கணம்தோறும் பிறக்கிறேன் 

Saturday, December 25, 2021

திருவெம்பாவை -10

 திருவெம்பாவை -10


பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே
பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
ஓதஉலவா ஒரு தோழன் தொண்டர் உளன்
கோதில் குலத்தரன் தன் கோயிற்பிணாப் பிள்ளைகாள் 
ஏதவனூர் ஏதவன்பேர் ஆருற்றார் ஆரயலார்
ஏதவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய்.


சிவ பெருமானின் கோவிலை நாடி வந்திருக்கும் பெண் பிள்ளைகளே, சிவனின் பெருமையை எப்படி கூறுவது? அவருடைய திருவடியோ அதள, விதள, சுதள, தளாதள, ரசாதளா, மஹாதள, பாதாள என்னும் ஏழு உலகங்களுக்கும் கீழே உள்ளது, திருமுடியோ எல்லா உலகங்களையும் தாண்டி உள்ளது. அதை விவரிக்க நம்மிடம் சொற்கள் இல்லை. பெண்ணை தன் இட பாகத்தில் கொண்ட அவரை விண்ணுலக தேவர்களும், மண்ணுலக மாந்தர்களும் பல விதமாக பாடினாலும் முழுமையாக விளக்க முடியாதவர். வேதங்களின் முதல் பொருள். இப்படியெல்லாம் இருந்தாலும் தொண்டர்களின் உள்ளத்தில் இருப்பவன். அவர்களுக்கு ஒரு தோழன். தனக்கென்று ஒரு ஊரோ, பெயரோ இல்லாதவன்(எண்ணற்ற பெயர்களை உடையவன், எல்லா இடங்களிலும் உறைபவன் என்பது மறைந்திருக்கும் பொருள்). அவனுக்கு வேண்டியவர்கள், வேண்டாதவர்கள் என்றும் கிடையாது.

Friday, December 24, 2021

திருவெம்பாவை - 9

 திருவெம்பாவை - 9


முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம்பொருளே

பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே
உன்னைப் பிரானாகப் பெற்ற உன் சீர் அடியோம்
உன்னடியார் தாள் பணிவோம் அங்கு அவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எம் கணவர் ஆவார்
அவர் உகந்து சொன்ன பரிசே தொழும்பாய் பணி செய்வோம்
இன்னவகையே எமக்கு எம் கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோம் ஏலோர் எம்பாவாய்.

இப்போது எல்லா பெண்களும் சிவபெருமான் உறையும் கோவிலை அடைந்து விட்டார்கள். அங்கு இறைவனைப் பணிந்து தங்கள் கோரிக்கையை வைக்கிறார்கள்.

பாவை நோன்பு அனுஷ்டிப்பதின் நோக்கங்களுள் ஒன்று நல்ல கணவனை அடைவது. இந்த பெண்களைப் பொறுத்தவரை யார் நல்ல கணவன்? சிவனடியாராக இருப்பவன்தான். சிவபெருமான் மீது பக்தி கொண்ட ஒருவன்தான் தங்களுக்கு கணவனாக வர வேண்டும் என்று இந்தப் பாடலில் வேண்டுகிறார்கள். 

இந்த உலகில் மிகப் பழமையானது என்று ஒன்றை சொன்னால் அதைவிடப் பழமையானவனாகவும்,  புதுமை என்று வரும் பொருளை விட புதுமையானவனாகவும் விளங்குகிறான் நீ. உன்னைத் தலைவனாக பெற்ற சிறந்த அடியவர்களாகிய நாங்கள் உன்னையும் பணிவோம், உன் அடியவர்களையும் பணிவோம். அவர்களோடு இணங்கி இருப்போம். அந்த சிவனடியார்களில் ஒருவரே என் கணவராகி விட்டால் அவர் எந்த சிவத்தொண்டில் ஈடுபட்டாலும் நாங்கள் அவருக்கு பணி செய்வோம். இப்படிப்பட்ட ஒரு பரிசை எங்களுக்கு அளித்தால் எங்கள் வாழ்வில் ஏது குறை?

Thursday, December 23, 2021

திருவெம்பாவை - 8

திருவெம்பாவை - 8 


கோழிச் சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும்
ஏழில் இயம்ப இயம்பும் வெண்சங்கு எங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ?
வாழி! ஈதென்ன உறக்கமோ வாய் திறவாய்?
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ?
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழை பங்காளனையே பாடு ஏலோர் எம்பாவாய்.

