கணம்தோறும் பிறக்கிறேன் 

Friday, January 29, 2021

திரை விமர்சனங்கள்

திரை விமர்சனங்கள் 

சில்லு கருப்பட்டி: 


தொலைகாட்சியில்தான் பார்த்தேன் சில்லு கருப்பட்டி என்னும் ஆந்தாலஜி படத்தை. ஹலிதா ஷமீம் என்னும் இளம் பெண் இயக்குனர் இயக்கியிருக்கும் படம். நான்கு விதமான காதல்களை பேசுகிறது. முதல் கதையில்(Pink bag) குப்பை பொறுக்கும் ஒரு சிறுவனுக்கு தினமும் பிங்க் நிற பையில் குப்பைகளை போடும் ஒரு பெண் மீது ஏற்படும் லயிப்பு. சாரா அர்ஜுனும்(சைவம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பெண்) ராகுலும் நடித்திருக்கும் படம். இதில் வசனங்கள் மிகவும் குறைவு. பின்னணி இசை அற்புதம்!  அடுத்த கதை காக்கா கடியில் மீம்ஸ் கிரியேட்டரான, கான்சரில் பாதிக்கப்பட்ட  ஒரு ஐ.டி. இளைஞனுக்கும், அவனோடு காரில் பயணிக்கும் பெண்ணுக்கும் இடையே மலரும் காதலை  சொல்கிறது  மணிகண்டனும், நிவேதிதா சதீஷும் நடித்திருக்கிறார்கள். டர்டில் என்னும் இந்தப் படம் முதியவர்களின் காதல் என்னும் கத்தியில் நடப்பது போன்ற விஷயத்தை தேர்ந்தெடுத்திருக்கிறது. திருமணம் செய்து கொள்ளாமல் வாழும் ஒரு முதிய பெண்மணிக்கும்(லீலா சாம்சன்), மனைவியை இழந்து, மகனோடு வாழ்ந்தாலும் தனிமையாக உணரும் ஒரு முதியவருக்கும்(க்ரவ் மேக ஸ்ரீராம்) இடையே அரும்பும் காதலை காட்டுகிறது. மிகவும் டெலிகேட்டான ஒரு  விஷயத்தை கண்ணியமாக கையாண்டிருக்கிறார் இயக்குனர்.  கடைசி கதை ஹே அம்மு. சமுத்திர கனியும், சுனைனாவும் நடித்திருக்கும் இந்தக் கதை திருமணமாகி, மூன்று குழந்தைகள் பெற்ற, குடும்ப வாழ்க்கையின் ரொடீனில் காதலித்த தொலைத்த அப்பர் மிடில் கிளாஸை சேர்ந்த ஒரு கணவன், மனைவி இழந்த தங்கள் காதலை மீட்டெடுக்கும் கதை. மிக மிக இயல்பான இந்த படத்தை பார்க்கும் நடுத்தர வயதினர் பலர் தங்களை இதில் அடையாளம் காண முடியும்.  எல்லோருமே சிறப்பாக நடித்திருந்தாலும் சமுத்திர கனியும், சுனைனாவும் பாத்திரத்தோடு ஒன்றியிருக்கிறார்கள். மிகச் சிறப்பான வெளிப்பாடு. சுனைனா இவ்வளவு நன்றாக நடிப்பாரா என்று ஆச்சர்யமாக இருக்கிறது. சமுத்திரக்கனியின்  
இதற்கு முந்தைய படங்களிலிருந்து மாறுபட்டு மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். அவருடைய சில எக்ஸ்பிரஷன்ஸ் அபாரம்!காட்சி அமைப்புகளும், வசனங்களும் வெகு இயல்பு.  எல்லா படங்களுமே மிகவும் கண்ணியமாக, ரசிக்கும்படி எடுக்கப் பட்டிருக்கின்றன. நான்கு படங்களுக்கும் நான்கு ஒளிப்பதிவாளர்கள். இந்தப் படத்தின் மூலம் இரு விருதுகளை வென்றுள்ள ஹலிதா ஷமீம் நம்பிக்கையூட்டுகிறார். பெரிய நட்சத்திரங்கள் இவரை மசாலா உலகிற்கு இழுத்து வராமல் இருக்க வேண்டும்.  

மாறா:  

திரையரங்குகளுக்குச் செல்லாமல் நேரடியாக ஓ.டி.டி.யில் வெளியாகியுள்ள படம். மாதவன் ஷ்ரத்தா ஸ்ரீநாத், மௌலி,ஷிவ்தா முதிலியவர்கள் நடித்திருக்கும் படம். நமக்கெல்லாம் தெரிந்த ஸ்டாண்ட் அப்  காமெடியன்  அலெக்ஸ்  திருடனாக வந்து சிரிப்பூட்டுகிறார். மலையாளத்தில் வந்து விருதுகளை குவித்த சார்லி என்னும் படம்தான் ரீ மேக் ஆகியிருக்கிறது. அதனாலோ என்னவோ மலையாளம் படம் பார்க்கும் உணர்வு. அவர்களால்தான் ஒரு காதல் கதையை மிஸ்ட்ரி போல எடுக்க முடியும்.  இந்தப் படத்தின் மிகப் பெரிய பலம் காமிரா! மலை நாட்டின் அழகை சிறைப்பிடித்து நம் பார்வைக்கு விரித் திருக்கிறது. மலையாள படம் என்று சொல்லி விட்டதால் எல்லோரும் இயல்பாக நடித்திருக்கிறார்கள் என்று சொல்லத் தேவை இல்லை. மௌலியின் குறிப்பிடத்தக்க படங்களுள் இது ஒன்று. இசை ஜிப்ரான். புதுமுக இயக்குனர் திலிப் குமாருக்கு ரத்தின கம்பள வரவேற்பு கொடுக்கலாம். ஆனால் ஒன்று சொல்லியாக வேண்டும். இந்தப் படத்தை ரசிப்பதற்கு நமக்கு கொஞ்சம் பொறுமை வேண்டும்.