கணம்தோறும் பிறக்கிறேன் 

Tuesday, April 25, 2023

ஓடிஷா யாத்திரை - 3 பூரி ஜகன்னாதர்

ஓடிஷா யாத்திரை - 3

பூரி ஜகன்னாதர்



இந்துக்களுக்கு மிகவும் முக்கியமான கோவில்களில் பூரி ஜெகன்னாதர் ஆலயமும் ஒன்று. மஹாவிஷ்ணு வடக்கே பத்ரியில் பத்ரிநாராயணராகவும், தெற்கே ராமேஸ்வரத்தில் ஈஸ்வரனை வழிபடும் ராமனாகவும், மேற்கே துவாரகையில் கண்ணனாகவும், கிழக்கே பூரியில் ஜெகன்னாதராகவும் எழுந்தருளியிருக்கிறார். இந்த நான்கு தலங்களும் சார்தாம்(புண்ணிய தலங்கள்) என்று அழைக்கப்படுவதோடு ஹிந்துக்கள் கண்டிப்பாக செல்ல வேண்டிய கோவில்கள் என்றும் கருதப்படுகின்றன. இப்போது ஊடகங்களில் இதைப் பற்றியெல்லாம் நிரைய வருவதாலோ என்னவோ எப்போதும் கும்பல் அதிகம் இருக்கிறதாம்.

 

நாங்கள் சென்றபோதும் நல்ல கும்பல் இருந்தது. ஆனால் இது குறைச்சல் என்றார் கைட். நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலிலிருந்து கோவிலுக்கு ஷேர் ஆட்டோவில் சென்றோம். ஒரு ஆட்டோவில் எட்டு பேர் பயணிக்கலாம். கோவில் வரை ஆட்டோவை அனுமதிக்க மாட்டார்கள் என்பதால் சற்று தொலைவிலேயே இறக்கி விட்டு விட்டார்கள். நடக்கத் தொடங்கினோம். கோவிலுக்குள் செல்ஃபோன், காமிரா, தோலால் செய்யப்பட்ட பெல்ட், பர்ஸ் போன்றவைகளை அனுமதிக்க மாட்டார்கள் என்பதால் ஹோட்டல் அறையிலேயே வைத்துவிடச் சொன்னார்கள். என்னுடைய பர்ஸ் ரெக்சின்தான், இருந்தாலும் அறையில் வைத்து விட்டு தேவையான பணத்தை ஒரு பிளாஸ்டிக் பையில் எடுத்துக் கொண்டேன். முன்பே தெரிந்திருந்தால் வீட்டிலிருந்து ஒரு துணி பர்ஸ் அல்லது சுருக்குப்பை கொண்டு சென்றிருக்கலாம்.  செல்ஃபோன் கண்டிப்பாக வேண்டும் என்றால் கோவிலில் லாக்கர்கள் இருக்கும், வைக்கலாம் என்றார்கள். ஆனால் நமக்காக மற்றவர்கள் காத்திருக்க வேண்டும், எனவே அறையில் வைப்பதே உத்தமம் என்று எல்லோரும் அறையிலேயே வைத்துவிட்டோம்.

 

கோவிலை நெருங்கும் சமயம் கோவில் நடைமுறைகள் தெரிந்த ஒருவரை அறிமுகம் செய்து வைத்து அவர் சொல்வதை கேட்டு நடக்கச் சொன்னார் அந்த ஊர் கைட். அவருக்கு ஹிந்திதான் மாலும். அவரிடம் “ஹிந்தி தெரியாது போடா” என்றா சொல்ல முடியும்? நல்ல வேளை எங்கள் குழுவில் ஹிந்தி தெரிந்த ஒருவர் அவர் சொன்னதை எங்களுக்கு தமிழில் மொழி பெயர்த்தார்.