பெண்ணே கோழி(சேவல்) கூவுவதும், குருகுப் பறவைகள் எழுப்பும் ஒலியும், கோவிலிலிருந்து வரும் மங்கள வாத்தியத்தின் நாதமும், சங்கொலியின் ஓசையும்,  ஒப்புமை அற்ற பரஞ்சோதியாகிய சில பெருமானின் ஒப்புயர்வற்ற கருணையையும், இணையற்ற சிறப்பையும் நாங்கள் பாடும் ஓசையும் கேட்கவில்லையா?அப்படி ஓர் உறக்கமா? உன்னிடமிருந்து சத்தமே இல்லையே? கடலளவு கருணை கொண்டவன் மீது உன் அன்பை வெளிப்படுத்தும் வழிகளுள் இதுவும் ஒன்றா? பிரளய காலத்திலும் அழியாமல் இருக்கும் ஒருவனும், பெண்ணை தன் இடது பாகத்தில் கொண்டவனுமாகிய அந்த சிவ பெருமானை பாடு.
மாணிக்கவாசகர் திருவெம்பாவை பாடல்களை 

திருவண்ணாமலையில்தான் பாடினார் என்பதற்கு இந்தப் பாடலில் வரும் 'ஏழைப்பங்காளனை' என்னும் வார்த்தை ஒரு சான்று என்பார்கள். ஏழைப்பங்காளன் என்பதை ஏந்திழை பங்காளன் அதாவது பெண்ணை தன் உடலின் ஒரு பங்காக கொண்டவன் என்று பொருள் கொள்ள வேண்டும். தவமியற்றிய பார்வதி தேவிக்கு தன் உடலின் இடது பாகத்தை அளித்து அர்தாதநாரீஸ்வரராக அவர் அருளுவது திருவண்ணாமலையில் தான்.

துயிலிடைப் பாடல்கள் என்னும் பாடல்கள் இந்த பாடலோடு முடிகின்றன. வெளியே நிற்கும் பெண்கள் உள்ளே உறங்கிக்  கொண்டிருக்கும் பெண்களை எழுப்புகிறார்கள் என்பது ஒரு உருவகம். 

வெளியே நிற்பவர்கள், உள்ளே உறங்கிக் கொண்டிருக்கும் பெண் எல்லாம் நாம்தான்.  அடிப்படையில் கடவுள் பக்தியும், ஆன்மீக நாட்டமும் கொண்டிருந்தாலும் நம் கர்ம வினை அதற்கு ஒத்துழைக்க மறுக்கின்றது. விழித்துக்கொண்ட புத்தி, உறங்கிக் கொண்டிருக்கும் புலன்களையும், மனதையும் எழுப்புவதாகக் கொள்ளலாம்.

Wednesday, December 22, 2021

திருவெம்பாவை - 7

 திருவெம்பாவை - 7

அன்னே யிவையுஞ் சிலவோ பல அமரர்
உன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான்
சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய் திறப்பாய்
தென்னாஎன் னாமுன்னந் தீசேர் மெழுகொப்பாய்
என்னானை என்னரையன் இன்னமுதென் றெல்லோமும்
சொன்னோங்கேள் வெவ்வேறாய் இன்னந் துயிலுதியோ
வன்னெஞ்சப் பேதையர் போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்.

பெண்ணே இப்படி எங்களை வாசலில் நிற்க வைத்திருக்கிறாயே என்று வெளிப்படையாக சொல்லாவிட்டாலும் இதுவும் உன் விளையாட்டுகளில் ஒன்றா என்று கேட்பதன் மூலம் அதைத்தான் உணர்த்துகிறார்கள் எனலாம். தொடர்ந்து அவர்கள்," பெண்ணே நீ எப்படிப்பட்டவள் தெரியுமா?  உருத்திராட்சம், விபூதி, திரிசூலம்,பிறைச்சந்திரன் போன்ற 
சிவபெருமானுக்குரிய அடையாளங்களைப் பார்த்தாலே சிவனே! சிவனே என்பாய், யாராவது தென்னாட்டுடைய சிவனே போற்றி என்று கூறுவதற்காக தென்னா.. என்று தொடங்கும் பொழுதே தீயிலிட்ட மெழுகு போல் உருகுவாய், சிவன்தான் என் தந்தை, அவரே என் அரசன், எனக்கு அமுதம் போன்றவன் என்றெல்லாம் கூறுவாய், அப்படிப்பட்ட, அமரர்களாலும் அறியப்பட முடியாத, பரம்பொருளாகிய ஒருவனும், பெருமைகள் கொண்டவனுமாகிய சிவபெருமானின் பெருமைகளை நாங்கள் பாடுவதைக் கேட்டும் கல் நெஞ்சம் கொண்டவளைப்போல நீ பேசாமல் படுத்துக் கொண்டிருக்கிறாய். இதுதான் தூக்கத்தின் சிறப்பு போலிருக்கிறது.

