கணம்தோறும் பிறக்கிறேன் 

Sunday, February 14, 2021

மசாலா சாட்!

மசாலா சாட்!

பகுள பஞ்சமி அன்று யூ ட்யூபில் வெளியிட சத்குரு ஸ்ரீ தியாகராஜரைப் பற்றி பேசி அனுப்ப கேட்டிருந்தார்கள். அதற்காக திரட்டிய தகவல்களில் இதுவரை கேள்விப்படாத சில சங்கதிகள்:

ஸங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்யாமா சாஸ்திரிகள் தன் மகன் சுப்பராய சாஸ்திரிகளை தியாகராஜரிடம் இசை பயில அனுப்பினாராம். அப்போது இரண்டு பேரும் அடிக்கடி சந்தித்துக் கொண்டனர். சியாமா சாஸ்திரிகள் அம்பாள் மீது ஆனந்த பைரவி ராகத்தில் பல பாடல்களை பாடியிருப்பதை கேட்ட பிறகு,அதன் பரிபூரண அழகின் சிறப்பை உணர்ந்து, தியாகராஜர்  அதற்குப் பிறகு ஆனந்த பைரவி ராகத்தில் பாடப் போவதில்லை என்று முடிவெடுத்தாராம். 

தியாகராஜர் சங்கீதம் மட்டுமல்லாமல், கணிதம், ஜோதிடம் இவற்|றிலும் வல்லவராக இருந்தாராம். 

ப்ரஹ்வாத பக்த விஜயம், நவுகா சரித்திரம், போன்ற புகழ் பெற்ற இசை நாடகங்களும் எழுதியிருகிறார்.  

பஜனை சம்பிராதய வழியில் திவ்ய நாம கீர்த்தனங்கள், உற்சவ சம்ப்ரதாய கீர்த்தனைகள் போன்றவைகளையும் இயற்றியிருக்கிறார். 

***********************************************************************************

மனதார சொல்கிறேன், என்று கூறும் பொழுது நம் கையை இதயம் இருக்கும் இடத்திற்கருகே வைத்துக் கொள்வது நம் பழக்கமாக இருந்தாலும்,  மனம் என்பது எது? அப்படி நிஜமாகவே ஒன்று உண்டா? மனமும், மூளையும் ஒன்றுதானா? என்று பல சந்தேகங்கள் உண்டு. மனம் என்று தனியாக ஒன்று கிடையாது, அது எண்ணங்களின் தொகுப்பு என்றும் சொல்வார்கள். ஆனால் மனம் ஒரு குரங்கு என்னும் கூற்றில் சந்தேகம் இருக்க முடியாது. அதை அடக்குவதும் ஆள்வதும் பிரும்ம பிரயத்தனம்தான். இல்லாத ஒன்று என்ன பாடு படுத்துகிறது? அன்று சௌந்தர்யலஹரி வகுப்பில் திரிஷா என்று ஒரு வார்த்தை,  காது கேட்பதை, வாய் சொல்லிக் கொண்டிருக்க,  இந்த பொல்லாத மனம், அழகான அஜித்தைப் பார்த்து, மிக அழகான திரிஷா, "இப்படி ஸ்மார்ட் ஆகிக்கொண்டே போனால்மா நாங்களெல்லாம் என்ன செய்வது?" என்று கேட்கும் காட்சிக்கு தாவி விட்டது. அதை கஷ்டப்பட்டு இழுத்துக் கொண்டு வர வேண்டியதாகப் போனது. 

தடந் தோளினாய்! மனம் அலையும் தன்மையது, அதை கட்டுப்படுத்துவது கடினம் என்றாலும் அப்பியாசத்தாலும், வைராக்கியதாலும் அதை கட்டுப்படுத்த முடியும் என்கிறார் கீதாச்சார்யன். வைராக்கியம்.. அதுதானே குறைவாக இருக்கிறது.  

***********************************************************************************

என் மகன் காதி சோப்தான் உபயோகப்படுத்துவான். இப்போது காதி சந்தன சோப் பயன்படுத்திகிறான். குளித்துவிட்டு வந்தால் வீடே மணக்கிறது. இன்று அவன் குளித்து விட்டு வந்ததும், ஒரே கம கம மணம். அது எனக்கு ஒரு பழைய விளம்பரத்தை நினைவூட்டியது.

கம,கமா, நிதம் நிதம் கம கமா

இதென்ன சரிகமா? ஏதாவது சுரமா?

நறுமண சுரம் 

புதுவிதமா?

எக்ஸோடிகா டால்கம் கம,கமா 

சரி சரி சரி 

யாருக்காவது இந்த விளம்பர பாடல் நினைவிருக்கிறதா?

*************************************************

இரண்டு வார்த்தைகளால் எந்த கதவையும் திறக்க முடியும் 

அப்படியா?

ஆமாம், தள்ளு, இழு... 

இந்த ஜோக் கூகுள் சொன்னது. அவ்வப்பொழுது செல் போன் திரையில் ஒரு மைக் தோன்றி, இதை சொல்லிப் பாருங்கள் என்று ஒரு தமிழ் வார்த்தை தோன்றும். இன்று, உங்களுக்கு என்ன உதவி வேண்டும்? என்று கேட்டு, கீழே ஒரு கட்டத்துக்குள்  ஒரு ஜோக் சொல்லு, என்ற ஆணையும் இருந்தது. சரி என்று அழுத்தினேன், அப்போது வந்த ஜோக் இது. 

ஒரு திரைப்புதிரோடு முடித்துக் கொள்கிறேன். 

தமிழ் திரையுலகில் சகோதர,சகாதரிகள் நடித்திருக்கிறிர்கள், நடித்துக்கொண்டிருக்கிறார்கள். அப்படி சிலரை நினைவு கூற முடிகிறதா?