கணம்தோறும் பிறக்கிறேன் 

Saturday, December 26, 2020

தெய்வம் மனுஷ ரூபேண

 தெய்வம் மனுஷ ரூபேண


சென்ற வார சண்டே டாபிக்காக மத்யமரில் கொடுத்திருந்தார்கள். அதற்காக நான் எழுதிய கட்டுரை. அதில் எழுதாத சில விஷயங்களையும் இதை எழுதியிருக்கிறேன். 

எனக்கு பல சமயங்களில் தெய்வம் போல் மனிதர்கள் உதவியிருக்கிறார்கள். அதில் முக்கியமான இரண்டு தருணங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 

எனக்கு திருமணமாகி மூன்று வருடங்களுக்குப் பிறகே  மஸ்கட்டில் இருந்த என் கணவரோடு சேர்ந்து வாழும் விதமாக எனக்கு விசா கிடைத்து அங்கு செல்ல முடிந்தது. 1987 ஜனவரியில் அங்கு சென்ற நான் உடனே கருவுற்றேன். வெளிநாட்டில்தான் பிறக்க வேண்டும் என் மகன் தீர்மானித்திருந்தான் போலிருக்கிறது. என் மணிவயிற்றில் வந்துதித்தான். 

வீட்டில் கடைசி பெண்ணான என்னை சூலுற்ற கோலத்தில் பார்க்க என் வீட்டில் எல்லோருக்கும் ஆசை. பிரசவத்திற்கு ஊருக்கு  வரச்சொல்லி அழைத்தார்கள். ஆனால் என் கணவரோ, "நாம் மினிஸ்டரி ஆப் ஹெல்த்தில் வேலை பார்ப்பதால் நமக்கு ஆஸ்பத்திரியில் மருத்துவ செலவு இலவசம்தான், மேலும், நீ இப்போதுதான் இங்கு வந்திருக்கிறாய், அதனால் பிரசவத்திற்கு முன்பாக ஊருக்குச் சென்றால் குழந்தை பிறந்து அதிக நாட்கள் அங்கு இருக்க முடியாது, அதற்குப் பதிலாக இங்கு பிரசவித்து விட்டு பிறகு ஊருக்குச் சென்றால் மெட்டர்னிட்டி லீவையும் சேர்த்து மூன்று மாதங்கள் அங்கு இருந்துவிட்டு வரலாம்" என்று என்னை அங்கேயே இருக்கச்சொல்லி விட்டார். என் பெற்றோர்கள்  எத்தனையோ சொல்லியும் கேட்கவில்லை. அங்கும் நண்பர்கள் எல்லோரும், எப்போது ஊருக்குச் செல்லப் போகிறீர்கள்?" என்று கேட்பார்கள்,நான் "ஊருக்கு போகப்போவதில்லை, இங்கேயேதான் இருக்கப்போகிறேன்" என்றால் "ஊரிலிருந்து யாரவது உதவிக்கு வருகிறார்களா? என்பார்கள். "அதுவும் இல்லை, பிரசவத்திற்குப் பிறகு நான் ஊருக்குப் போகப் போகிறேன்" என்ற என் பதில் பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கும். "தனியாக எப்படி மேனேஜ் பண்ணுவீர்கள்?" என்ற பலரும் கேட்ட பொழுது, "இருக்கலாம் பானு, ஒண்ணும்  கவலை இல்லை, நாங்கள் எல்லாம் இருக்கிறோம் என்று தைரியம் கொடுத்தவர்கள் மூன்று  பேர்கள்தான்.  என் கணவரின் நண்பரான  திரு.ரமணன் என்பவரின் மனைவி திருமதி வசந்தா ரமணனும், இன்னொரு நண்பரான திரு.ஸ்ரீதரன் மற்றும் அவரின் மனைவி திருமதி. ராஜேஸ்வரி ஸ்ரீதரன். அறிமுகத்திற்காக ராஜேஸ்வரி என்று சொல்லி விட்டேன், இனிமேல் ராஜி என்று குறிப்பிடுகிறேன். 

