கணம்தோறும் பிறக்கிறேன் 

Friday, December 28, 2018

சாரதே சாரதே ஞான தாயினே


சாரதே சாரதே ஞான தாயினே


"ஒரே ஒரு குழந்தை உன்னை அம்மா என்று அழைக்க வேண்டுமா?, உலகத்தில் உள்ள எல்லா குழந்தைகளும் உன்னை அம்மா என்று அழைக்க வேண்டுமா?" என்று பரமஹம்சர் கேட்க, இரண்டாவதை தேர்ந்தெடுத்து உலகத்திற்கே அன்னையான ஶ்ரீ சாரதா தேவியின் 166வது பிறந்த நாள் இன்று. "யாதேவி சர்வ பூதேஷு மா மாத்ரு ரூபேண சம்ஸ்திதா, நமஸ்தஸ்மை, நமஸ்தஸ்மை நமஸ்தஸ்மை நமோ நமஹ"(எந்த தேவியானவள் எல்லா உயிகளிடத்திலும் அன்னை வடிவமாக விளங்குகிறாளோ, அவளை வணங்குகிறேன், வணங்குகிறேன், வணங்குகிறேன்) என்று தேவி பாகவதம் துதிக்கிறது. சாரதா தேவியை எல்லா உயிர்களுக்கும் அன்னையானாளோ அவளை வணங்குகிறேன் என்று துதிக்கலாம்.
 'கற்றதும் பெற்றதும் இரண்டாம் பாகத்தில்' சுஜாதா எப்படி நினைவு கூர்ந்திருக்கிறார் பாருங்கள்:
Sunday, December 23, 2018

அன்புள்ளம் கொண்ட எங்கள் ப்ளாக் நண்பர்களிடம் ஒரு வேண்டுகோள். மிக சமீபத்தில்(17.12.18) என் சகோதரியின் கணவர் இறந்து போனார். சில வருடங்களாகவே நுரையீரல் பாதிப்பால் அவதிப்பட்டு க்கொண்டிருந்த அவருக்கு ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் உடம்பு சரியில்லாமல் போய், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுவதும், மீண்டு வருவதும் வாடிக்கையாக இருந்தது. இந்த முறை ஸ்வைன்  ஃபளூ, நிமோனியாவாக மாறி அவரை வீழ்த்தியது.

இதற்கிடையில் வெளிநாட்டில் வசிக்கும் என் அக்காவின் இரண்டாவது பெண்ணுக்கு சென்ற மாதம் 25ம் தேதி வந்த காய்ச்சல் விடவேயில்லை. இரண்டு முறை ஒரு பிரபல மருத்துவ மனையில் அனுமதித்தும் அவளுக்கு வந்திருப்பது எந்த வகை காய்ச்சல் என்று சரியாக கண்டு பிடிக்காமல் ஏகப்பட்ட ஆண்டி பயாடிக்ஸ்,  ஸ்டிராய்ட்ஸ் போன்றவை கொடுத்ததால் உடம்பு மிகவும் பலவீனமானதேயொழிய காய்ச்சல் விடவேயில்லை. பிறகு தெரிந்தவர்கள் கூறியதன் பேரில் மாம்பலம் ஹெல்த் சென்டரில் அனுமதித்தோம்.  அங்கு மீண்டும் டெஸ்டுகள் எடுத்ததில் லட்சத்தில் 160 பேரை தாக்கும் stills disease  என்று கண்டு பிடித்து இப்பொழுதுதான் ட்ரீட்மெண்ட்  ஆரம்பித்திருக்கிறார்கள். இருந்தாலும் இன்னும் காய்ச்சல் வருவது நிற்கவில்லை. என் அக்காவுக்கு கணவர் மறைந்த துக்கம் ஒரு புறம், மகளின் உடல் நிலை குறித்த கவலை ஒரு புறம். "இரு கோடுகள் தத்துவம் போல ஆகி விட்டது என் நிலமை" என்கிறாள்.
என் அக்கா பெண்ணின் உடல் பூரண குணமடையவும், என் அக்காவின் மனதிற்கு அமைதி கிடைக்கவும் ப்ரார்த்தனை செய்ய உங்கள் அணைவரையும் வேண்டுகிறேன்.🙏🙏

Wednesday, December 19, 2018

சொமாட்டோ ஊழியர் உணர்த்தும் உளவியல் உண்மைகள்


சொமாட்டோ ஊழியர் உணர்த்தும் உளவியல் உண்மைகள்

மதுரையில் சொமாட்டோ ஊழியர் வாடிக்கையாளர்களுக்கு எடுத்துச் சென்ற உணவை  சாப்பிட்ட வீடியோ, வைரலாகி, அதைப்  பற்றி நெட்டிசன்கள் பேசி தீர்த்து விட்டார்கள்.  இது தவறு  என்று பலரும், அந்த ஊழியர் பசியோடு இருந்ததால்தான் இப்படி செய்திருக்கிறார், அதை கருத்தில் கொள்ள வேண்டும் என்று சிலரும் எழுதியிருக்கிறார்கள். 

நான் மஸ்கட்டில் இருந்தபொழுது ஒரு வீட்டில் நான்கு வருடங்கள் வேலையாளாக இருந்த ஒருவன் தன் எஜமானன், மற்றும் எஜமானி அம்மாவை கொலை செய்து விட்டான். இத்தனைக்கும் அவர்கள் ஒரு வேலைக்காரனை போல் அவனை நடத்தமாட்டார்களாம்.   நண்பர் ஒருவர் வீட்டிற்கு சென்றிருந்த பொழுது  இதைப்பற்றி பேச்சு வந்தது. நான்," இதற்கு காரணம், வறுமைதான்" என்றதும், அந்த நண்பர், " தப்பாக யோசிக்கிறீர்களே?" என்றார். நான் புரியாமல் விழிக்க,அவர் விளக்கினார்."வறுமைதான் காரணம் என்றால் அவன் அவர்கள் வீட்டிற்குள் வந்தவுடனே கொன்றிருக்க வேண்டும். அவன் வறுமையில் இருக்கும்பொழுது அவனுடைய பசியை போக்கிக்கொள்ள அவனுக்கு ஒரு பிடிப்பு தேவை. அது கிடைத்து, அங்கேயே தங்க ஆரம்பித்த பிறகு, ஒப்பிடத் தொடங்குகிறான். அதில்தான் பிரச்சனை தொடங்குகிறது. நம்மை விட இவர்கள் எந்த விதத்தில் ஒசத்தி? ஏன் அவர்களுக்கு கிடைக்கும் வசதிகள் நமக்கு கிடைப்பதில்லைஎன்று எண்ணத் தொடங்குகிறான். அப்போது சின்னச்சின்ன கோபங்கள், அலட்சியங்கள் கூட  அவனை எரிச்சலடைய வைக்கிறது. அதன் விளைவுதான் இதைப்போன்ற நடவடிக்கைகள்" என்றார்.

