நவராத்திரி நினைவுகள்
நல்லபடியாக நவராத்திரி-2025 நிறைவு பெற்றது. இந்த வருடம் இந்தியாவில் பத்து நாட்களும், கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளில் ஒன்பது நாட்களும் கொண்டாடப்பட்டது. சாதாரண நாள்கள் இந்தியாவில் முன்பே உதித்து விடும், அங்கு இரவாகும் பொழுதுதான் இங்கு பொழுது விடியும். ஆனால் பண்டிகைகள் இந்தியாவில் கொண்டாடப்படும் நாளுக்கு முதல் நாளே இங்கு கொண்டாடி விடுகிறார்கள். இது எப்படி என்பதை ஜோதிடர்கள்தான் விளக்க வேண்டும்.
என்னுடைய நவராத்திரி அனுபவங்களை நாங்காக பிரிக்கலாம். திருமணத்திற்கு முன்பு திருச்சியில் அம்மா வீட்டில், பின்னர் மஸ்கட்டில், அதற்குப் பிறகு சென்னையில், பின்னர் பெங்களூரில்.
திருச்சியில் அம்மா வீட்டு கொலு பெரியது. கொலு படி என்று கிடையாது, நாங்களாக் கட்டுவதுதான். மேஜை,பென்ச், பலகைகள், டின்கள் என்று பலவற்றை வைத்து கட்டப்படும். அவைகளின் உயரத்தை சரி செய்ய எங்களுடைய நோட்டு,புத்தகங்கள் கூட அடியில் வைக்கப்படும். அப்போதெல்லாம் ஹாலிடே ஹோம் ஒர்க் அவ்வளவாக கிடையாது, என்பதால் நோட்டு புத்தகங்களும் படியாவது குறித்து கவலை இல்லை. ஆனால் அவற்றை சலவை வேட்டியால் கவர் செய்து விட்டால் ரெடிமேட் படி போலத்தான் தோற்றமளிக்கும்.
பெரும்பாலும் பெரிய பொம்மைகள்தான். எங்கள் வீட்டில் இருந்த நாய் பொம்மைகள் இரண்டும், பூனை மொம்மைகள் இரண்டும் அசல் நாய், பூனை போலவே தோற்றமளிக்கும். ஊஞ்சலாடும் ராதா கிருஷ்ணன் பொம்மை எனக்கு மிகவும் பிடிக்கும். அதைத்தவிர வெள்ளைக்கார பொம்மைகள் என்றழைக்கப்பட்ட் பீங்கான் பொம்மைகள் நிறைய உண்டு. பார்க்கில் வைக்க எக்கச்சக்க பிலாஸ்டிக் பொம்மைகள்.
அம்மா எங்களுக்கு மடிசார் கட்டி விடுவது, ஒரு நாள் ஐயர் கட்டு, ஒரு நாள் ஐயங்கார் கட்டு. ஒரு நாள் கிருஷ்ணர் வேஷம் என்று அலங்காரம் செய்து விடுவாள். நாங்கள் இருந்தது திண்ணை, ரேழி, கூடம், என்ற பழங்காலத்து வீடு. கூடத்தில் தொட்டி முற்றம் என்று ஒரு திறந்தவெளி இருக்கும். அதில் பாத்திரங்கள் தேய்ப்பார்கள். ஒரு முறை முற்றத்தின் சாக்கடையை அடைத்து விட்டு, அங்கு ஃபவுண்டன் அமைத்திருந்தோம். ஒரு மாலையில் எல்லோரும் வெளியே போய் விட, அன்றைக்குப் பார்த்து நல்ல மழை. தொட்டி முற்றம் நிரம்பி தண்ணீர் வெளியே வந்து, கீழ் மூன்று படிகளை நனைத்து விட்டது. பொம்மைகளை துடைத்து உள்ளே வைத்து விட்டோம். அடுத்த வருடம் கொலுப் பெட்டியைத் திறந்தால்... ஒரே கரையான். நிரைய பொம்மைகள் பாழாகி விட தூக்கிப்போட நேர்ந்தது.