Tuesday, December 21, 2021

திருவெம்பாவை - 6

திருவெம்பாவை - 6

மானே நீ நென்னலை நாளை வந்து உங்களை
நானே எழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசை பகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவரியான்
தானே வந்து எம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்கு உன் வாய் திறவாய்
ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்
ஏனோர்க்கும் தம் கோனைப் பாடேலோர் எம்பாவாய்


அடுத்த வீட்டிற்கு சென்றால் அந்த பெண்ணும் உறங்கிக் கொண்டுதான் இருக்கிறாள். மானே என்று அவளை மிக இனிமையாக அழைக்கும் தோழிகள்,"நேற்று நீ, நான் முதலில் வந்து உங்களை எல்லாம் எழுப்புவேன் என்றாய் அந்த வார்த்தை எங்கே போனது? அப்படி கூறிவிட்டு நாணமின்றி உறங்கிக் கொண்டிருகாகிறாய். உனக்கு இன்னும் பொழுது புலரவில்லையா? விண்ணகத்து தேவர்களும், மண்ணில் வசிக்கும் மாந்தர்களும், இந்த இரண்டு நிலைகளுக்கும் இடைப்பட்ட முனிவர்கள், ஞானிகள் போன்றவர்களாலும் முழுவதுமாக அறிந்து கொள்ள முடியாதவனும், நம்மை போன்ற பக்தர்களுக்கு தானே இறங்கி வந்து அருளுகிறவனுமாகிய அந்த சிவப் பரம்பொருளை போற்றி நாங்கள் பாடுவதை கேட்டும் வாய் திறவாமலும், ஊன் உருகாமலும் கிடப்பது உனக்கு மட்டுமே
சாத்தியம். எங்களுக்கு மட்டுமல்ல எல்லா உயிர்களுக்கும் அரசனாகிய சில பெருமானைப் போற்றிப் பாடலாம் வா".

Monday, December 20, 2021

திருவெம்பாவை பாடல் - 5

 திருவெம்பாவை  - 5




மாலறியா நான்முகனும் காணா மலையினை நாம்
போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும்
பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவறியான்
கோலமும் நம்மை ஆட்கொண்டருளிக் கோதாட்டும்
சீலமும் பாடிச் சிவனே
சிவனேயென்று
ஓலம் இடினும் உணராய் உணராய்காண்
ஏலக்குழலி பரிசேலோர் எம்பாவாய்

வாசனை பொருந்திய கூந்தலை உடைய பெண்ணே திருமாலும், நான்முகனும் காண முடியாத அண்ணாமலையார் எனக்கு மிகவும் நெருக்கமானவர் தெரியுமா? என்று பாலிலும், தேனிலும்‌ ஊறியது போன்ற இனிமையான வார்த்தைகளை பேசுவாயே? வந்து உன் வாசல் கதவுகளை திறப்பாயாக. இந்த உலகில் உள்ள மனிதர்களும், விண்ணுலகில் உள்ள தேவர்களும் அறிய முடியாதவரும் நம் குறைகளை மன்னித்து நமக்கு அருளுவதற்காக ஒரு வடிவம் எடுத்து வருபவருமாகிய சிவ பெருமானின் பெயர்களை சிவனே, சிவனே என்று நாங்கள் உரக்கப் பாடுவதை கேட்டும் நீ உறங்குகிறாயே இதுதான் உன் சிறப்பா?

Sunday, December 19, 2021

திருவெம்பாவை பாடல் 4

 


திருவெம்பாவை பாடல் 4


ஓண்ணித்தில நகையாய்
இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளி மொழியார்
எல்லோரும் வந்தாரோ
எண்ணிக் கோண்டுள்ளவா
சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்றவுமே
காலத்தை போக்காதே
விண்ணுக்கொரு மருந்தை
வேத விழுப் பொருளை
கண்ணுக்கினியானை பாடி
கசிந்துள்ளம் உள்நெக்கு 
நின்றுருக யாமாட்டம்
நீயே வந்து எண்ணிக் குறையில்
துயிலேலோர் எம்பாவாய்

முத்துப்பல் சிரிப்பை உடைய பெண்ணே உனக்கு இன்னும் பொழுது விடியவில்லையா? என்று வெளியே நிற்கும் தோழிகள் கேட்டதும் இன்னும் தயாராகாத வீட்டிற்குள் இருக்கும் பெண்ணிற்கு ரோஷம் வந்து விடுகிறது. 

"என்னை மட்டும் பெரிதாக குறைகூறுகிறீர்களே? மற்ற எல்லோரும் வந்து விட்டார்களா?"
என்று வினவுகிறாள்.
யார் யாரெல்லாம் வந்திருக்கிறோம் என்று கூற நாங்கள் தயார், ஆனால் அந்த நேரத்தில் நீ உறங்கி விடாதே
விண்ணுலக தேவர்களுக்கே மருந்தாக இருப்பவன், வேதத்தின் மேலான உட்பொருளானவன், நமக்காக ஒரு அழகான உருவம் கொண்டிருப்பவன், அப்படிப்பட்டவனை பாடி நாங்கள் நெக்குருகி நிற்கிறோம்,எனவே நீயே வந்து எத்தனை பேர்கள் வந்திருக்கிறோம் என்று எண்ணி, எண்ணிக்கை குறைந்தால் உறங்கிக் கொள்.