என்னுடைய பட்டப்படிப்பில் ஆங்கிலத்தில் ஒரு பாடம். லிஃப்ட் ஆபரேட்டராக இருக்கும் ஒருவன் லிஃப்டில் ஏறிய ஒரு ஆசாமி, அவனிடம்,"லிஃப்ட் ப்ளீஸ்" என்பதற்கு பதிலாக, "லிஃப்ட்" என்று கூறியதற்காக அவனை அரைந்து விட்டான் என்னும் செய்தியை செய்திதாளில் படித்த ஒருவர் எழுதிய கட்டுரை எனக்கு எனக்கு பாடமாக வந்திருந்தது. அந்த கட்டுரையாசிரியர்  பெயர் மறந்து விட்டது, ஆனால் விஷயம் மறக்கவில்லை.

அதில் அவர்,"ஒரு லிஃப்ட் ஆபரேட்டர் என்பவன் வாழ்க்கையில் கடை நிலையில் இருப்பவன். ஒரு வேளை அன்று அவன் மனைவியோடு சண்டை போட்டுவிட்டு வந்திருக்கலாம், தெருவில் சென்று கொண்டிருந்த நாய் ஒன்றை ஒரு சிறுவன் கல்லால் அடித்து விட, அது அவன் மனைவியை கடித்திருக்கலாம்,அவள் அந்த கோபத்தை இவன் மீது காட்டியிருக்கலாம், அந்த எரிச்சலில் அவன் தன்னை மரியாதை குறைவாக பேசிய பயனாளியை அறைந்திருக்கலாம். எப்படி ஒரு நல்ல வார்த்தையோ, செயலோ ஒரு தொடர் நல்ல வார்த்தைகளையோ, செயல்களையோ உருவாக்குமோ அதே போல ஒரு மோசமான வார்த்தையோ, செயலோ தொடர் மோசமான வார்த்தைகளையோ, செயல்களையோ உருவாக்கும் என்று முடித்திருப்பார்.

அதைப்போல வாழ்வின் கடை நிலையில் இருக்கும் சொமாட்டோ டெலிவரி ஆளின் எந்த பிரச்சனை அவரை இப்படி நடந்து கொள்ள வைத்ததோ? என்று தோன்றுகிறது.லட்சக்கணக்கில் லாபம் பார்க்கும் இத்தகைய நிறுவனங்கள் இப்படிப்பட்ட டெலிவரி ஆட்களுக்கு ஒரு சாப்பாடு கொடுப்பதில் குறைந்து போய் விடுமா? இலவசமாக கொடுக்காவிட்டாலும் சலுகை விலையில் தரலாமே. டெலிவரிக்கு செல்லும் ஆட்கள் பட்டினியாக கிடக்கக் கூடாது என்பதை கடைபிடித்திருக்கலாம்.  அல்லது அவருடைய மேலதிகாரி அவரிடம் கருணையில்லாமல் நடந்து கொண்டிருக்கலாம். "எங்கிட்டயா மோதற? வெக்கறேன் பாரு ஆப்பு.." அவர் வேண்டுமென்றே தான் சாப்பிடுவதை யாரையாவது விட்டு வீடியோ எடுக்க சொல்லியிருக்கலாம். திருட்டு வீடியோ போல இல்லாமல் தெளிவான படப்பிடிப்பு.

எங்கள் மாமா அவருடைய தாத்தாவைப்பற்றி(அதாவது என் கொள்ளு தாத்தா) அடிக்கடி ஒரு விஷயம் சொல்லுவார்.

எங்கள் வீட்டு வைக்கோல் போரில் பக்கத்து வீட்டு மாடு மேய்ந்தால், அதை நயமாக உரியவரிடம் சொல்ல வேண்டுமே தவிர, அந்த மாட்டை அடித்து விரட்டக்கூடாது என்பாராம். ஒரு மாடு ஒரு கையளவு வைக்கோலை சாப்பிடுமா?  அதற்காக அந்த மாட்டை அடிப்பது, அல்லது உரியவர்களோடு சண்டை போடுவது  போன்ற செயல்களில் ஈடுபட்டால் அந்த கோபத்தில் அவர் ஒரு நெருப்பு குச்சியை கிழித்து வைக்கோல் போர் அடியில் வைத்து விட்டால் முடிந்தது கதை. அவனுக்கு செலவு ஒரு நெருப்பு குச்சிதான், நமக்கு ஒரு வைக்கோல் போர் காலியாகி விடும்" என்பாராம்.

அதேபோல வீட்டில் விசேஷ சமயங்களில் சமைப்பதற்கு அழைத்திருக்கும் பரிசாகரை பல பேர் முன்னிலையில் அவமானப் படுத்தக்கூடாது என்பாராம். " ஐநூறு பேர்களை சாப்பிடக்கூப்பிட்டு, அண்டா நிறைய பால் பாயசம் செய்ய சொல்லியிருப்போம், சமையல்காரனை திட்டி, அவன் கோபத்தில் கொஞ்சம் உப்பை எடுத்து பால் பாயசத்தில் போட்டு விட்டால், அண்டா பாயசமும் வீணாகிவிடாதா?" என்பாராம்.

பள்ளிப்படிப்பை தாண்டாத அவருடைய உளவியல் அறிவு என்னை வியக்க வைக்கும்.

அடிமட்டத்தில் இருக்கும் மக்களை வேலை வாங்க அதிகாரம் மட்டும் போதாது, உளவியல் ஞானமும், கருணையும் கூட வேண்டும்.

Sunday, December 16, 2018

Sridhara Aiyawal Thiruvisanallur - Part 1

திருவிசநல்லூர் ஸ்ரீதர ஐயாவாள் - கங்கோதாரண உற்சவம் 


கும்பகோணத்திற்கு அருகில் இருக்கும் திருவிசநல்லூரில் 6.12.2018 அன்று அதாவது கார்த்திகை மாதத்து அமாவாசை அன்று கங்கோதாரண உற்சவம் நடைபெற்றது. அன்று திருவிசநல்லூரில் இருக்கும் ஸ்ரீதர ஐயாவாளின் மடத்தில் உள்ள கிணற்றில் கங்கை பொங்கி வருவதாக ஐதீகம். ஆயிரக்கணக்கான மக்கள் அன்று அங்கு சென்று அந்த கிணற்று நீரில் நீராடுவார்கள். 

ஏறக்குறைய அறநூறு ஆண்டுகளுக்கு முன் மைசூர் சமஸ்தானத்தில் திவானாக இருந்தவர் வெங்கடேச தீக்ஷதர் என்பவர். அவருடைய மகனான ஸ்ரீதரன் சிறு வயதிலிருந்தே தெய்வ வழிபாட்டிலும், ஆன்மீக சிந்தனையிலும் அதிக ஈடுபாடு உடையவராக இருந்தார். அதனாலோ என்னவோ தன் தந்தையின் மறைவிற்குப் பிறகு தனக்களிக்கப்பட்ட திவான் பதவியை ஏற்றுக்கொள்ளாமல் திருச்சிராப்பள்ளிக்கு(திருச்சி) புலம் பெயர்ந்தார். 

