கணம்தோறும் பிறக்கிறேன் 

Saturday, September 20, 2025

கண்டுகொண்டேன் மனிதர்களை

கண்டுகொண்டேன் மனிதர்களை

தோல்வி, மரணம், விபத்து, திருட்டு போன்ற சில விஷயங்கள்,  நமக்கு வேண்டியவர்களுக்கோ அக்கம் பக்கத்திலோ நடக்கும் பொழுது நமக்கும் கஷ்டமாகத்தான் இருக்கும், ஆனால் அதன் முழு பாதிப்பையும் உணர மாட்டோம். நம் வீட்டில்/நமக்கு அவை நேரும்பொழுதுதான் அதன் முழு பாதிப்பும் தெரியும். அப்படி ஒரு அனுபவம் எனக்கு வாய்த்தது.

நான் எழுதிய 'என் மகன் யார் முகம்' என்னும் கதையில் சிலவற்றை சேர்த்து தன்னுடைய கதை என்று கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு சிறுகதைப் போட்டி-2025 க்கு அனுப்பி பரிசு வாங்கியிருக்கிறார் லீலா ராமசாமி என்பவர். மேற்படி கதையை நான் முகநூலின் மத்யமர் தளத்தில் 2023ல் பகிர்ந்திருக்கிறேன். அங்கு அந்தக் கதையை பாராட்டியிருக்கிறார். புஸ்தகா மூலம் வெளியிடப்பட்ட 'மாங்காய் நெக்லெஸ்' என்னும் சிறுகதை தொகுப்பிலும்  இந்தக்கதை  இருக்கிறது.

கல்கி ஆன்லைனில் லீலா ராமசாமி எழுதியிருந்த கதையைப் படித்ததும் மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. அதை தி.கீதாவிடமும், ஸ்ரீராமிடமும் பகிர்ந்து கொண்டபொழுது அவர்கள் உடனே கல்கி ஆன்லைனுக்குச் சென்று லீலா ராமசாமியின் எழுதியிருக்கும் பிரும்மாவின் ஒரிஜனல் பிரும்மா பானுமதி வெங்கடேஸ்வரன்தான் என்று சான்றோடு தெரிவித்து விட்டார்கள். அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் __/\__ __/\__ 

ஸ்ரீராம் லீலா ராமசாமி பகிர்ந்திருந்த கதையில், "இது பானுமதி வெங்கடேஸ்வரன் எழுதியது" என்று குறிப்பிட்டு அதற்கு அப்போது லீலா எழுதயிருந்த கமெண்டுகள ஸ்கிரீன் எடுத்து பகிர்ந்திருந்தார். இதனால் அவருக்கு கிடைக்கப் போவது எதுவுமில்லை இருந்தாலம் அவர் மெனக்கெட்டது நெகிழ்ச்சியூட்டியது. 

கீதா ரங்கனும் என்கதையின் சுட்டிகளை தேடி எடுத்து இணைத்திருந்தது மிகவும் சிறப்பு. 

அமெரிக்காவில் வசிக்கும் நீலா சந்திரசேகர் என்பவர் விஷயத்தை தெரிந்து கொண்டு, இதை மத்யமரில் "எழுதியே ஆக வேண்டும், நீங்கள் எழுதாவிட்டால் நான் எழுதுகிறேன்" என்று மத்யமரில் முன் வைத்தார். அதன் பிறகு எனக்கு, "நமக்காக இத்தனை பேர் மெனக்கெடும் பொழுது நாம் பேசாமல் இருப்பது சரியாகாது" என்று தோன்றியதால் என் வருத்தத்தை முன் வைத்தேன்.  அத்ற்கு பலர் அதிர்ச்சி அடைந்ததாக கருத்திட்டதும் லீலா ராமசாமி தன் கருத்தை கூறினார். அதில் அவரையும் அறியாமல் தான் என் கதையை காபி அடித்ததை ஒப்புக் கொண்டிருந்தார் :)) 

இதில் பலர் என் பதிவில் "அதிர்ச்சி" என்றும் அவர் பதிவில், "கவலைப்படாதீர்கள்", "தொடர்ந்து எழுதுங்கள்", "வீ ஆல் லவ் யூ" என்று தப்பிலும் வாசித்து, தவிலிலும் வாசிக்கும் செயலை செய்தாலும்,    திருமதி. செல்வி சங்கர் என்பவர் மட்டுமே இரண்டு இடங்களிலும் இல்லை, நீலாவின் பதிலயும்  சேர்த்து மூன்று இடங்கள் லீலா ராமசாமி இப்படி செய்திருக்க வேண்டாம் என்று நியாயத்தை நியாயமாக, அதே நேரத்தில் பக்குவமாக கூறியிருந்தார்.   

மத்யமர் குழுத்தலைவர் சங்கர் ராஜரத்தினம் நீலாவின் பதிவில், "மத்யமரில் வரும் பதிவுகளைத் தவிர மற்றவைகளையும் படிக்கிறார்கள் என்று ஆச்சர்யமாக இருக்கிறது. நீலாவுக்கு நிறைய டைம் இருக்கிறது போல" என்று நீலா அக்கப்போருக்கு  அலைகிறார் என்பது போல எழுதியிருந்தார். 

சங்கர் அவர்கள் பாதிக்கப்பட்ட நான் எழுதிய பதிவை எட்டிக்கூட பார்க்கவில்லை, லீலா ராமசாமியின் பதிவில் "தவறை ஒப்புக் கொண்டு விட்டீர்கள் தொடர்ந்து எழுதுங்கள்" என்று சர்ச்சில் பாவமன்னிப்பு கொடுக்கும் ஃபாதர் ரேஞ்சுக்கு கருணை வழிந்தது. 

