கணம்தோறும் பிறக்கிறேன் 

Showing posts with label thozhi. Show all posts
Showing posts with label thozhi. Show all posts

Monday, February 26, 2018

கதை அல்ல நிஜம்!

கதை அல்ல நிஜம்!

"சினிமாவைப் பார்த்துதான் உலகம் கெட்டுப்போகிறது," என்று பொது மக்களும், "உலகத்தில் நடப்பதைத்தான் நாங்கள் காட்டுகிறோம்" என்று திரை உலகத்தினரும் ஒருவரை ஒருவர் கை காட்டுவது வழக்கம்தான் என்றாலும், திரைப்படங்களில் நாம் பார்க்கும் சில சம்பவங்கள் நம் வாழ்க்கையிலோ அல்லது நம்மை சுற்றி இருப்பவர்கள் வாழ்க்கையிலோ நடப்பதைப்பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். அதே போல திரைப் படங்களில் சித்தரிக்கப்படும் சில கதை மாந்தர்களைப் போல நிஜ வாழ்க்கையிலும் நாம் சிலரை பார்க்க முடியும்.

அப்படிப்பட்ட மனிதர்களையும் சம்பவங்களையும் அலசுவதுதான் இந்த கட்டுரையின் நோக்கம். 

எனக்கு ஒரு தோழி இருந்தாள். கொஞ்சம் குறும்புக்காரி. என் அக்காவின் வகுப்புத் தோழி. பின்னாளில் எனக்கும் நட்பானாள். பெண்களும் ஆண்களும் சகஜமாக பழகாத அந்தக் காலத்திலேயே பசங்களோடு சுலபமாக பழகுவாள். அப்போதெல்லாம் ஸ்ரீரங்கத்தில் ரெயில் நிலையத்தை ஒட்டி ரயில்வே க்ராஸிங்கில்  மேம்பாலம் கிடையாது. ரயில்வே கேட்டுதான். ரயில்வே கேட் மூடப் பட்டு விட்டால் பேருந்துகள் கேட் திறப்பதற்காக காத்திருக்கும். passenger train இல் தொத்திக் கொண்டு செல்லும் விடலைப் பையன்கள் பேருந்தில் உட்காந்திருக்கும் இளம் பெண்களைப் பார்த்து கை அசைப்பார்கள். அந்த சமயம் பேருந்தில் என் தோழி இருந்தால், டாடா காட்டும் பையன்களுக்கு இவளும் பதிலுக்கு டாடா காண்பிப்பாள். "ஏன் இப்படி செய்கிறாய்?" என்றால், "ஏதோ அவர்களுக்கு ஒரு சந்தோஷம் கிடைக்கட்டுமே" என்பாள். 

அவள் அவளை விட ஒரு வயது இளைய பையனை காதலித்தாள். இருவரும் பிராமணர்கள் என்றாலும், வேறு வேறு பிரிவினர் என்பதால் இரண்டு வீட்டிலும் எதிர்ப்பு இருந்தது. அவளுடைய காதலன் பம்பாயில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். அவன் ஒரு முறை விடுப்பில் வந்த பொழுது, இவள் வீட்டு சாமி அறையில், ஒரு மஞ்சள் கயிற்றில் மஞ்சளைக் கோர்த்து அவனை விட்டு கட்ட சொல்லி விட்டாள். என்னிடம் அதைக் கூறிய பொழுது, "இது என்ன பைத்தியக்காரத்தனம்? இது என்ன மாதிரி திருமணம்? ஒருவர் கூட சாட்சிக்கு இல்லாத இந்த திருமணம் எப்படி செல்லும்?" என்று கேட்டதற்கு, "கடவுள் சாட்சியாக அவன் என் கழுத்தில் தாலி  கட்டியிருக்கிறானே..?" என்றாள்.  அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு ஒரு முறை என் வீட்டிற்க்கு வந்தாள். அவளிடம் என் அம்மா," என்ன .... எப்போ கல்யாணம் பண்ணிக்கப் போற?" என்று கேட்டார். (ஏனென்றால் அப்போது அவள் வாதை ஒத்த பெண்களுக்கு திருமணம் ஆகி குழந்தை கூட பிறந்து விட்டது. ஏன் எனக்கே திருமணமாகி விட்டது).  அவள் சற்றும் அசராமல், "எனக்கு கல்யாணம் ஆயிடுத்து மாமி, நான் சுமங்கலி" என்றதும், என் அம்மா, "பார்த்தியாடி, இவளுக்கு எல்லாம் விளையாட்டுதான்" என்றார். எனக்கு ஒரே கிலி, நான் சற்று மறைவாக,வெளிச்சம் என் முகத்தில் விழாதபடி நின்று கொண்டிருந்ததால், நான் முழித்த முழியை என் அம்மாவால் பார்க்க முடியவில்லை, நான் தப்பித்தேன். 