மஸ்கட்டில் வெகு சிலரே கொலு வைப்பார்கள், ஆனால் நிறைய பேர் அழைப்பார்கள். எல்லா வீடுகளிலும் பார்த்தவர்களையே மீண்டும் மீண்டும் பார்க்க நேரிடும். பெரும்பான்மையான வீடுகளில் பாதாம் கேக் இருக்கும். அதனுடன் சுண்டல் மற்றும் ஜூஸ் சாப்பிட கொடுத்து விட்டு கிஃப்ட் மட்டும் கையில் தருவார்கள்.
சென்னைக்கு வந்ததும் முதலிரண்டு வருடங்கள் கொலு வைக்கவில்லை. அதன் பிறகுதான் கொலு வைக்க ஆரம்பித்தேன். முதல் வருடம் கே.கே.நகர், ஐயப்பன் கோவில் வாசலில்தான் பொம்மைகள் வாங்கினேன். மூன்று படிகள் மட்டுமே கட்டி சிறிய கொலு. அடுத்த வருடம் இன்னும் கொஞ்சம் பொம்மைகள் வாங்கி ஐந்து படிக்கு உயர்த்தினேன். ஸ்டீல் படியும் வாங்கி விட்டோம். என் கணவர் குறளகம் அழைத்துச் சென்று நிறைய பொம்மைகள் வாங்கித்தந்தார். அங்கு எங்கள் குடியிருப்பில் நவராத்திரிக்கு நான் தரும் பரிசுப் பொருள்களை ஒரு பெண்மணி மிகவும் வியந்து பாராட்டுவார். என் மகன், மகள், மருமகள் எல்லோருக்குமே கொலு வைப்பது, அலங்கரிப்பது, கிஃப்ட் வாங்குவது எல்லாமே ரொம்ப பிடிக்கும்.
![]() |
| எங்கள் வளாக சென்ற வருட பூஜை |
பெங்களூருக்குச் சென்றதும் கொலு வைப்பது தொடர்ந்தது. நாங்கள் இப்போது இருக்கும் குடியிருப்பில் லலிதா சஹஸ்ரநாம பாராயண க்ரூப் என்று ஒன்று வைத்திருக்கிறோம். அதில், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் பேசுகிறவர்கள் என்று எல்லோரும் இருக்கிறோம். தினசரி ஒருவர் வீட்டில் காலை 10 மணிக்கு லலிதா சஹஸ்ரநாம பாராயணம் இருக்கும், பிரசாதம் அவர்கள் வீட்டிலேயே இருக்கும். தினசரி சர்க்கரைப் பொங்கல், சுகியன், பால் பாயசம், வடை என்றெல்லாம் சாப்பிட்டு கணிசமாக எடை கூடிவிடும். மாலையில் எங்கள் வளாகத்திர்கு எதிரே இருக்கும் விநாயகர் கோவிலில் பாராயணம் இருக்கும். அதைத்தவிர ஞாயிற்றுக் கிழமை கிளப் ஹவுஸில் அம்மனை பிரதிஷ்டை செய்து லலிதா சஹஸ்ரநாமம், லக்ஷ்மி அஷ்டோத்திர குங்கும அர்ச்சனை, ஸ்ரீ சுக்தம் போன்றவை வாசித்து, எல்லோருக்கும் பிரசாதம் வழங்குவோம். இரண்டு வருடங்களாக கன்யா பூஜையும் செய்கிறோம். மாலையில் குழந்தைகளுக்கான கலை நிகழ்ச்சிகள், மாறுவேடப்போட்டி போன்றவைகளும் நடத்தப்படும். இதைத் தவிர பெங்காலிகளின் பண்டல், குஜராத்திகளின் தாண்டியா போன்றவைகளும் இருக்கும். இந்த வருடம் நான் கனடாவில் இருப்பதால் இவை எல்லாவற்றையும் நழுவ விட்டேன்.
