கணம்தோறும் பிறக்கிறேன் 

Saturday, June 2, 2018

நன்னம்பிக்கை!

நன்னம்பிக்கை!

“இங்க பாரு, உன் குழந்தைக்கு உடம்பு சரியில்லைனு இங்க வந்து சொல்லிகிட்டு இருக்காத..”

ஜனனியின் குரல் ஓங்கி ஒலித்தது கிரீஷுக்கு ஆச்சர்யமாக இருந்தது. சாதரணமாக ஜனனி வேலைக்கரர்களிடம் கடுமையாக நடந்து கொள்ள மாட்டாள்.

பாத்திரம் சரியாக தேய்க்கவில்லை என்றால் கூட,”என்ன மீனா இன்னிக்கு ரொம்ப டயர்டா இருக்கியா? பாத்திரத்தில் டீ கறை போகவே இல்லை..” என்றும், “கொஞ்சம் அந்த மூலையையும் பெருக்கக் கூடாதா?” என்றும் கனிவு பொங்கும்.

அப்படிப்பட்டவள் இப்போது ஏன் கோபப்பட வேண்டும்? மீனா சென்ற பிறகு கிரீஷ் ஜனனியிடம் தன் சந்தேகத்தை கேட்டான். “அவள் எப்போதெல்லாம் தன் குழந்தைக்கு உடம்பு சரியில்லை என்று சொல்கிறாளோ, அப்போதெல்லாம் நம்ப அனன்யாவுக்கும் உடம்புக்கு வந்து விடுகிறது.”

“ஏதோடு எதை முடிச்சுப் போடுகிறாய்?”

“ஏதோடும், எதையும் முடிச்சுப் போடவில்லை, நான் அனுபவித்ததை சொல்கிறேன்”

கிரீஷ் ஒரு வாக்குவாதத்திற்கு தயாராக இல்லாததால் வாயை மூடிக் கொண்டான். ஆனால் அன்று மாலை குழந்தைக்கு லேசாக மூக்கு ஒழுக ஆரம்பித்து அச்சு, அச்சு என்று தும்மினாள், நடு இரவில் காய்ச்சல் வந்து விட்டது.

காலையில் கால்பால் சிரப்பை குழந்தைக்கு கொடுத்துக் கொண்டே,”நான் சொன்னேனா இல்லையா?” என்றாள் ஜனனி.

அவளின் இப்படிப்பட்ட நம்பிக்கைகளை எப்படி மாற்றுவது என்று கிரீஷுக்கு புரியவில்லை. அவன் மாலை வீடு திரும்பும் பொழுது, எதிரே மீனாவைப் பார்த்தான். வண்டியை நிறுத்தி,”என்ன மீனா? குழந்தைக்கு உடம்பு தேவலையா?” என்றான். “சரியாயிடுச்சு அண்ணா,வீட்டுல விளையாடிக்கிடிருக்கு”

“நல்லது, ஜாக்கிரதையா பாத்துக்கோ,” என்றவன் தொடர்ந்து, “குழந்தைக்கு உடம்பு சரியில்லைனா அதை ஏன் ஜனனி கிட்ட சொல்ற?” என்று கேட்டதும்,”வேற ஒண்ணும் இல்லண்ணா, “அக்கா கைல சொன்னா சீக்கிரம் சரியாகப் போய் விடும், அதான்..” என்று தன் கழுத்து மணிமாலையை வருடிய படி மீனா கூற, வாயடைத்தான் கிரீஷ்.