திருச்சிராப்பள்ளியில் இருக்கும் தாயுமானவர் மீது அதிக பக்தி கொண்டு தினசரி தாயுமானவரை தரிசிப்பதை வழக்கமாக  கொண்டிருந்தார். ஒரு முறை அங்கு பாம்பு கடித்து இறந்த ஒரு சிறுவனை இவர் மீண்டும் உயிர்ப்பிக்க, அந்த ஊர் மக்கள் இவரை தெய்வத்திற்கு நிகராக வணங்க ஆரம்பித்தனர். 

அதை விரும்பாத இவர் அங்கிருந்து, திருவிடைமருதூர், கோவிந்தபுரம் இவைகளுக்கு அருகில் உள்ள திருவிசநல்லூர் கிராமத்தில் குடியேறினார். திருவிடைமருதூரில் உள்ள ஸ்ரீமஹாலிங்கேஸ்வரர் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தார். தினசரி திருவிடைமருதூருக்குச் சென்று மஹாலிங்கேஸ்வரரை தரிசிப்பாராம். 

கனத்த மழை பெய்த ஒரு நாளில் இவரால் திருவிடைமருதூர் செல்ல முடியவில்லை. அதனால் மிகவும் மனது வருத்தப்பட்டுக்  கொண்டிருந்தாராம். அன்று இரவு திருவிடைமருதூர் கோவில் அர்ச்சகர் இவர் வீட்டிற்கு வந்து, "இன்று மழையாக இருப்பதால் உங்களால் கோவிலுக்கு வர முடியாது என்பதால் நானே பிரசாதம் தந்து விட்டு போகலாம் என்று வந்தேன்" என்று கூறி, பிரசாதம் கொடுத்தாராம். அப்போது மழை பெய்து கொண்டிருந்ததால், "இந்த மழையில் நீங்கள் செல்ல வேண்டாம், இரவு எங்கள் வீட்டிலேயே தங்கி விட்டு, காலையில் செல்லுங்கள் என்று அவரை திண்ணையில் உறங்க ஒரு பாயும், குளிராக இருந்ததால் பொருத்திக்கொள்ள ஒரு கம்பளி சால்வையின் தந்திருக்கிறார். காலையில் எழுந்திருந்து பார்த்தால், திண்ணையில் படுத்துத்துக் கொண்டிருந்த அர்ச்சகரை காணவில்லை. தன்னிடம் விடை  கொள்ளாமலேய சென்று விட்டாரே என்று நினைத்துக் கொண்ட ஐயாவாள், மறுநாள் திருவிடைமருதூர் கோவிலுக்குச்சென்ற பொழுது அங்கிருந்த அர்ச்சகரிடம், என்ன நேற்று எனக்கு பிரசாதம் தருவதற்காக எங்கள் வீட்டுக்கு வந்த நீங்கள் என்னிடம் சொல்லிக் கொள்ளாமலேயே வந்து விட்டீர்களே?" என்று கேட்டதும், அந்த அர்ச்சகர், "நானா? உங்கள் வீட்டுக்கா? நான் வரவேயில்லையே?" 
என்றதும்தான் ஸ்ரீதர ஐயாவாளுக்கு சாஷாத் பரமசிவனே தனக்காக, தங்கள் வீட்டுக்கு வந்திருக்கிறார் என்று புரிந்து நெகிழ்ந்து போனாராம். 

ஒரு கார்த்திகை மாத அமாவாசையன்று, அவருடைய தகப்பனாரின் ஸ்ரார்த்தம் அதாவது தகப்பனாருக்கு திதி கொடுக்க வேண்டிய நாள், வீட்டில் சமையல் செய்து கொண்டிருக்கிறார்கள். 
சமையல் வாசனையை மோப்பம் பிடித்த அவர் வீட்டில் வேலை செய்யும் பெண்மணி அவள் கணவனிடம்,"அப்பா, நல்ல வாசனை! இந்த மனமே இவ்வளவு நல்லா இருக்கே? சமையல் எவ்வளவு ருசியா இருக்கும்? நமக்கு கிடைக்குமா?" என்கிறாள். உடனே அவள் கணவன்,"சீ சீ! என்ன புள்ள பேசற?  இன்னிக்கு அவங்க வீட்டில் திதி, நாம அதை சாப்பிடக்கூடாது." என்று அதட்டுகிறான். எதற்காகவோ கொல்லைப்புறம் சென்ற அவரின் காதில் இந்த உரையாடல் விழுகிறது.   

இந்த சாப்பாட்டை சாப்பிட வேண்டும் என்று ஒருவர் ஆசைப்பட்டு விட்டார். ஆகவே அவருக்கு தராமல் இருக்கக்கூடாது என்று திவசத்திற்காக சமைத்த உணவை எடுத்து அந்த குடியானவ தம்பதியினருக்கு வழங்கி விடுகிறார்.

இதைப்பார்த்த சனாதிகர்களான மற்ற பிராமணர்கள், "பிதுர்களுக்காக சமைக்கப்பட்ட உணவை நீங்கள் குடியானவர்களுக்கு வழங்கி விட்டீர்கள். இதனால் திவசம் செய்யம் யோக்கியதையை இழந்து விட்டீர்கள். காசியில் சென்று கங்கையில் நீராடி வந்தால்தான் இந்த தோஷத்திலிருந்து நீங்கள் விடுபட முடியும். அதை செய்து விட்டு வாருங்கள், நாங்கள் உங்களுக்கு திவசம் செய்து வைக்கிறோம்" என்று கூறி விட்டு சென்றுவிட, மனம் வருந்திய ஸ்ரீதர ஐயாவாள், கங்கா தேவி மேல் கங்காஷ்டகம் என்னும் ஸ்லோகத்தை இயற்றுகிறார். உடனே அவர் வீட்டு கிணற்றில் கங்கை பொங்கி பெருகி, அக்கிரஹாரத்தில் பிரவாகமாக ஓடினாளாம். இதைக் கண்ணுற்ற மற்ற பிராமணர்கள் தங்கள் தவறை உணர்ந்து, ஐயாவாள் வீட்டில் திதியை முறையாக செய்து வைத்தார்களாம். 

அதிலிருந்து ஒவ்வொரு கார்த்திகை மாத அமாவாசை அன்றும் ஸ்ரீதர ஐயாவாள் வீட்டில் உள்ள கிணற்றில் கங்கை ஆவிர்பவிப்பதாக ஐதீகம். ஆயிரக்கணக்கான பேர்கள் அன்று அந்த கிணற்று நீரில் நீராடுகிறார்கள். இதை கங்கோத்தாரண உற்சவம் என்கிறார்கள்.  


