கணம்தோறும் பிறக்கிறேன் 

Friday, December 18, 2020

பய பக்தி

பய பக்தி  

நாம் கோவிலுக்குச் சேரும் பொழுது பய பக்தியோடு செல்வோம். ஆனால் பயம் 90% பக்தி 10% என்று ஒரு கோவிலுக்குச் சென்றோம் என்றால் அது சோட்டாணிக் கரை பகவதி கோவிலுக்குச் சென்றதை கூறலாம். 

ஏறத்தாழ முப்பது வருடங்களுக்கு முன் கேரளா சென்ற பொழுது சோட்டாணிக் கரைக்கும் சென்றோம். நாங்கள் சென்றபொழுது சாயரட்சை தீபாராதனை நேரம். அந்தக் கோவிலைப் பற்றி பரணீதரன் எழுதியிருந்தவை நினைவுக்கு வந்து கிலியை  ஊட்டியது. மன நலம் சரியில்லாமல் அங்கே தங்கியிருப்பவர்கள் தரிசனத்திற்கு வரும் நேரம். 

அந்தக் கோவிலின் சுவர்களில் அடிக்கப் பட்டிருந்த  பெரிய பெரிய ஆணிகளை  பார்த்தாலே பகீரென்றது. அவை எல்லாம் அந்தக் கோவிலில் தங்கியிருந்த மன நலம் குன்றியவர்கள், மற்றும் பேய் பிடித்தவர்கள் அர்த்தஜாம குருதி  பூஜையில்  அவர்கள் கைகளால், அல்லது தலையால்  அந்த கருங்கல் சுவர்களில் அடித்தவை.

மன நலம் குன்றியவர்களும், பேய், பிசாசு முதலிய தொல்லைகள் உள்ளவர்களும் சோட்டாணிக்கரைக்கு வந்து தங்கி, அந்த கோவிலில் நடக்கும் பூஜைகளில் கலந்து  கொண்டு, தேவியின் பிரசாதத்தை உண்ண வேண்டும். அங்கு நடக்கும்  குருதி பூஜையின் பொழுது இந்த மன நலம் குன்றியவர்கள் தங்கள் கைகளாலோ அல்லது  தலையாலோ ஆணியை கோவிலின்  கருங்கல் சுவரிலோ அல்லது அங்கிருக்கும் மரத்திலோ  அடிப்பார்களாம், அப்போது அவர்கள் உடலிலிருந்து பெருகும் ரத்தத்தின் வழியே துர் சக்திகள் வெளியேறிவிடும் என்பது நம்பிக்கை. 

இந்த கோவில் இரண்டு பகுதிகளை கொண்டது. மேலே இருக்கும் கோவிலில் அம்பிகை பகவதியாக காலையில் சரஸ்வதியின் அம்சமாகவும், பகலில் லக்ஷ்மியின் அம்சமாகவும் இரவில் துர்கையின் அம்சமாகவும் காட்சி அளிக்கிறாள். மிகவும் சௌமியமான, அழகான ரூபம். கீழ்க்காவு என்று படிகள் இறங்கி கீழே இருக்கும் கோவிலில் குடி கொண்டிருக்கும் அம்மன் பத்ரகாளியின் அம்சமாக விளங்குகிறாள். இங்குதான்  வெள்ளிக்கிழமை இரவுகளில் குருதி பூஜை நடைபெறுமாம். அதை காண்பதற்கு மனதில் மிகவும் உறுதி வேண்டும் என்று திரு.பரணீதரன் அவர்கள் அந்த பூஜை நடக்கும் விதத்தை விவரித்து எழுதியிருப்பார்.  அந்தக் காலங்களில் நிஜமாகவே ஒரு கோழியையோ, ஆட்டையோ பலி கொடுத்து அந்த ரத்தத்தில் சோற்றைக்   கலந்து அதைத்தான் நிவேதனம் செய்வார்களாம். பின்னர் அரசாங்கம் உயிர் பலியை தடை செய்த பிறகு மஞ்சள் பொடியில் சுண்ணாம்பை கலந்தால் சிவப்பு நிறத்தில் வருமே, அதை ரத்த சோறாக கொடுக்கிறார்கள் என்றார்கள். இருந்தாலும் அந்த கீழ்க்காவில் ரத்த வாடை அடிப்பது போல இருந்தது. ஜலதாரைகளில் படிந்திருந்த கறை, ரத்தக்  கறையோ என்று தோன்றியது.  அந்தக் கோவிலில் ஒரு அமானுஷ்யம் நிலவியது.

அதுவும் நாங்கள் சென்றது சாயரட்சை தீபாராதனை நேரம். மன நலம் குன்றிய பெண்கள் சிலர் குளித்துவிட்டு தரிசனத்திற்கு வந்தனர். அவர்கள்  அங்கிருக்கும்  மஹாவிஷ்ணு சந்நிதியில் அமர வைக்கப்பட்டனர். அதில் ஒரு பெண் திடீரென்று விசித்து விசித்து அழுதபடி எழுந்திருக்க நான் வெலவெலத்துப் போனேன்.  அம்மனை தரிசிக்க எங்கே மனம் சென்றது? அடிக்கப்பட்டிருக்கும் ஆணிகளை அல்லவா பார்க்கத் தோன்றியது. "கோவிலுக்கு வந்தால் சாமியை பார்க்காமல், வேறு எதையாவது ஏன் பார்க்கிறீர்கள்?" என்று அம்மா திட்டினாள். 

அதே கோவிலுக்கு மிக சமீபத்தில் சென்றிருந்தோம். கோவில் அடியோடு மாறி நவீனமாகிவிட்டது. அந்த அமானுஷ்யம் போன இடம் தெரியவில்லை.