ராஜியும் ஸ்ரீதரும் என் முதல் பிரசவத்தில் செய்த  உதவிகளை  எப்படி சொல்வது? அவளுக்கும் எனக்கும் சம வயதுதான். மூணு வயதில் குழந்தையை வைத்துக் கொண்டிருந்த அவள் நிறைய அனுபவம் மிகுந்தவன் போல் எனக்கு தைரியம் சொன்னாளே அதைச் சொல்வதா?  எனக்கு ஃபால்ஸ் பெயின் எடுத்த பொழுது,  தன் மைத்துனருக்கு போன் பண்ணி பள்ளியிலிருந்து வரும் குழந்தையை பிக் அப் பண்ணிக் கொள்ளச் சொல்லி விட்டு, என்னோடு மருத்துவமனைக்கு புறப்பட்டு வந்தாளே அதைச் சொல்வதா? எனக்கு பனிக்குடம் உடைந்து, மருத்துவ  மனைக்கு கிளம்ப வேண்டிய நிலை ஏற்பட்ட பொழுது, ஸ்ரீதர் "தைரியமா இரு பானு," என்று கூறி வழியில் என்னை உற்சாகப்படுத்தியபடி பேசிக்கொண்டே வந்ததை சொல்வதா? மருத்துவமனையிலிருந்து வீடு திரும்ப வேண்டிய நாளில் தன்னுடைய  மாஸ்டா காரை ஒரு சிறு குலுங்கல் கூட இல்லாமல் ஒட்டிக் கொண்டு வந்ததை சொல்வதா? பதினைந்து நாட்கள் என்னை அவர்கள் வீட்டில் வைத்துக் கொண்டு உடன் பிறந்த சகோதரிக்கு செய்வதைப் போல் பத்தியம் வடித்துப் போட்டு, பார்த்துக் கொண்டதை சொல்வதா? என்னைப் பார்ப்பதற்காக தினசரி யாரவது வருவார்கள், அவர்களை யெல்லாம் முகம் சுளிக்காமல் உபசரித்ததை சொல்வதா? 

இதைத் தவிர,நான் ஆஸ்பத்திரியில் இருந்த எட்டு நாட்களும் பல நண்பர்களின் மனைவிகள் போட்டி போட்டுக் கொண்டு எனக்கு சாப்பாடு கொடுத்து  அனுப்புவார்கள். இதில் குறிப்பிட்டு சொல்லக் கூடியவர் என் கணவரின் மற்றொரு நண்பரின் மனைவியான  மாலா சங்கர் ராமகிருஷ்ணன் அவர்கள். அவர் எனக்கு தினசரி மதிய உணவு கொடுத்தனுப்பியதோடு தன் காரையும் என் சகோதரருக்கு கொடுத்து பயன்படுத்திக் கொள்ளச் சொன்னார். 

என்னை வார்டுக்கு மாற்றிய பிறகு ஒரு நாள் திருமதி வசந்தா ரமணன் என் உதவிக்காக வந்திருந்தார். சிசேரியன் ஆகியிருந்த எனக்கு படுக்கையிலிருந்து எழுந்திருப்பது மிகவும் கஷ்டமாக இருக்கும். ஆனால் அவர் எனக்கு உதவாமல் பேசாமல் உட்கார்ந்திருந்தார். நான் எப்படியோ  வலியை பொறுத்துக் கொண்டு மிகவும் கஷ்டப்பட்டு எழுந்து உட்கார்ந்ததும்," நீங்கள் எழுந்திருக்க சிரமப்படுவதை பார்ப்பதற்கு கஷ்டமாகத்தான் இருக்கிறது, ஆனால் நான் உங்களுக்கு உதவி விட்டால், உங்களுக்கு தானாக முயற்சிக்க வேண்டும் என்று தோன்றாது, அதனால்தான் நான் உதவவில்லை" என்றார். உண்மைதான். நானே முயற்சி செய்து எழுந்திருந்து, நடந்து எல்லாம் செய்ததால் தான் பதினைந்து  நாட்களே ஆன குழந்தையை தூக்கிக் கொண்டு திருச்சி வரை விமானத்தில் பயணிப்பது எனக்கு எளிதாக  இருந்தது. 