Monday, December 10, 2018

மசாலா சாட்- 2

 மசாலா சாட்- 2

எனக்கு தெரிந்த இளைஞன் ஒருவன் கூறிய விஷயம், அவன் பணிபுரியும் நிறுவனத்தில் ஆண்கள் தாடி வளர்க்கக்கூடாது என்பது நிறுவனத்தின் விதிகளில் ஒன்று. ஆனால் இப்போதைய இளைஞர்கள் தாடி வைக்காமல் இருப்பார்களா? பொறுத்துப் பார்த்த நிறுவனம் வேறு வழியில்லாமல்,"தாடி வைத்துக் கொள்ளுங்கள், வேண்டாம் என்று சொல்லவில்லை, ஆனால் அதை சரியாக திருத்தி, ஒழுங்காக பராமரியுங்கள் என்று மொட்டைத் தலை,தாடியோடு கூடிய ஒரு மாடல் இளைஞனின் புகைப்படத்தோடு சர்குலர் ஒன்றை அனுப்பிவிட்டதாம். இது எப்படி இருக்கு?எகனாமிஸ்ட் என்னும் பத்திரிகை எடுத்திருக்கும் ஒரு கணக்கெடுப்பில் வந்த விவரம்: இந்தியாவில் படித்துவிட்டு வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை 22% குறைந்திருக்கிறதாம். பெண்களை படிக்க வைக்கும் பெற்றோர் அவர்களை வேலைக்கு அனுப்பாமல் இருப்பதற்கு முக்கியமான காரணம் வேலைக்குச் சென்று விட்டால் தாங்கள் பார்க்கும் மணமகனை திருமணம் செய்து கொள்ள பெண்கள் ஒப்புக்கொள்வார்களோ மாட்டார்களோ என்னும் பயமாம்.  இதை கல்யாண மாலை நிகழ்ச்சியில் பாரதி பாஸ்கர் கூறினார். இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

உலகில் அதிக மக்கள்தொகை கொண்ட நகரங்களில் முதன்மையாக விளங்கிய சைனாவின் பீஜிங் நகரில் மக்கள் தொகை குறைந்துள்ளதாம். இருபது வருட கடுமையான போராட்டத்திற்குப் பிறகு சாதிக்கப்பட்ட விஷயம் இது சீன அரசாங்கம் மகிழிச்சியோடு சொல்கிறது. வாழ்க வளமுடன்.

ஒரு குட்டி ரெசிபி

மாங்கா(ய்)இஞ்சி பிசிறல்

மாங்கா இஞ்சி என்பது பார்ப்பதற்கு கஸ்தூரி மஞ்சள் போல் இருக்கும். முகர்ந்து பார்த்தால், மாங்காய் வாசனையும், இஞ்சி வாசனையும் அடிக்கும். சுவையும் இரண்டும் கலந்த சுவைதான்.
மாங்கா இஞ்சி   -  50கிராம் 
பச்சை மிளகாய் - 3
எலுமிச்சம் பழம் - ஒரு மூடி 
உப்பு                       - தேவையான அளவு 
தாளிக்க எண்ணெய் - 1 டீ  ஸ்பூன் 
கடுகு                            -  1/4 டீ ஸ்பூன் 

மாங்கா இஞ்சியை தோல் சீவி கழுவி விட்டு, பொடியாக நறுக்கி கொள்ளவும். பின்னர் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து, எலுமிச்சம்பழம் பிழிந்து உப்பு போட்டு கலந்து விட்டு, கடுகு தாளிக்கவும். மோர் சாதத்திற்கு ஏற்ற சுவையான இன்ஸ்டன்ட் ஊறுகாய். பிரிட்ஜில் வைத்து உபயோகிக்கலாம். 

இப்போது ஒரு குட்டி கதை.

சமீபத்தில் திரு.ஜி.எம்.பி. ஐயா அவர்கள், "யாரடி அவன்"? என்று துவங்கி ஒரு கதை எழுதிவிட்டு, வாசகர்களும் தொடரலாம் என்று கூறியிருந்தார். ஸ்ரீராம் அடுத்தடுத்து மூன்று கதைகள் எழுதி விட்டார். நெல்லை தமிழனும் ஒரு கதை எழுதியிருந்தார். இதோ என் பங்கிற்கு ஒரு கதை.

காதல் பிறந்த கதை

"யாருடி அவன்?" என்று எரிச்சலுடன் கேட்டாள் ராதா தன்  மகளிடம்.
யாருமா?
"அதோ அங்க பாரு, பஸ் ஸ்டாண்டில், செல் போன் பார்ப்பது போல் பாவனை செய்து கொண்டு உன்னையே பார்க்கிறான்" 
தன்னுடைய செல் போனில் எதையோ பார்த்துக் கொண்டிருந்த பாவனா தன் அம்மா சுட்டிக் காட்டிய அந்த பையனை முதல் முறையாக பார்த்தாள். 
"ஹூ நோஸ்? யாராவது ரோடு ரோமியோவாக இருக்கும்.. நீ ஏன் அவனைப் பார்க்கிறாய்?" 
"வயசுப்பொண்ணை வைத்துக் கொண்டிருக்கும் அம்மாவின் கவலை உனக்கு என்ன தெரியும்? துப்பட்டா போடுன்னா கேக்கறயா? எப்போ பார்த்தாலும் ஜீன்ஸ், குர்தா.."
அம்மா ப்ளீஸ் ஆரம்பிச்சுடாத.."
அதற்குள் வந்த ஒரு ஆட்டோவை நிறுத்தி, பெண்ணை உள்ளே தள்ளி, தானும் அமர்ந்தாள் ராதா.
மறு நாள் கல்லூரியிலிருந்து வந்த மகளிடம், "இன்னிக்கு அந்த கடன்காரன் நின்று கொண்டிருந்தானா?" என்றாள்.
யாரை கேட்கிறாய்?
அதாண்டி, நேத்து உன்னையே பார்த்துக் கொண்டிருந்தானே, அவன்தான்."
"நான் அதையெல்லாம் பார்க்கவில்லை" இரண்டு மூன்று நாட்கள் அவனை கவனித்தாள் பாவனா. பஸ்சுக்காக காத்துக்கொண்டிருந்த  அம்மா சொல்வது உண்மைதான் போலிருக்கிறது. அவன் செல் போனில் எதையோ பார்ப்பது போல் என்னைத்தான் பார்க்கிறான். இன்றைக்கு இதற்கு ஒரு முடிவு கட்டி விடலாம் என்று நினைத்த அவள், அந்த இளைஞன் அருகில்  சென்று, "ஹலோ, வொய் ஆர் யூ ஸ்டேரிங் அட் மீ? என்றதும், திடுக்கிட்ட அந்த பையன், "வாட்?" என்றான்.
"நானும் ஒரு வாரமா பார்க்கறேன், செல் போனில் எதையோ பார்ப்பது போல் நீங்கள் என்னையே பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்."
கமான், நான் என் ஃப்ரெண்டிர்க்காக வெய்ட் பண்ணிக் கொண்டிருக்கிறேன். ஐம் நாட் ஸ்டேரிங் அட் யூ?   
அவன் சொன்னது போலவே அவன் சிநேகிதன் டூ வீலரில் வர, அந்த இளைஞன் புறப்பட்டான். 
மறு நாள், இவளைக்கண்டதும், அவன் திரும்பி நின்று கொள்ள, அவளுக்கு என்னவோ போலானது. அவனை அழைத்து, "ஐயம் சாரி" என்றதும், 
"இட்ஸ் ஓகே" என்றான். அடுத்து வந்த நாட்களில் நண்பனின் வண்டியில் ஏறிக் கொண்டதும் அவளைப்பார்த்து புன்னகையோடு கை அசைக்க, அவளும் புன்னகைத்தபடியே கை அசைத்தாள். 
"டேய் என்னடா நடக்கறது இங்க..?" என்றான் நண்பன்.
"எல்லாம் நல்லதுதான்டா, வண்டியை பார்த்து ஒட்டு" என்றான் பாவனாவின் காதலன். 
                                                                       --------Wednesday, December 5, 2018