 


அவர் சொன்ன விவரங்கள்: “கோவிலுக்குள் செல்வதற்கு எந்தவிதமான கட்டணமும் கிடையாது. யாராவது உங்களை சுவாமியிடம் அழைத்துச் செல்கிறேன், காசு கொடுங்கள், என்று கேட்டாலோ, அன்னதானம் செய்யுங்கள் என்று காசு கேட்டாலோ கொடுக்க வேண்டாம்.  ஏதாவது காணிக்கை தர வேண்டும் என்று நினைத்தால் உண்டியலில் போடுங்கள் அல்லது அன்னதானம் செய்வதற்கான கவுண்டரில் பணம் கட்டுங்கள். பூரியில் அன்னதானம் செய்வது சிறப்பு. எல்லோரும் சேர்ந்து வாருங்கள். என்று கூறி விட்டு எங்களில் உயரமாக இருந்த ஜெகன்நாதன் என்பவரை முன்னால் போகச்சொன்னார். அவர் ஒரு துண்டை தலைக்கு மேல் சுழற்றியபடி செல்ல, அந்த ஜெகன்நாதரை தரிசிக்க இந்த ஜெகன்நாதனை பின்தொடர்ந்தோம். நாங்கள் சென்றது பின்வாசல் வழியாக.

 


பூரி ஜெகன்நாதர் ஆலயத்திற்குள் மொத்தம் பன்னிரெண்டு சன்னதிகள் இருக்கிறதாம். அவைகளை எல்லாம் நாங்கள் பார்க்கவில்லை. நேராக ஜெகன்நாதர் சன்னதி மட்டுமே. நாங்கள் சென்ற நேரம் அந்த ஆலய பிரதான கோபுரத்தின் மேலே பறந்து கொண்டிருந்த சிவப்பு நிறக் கொடியை இறக்கி விட்டு, மஞ்சள் நிறக் கொடியை ஏற்றும் நேரம். பிரகாரம் முழுவதும் பக்தர்கள் சுற்றி நின்று கொண்டு, பக்தியோடு கோஷமிட்டபடி அதை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அந்த கோபுரத்தின் உச்சியில் இருந்து தொங்கிக் கொண்டிருக்கும் சங்கிலியின் வளையத்தில் கால் வைத்து ஏறுகிறார். அந்த கொடிகள் காற்று வீசும் திசைக்கு எதிர் திசையில் பறக்கும் என்பது பூரியின் ஒரு அதிசயம். தஞ்சை பெரிய கோவிலைப் போல இந்தக் கோவிலின் நிழலும் தரையில் விழாது, இந்த கோபுரத்தின் மேலே கருடன் பறக்காது என்பதெல்லாம் மற்ற சிறப்புகள். இங்கே பிரசாதத்தை பானையில்தான் சமைப்பார்களாம். அதுவும் ஏழு பானைகளை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி சமைப்பார்களாம். அதில் மேல் பானையில் இருக்கும் அரிசி முதலில் வெந்து விடுமாம், பிறகு அதற்கு அடுத்த பானை, என்று வரிசையாக இறங்கு முகத்தில் வந்து, கடைசியில் கீழே இருக்கும் பானையில் இருக்கும் அரிசி வேகுமாம்.

 

முதலில் நான்கு வரிசைகளாக அனுப்பப்படும் பக்தர்கள் பிரதான வாயிலுக்கருகே செல்லும் பொழுது ஒன்றாக சங்கமித்து விடுகிறார்கள். பிரும்மாண்டமான வாயில். இருபுறமும் ஒவியமாக வரையப்பட்டிருக்கும் ஜெய, விஜயீபவர்களின் மீது வெண்ணையை விட்டெரிந்து, அந்த ஓவியத்தின் அழகை சிதைத்திருக்கிரார்கள் மக்கள். இது என்னவிதமான பக்தி என்று புரியவில்லை. ஒரு விஷயத்தை நம்மால் படைக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை, சிதைக்காமல் இருக்கலாம் என்பதை நாம் எப்போதுதான் உணரப் போகிறோமோ?

 

பல வருடங்களுக்குப் பிறகு, கும்பலில் சிக்கி, நீந்தி, சன்னதியை அடைகிறோம். நடுவில் சுபத்ரா, அவளுக்கு வலது புறம் பலராமர், இடது புறம் கிருஷ்ணர். இப்படி சகோதரர்களோடு சகோதரி மட்டும் கோவில் கொண்டிருப்பது பூரியில் மட்டும்தான் என்று நினைக்கிறேன். மரத்தால் ஆன திருவுருவங்கள். முழுமை அடையாமல் இருக்கின்றன. அதற்கு காரணம் தெரிய வேண்டுமானால் பூரியின் தல வரலாறு தெரிய வேண்டும். இந்த பதிவு மிக நீளமாகி விட்டது, எனவே அடுத்த பதிவில் பார்க்கலாம்.   

படங்கள் - நன்றி கூகுள்