய்து கொண்டேன். ஒரு சின்ன ஓடை, ஒரு பாறையிலிருந்து விழுகிறது,
அது வாட்டர் ஃபால்ஸாம்.. தோடா!
ஆனால் அந்த ட்ரேயில் (trail) மிக அழகு! எனக்கு அஹோபிலம்தான் நினைவுக்கு வந்தது.
- இன்னும் வரும்