ஆற்றில் போட்டதை குளத்தில் தேடுவதா?(உரைநடை)

ஆற்றில் போட்டதை குளத்தில் தேடுவதா?(உரைநடை)


இதே தலைப்பில் ஒரு காணொளி வெளியிட்டிருக்கிறேன். அதை பார்க்க முடியாதவர்களுக்காக இந்த உரை நடை:

ஆற்றில் போட்டதை குளத்தில் தேடுவதா? என்று ஒரு சொலவடை நம் ஊரில் உண்டு. எங்கேயோ தவற விட்ட ஒன்றை அதற்கு சம்பந்தமே இல்லாத வேறு ஒரு இடத்தில் தேடுவதைத்தான் இப்படி சொல்கிறார்கள் என்று புரிந்து கொண்டாலும், எவ்வளவுதான் வடிகட்டிய முட்டாளாக இருந்தாலும், இப்படி ஒரு செயலை செய்வார்களா? என்று ஒரு சந்தேகமும், அப்படியானால் அர்த்தமே இல்லாமல் ஒரு சொலவடை வருமா? என்றும் கேள்விகள் புறப்படுகின்றன, இதற்கு விடை தெரிய வேண்டுமானால் சைவ சமய குரவர்கள் நால்வரில் ஒருவராகிய சுந்தரமூர்த்தி நாயன்மாரின் வாழ்க்கை சரிதத்தை புரட்டிப் பார்க்க வேண்டும்.

சிவபெருமானை தன்னுடைய தோழனாக கருதி வழிபட்ட சுந்தரமூர்த்தி நாயனார், தொண்டை மண்டலத்தில் உள்ள பல்வேறு  சிவாலயங்களுக்கு சென்று வழிபட்டு விருதாச்சலத்தை கடந்து செல்லும் பொழுது, "எம்மை மறந்தனையோ சுந்தரா?"என்னும்  அசரீரி கேட்டு, அருகில் எங்கேயோ சிவாலயம் இருக்க வேண்டும் ஆனால் அதற்கு எப்படி செல்வது என்பது தெரியவில்லையே..?" என்று மயங்கி நிற்கும் பொழுது, இறைவனும், இறைவியும்  வயது முதிர்ந்த தம்பதியினராக வந்து சுந்தரரை விருத்தாச்சலம் கோவிலுக்கு அழைத்துச் செல்கின்றனர். அங்கிருக்கும் சிவபெருமான் மீது பாடல்கள் பாடிய சுந்தரருக்கு சிவபெருமான் பதினையாயிரம் தங்க கட்டிகளை வழங்குகிறார். அவற்றை தனியாகச் செல்லும் தான் எப்படி எடுத்துச் செல்வது என்று தயங்கிய சுந்தரர், சிவபெருமானிடம், "இந்த தங்க கட்டிகளை நான் இங்கு ஓடும் திருமணிமுக்தா நதியில் போடுகிறேன், அவைகளை திருவாரூரில் இருக்கும் கமலாலயம் திருக்குளத்தில் கிடைக்கும்படி அருள வேண்டும்" என்று வேண்டுகிறார். சிவபெருமானும் அதற்கு ஒப்புக்கொள்ள அவரளித்த பதினையாயிரம் தங்க கட்டிகளில் அடையாளமிட்டு திருமணிமுக்தா நதியில் போட்டு விடுகிறார். 

திருவாரூருக்கு திரும்பிச் சென்ற, சுந்தரர் தன் மனைவியாகிய பரவை நாச்சியாரிடம் இந்த விஷயத்தை கூறி, அவரையும் கமலாலயத்திற்கு அழைக்கிறார். அவர் கூறியதில் நம்பிக்கை இல்லாவிட்டாலும், அவருடன் செல்கிறார் பரவை நாச்சியார். திருவாரூர் தியாகேசனையும், அங்கிருக்கும் விநாயகரையும்  வணங்கி, கமலாலயம் குளத்தில் மூழ்கி தான் மணிமுக்தா ஆற்றில் போட்ட தங்க கட்டிகளை தேடுகிறார், அவருக்கு கிட்டவில்லை. மீண்டும் ஒரு முறை மூழ்கி தேடுகிறார், அப்போதும் கிட்டவில்லை, இதைப்பார்த்த பரவை நாச்சியார்,"ஆற்றில் இட்டதை குளத்தில் தேடுவதோ" என்று கேலியாக நகைத்தாராம். உடனே சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள், சிவபெருமானிடம்,"என் மனைவி என்னை கேலி செய்யும்படி வைத்து விட்டாயே இறைவா, இது சரியில்லை, எனக்கு அந்த பொற்கட்டிகளை தந்தருள வேண்டும்" என்று வேண்ட, அவர் மணிமுக்தா ஆற்றில் இட்ட தங்க கட்டிகள்  திருவாரூர் கமலாலயம் குளத்தில் அவருக்கு கிட்டின. நமக்கு ஒரு சொலவடையும் கிட்டியது.    Sunday, December 2, 2018

Bhavani Patti Talks - ஆற்றில் போட்டதை குளத்தில் தேடுவதா?

2.0 (விமர்சனம்)2.0
(விமர்சனம்


Image result for enthiran 2


என்னத்த விமர்சனம் எழுதுவது?

ஷங்கர், ஏ.ஆர்.ரஹ்மான், ரஜினி காம்பினேஷன், 600 கோடி பட்ஜெட், மூன்று வருடங்கள் தயாரிப்பு, 3D தொழில்நுட்பம் என்று எக்கச்சக்க எதிர்பார்ப்புகளோடு வெளியாகியிருக்கும் படம். இதில் தொழில் நுட்பம் மட்டுமே ஏமாற்றமளிக்கவில்லை. 

கதாநாயகி இல்லை, இனிமையான பாடல்கள் இல்லை, நகைச்சுவை இல்லை, வலுவான வில்லன் கதாபாத்திரம் இல்லை, முக்கியமாக கதை இல்லை. மொத்தத்தில் ஷங்கர் படம் தரும் திருப்தியில்லை. Monday, November 26, 2018

வழிந்ததே அசடு வழிந்ததே


வழிந்ததே அசடு வழிந்ததே

தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை கஜா புயல் தாக்கிய நேரம், என்னை ஜலதோஷ புயல் தாக்கியது. மூக்கிலிருந்து விடாமல் ஜலதாரை, உடம்பு வலி, தலை வலி, லேசான ஜுரம். dola 650 போட்டுக்கொண்டு, கார்த்திகைக்கான நெய் அப்பம்,பொரி,அடை வகையறாக்களை செய்து விட்டேன். கோலம் போடுவது, விளக்குகளுக்கு திரி போட்டு, எண்ணெய் விட்டு, சந்தன ம், குங்குமம் இடுவது போன்ற சில்லறை வேலைகளை செய்வதுதான் கஷ்டமாக இருந்தது.

