கணம்தோறும் பிறக்கிறேன் 

Showing posts with label வரலக்ஷ்மி பூஜை. Show all posts
Showing posts with label வரலக்ஷ்மி பூஜை. Show all posts

Tuesday, August 28, 2018

சின்ன சின்ன செய்திகள்



சின்ன சின்ன செய்திகள் 







சிந்தூரா என்றால் என்னவென்று கேட்ட அதிரவுக்காக இந்த பாடல். எனக்கு ஒரு சந்தேகம். எ.பி.யின் கண்களில்  அனுஷ்கா, தமன்னா தவிர வேறு கதாநாயகிகள் பட மாட்டார்களா? இந்தப் பொண்ணு ஹன்சிகாவுக்கு என்ன குறை?   
xxxxxxxx

வரலட்சுமி விரதம் பற்றி பதிவிடுகையில் தோன்றிய விஷயம். நாக சதுர்த்தி, கருட பஞ்சமி, வரலக்ஷ்மி விரதம் எல்லாவற்றிலும் பூஜை முடிந்ததும் அது சம்பந்தப்பட்ட கதை ஒன்றை வாசிப்பார்கள். வாழக்கையில் ஏதோ ஒரு கஷ்டத்தில் இருந்த ஒருவர் பெரும்பாலும் பெண், இந்த விரதத்தை அனுஷ்டித்து எப்படி நற்கதி அடைந்தார் என்று விளக்கும் கதையாக அது இருக்கும். வரலட்சுமி விரதம் சம்பந்தப்பட்ட கதை எனக்கு தெரியவில்லை. ஆனால், வரலக்ஷ்மி நோன்பின் முக்கிய பாடல் 'வரலக்ஷ்மி வருவாய் அம்மா..(பாக்யாத லக்ஷ்மி பாரம்மா..)' என்னும் பாடல்தானே? லட்சுமி நம் வீட்டிற்கு வர வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்? என்று கூறும் கதை. சிறு வயதில் கேட்டது.

ஒரு முறை லட்சுமி தேவி பூமியில் வாழும் மனிதர்களுக்கு கருணை புரியலாம் என்று அதிகாலை நேரத்தில்  வைகுண்டத்திலிருந்து கீழே இறங்கி வருகிறாள். எந்த வீட்டிற்கு செல்லலாம் என்று யோசித்தபடியே வந்து கொண்டிருக்கும் பொழுது, ஒரு வீட்டில் புழுத்த சாணத்தைக் நீரில் கரைத்து அதைக் கொண்டு வாசலில் தெளித்து கோலம் போடுகிறாள் அந்த வீட்டு அம்மாள். லட்சுமி தேவி அருவருத்து அந்த வீட்டத் தாண்டிச் சென்று விடுகிறாள். அதற்கு அடுத்த வீட்டில் காலை வேளையில் வாசல் திண்ணையில் தலையை விரித்துப் போட்டுக் கொண்டு அமர்ந்து பேன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். காண சகிக்காமல் நகர்ந்து விடுகிறாள். வேறொரு வீட்டிலோ காலை வேளையில் ஒருவரோடு ஒருவர் சண்டை போட்டுக் கொண்டு பிக் பாஸின் மஹத் போல கெட்ட வார்த்தைகளை இறைத்துக் கொள்கிறார்கள்."சீ! சீ! இந்த வீட்டில் நான் எப்படி இருக்க முடியும்?" என்று அங்கிருந்தும் அகன்று விடுகிறாள். வேறொரு வீட்டிலோ இப்படிப்பட்ட அசம்பாவிதங்கள் எதுவும் இல்லை, ஆனால் சூரிய உதயத்திற்கு பிறகும் உறங்கிக் கொண்டிருக்கின்றனர். மனமொடிந்து போன லட்சுமி தேவி சே! ஒரு வீடு கூடவா நான் வசிக்கத்தகுதி உடையதாக இருக்காது? என்று வருந்தும் பொழுது, அந்த சிறு குடிசை கண்ணில் படுகிறது. பளிச்சென்று வாசலில் சாணி தெளித்து கோலமிடப்பட்டு, உள்ளே விளக்கேற்றி வைக்கப் பட்டிருக்கிறது. அந்த வீட்டில் உள்ளவர்கள் காலையில் குளித்து விட்டு, அமைதியாக அவரவர் வேலைகளை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஆஹா! நான் வசிக்க தோதான இடம் இதுதான்" என்று அந்த வீட்டிற்குள் நுழைகிறாள் மஹாலக்ஷ்மி. அதன் பிறகு அந்த வீட்டின் வளம் பெருகத் தொடங்குகிறது. இந்த கதை மூலம் வீட்டில் லட்சுமி கடாக்ஷம் நிறைய வேண்டுமானால் என்னவெல்லாம் செய்யக் கூடாது, என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் காலத்தை ஒட்டி சில மாறுதல்கள் செய்ய வேண்டியிருக்கும் . உதாரணமாக வீட்டு வாசலில் யார் இப்போதெல்லாம் சாணம் தெளிக்கிறார்கள்? அதே போல இப்போதைய இளைய தலைமுறையினர் எட்டு மணிக்கு முன்னாள் துயிலெழுகிறார்களா?

