கணம்தோறும் பிறக்கிறேன் 

Sunday, October 6, 2019

பெட்டர் ஹாஃப்

பெட்டர் ஹாஃப் 



மனைவியை பெட்டர் ஹாஃப் என்று சொல்வது பழக்கம். இது யாருக்கு ரொம்ப பொருத்தம் தெரியுமா? பெருமாளுக்கும் தாயாருக்கும்தான். ஒன்று என்னும் எண்ணை இரண்டு பகுதிகளாக  பிரித்தால் ஒரு பாதி .5, மறு பாதி .5 என்று பிரியும். இரண்டும் சமமாக இல்லாமல் ஒரு பகுதி .48 என்றும் மற்றொரு பாதி .52  என்று இருந்தால் இரண்டையும் .5 என்றுதான் எடுத்துக் கொள்வோம். ஆனாலும்  .48, .52 என்னும் இரு பாதிகளில் இரண்டாவது பெட்டர் இல்லையா? அதைப்போல மகா விஷ்ணுவையும், லக்ஷ்மி தேவியையும் எடுத்துக் கொண்டால் பெருமாளுக்கு செருக்கு, பரத்துவம் என்னும் குணங்கள் உண்டு. தாயாருக்கோ தண்டிக்கவே தெரியாது. கருணையே வடிவானவள். எனவே பெருமாள் .48 பாதியாகவும், தாயார் .52 என்னும் பெட்டர் ஹாஃப் ஆகவும் இருக்கின்றனர். 

- துஷ்யந்த் ஸ்ரீதரின் உபன்யாசத்தில் கேட்டது.



விகடர் என்று சொன்னாலே எல்லோருக்கும் வாரப்பத்திரிகை ஞாபகம்தான் வரும். ஹாஸ்யத்திற்கு, பரிகாசம்-கேலி, சிரிக்க சிரிக்க பண்ணுவதற்கு 'விகடம்' என்று பெயர் சொல்லுகிறோம். அந்த ஹாஸ்யத்திலே புத்தி சாதுர்யமும் இருக்கும். 'விகடகவி' என்று வேடிக்கை வேடிக்கையாக வார்த்தை விளையாட்டு பண்ணுபவரை சொல்கிறது. அந்த பேரிலேயே வார்த்தை விளையாட்டு இருக்கிறது. பின்னாலிருந்து திருப்பி படித்தாலும் விகடகவி என்றே வரும். சாமர்த்தியமாக பேசி ஏமாற்று பண்ணுவது அகடவிகடம் என்பார்கள். ஏமாற்று என்றாலும் அதிலிருந்த சாமர்த்தியத்தில் சிரிக்கும்படியும் இருக்கும். 

சம்ஸ்க்ருத டிக்ஷ்னரியில் 'விகட' என்பதற்கு அர்த்தம் பார்த்தால் ஹாஸ்யம்,தமாஷ் என்று இருக்காது. கோரம், பயங்கரம் என்றுதான் போட்டிருக்கும். ஆனால் நடைமுறையில் ஹாஸ்யம் பண்ணுவது, சிரிக்க வைப்பது, சிரிக்கும்படியாக ஏமாற்று சாமர்த்தியம் பண்ணுவது, இதெல்லாம்தான் விகடம். விதூஷகன்-காமிக் பாத்திரமென்று இந்நாளில் சொல்கிறார்கள் - அவன்தான் விகடன் என்று வைத்துக் கொண்டிருக்கிறோம். டிக்ஷ்னரி அர்த்தப்படி 'ப்ரதிநாயகன்' அதாவது வில்லன் என்று இருக்கிற பாத்திரம்தான் விகடன் - கோர ரூபத்தோடும்,குரூரமான காரியத்தோடும் இருப்பவன். 

-தெய்வத்தின் குரல் ஐந்தாம் பாகத்தில் காஞ்சி காமகோடி பீடாதிபதி சந்திரசேகர சரஸ்வதி ஸ்வாமிகள் 

அம்பிகையின் மூன்று வடிவங்களான மஹாகாளி, மஹா சரஸ்வதி, மஹா லட்சுமி குறித்து பாண்டிச்சேரி அன்னை கூறியுள்ளது. 


இந்த மூன்று வடிவங்களில் மனிதர்களுக்கு மிக நெருங்கி இருப்பவள் மஹா சரஸ்வதி. தன்னை மனிதன் அழைக்க மாட்டானா? என்று காத்திருப்பவள். ஒரு முறை அழைத்தாள்  போதும் ஓடி வந்து அருள் புரிவாள். எத்தனை தவறு செய்தாலும் மீண்டும் மீண்டும் அவனுக்கு அருள் புரிந்து அவனை கை தூக்கி விடத்  துடிப்பவள்.

மஹாலக்ஷ்மியின் அருளுக்கு பாத்திரமாவது கடினம். அவளை தக்க வைத்துக் கொள்வதும் கடினம். நழுவி ஓடி விட துடித்துக் கொண்டிருப்பாள். 

கருணை மிகுந்தவள் மஹா காளி, ஆனால் சிறு ஒழுங்கீனத்தையும் சகித்துக் கொள்ள மாட்டாள், தண்டித்து விடுவாள். 

இதை நாம் இப்படி புரிந்து கொள்ளலாம். எந்த தேர்வையும் எடுத்துக் கொள்ளுங்கள் 100 மதிப்பெண்களுக்கு கேள்விகள் இருந்தாலும், 100 மார்க் வாங்கினால்தான் தேர்ச்சி என்பது கிடையாது. குறைந்த பட்சம் 35 அல்லது நாற்பது வாங்கினால் போதும் பாஸாகி விடலாம். அது கூட வாங்க முடியாமல் தோல்வி அடைந்தாலும் மீண்டும் மீண்டும் தேர்வு எழுதலாம். ஆனால் அந்த தேர்வை நாம்தான் எழுத வேண்டும். நமக்காக மற்றவர்களை எழுதச் சொல்லக் கூடாது.  அப்படி செய்தால் மஹா சரஸ்வதி, மஹா காளியாகி விடுவாள்.  

சரஸ்வதி பூஜை அன்று கருணை வடிவான அன்னைக்கு நம் வணக்கங்கள்.


மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னருமென் 
பண்கண்டளவில் பணியச் செய்வாய் படைப்போன் முதலாம் 
விண்கண்ட தெய்வம்பல் கோடியுண்டேனும் விளம்பிலுன்போற் 
கண்கண்ட தெய்வமுளதோ  சகல கலாவல்லியே