கார்த்திகை அன்று இரவு என் மகனோடு  என் சினேகிதியின் மகளின் திருமணத்தில் கலந்து கொள்ள சென்னைக்கு செல்வதாக இருந்தது. உடல் நிலை காரணமாக என் பயணத்தை ரத்து செய்து விட்டேன். ஊருக்குச் செல்லும் முன் என் மகன் ஆவி பிடிக்கச் சொல்லி, அதற்கான கருவியையும் எடுத்து கொடுத்து விட்டு சென்றான். 

அதை எப்படி பயன் படுத்துவது என்று  அட்டைப் பெட்டியில் போட்டிருந்தது. அந்த கருவியில் குறிப்பிடப்பட்டிருக்கும் அளவு தண்ணீர் ஊற்றவும் என்றிருந்தது. பெரிய குவளை போன்றதில் எவ்வளவு தண்ணீர் ஊற்ற வேண்டும் என்பதற்கான அடையாளம் எதுவும் இல்லை. எனவே நான் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி, மிஷினை ஆன் செய்தேன். தண்ணீர் கொதிப்பது போல ஓசை வந்ததேயொழிய, ஆவி வரவில்லை. பக்கவாட்டிலிருந்து நீர் வழிந்தது. தண்ணீர் அதிகம் விட்டு விட்டோம் போலிருக்கிறது என்று கொஞ்சம் தண்ணீரை குறைத்தேன். அப்படியும் ஆவி வரவேயில்லை. சரிதான் நாம் அடுப்பிலேயே வெந்நீர் போட்டுக் க்கொள்ளலாம் என்று அதை ஓரம் கட்டிவிட்டு, அடுப்பில் வெந்நீர் போட்டு ஆவி பிடித்தேன். 

அடுத்த நாள் காலை என்னை அழைத்த என் மருமகள்," நேற்று தண்ணீரை எங்கு ஊற்றினீர்கள்? என்றாள், நான் சொன்னதும் சிரித்துக் கொண்டே, "அங்கு ஊற்றக் கூடாது, அந்த பெரிய கப்பை கழற்றி அடியில் ஊற்ற வேண்டும், அதில் அளவு குறிப்பிட பட்டிருக்கிறது பாருங்கள்" என்றாள். 

இருமுவது போல பாவலா காட்டி, முகத்தை துடைத்துக் கொண்டேன். வேறு வழி.

இருமலால் தூங்க முடியாமல் அவஸ்தைப்பட்ட இரவு, யூ ட்யூபில் பார்த்த எழுத்தாளர் சாரு நிவேதிதாவின் பேட்டியை இணைத்திருக்கிறேன். சாருநிவேதிதாவின் கதைகளை நான் படித்ததில்லை. கட்டுரைகளை படித்திருக்கிறேன். தன்னுடைய நூல் வெளியீடுகளை ஒரு விழா போல செய்பவர்.  துணிச்சலான எண்ணங்களுக்கு சொந்தக்காரர். கேட்டு விட்டு சொல்லுங்கள். 

அதற்கு முன் ஒரு கேள்வி. சம கால எழுத்தாளர்களின் எழுத்துக்களை எத்தனை பேர் படிக்கிறோம்?  சுஜாதா, பாலகுமாரனுக்குப் பிறகு வந்த எழுத்தாளர்களில் எத்தனை பேரின் படைப்புகளை படித்திருக்கின்றீர்கள்?  ஆம் என்றால் நீங்கள் படித்தவற்றில் சிறப்பானதை எனக்கு சொல்லுங்கள். இல்லை என்றால் ஏன்? தயவு செய்து தேவி பாலா, இந்திரா சௌந்திரராஜன் என்றெல்லாம் கூறி விடாதீர்கள். Friday, November 23, 2018

பரிகாரம்

பரிகாரம் 

மகனின் பள்ளிக்கு பேரெண்ட்,டீச்சர் மீட்டிங்கிற்கு சென்று விட்டு வந்த ராதிகாவிற்கு வருத்தமும் கவலையும் மேலிட்டது. பத்தாம் வகுப்பு வரை நன்றாக படித்துக் கொண்டிருந்த கிரீஷ் இப்போது கொஞ்சம் பின் தங்கி
விட்டா ன். 

அவனுடைய ஆசிரியர்களும்," நல்லா படிக்கக் கூடிய பையன்தான், ஹோம் ஒர்கெல்லாம் சரியா செய்ய மாட்டேங்கரான், லாட் ஆஃப்  டிஸ்ட்ராக்ஷன்ஸ், கொஞ்சம் கவனியுங்கள்" என்று கூறி விட அவள் மிகவும் அப்செட் ஆகிவிட்டாள்.

ப்ளஸ் டூவில் நல்ல மார்க் வாங்கினால்தானே நல்ல கல்லூரியில் சேர்க்க முடியும்? என்ன பிரச்சனை அவனுக்கு? கணவனிடம் சொன்ன பொழுது அவன்," இப்போ செவன்டி பர்சென்ட் வாங்கறாந்தானே?" என்றான்.

"அதை வைத்துக் கொண்டு என்ன பண்ண முடியும்?"

"இத்தனைக்கும் ட்யூஷன் வேற போகிறான்.." 

"அந்த டீச்சர் ஒரு நாளைக்கு 200 கணக்கு போடணும்னு சொல்றா..இவன் எவ்வளவு போடறானோ?"

"இருநூறு கணக்கா?" அஷோக்கிற்கு கண்ணை கட்டியது. நல்ல வேளை, நாம் படித்து முடித்து விட்டோம் என்று நினைத்துக் கொண்டான். "அதெல்லாம் கொஞ்சம் கஷ்ட்டம்மா"

"என்ன கஷ்டம்? போட்டுதான் ஆகணும். இந்த டீச்சர் பரவாயில்லை, இருநூறு கணக்கு போடணும்னு சொன்னாலும், ஐம்பதுதான் ஹோம் ஒர்க்காக தருகிறாள், ஆஷா மேடம்னா, இருநூறு கணக்கு போடாவிட்டால் டியூஷனிலிருந்து நிறுத்தி விடுவாள். "

"படிப்பான், படிப்பான், ரொம்ப ப்ரெஷர் கொடுக்காத. அடலஸண்ட் ஏஜ்." 

"அதனால்தான் நான் சொன்னேன், கோ எஜுகேஷன் ஸ்கூல் வேண்டாம்னு, யூ டிண்ட் லிசன்."