இவையெல்லாவற்றையும் விட மிகவும் உறுத்தலாக இருக்கும் விஷயம், தார்மீகம், பத்திரிகை தர்மம் என்பதற்கு உதாரணமாக விளங்க விரும்பும் கல்கி பத்திரிகை குழுமத்திற்கு பலர் மெஸேஜ் அனுப்பியும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதுதான். 

ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியராக இருந்த ஒருவர் மற்றவரின் படைப்பை தன்னுடையது என்று பத்திரிகைக்கு அனுப்புகிறார், அவர் சார்ந்திருக்கும் குழுத் தலைவர் அதை கண்டு கொள்ளாமல் சுட்டிக் காட்டியவரை கேலி செய்கிறார், திருட்டு கதைக்கு பரிசு கொடுத்த பத்திரிகை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெளனம் சாதிக்கிறது :((

ஹீம்! வருத்தமாகத்தான் இருக்கிறது. இருந்தாலும்  இந்த நேரத்தில் எனக்காக குரல் கொடுத்த எல்லா நல்ல அன்பு உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவிக்க கடமைப் பட்டிருக்கிறேன்.

என்கதையை கீழ்கண்ட தளங்களில் வாசிக்கலாம்:

https://www.facebook.com/share/p/19oK4agYpu/

Pustaka link:

https://www.pustaka.co.in/home/ebook/tamil/mangai-necklace

லீலா ராமசாமியின் கதையை kalki online ல் படிக்கலாம். கதையின் பெயர் 'பிரும்மா'

மத்யமரில் அவருடைய பதில்

அனைவருக்கும் வணக்கம்.

என்மீது இப்படி ஒரு குற்றச்சாட்டு வரும்படியாக என் கதை அமைந்தது பற்றி நான் மிகவும் வருந்துகிறேன்.

அடிப்படையில் நான் ஒரு விலங்கியல் முதுகலைப் பட்டதாரி. என்னுடைய பல கதைகளில் அறிவியல் புனைவுக் கதைகளும், detective and thriller கதைகளும்தான் அதிகம். அவற்றில் பல கதைகள் போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. 

இனியும் என்னுடைய பெரும்பான்மையான கதைகள் science fiction, thriller, and detective genre ல்தான் அமையும்.

கல்கி சிறுகதைப் போட்டிக்கு முன்பும் அதற்குப் பின்னரும்

பல சிறுகதைப் போட்டிகளில் என்னுடைய சிறுகதைகள் வெற்றி பெற்றுள்ளன.

இதுவரை நான் பத்துப் புத்தகங்கள் எழுதி வெளியிட்டு இருக்கிறேன்.

பானு மேடத்தின் இந்தக் கதைக்கரு அது எழுதப்பட்ட சமயத்தில் ஒரு Zoologist ஆக, genetic engineering படித்த என் மனத்தின் ஆழத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது உண்மை.

இந்தக் கதை எழுதிய அந்தக் காலகட்டத்திலேயே நானும் இங்கு ஒரு கதை இதே கருவை எடுத்து எழுதினேன். இன்னும் சிலரும் எழுதினார்கள். அப்போது யாரும் இதை ஒரு பிரச்சினையாக ஆக்கவில்லை.

இப்போது அதற்குப் பரிசு கிடைத்ததால்தான் இவ்வளவு ஆவேசம்.

கல்கி கதைப் போட்டி அறிவிப்பு வருவதற்கு முன்பே இந்தக் கதைக் கருவில் இந்தக் கதையை எழுதி வைத்திருந்தேன். இதில் பானு மேடத்தின் கதையின் தாக்கம் என்னையும் மீறி சில இடங்களில் வெளிப்பட்டிருக்கிறது. இந்தத் தவறுக்கு நான் வருந்துகிறேன்.

கல்கி போட்டி அறிவிப்பு வந்தபோது, ஏற்கனவே பல போட்டிகளுக்கு நான் எழுதி வைத்திருந்த பல கதைகளை அனுப்பி விட்டதால் சட்டென்று இருப்பில் இருந்த இந்தக் கதையைக் கல்கிப் போட்டிக்கு அனுப்பி விட்டேன். 

அந்தப் போட்டிக்கு இதை நான் அனுப்புவதற்கு முன்பு கதையை நான் எடிட் செய்திருக்க வேண்டும். அதைச் செய்வதற்கு நேரமின்மை, உடல் நலக் குறைபாடு காரணமாக அப்படியே அனுப்பிவிட்டேன். இதுதான் நான் செய்த பெரும் தவறு. அது எனக்கு இவ்வளவு பெரிய தலைக்குனிவை ஏற்படுத்தி இருக்கிறது.

இதற்கு முன்பெல்லாம் என்னுடைய சிறுகதைகள், பொதுவான பதிவுகள், மீம்ஸ்கள் என்று உலகம் முழுவதும் யார் யாருடைய பெயரிலோ சுற்றி வந்திருக்கின்றன. வருகின்றன. 

அப்போது என் மனம் வருந்தியது போலத்தானே பானு மேடத்தின் மனமும் வருந்தும் என்பதை உணர முடிகிறது.

நன்றி 

வாழ்க வளமுடன் 🙏🙏🙏


Bhanumathy Venkateswaran  

@Neela Chandrashekar


                        ******