மேலும் நான் செவிலியர்களை உதவிக்கு அழைக்காமல் இருந்ததால்  அவர்களுக்கு பிடித்த பேஷண்டானேன்.   நான் கேட்கும் சின்ன சின்ன  உதவிகளை மறுக்காமல் செய்வார்கள். அந்த அனுபவம் என்னுடைய இரண்டாவது பிரசவத்திலும்  எனக்கு கை கொடுத்தது. இரண்டாவதும் சிசேரியன்தான். நான் ஐ.சி.யூ.வில் இருந்தபொழுதே ஒரே பக்கமாக  படுத்துக் கொள்ளாமல், உதவிக்கும் நர்ஸுகளை அழைக்காமல் நானே திரும்பி படுத்துக்க கொள்வேன். பாத்ரூம் செல்ல வேண்டும் என்றாலும் யாருடைய உதவியையும் எதிர்பார்க்காமல் தனியாகவே செல்வேன்.  அப்படி ஒரு மனோ தைரியத்தை அளித்தது திருமதி வசந்த ரமணன் செய்யாமல்  செய்த உதவி

1995ஆம் வருடம் என் கணவருக்கு ஒரு விபத்தில் வலது கை தோள்பட்டை பந்து கிண்ண மூட்டு மூன்று சில்லுகளாக உடைந்து விட்டது. முதலில் செய்யப்பட்ட சிகிச்சையில் சரியாக சேரவில்லை. மீண்டும் ஒரு சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. அப்பொழுதும் என் குழந்தைகளை பார்த்து கொண்டது, ராஜிதான். அந்த சமயத்தில் என் மைத்துனர் இறந்து விட்டதால் எங்களுக்கு பத்து நாட்கள் தீட்டு உண்டே, அப்பொழுது மற்றவர்கள் வீடுகளுக்குச் செல்லக் கூடாது என்பார்கவே என்று நான் தயங்கிய பொழுது,"இந்த சமயத்தில் இப்படியெல்லாம் யோசிக்கலாமா? நீ தாராளமாக எங்கள் வீட்டிற்கு வரலாம்" என்றதோடு இரண்டு மூன்று நாட்களுக்கு எனக்கு சமையல் வேலை இல்லாமல்    பார்த்துக் கொண்டாள்.   

என் கணவருக்கு இரண்டாம் முறை அறுவை சிகிச்சை நடந்த பொழுது சாயி அன்பர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டு ஷிஃப்ட் முறையில் மருத்துவமனையில் என் கணவரோடு இருந்து கவனித்துக் கொண்டார்கள். என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவும், அங்கிருந்து அழைத்து வரவும், என் கணவரால் வண்டி ஓட்ட முடியாத மூன்று மாதங்களும்  மாதாந்திர சாமான்கள் வாங்கவும், கறிகாய்கள் வாங்கவும் பல நண்பர்கள் உதவினார்கள். 

அவர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆக வேண்டிய நாளன்று என் அலுவலகத்தில் என்னுடன் பணியாற்றிய  ஓமானியர்   சமீர் என்பவர் தன்னுடைய காரை மருத்துவமனைக்கு கொண்டு வந்திருந்தார். கடைசி நிமிடத்தில் மருத்துவமனையில் நீங்கள் முதலில் பணம் கட்ட வேண்டும், பின்னர் அது ரீ எம்பர்ஸ் செய்யப்படும் என்றார்கள், என் கையிலோ பணம் இல்லை,  அப்பொழுதெல்லாம் ஏ.டி.எம். கார்ட் இப்போது போல் அவ்வளவு புழக்கத்தில் வரவில்லை. என்ன செய்வது என்று யோசித்த பொழுது  உடனே என் அலுவலக சக ஊழியர் தன்னுடைய  க்ரெடிட்  கார்ட்டில் பணம் கட்டிவிட்டு பின்னர் வாங்கி கொண்டார். எத்தனை தெய்வங்கள்!