கணம்தோறும் பிறக்கிறேன் 

Saturday, November 6, 2021

கடலைக் கடந்து (இரண்டாம் பாகம்)

கடலைக் கடந்து (இரண்டாம் பாகம்)

சென்ற வருடமே  நடந்திருக்க வேண்டியது, இந்த வருடம்தான் சாத்தியமானது. என்னுடைய கனடா  விஜயத்தைத்தான் சொல்கிறேன். கனடாவில்  வசிக்கும் என் மகள் அவளுடைய இரண்டாவது பிரசவத்திற்கு துணையாக நான் வர வேண்டும்  என விசாவிற்கு  ஏற்பாடு செய்தாலும் கொரோனாவினால் என் பயணம் தடை பட்டது .  

நானும் வி.எப்.எஸ் க்ளோபல் இப்போது திறந்து விடும், அப்போது திறந்து விடும் என்றெல்லாம் எதிர்பார்த்து அடிக்கடி அந்த வெப் சைட்டை திறந்து பார்த்து "யூ ஆர் நாட் எலிஜிபில் இன் திஸ் காடகிரி" என்னும் அறிவிப்பை பார்த்து நொந்து போய் அதை பார்ப்பதை நிறுத்தி விட்டேன். என் மகளும், மாப்பிள்ளையும் தனியாகவே சமாளித்து விட்டார்கள். என் மருமகளுக்கும்  பிப்ரவரியில் பெண் குழந்தை பிறந்தது. பெண் வயிற்றுப் பேத்தியை கைகளில் வாங்கப் போகிறேன் என்று நினைத்த நான் பிள்ளை வயிற்றுப் பேத்தியை கைகளில் வாங்க நேர்ந்தது எதிர்பாராத இனிய ஆச்சர்யம்.

அதன் பிறகு கனடா விஜயம் என்பதை மறந்து விட்டேன். ஒரு நாள் அதிகாலையில் என்னை அழைத்த என் மகள், மெஸேஜ் பார்த்தாயா? உனக்கு வி.எஃப்.எஸ். க்ளோபலிலிருந்து பயோ மெட்ரிக் கொடுக்கச் சொல்லி மெயில் வந்திருக்கிறது" என்று சந்தோஷமாக சொன்னபொழுது நம்ப முடியாமல் மெயிலை செக் பண்ணினேன். பயோ மெட்ரிக் கொடுப்பதற்கான ஸ்லாட் ஒரு மாதம் கழித்தே கிடைத்தது. 

பயோமெட்ரிக் கில் பத்து விரல்கள் ரேகைகளையம் பதிய வேண்டும். எனக்கு டிடர்ஜென்ட் அலர்ஜி உண்டு. பாத்திரம் துலக்கும் சோப்பு போன்றவைகளை பயன்படுத்தினால் கைகள் வெடித்து விடும். அல்லது சொரசொரப்பாகி விடும். இன்னும் ஒரு மாதம் இருக்கிறதே  ஜாக்கிரதையாக இருந்து கைகளை பாதுகாத்து கொள்ளலாம் என்று மிகவும் எச்சரிக்கையாக இருந்தேன்.  கை விரல்களில் வெடிப்பு அல்லது வெட்டுக்காயம் போன்றவை இருந்தால் அது சரியாகும் வரை பயோமெட்ரிக் கொடுக்க முடியாதாம்.  என்னதான் ஜாக்கிரதையாக இருந்த போதிலும் நடு விரலிலும், சுண்டு விரலிலும் லேசான சொரசொரப்பு இருந்தது. வி.எப். எஸ்.ஸில்  என் படிவத்தை பெற்றுக் கொண்ட பெண் என் கையைப் பார்த்து விட்டு, “லெட் அஸ் சீ” என்று பயமுறுத்தினார். ஆனாலும் நல்ல விதமாகவே பயோ மெட்ரிக்ஸ் முடிந்தது. அன்று இரவே மெடிக்கல் டெஸ்ட் கொடுக்கச் சொல்லி மெயில் வந்தது. 

அவர்கள் குறிப்பிட்டிருந்த மெடிக்கல் சென்டருக்கு போனில் முன்பதிவு செய்து கொண்ட பொழுது,"சாப்பிட்டு விட்டு வர வேண்டுமா?" என்று கேட்டதற்கு,"தயவு செய்து சாப்பிட்டு விட்டு வாருங்கள்" என்றார்கள்.  ஏன் அப்படி சொன்னார்கள் என்பது அங்கே போனதும்தான் தெரிந்தது. அங்கு காபி/டீக்கு கூட வழியில்லை. காலை பத்து மணிக்கு அங்கு சென்ற நான் எல்லா டெஸ்டுகளையும் முடிக்க மாலை நான்கு மணியாகி விட்டது.

இரண்டு நாட்கள் கழிந்து விசா ஸ்டாம்ப் செய்வதற்காக உங்கள் பாஸ்போர்ட்டை கலெக்ட் பண்ணிக் கொள்ள ப்ளூ டார்ட்டிலிருந்து அடுத்த ஐந்து வேலை நாட்களுக்குள் ஆட்கள் வருவார்கள்.  என்று தகவல் வந்தது.  ஆனால் அதே நாளில் நான் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுதே "மேடம் உங்கள் டாக்கு மெண்ட்ஸ் தயாரா? நான் ப்ளூ டார்ட்டிலிருந்து வந்திருக்கிறேன்" என்று ஒருவர் அழைத்தார். சில பிரிண்ட் அவுட்டுகள் எடுக்க வேண்டி இருந்ததால் அவரால் இரண்டு மணி நேரம் கழித்து வர முடிந்தால் நான் எல்லாவற்றையும் தயார் செய்து விடுவதாக கூற அவரும் ஒப்புக்கொண்டார். என் மகன், "இரண்டு மணி நேரத்தில் எப்படி தயார் செய்ய முடியும்? நாளைக்கு வரச்சொல்" என்றான். நானும் அவன் சொன்னபடி ப்ளூ டார்ட் ஊழியரிடம் வேண்டி கொண்டேன், அவரும் ஒப்புக் கொண்டார், ஆனால் அது எவ்வளவு பிழை என்பது திங்களன்று புரிந்தது.

- தொடரும்...