"கமான், இதெல்லாம், பார்ட் அண்ட் பார்செல் ஆஃப் லைஃப். ரிஷ்யஸ்ருங்கர் மாதிரி வளர்க்கச் சொல்றியா?. அவன் படிக்க நம்மால் முடிஞ்ச அளவு ஹெல்ப் பண்ணலாம்"    

சொல்லிவிட்டானே தவிர எப்படி உதவுவது என்று தெரியவில்லை. நகரத்தின் நல்ல பள்ளியில் சேர்த்து விட்டோம், ட்யூஷனும் வைத்திருக்கிறோம். பள்ளிக்கு போய் வர ஆட்டோ, படிக்க தனி அறை, வீட்டில் அவனுக்கென்று லேப்டாப். வேறு என்ன வேண்டும்? நம்மைப் போல் நடந்து பள்ளிக்குச் சென்று, ஒரே அறையில் மூன்று பேர்கள் படிக்க வேண்டும் என்னும் நிர்ப்பந்தமெல்லாம் உண்டா? டியூஷன் வகுப்பில் சேர்ந்தால் அவமானம் என்று அப்பா சேர்த்து விட மறுத்து விட்டார். என்ன செய்வது?

மகனை நல்ல மார்க் வாங்க வைக்க ராதிகா ஒரு உபாயம் கண்டு பிடித்தாள். அவன் ஜாதகத்தை எடுத்துக் கொண்டு டி.வி.யில் ஜோதிடம் சொல்லும் ஒரு ஜோசியரிடம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி கொண்டு   சந்தித்தாள்.அவர் அவனுடைய ஜாதகத்தை பார்த்து விட்டு, "அதெல்லாம் நன்னா படிப்பான், கவலைப்படாதீங்கோம்மா". என்று கூறி விட்டு, அவனுக்கு ஏதோ தசையில் ஏதோ புக்தி  நடப்பதாகவும், அதற்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பிள்ளையாருக்கு அவன் பெயருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்,எனவும் மேலும் ஐந்து புதன் கிழமைகளில் நவகிரஹ சந்நிதியில் உள்ள புத பகவானுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும் எனவும் கூறினார். மேலும் தினசரி விஷ்ணு சஹஸ்ரநாமத்தை உங்களை பிள்ளை சொல்லாவிட்டாலும் கேட்கச் சொல்லுங்கள். என்று கூறினார். அதோடு ராசிக்கல் மோதிரம் ஒன்றையும் பரிந்துரைத்தார். 

ராசிக்கல் மோதிரத்திற்கு அசோக் ஒப்புக்கொள்ளவில்லை."ராதிகா நீ எந்த கோவிலுக்கு வேணாலும் போ, அர்ச்சனை பண்ணு, நான் வேண்டாம்னு சொல்லலை, ஆனால் மோதிரமெல்லாம் வேண்டாம். நாளைக்கு அவன் படித்து நல்ல மார்க் வாங்கினாலும், மோதிரத்தால்தான் தான் வாங்கினோம் என்று அவனுக்கு தோன்றி விடும். தட்ஸ் நாட் குட்" என்று தீர்மானமாக சொல்லிவிட, ராதிகா மோதிரம் வாங்கும் எண்ணத்தை கை விட்டாள்.

தன்னால் கோவிலுக்குச் செல்ல முடியுமோ முடியாதோ என்று, தன் வீட்டில் சமையலுக்கு வரும் லதா மாமியிடம் பணத்தையும் மகனின் பெயர், நட்சத்திரம் போன்ற விவரங்களையும் கொடுத்து புதன் கிழமை அர்ச்சனை செய்து கொண்டுவரச் சொன்னாள். தினசரி வீட்டில் விஷ்ணு சஹஸ்ரநாமம் ஒலிக்கத் தொடங்கியது. 

லதா மாமி அதோடு கூட தானும் விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்லியபடியே சமைப்பாள். கோவிலில் அர்ச்சனை செய்யும் பொழுதும், விளக்கு போடும் பொழுதும் அந்த வருஷம் ப்ளஸ் டூ பரீட்சை எழுதப் போகும் தன் மகனுக்காகவும் வேண்டிக் கொள்வாள். 

அந்த வருட பொதுத்தேர்வில் கிரீஷ் பெற்ற மதிப்பெண்களில் பெரிதாக முன்னேற்றமில்லை. ஆனால் லதா மாமியின் மகன் 92% சதவிகிதம் வாங்கி தேர்ச்சி பெற்றிருந்தான்.


Wednesday, November 21, 2018

கார்த்திகை தீபம் - தீப ஜோதி நமோ நம:

கார்த்திகை தீபம் - தீப ஜோதி நமோ நம: 27தீபங்களும்_அதன்_பயன்களும் !

தீபஜோதியே நமோ நம :
சுபம் கரோதி கல்யாணம் ஆரோக்யம் தன சம்பதா
சத்புத்தி ப்ரகாசாய தீபஜ்யோதிர் நமோநம:

தீபம் ஏற்றுவதால் சுபம், ஆரோக்கியம், நன்மை, தனசேர்த்தி, நல்லபுத்தி ஆகியவை பெருகும் எனச் சொல்கிறது மேற்காணும்  ஸ்லோகம்.

நம் பாரதத்தின் ஆன்மிகக் கலாசாரத்துடன் இரண்டறக் கலந்தது தீபவழிபாடு. விரிவான வழிபாடுகள் தெரியவில்லை என்றாலும், காலை-மாலை இரண்டு வேளைகளில் தீபம் ஏற்றிவைத்து, அதற்கு நமஸ்காரம் செய்தாலே போதும்; தீய சக்திகள் யாவும் விலகி, வீட்டில் லட்சுமி கடாட்சம் ஸித்திக்கும் என்கின்றன ஞான நூல்கள். அப்படியான தீபத்தைச் சிறப்பிக்கும் மாதம்தான் திருக்கார்த்திகை. இந்த மாதத்தில் திரு விளக்கேற்றி வழிபடுவது அவ்வளவு விசேஷம்.

தினமும் 27 விளக்குகள்...

கார்த்திகை மாதத்தில், நமது வீடுகளில் 27 இடங்களில் தீபங்கள் ஏற்றிவைக்க வேண்டுமாம். அவை எந்தெந்த இடங்கள், எந்தெந்த  இடங்களில்  எத்தனை தீபங்கள்  ஏற்றுவது?   என்பது குறித்து விரிவாக அறிவோமா

கோலமிடப்பட்ட வாசலில்: ஐந்து விளக்குகள்

திண்ணைகளில்: நான்கு விளக்குகள்

மாடக்குழிகளில்:  இரண்டு விளக்குகள்

நிலைப்படியில்: இரண்டு விளக்குகள்

நடைகளில்: இரண்டு விளக்குகள்

முற்றத்தில்: நான்கு விளக்குகள்

இந்த இடங்களில் எல்லாம் தீபங்கள் ஏற்றிவைப்பதால், நமது இல்லம் லட்சுமி கடாட்சத்தை வரவேற்கத் தயாராகி விடும்; தீய சக்திகள் விலகியோடும்.

பூஜையறையில்: இரண்டு கார்த்திகை விளக்குகள் ஏற்றிவைக்கவேண்டும். இதனால் சர்வமங்கலங்களும் உண்டாகும்.

சமையல் அறையில்: ஒரு விளக்கு; அன்ன தோஷம் ஏற்படாது.

தோட்டம் முதலான வெளிப்பகுதிகளில்: யம தீபம் ஏற்றவேண்டும். இதனால் மரண பயம் நீங்கும். ஆயுள்விருத்தி உண்டாகும்.

