கணம்தோறும் பிறக்கிறேன் 

Wednesday, August 21, 2019

ராமேஸ்வரம்

ராமேஸ்வரம்


ராவண சம்ஹாரத்திற்குப்பிறகு பிராமணனான அவனை கொன்றதால் தன்னை பீடித்த பிரும்மஹத்தி தோஷத்தை எப்படி போக்கி கொள்வது எனறு கலங்கிய ராமனிடம் சிவ பெருமானை பூஜிப்பதன் மூலம்தான் அந்த தோஷம் விலகும் என்று முனிவர்கள் கூற, தான் பூஜிப்பதற்காக கைலாயத்திலிருந்து சிவ லிங்கங்களை பெற்று வருமாறு ஆஞ்சநேயரை பணிக்கிறார்.

கைலாயத்திலிருந்து இரண்டு சிவ லிங்கங்களை பெற்றுக் கொண்டு ஆஞ்சநேயர் வருவதற்கு முன் பூஜிக்க வேண்டிய நல்ல நேரம் முடிந்து விடுமே என்பதால் சீதை கடற்கரை மணலில் பிடித்து வைத்த லிங்கத்தையே ராமபிரான் பூஜித்து பிரும்மஹத்தி தோஷத்திலிருந்து விடுபடுகிறார். அதைப் பார்த்த ஆஞ்சநேயருக்கு தன்னை அவமதித்து விட்டார்கள் என்று கோபம் வருகிறது. தன கொண்டு வந்த சிவலிங்கத்தைத்தான் வைத்து பூஜிக்க வேண்டும் என்று நிர்பந்திகின்றார். அதற்கு ராமன், "உன்னால் முடிந்தால் இந்த லிங்கத்தை அகற்றி விட்டு  நீ கொண்டு வந்து லிங்கத்தை ஸ்தாபிக்கலாம்" என்று கூற, அவர் அதை பிடுங்க முயற்சி செய்கிறார். எவ்வளவு முயற்சி செய்த போதிலும் அவரால் அதை அகற்ற முடியவில்லை. இறுதியாக தன்னுடைய வாலால் அந்த லிங்கத்தை மூன்று சுற்றுகள் சுற்றி, தன்னுடைய முழு பலத்தையும் பிரயோகித்து அசைக்கப் பார்க்கிறார். இந்த முயற்சியில் அவருடைய வால் அறுபட்டு அவர் தூக்கி எறியப்படுகிறார். ரத்த வெள்ளத்தில் கிடந்த ஆஞ்சநேயரை தூக்கி எடுத்த ராமன், தன் மார்போடு அனைத்துக் கொண்டு ஆதுரத்துடன் அவர் உடலைத் தடவி கொடுக்கிறார். சீதையும் காயம் பட்ட ஆஞ்சநேயரின் உடலை தடவி கொடுத்தவுடன், ஆஞ்சநேயரின் உடலில் பட்ட காயங்கள் ஆறி, அவர் தன் பழைய உடல் பலத்தையும், வனப்பையும் பெறுகிறார்.

"உன் அறியாமையால் பிரும்மா, விஷ்ணு, இந்திரன் இவர்களால் அசைக்க முடியாத இந்த லிங்கத்தை நீ இவ்விதம் செய்ய முற்பட்டதால் சிவ அபாரதத்திற்கு ஆளானாய். இனி இவ்விதம் செய்யாதே. நீ விழுந்த இவ்விடம் ஹனுமத் குண்டம் என்று அழைக்கப்படும்.  நீ கொண்டு வந்த லிங்கங்களுள் ஒன்றை நான் பூஜை செய்த லிங்கத்திற்கு வடக்கே பிரதிஷ்டை செய்து காசி விஸ்வநாதராக பூஜிக்கிறேன். இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் முதலில் காசி விஸ்வநாதரை வணங்கி அதன் பிறகே என்னால் பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கத்தை பூஜிக்க வேண்டும். மற்றொரு லிங்கத்தை நீ உனக்கு அருகே மேற்கு பக்கத்தில் ப்ரதிஷ்டை செய்து இந்த கோவிலுக்கு காவலாக இருந்து கொண்டு பூஜித்து வருவாயாக. இதனால் நீ செய்த அபசாரத்திலிருந்து விடுபடுவாய்" என்று  ராமன் கூறியதாக தல புராணம் கூறுகிறது.