இங்கு(கனடாவில்) என் மகள் வீட்டில் கொலு வைத்தோம். அவள் சென்ற வருடம் இந்தியா வந்திருந்தபொழுது பொம்மைகள் வாங்கி வந்தாள். இங்கு கிடைக்கும் stair raiser மற்றும் மரச்சட்டங்கள் வாங்கி படி கட்டினோம். தினமும் ஒருவருக்காவது வெற்றிலை பாக்கு தர வேண்டும் என்று என் மகள் விரும்பினாள். அதன்படி அழைத்தாள். சனிக்கிழமை நாங்கள் வெளியே சென்றோம். ஞாயிற்றுக் கிழமையன்று எங்கள் வீட்டிற்கு நிறைய பேர்கள் வந்தார்கள். சாப்பிட்டு விட்டு, வெற்றிலை பாக்கு வாங்கிச் சென்றார்கள். ஒரு நாள் பக்கத்து வீட்டில் இருக்கும் இந்த ஊரைச் சேர்ந்த இரண்டு குழந்தைகளுக்கு கொலு காண்பித்து, கிஃப்டும் கொடுத்தனுப்பினாள்.
அதில் ஒரு குழந்தையின் தாயும் வந்து, கொலுவைப் பார்த்து ரசித்தார். அவருக்கு கொலுவின் தாத்பர்யத்தைச் சொல்லிவிட்டு, "ஸெலிபிரேட்டிங்க் உமன் ஹூட் ஃபார் நைன் டேஸ், எக்ஸ்க்லுசிவ்லி ஃபார் அஸ்" என்றேன். "வீடிசர்வ்" என்றார் அவர். உண்மைதானே?
இங்கு நான் பார்த்த சில கொலுக்கள்:
எங்களுக்கு கிடைத்த நவராத்திரி பரிசுகள்:
என் சிறுவயதில் இப்படி கிஃப்ட் கொடுக்கும் பழக்கம் கிடையாது. வெற்றிலை பாக்கு, பழம், சுண்டல் மட்டும்தான். சரஸ்வதி பூஜையன்று மட்டும் தேங்காயும், ரவிக்கைத்துணியும் கொடுப்பார்கள். சிலர் நல்ல ரவிக்கைத் துணி தராமல் அவை சுற்றி வந்த காரணத்தால் அதற்கு பதிலாக எவர்சில்வர் பாத்திரங்கள், பெரும்பாலும் கிண்ணங்கள் தர ஆரம்பித்தார்கள். இரும்பு தரக்கூடாது என்று சொன்னதால் இப்படி கிஃப்ட் தருவது என்று ஒரு பழக்கம் வந்தது. அவை பெரும்பாலும் பிளாஸ்டிக் தட்டுகள், சுவாமி விக்கிரகங்கள், கன்றோடு கூடிய பசுமாடு, அன்னபூரணி போன்றவைதான். அவை எவ்வளவு வைத்துக்கொள்ள முடியும்? வெற்றிலைப், பழம், சுண்டல் போதாதா? சென்ற வருடம் ஒரு மாமி, "இந்த வருடம் நான் எதுவும் வாங்கப்போவதில்லை, வந்த கிஃப்ட் நிறைய இருக்கு, அதையே கொடுத்துவிடப் போகிறேன்" என்று வெளிப்படையாகவே சொல்லி விட்டார். நாம் கொடுத்ததே நமக்கு திரும்பி வந்துவிடக்கூடாதே என்று கவலையாக இருந்தது.
![]() |
| Gifts created by my daughter |
அதைப்போல நான் அவ்வளவாக விரும்பாத, சமீப கால ட்ரெண்ட் நவராத்திரியில் கலர்கோட். இதை யார்,எந்த அடிப்படையில் கிளப்பி விட்டது என்று தெரியவில்லை. நவராத்திரி என்பது வண்ணங்களைக் கொண்டாடும் விழா. பலரும்,பல வண்ணங்களில் உடையணிந்து வந்தால்தானே பார்க்க அழகாக இருக்கும்?