அலை பாயுதே படத்தில் மாதவனும் ஷாலினியும் இரு வீட்டுக்கும் தெரியாமல் ஒரு கோவிலில் கல்யாணம் செய்து கொள்ள போவார்கள்  அப்போது மாதவன் குடும்ப நண்பரான ஒரு பெண்மணி,  "கார்த்திக், என்ன கோவிலுக்கெல்லாம் வந்திருக்க?"என்று கேட்பார், உடனே, மாதவன், "இங்க ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன்" என்று சீரியசாக கூற அந்தப் பெண்மணியோ அதை நம்பாமல்,"உனக்கு எல்லாம் விளையாட்டுதான்" என்பார் 

அலை பாயுதே படத்தை பார்க்கும் பொழுதெல்லாம் குறிப்பாக இந்த காட்சியை பார்க்கும் பொழுதெல்லாம் எனக்கு என் தோழிதான் நினைவுக்கு வருவாள்.  'அவள் அப்படித்தான்' படம் பார்த்த பொழுதும்  இவள் ஞாபகம்தான் வந்தது.  

எந்தப் படம் என்று தெரியவில்லை, அந்தப் படத்தின் காமெடி மிகவும் பிரபலம். காலையில் பிரமாதமாக பூஜை செய்து, பெற்றோர்கள் காலில் விழுந்து வணங்கும் வடிவேலு, மாலை நன்றாக குடித்து விட்டு வந்து அதே பெற்றோர்களை துவைத்து எடுப்பார். கேட்டால், "அது நல்ல வாய், இது நாற வாய்" என்பார்.



என் சகோதரியின் வீட்டிற்கு பக்கத்தில் இருந்தவர்கள் வீட்டிலிருந்து காலையில், கணகணவென்று மணி அடித்து "ஓம், ஸ்ரீ மாதா மஹாராக்னி,ஸ்ரீமத் சிம்ஹாசனேஸ்வரி .." என்று பலமாக சப்தம் கேட்கும். இரவில் அதே குரல், கன்னா பின்னாவென்று கெட்ட வார்த்தைகளை இரைக்கும். சில சமயம் பெற்றோர்கள் அடி வாங்கும் ஓசை கூட கேட்கும். மேற்படி படத்தை இயக்கிய இயக்குனர் இப்படிப்பட்ட காட்சிகளை பார்த்திருப்பாரோ?

எங்கள் நெருங்கிய உறவில் ஒரு பையன் தன் முப்பத்திரெண்டாவது வயதில் இளம்  மனைவியையும், மூன்று வயது மகனையும் விட்டு விட்டு, அகாலமாக இறந்து போனான். குடும்பமே அந்த இழப்பை தாங்க முடியாமல் கதறிக் கொண்டிருந்தது. அவனுடைய குழந்தையோ வீட்டிற்கு வருபவர்களிடம் எல்லாம்,"என்னோட அப்பா செத்துப் போய்ட்டா.." என்று  தான் என்ன சொல்கிறோம் என்பது புரியாமலேயே சொல்லி எல்லோருடைய துக்கத்தையும் அதிகப் படுத்திக் கொண்டிருந்தது. 

நாயகன் திரைப்படத்தில் கதா நாயகனால் கொலை செய்யப்பட்ட இன்ஸ்பெக்டரின் மன நிலை பிறழ்ந்த மகன் வீட்டிற்கு வருபவர்களிடம் எல்லாம்," மேரா பப்பா மர் கயா" என்று சொல்லும் அந்த காட்சியை காண நேர்ந்தால் வயிற்றில் கத்தி சொருகப் படும் வேதனையை உணருவேன்.

காட்சிகள் இவை என்றால், நிறைய நிஜ மாந்தர்கள் சினிமா பாத்திரங்களை நினைவூட்டுவார்கள். என் மருமகளை பாலசந்தர் பட ஹீரோயின் என்போம். பாலசந்தரின் படங்களில் மலையாளம் பேசும் ஒரு பாத்திரம் வரும். நிறைய படங்களில் கதாநாயகி திடீர் திடீரென்று ஹிந்தியில் பேசுவாள். என் மருமகள் டில்லியில் பிறந்து வளர்ந்ததால், என்னதான் வீட்டில் பேசும் மொழி தமிழ் என்றாலும், அவளுக்கு சரளமாக பேச வேண்டுமென்றால் ஹிந்தியைத்தான் நாடுவாள். இதைப் பற்றி என் மகன், "கோபமாக இருக்கும் பொழுது ஹிந்தியில் பேசுவாள், அதானல் கோவமா இருக்கானு புரிந்து விடும்" என்பான். எனவே கே.பி.பட ஹீரோயின். 