பிரும்மாண்டமான அழகான கோவில். சந்நிதியில் நுழையும் முன் வல்லப கணபதியை வணங்கி உள்ளே நுழைகிறோம். பிருமாண்டமான, அழகான  நந்தி. ஆனால் அதன் அழகை முழுமையாக ரசிக்க முடியாமல் நெருக்கமாக கம்பிகள்.  இந்த நந்தி கோவிலின் பிரும்மாண்டத்திற்கு தோதாக பின்னாட்களில் வைக்கப் பட்டிருக்கலாம் என்று தோன்றியது.

சீதை மணலால் பிடித்த லிங்கம் என்பதை நம்பலாம் போல அழகிய, சிறிய லிங்கம்.  அதற்கேற்றார் போன்ற சிறிய நந்தியை வரிசையில் நிற்கும் பொழுது பார்க்க முடிகிறது.  சுவாமியை தரிசித்து விட்டு வரும் பொழுது சீதா,ராம, லக்ஷ்மணர்களை வணங்கியபடி நிற்கும் ஆஞ்சநேயர், மற்றும் சுக்ரீவனை வணங்கி பிரகாரம் சுற்றி வரும் பொழுது கோஷ்டத்தில் தக்ஷிணாமூர்த்தி யையும், பிராகாரத்தில் பள்ளி கொண்ட பெருமாளையும் வணங்குகிறோம். கோஷ்டத்தில் தக்ஷிணாமூர்த்திக்கு எதிர் பக்கத்தில் பிரும்மா  இருக்கிறார். ஆஞ்சநேயரால் கொண்டு வரப்பட்ட காசி விஸ்வநாதர், விசாலாட்சியையும் வணங்குகிறோம். எல்லா சிவன் கோவில்களையும் போலவே நுழைவாயிலுக்கு இரு புறங்களிலும் சூரிய, சந்திரன் காட்சி அளிக்கிறார்கள்.

வெளி வந்து அம்பாள் சன்னதியில் பர்வதவர்த்தினியை தரிசித்துக் கொள்கிறோம். அம்மன் சன்னதிக்கு வெளியே தூண்களில் நவ கன்னிகையர்களின்
சிலைகள் இருக்கின்றன.





பிரசித்தி பெற்ற மூன்றாம் பிரகாரத்தை இப்போது வர்ணம் பூசியிருக்கிறார்கள். எனக்கென்னவோ வர்ணம் பூசப்படாத பொழுது இன்னும் அழகாக இருந்ததோ என்று தோன்றியது. புகைப்படம் எடுப்பதில் ஆர்வமும், திறமையும் கொண்டிருந்த எங்கள் அப்பா அப்போது புகைப்படம் எடுத்திருக்கிறார். இப்போது என் செல் ஃபோனால் சிறை பிடிக்க முயன்றேன். ஐந்துக்கு மூன்று பழுதில்லை அல்லவா?°

இங்கு கிழக்கு வாசலிலிருந்து பேட்டரி கார்கள் இயக்கப்படுகின்றன. காலையில் அக்னி தீர்த்தம் எனப்படும் கடலில் நீராடி விட்டு கிழக்கு வாலில் இந்த பேட்டரி காரில் ஏறிக்கொண்டால் வடக்கு வாசலில் இறக்கி விடுகிறார்கள். அங்கிருந்து உள்ளிருக்கும் 27 தீர்த்தங்களில் நீராடி மேற்கு வாசலுக்கு வந்து விடுவோம். அங்கு உடை மாற்றிக் கொள்ள இடம் இருக்கிறது. உடை மாற்றிக் கொண்டு இறைவனை தரிசிக்கலாம்.

இந்த கோவில் சைவ,வைணவ ஒற்றுமைக்கு உதாரணமாக காட்டப்பட்டாலும் வைணவர்கள் அதிகம் கண்களில் படவில்லை. வட இந்தியர்கள் நிறைய பேர் வருகிறார்கள்.








Sunday, August 18, 2019

திருப்புல்லாணி

திருப்புல்லாணி 



தேவிப்பட்டிணத்திலிருந்து திருஉத்திரகோசமங்கைக்கு சென்று விட்டு பின்னர் திருப்புல்லாணி சென்றோம்.  தர்பசயன ராமர் கோவில் என்று பிரபலமாக அறியப்பட்டாலும் மிகவும் புராதனமான இக்கோவில் ஆதி ஜெகந்நாதர் கோவில் என்றே அழைக்கப்படுகிறது. 