xxxxx 



எழுத்தாளரும், வீணை வித்தகியும் ஆன கீதா பென்னட் காலமாகி விட்டாராம். புற்று நோயால் பாதிக்கப்பட்ட அவர் அதிலிருந்து மீண்டார். ஆனால் அந்த அரக்கன் மீண்டும் அவரைத்தாக்கி அவர் உயிரைக் குடித்து விட்டான்.  சென்னை அசோக் நகரில் என் சகோதரியின்
வீட்டிற்கு பக்கத்து வீடு அவருடைய சகோதரியின் வீடு. தனி பங்களாவாக இருந்த அதை இடித்து அபார்ட்மெண்ட் ஆக்கிய பொழுது அவரும் அதில் ஒரு வீடு வாங்கி கொண்டார்.  ஒவ்வொரு வருடமும் டிசம்பரில் சென்னைக்கு வருவார். அப்போது அவரை சந்தித்து உரையாடியிருக்கிறேன். ராமபுரத்தில் எங்கள் விக்னேஸ்வரா லேடீஸ் கிளப்பிற்கு ஒரு முறை சிறப்பு விருந்தினராக வந்தார்.  மூன்று வருடங்களுக்கு முன்னர் சென்னைக்கு அவர் கணவரோடு வந்திருந்த பொழுது, அவர் கணவருக்கு நம் ஊரின் இரைச்சலைத்தான் தாங்க முடியவில்லை என்றார். 

ஒரு முறை குமுதத்தில் பட்டுக்கோட்டை பிரபாகரின் மனைவி, வாஸந்தியின் கணவர் போன்றே  பிரபல எழுத்தாளர்களின் வாழ்க்கைத் துணைகளை கதைகள் எழுத வைத்து வெளியிட்டார்கள். அதில் கீதா பென்னட்டின் கணவர் ஆங்கிலத்தில் எழுதியிருந்த கவிதையை அவர் கதையாக்கியிருந்தார்.  அவைகளை என்னால் ரசிக்க முடியவில்லை காரணம் எல்லோரும் தங்கள், தங்கள் வாழ்க்கைத் துணை எழுதுவது போலவே (அவர்கள்தான் எழுதி கொடுத்தார்களோ என்னவோ?) எழுதியிருந்தார்கள். "ப.பிரபாகரின் கதையை படிக்க வேண்டும் என்றால் அவர் எழுதியிருப்பதையே படித்து விடலாமே? எதற்கு டூப்பிளிகேஸி?" என்று நான் கேட்டதை திறந்த மனதோடு ஏற்றுக் கொண்டார். "உண்மைதான், இவையெல்லாம் பிசினெஸ் கிம்மிக்ஸ்" என்றார். "ஒரு நாவல் எழுத வேண்டும்" என்று ஆவல் என்றார். அது நிறைவேறாமலேயே ஆயுள் முடிந்து விட்ட்து.