என்னுடைய சின்னஞ்சிறு வயதில் நான் பார்த்த படம் 'சின்னஞ் சிறு உலகம்'. அந்தப் படத்தி நடித்தவர்கள் யார்? என்ன கதை போன்ற விஷயங்கள் எனக்கு நினைவில் இல்லை. ஒரே ஒரு காட்சி மட்டும் நன்றாக ஞாபகம் இருக்கிறது. அந்தப் படத்தில் ஒரு திருமணத்திற்குச் செல்லும்  நாகேஷ் அழ ஆரம்பிப்பார். அடக்க முடியாமல் அவர் அழுவதைப் பார்த்த எல்லோரும் ஒருவர் பின் ஒருவராக அழ ஆரம்பித்து விடுவார்கள். இறுதியில் நாதஸ்வரம் வாசித்துக் கொண்டிருபவர்களும் அதை கீழே வைத்துவிட்டு அழ ஆரம்பித்து விடுவார்கள். கடைசியில் யாரோ ஒருவர் நாகேஷிடம்,"ஏன் அழுதாய்?" என்று கேட்பார். அவர் அதற்கு," கல்யாணப் பெண்ணுக்கு அருகில் குத்து விளக்கு எரிந்து கொண்டிருக்கிறது, எங்கேயாவது அந்தப் பெண்ணின் புடவைத்த தலைப்பு பறந்து அந்த விளக்கில் பட்டு, புடவை பிடித்துக் கொண்டு, அந்த நெருப்பு பெண்ணிடமிருந்து மாப்பிள்ளைக்கு பரவி, அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக எல்லோருக்கும் பரவி விட்டால் என்ன செய்வது என்று நினைத்தேன், அழுகை வந்து விட்டது" என்பார். இதைப் போலவே மிகையாக கற்பனை செய்து கவலைப் படும் மனிதர்களை நான் அறிவேன். அப்படிப்பட்டவர்களை 'சின்னஞ் சிறு உலகம் நாகேஷ் என்போம். 

தில்லானா மோகனாம்பாளில் நாகேஷ் ஏற்றிருந்த கதா பாத்திரமான சவடால் வைத்தி போல பல பேரை நிஜத்தில் பார்த்ததுண்டு. 



மணல் கயிறு படத்தில் விசு ஏற்ற கதா பாத்திரமான நாரதர் நாயுடு போல பல திருமணங்களை செய்து வைத்திருக்கிறார் என் அம்மா. அதைப் போல பொய்கள் சொல்லி அல்ல. பெண் வீட்டாரைப் பற்றிய நல்ல விஷயங்களை மட்டும் பிள்ளை வீட்டாரிடமும், பிள்ளை வீட்டாரைப் பற்றிய நல்ல விஷயங்களை மட்டும் பெண் வீட்டாரிடமும் சொல்லி, இரு வீட்டாரிடமும் இருக்கும் அதீத எதிர்பார்ப்புகளை பேசி சரி செய்து, திருமணத்தை நடத்தி வைப்பார். திருமணத்திற்குப் பிறகு அவர்களுக்குள் ஏதாவது பிரச்சனை வந்தால், அவர்கள் இருவரும் சேர்ந்து கொண்டு என் அம்மாவை குற்றம் சாட்டுவார்கள்(மணல் கயிறு க்ளைமாக்ஸ்). என் அம்மாவோ அதை எல்லாம்  பொருட்படுத்தாமல், வேறு யாராவது "என் பெண்ணுக்கு/பையனுக்கு நல்ல வரன் இருந்தால் சொல்லுங்களேன்" என்றால் உடனே அடுத்த கல்யாணத்தை நடத்தி வைக்க தயாராகி விடுவார். ஆனால் சம்பந்தப்பட்ட பெண்கள் , என் அம்மாவிடம் அதற்காக நன்றியோடு  இருந்திருக்கிறார்கள்.  



'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்'  படத்தில் ஐஸ்வர்யா ராய் ஏற்றிருந்த கதாபாத்திரம் என்னை நினைவூட்டியதாக என் கணவர் சொன்னார். அதில் அப்பாஸ், பாரதிதாசன் பாடலை,பாரதியார் பாடல் என்று கூறி விட, அவர் கூறியது தவறு என்று புத்தகத்தை எடுத்துக் காட்டி நிரூபிப்பார் ஐஸ். என்னிடமும் அந்த அசட்டுத்தனம் உண்டு.  

"யாரோ, ஏதோ சொல்கிறார்கள், சொல்லிவிட்டு போகட்டுமே.."என்று என்னால் விட முடியாது.  தன் தோல்வியால்  தளராத விக்ரமாதித்யன் போல பல முறை தோற்றாலும் மீண்டும் மீண்டும் இந்த குணத்தை மாற்றிக் கொள்ள முயற்சி செய்து கொண்டேதான் இருக்கிறேன். அடுத்த ஜென்மத்தில் அந்த டிப்ளமசி கை கூடலாம்!!