கருவறையில் ஆதி ஜெகந்நாதர் தர்பாசனத்தில் அமர்ந்த கோலத்தில் இரு புறமும் ஸ்ரீதேவி,பூதேவி நாச்சியார்களோடு காட்சி அளிக்கிறார். இங்குதான் புத்திரகாமேஷ்டி யாகம் செய்த தசரதருக்கு பாயசம் வழங்கப்பட்டது என்கிறார்கள். அதனால் இப்போது கூட குழந்தைகள் இல்லாத தம்பதிகள் இங்கு வந்து இறைவனுக்கு பாயசம் படைத்தது பிரார்தித்துக்கொள்ள குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது நிதர்சனமான நம்பிக்கை. தனிசந்நிதியில் அழகே உருவாய் பத்மாசினி தாயார். ஆண்டாளுக்கும் தனி சந்நிதி இருக்கிறது. 

பிரகாரத்தை சுற்றி வரும் பொழுது தனி சந்நிதியில் தர்ப்பை படுக்கையில் பள்ளி கொண்டிருக்கும்  ராமபிரானை தரிசிக்க முடிகிறது. சீதையை இழந்த சோகத்தில், கடலை கடந்து எப்படி சீதையை மீட்கப்போகிறோம் என்ற சிந்தனையில் தர்பை புல்லையே  படுக்கையாக விரித்து படுத்து விட்டாராம். அவருடைய தொப்பூழிலிருந்து மூன்று தண்டுகள் பிரிய ஒன்றில் பிரம்மா, ஒன்றில், சூரியன், மற்றொன்றில் சந்திரன் இருக்க, சுற்றிலும் முப்பது முக்கோடி தேவர்களும் பாலம் கட்டுவதைப் பற்றி ஆலோசனை செய்தார்களாம். 

இங்கிருந்து இலங்கை கடலின் நடுவே செல்ல பாலம் கட்டுவதற்கு சமுத்திரராஜனிடம் அனுமதி வாங்குவதற்காக அவனை வரச்சொல்கிறார் ராமர். சமுத்திரராஜன் வராததால் கோபமுற்று தன் கோதண்டத்திலிருந்து அம்பினை ஏவுகிறார், அக்னி பிழம்பாக அம்பு பாய, பயந்து போன சமுத்திர ராஜன் ஓடிவந்து ராமனின் பாதம் பணிகிறான். அதன் பிறகு இங்கிருந்துதான் பாலம் கட்டப்பட்டது. அதனால் இந்த இடம் ஆதி சேது என்று வழங்கப்படுகிறது. இங்குதான் விபீஷணன் ராமரிடம் சரணடைந்தாராம். எனவே இது சரணாகதி ஷேத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது. 

கடலைத்தாண்டி சீதையைக் கண்டு, அவளிடமிருந்து சூடாமணியை பெற்று வந்த ஹனுமான் இங்குதான் அதை ராமனிடம் தந்ததாக சொல்கிறார்கள்.

இங்கு பட்டாபிஷேக ராமருக்கு என்று ஒரு தனி சந்நிதியும், சந்தானகோபாலருக்கு தனிசந்நிதியும் இருக்கின்றன.  ஆனால் நடை சாத்தி விட்டதால் இங்கு எழுந்தருளியிருக்கும் கிருஷ்ணரை எங்களால் தரிசனம் செய்ய முடியவில்லை.  குழந்தை இல்லாத தம்பதிகள் இந்த கிருஷ்ணருக்குத்தான் பால் பாயசம் படைத்து வேண்டிக் கொள்ள வேண்டும் என்கிறார்கள்.  வெளி பிரகாரத்தில் அரச மரத்திற்க்கு அடியில் நிறைய நாகர்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றன. 

திருமங்கையாழ்வாரால் மங்களா சாஸனம் செய்யப்பட்ட தலம். 108 வைணவ திருப்பதிகளுள் ஒன்று. மூலவர் ஆதி ஜெகன்னாதர், உற்சவர் கல்யாண ஜகந்நாதர். தாயார் பத்மாசினி மற்றும் கல்யாணவல்லி. 

இங்கிருக்கும் சமுத்திரத்தில் நீராடி விட்டுதான் ராமேஸ்வரம் செல்ல வேண்டும் என்கிறார்கள். நாங்கள் தரிசனம் மட்டும் செய்து கொண்டோம்.