பின்கட்டு பகுதியில்:நான்கு விளக்குகளை ஏற்றிவைக்க விஷ ஜந்துக்கள் அணுகாது.

ஆனால், அபார்ட்மென்ட் மற்றும் மாடி வீடுகள் அதிகம் உள்ள தற்காலத்தில்,   மேற்சொன்ன முறைப்படி விளக்கு ஏற்ற முடியாது ஆகையால், வசதிக்கு ஏற்ப வீட்டுக்குள்ளேயும் வெளியிலுமாக 27 விளக்குகளை ஏற்றிவைத்து பலன் பெறலாம்.

தீபத்தின் வகைகள்:

தீபத்தில் மகாலட்சுமி வசிப்பதால், தீபம் ஏற்றியதும் `தீபலட்சுமியே நமோ நம' என்று கூறி வணங்குவது அவசியம். தீபத்தை பலவகையாகச் சொல்லி விளக்குகின்றன ஞானநூல்கள். அவற்றில் சில...

சித்ர தீபம்: தரையில் வண்ணப் பொடி களால் சித்திரக் கோலம் இட்டு, அதன்மீது  ஏற்றப்படும் தீபங்கள்.மாலா தீபம்: அடுக்கடுக்கான தீபத் தட்டுகளில் ஏற்றப்படுவது.ஆகாச தீபம்: வீட்டின் வெளிப்புறத்தில் உயர்ந்த பகுதியில் ஏற்றிவைக்கப்படுவது, ஆகாச தீபமாகும். கார்த்திகை மாதம் சதுர்த்தி திதிநாளில் இந்த தீபத்தை ஏற்றி வழிபட்டால், யம பயம் நீங்கும்.

ஜல தீபம்: நதி நீரில் மிதக்கவிடப்படும் தீபங்கள் ஜல தீபம் ஆகும்.நௌகா (படகு) தீபம்: கங்கை  கரையோரங்களில் வாழும் மக்கள், புண்ணிய யாத் திரையாக கங்கைதீரத்துக்குச் செல்பவர் கள், கங்கை நதிக்கு மாலைவேளையில் ஆரத்தி செய்து, வாழை மட்டையின் மீது தீபம் ஏற்றிவைத்து, அதை கங்கையில் மிதக்கவிடுவர். படகு போன்ற வடிவங் களில் தீபங்கள் தயார் செய்தும் மிதக்க விடுவார்கள். இவற்றையே நெளகா தீபங் கள் என்று அழைப்பர். சம்ஸ்கிருதத்தில் `நௌகா' என்றால் `படகு' எனப் பொருள்.

சர்வ தீபம்: வீட்டின் அனைத்து பாகங் களிலும் வரிசையாக ஏற்றிவைக்கப்படுபவை சர்வ தீபமாகும்.

மோட்ச தீபம்: முன்னோர் நற்கதியடையும் பொருட்டு, ஆலய கோபுரங்களின் மீது ஏற்றி வைக்கப்படுவது.

சர்வாலய தீபம்: கார்த்திகை மாதம் பௌர்ணமி அன்று, மாலைவேளையில் சிவாலயங்களில் ஏற்றப்படுவது. அதாவது, பனை ஓலை களால் கூடுபோல் பெரிதாகச் செய்து, அதற்கு பூஜை செய்து தீபாராதனை காட்டி, கற்பூரத்தின் ஜோதியை அதில் ஏற்றுவது, சர்வாலய தீபம் ஆகும்.

அகண்ட தீபம்: மலையுச்சியில் பெரிய கொப்பரையில் ஏற்றப்படுவது அகண்ட தீபம்.திருவண்ணாமலை, பழநிமலை, திருப் பரங்குன்றம் முதலான திருத்தலங்களில், அகண்ட தீபத்தைத் தரிசிக்கலாம்.லட்ச தீபம்: ஒரு லட்சம் விளக்குகளால் ஆலயத்தை அலங்கரிப்பது லட்சதீபமாகும்.   திருமயிலை, திருக்கழுக்குன்றம் (12 ஆண்டுகளுக்கு ஒருமுறை) முதலான பல ஆலயங்களில் லட்சதீபம் ஏற்றுவது உண்டு.

மாவிளக்கு தீபம்: அம்மன் ஆலயங்களில் நோய் தீர வேண்டிக்கொண்டு மாவிளக்கு ஏற்றுவார்கள். அரிசி மாவில் வெல்லம் போட்டு, இளநீர் விட்டுப் பிசைந்து உருண்டை யாக்கி, நடுவில் குழித்து நெய் ஊற்றி திரி போட்டு ஏற்றுவது மாவிளக்கு ஆகும்.காஞ்சிபுரத்தில் உள்ள அருள்மிகு  கச்சபேஸ்வரர் ஆலயத்தில், கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமை களில், இவ்வகை தீபத்தை தலையில் வைத்துக்கொண்டு ஆலயத்தை வலம் வந்து வழிபடும் வழக்கம் உண்டு. இதை, மண்டை விளக்கு பிரார்த்தனை' என்கிறார்கள்.

விருட்ச தீபம்: ஒரு மரத்தைப்போன்று கிளைகளுடன் அடுக்கடுக்காக அமைக்கப் படும் தீப ஸ்தம்பங்களில் விளக்கேற்றும்போது, விருட்சத்தைப் போன்று காட்சித் தரும்.சிதம்பரம், திருவண்ணாமலை, குருவாயூர் ஆலயங்களில் விருட்ச தீபத்தைக் காணலாம்.

தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள் !!

பி.கு. வாட்ஸாப்பில் வந்த செய்தியை பகிர்ந்திருக்கிறேன்.
படங்கள்: கூகுள் உபயம் 

Friday, November 16, 2018

வண்டிப் பயணமும், வாழ்க்கைப் பயணமும்

வண்டிப் பயணமும், வாழ்க்கைப் பயணமும் 


நூறு புத்தகங்கள் படிப்பதால் பெறும் அறிவை ஒரு பயணம் தந்துவிடும் என்பார்கள். பயணங்கள் மூலம் நான் பெற்ற அறிவை விட, பயணங்களுக்கும்  நம் வாழ்க்கைப் பயணத்திற்கும் உள்ள ஒற்றுமையை அலசுவதே என் நோக்கம். 

என் நாற்பதாவது வயதில்தான் டூ வீலர் ஒட்டக்  கற்றுக் கொண்டேன். என்னைவிட இளையவர்களைவிட நான் சீக்கிரம் கற்றுக் கொள்வதாகவும், தைரியமாக ஓட்டுவதாகவும் எனக்கு பயிற்சி அளித்தவர் சொன்னாலும், எனக்கு அடி மனதில் ஒரு பயம் இருந்து கொண்டே இருக்கும். "நமக்குப் பின்னால் ஒரு குடும்பம் இருக்கிறது, நாம் ஏதாவது விபத்தில் சிக்கிக் கொண்டால் மிகவும் கஷ்டம்" என்னும் அச்சம் இருந்ததால் மெதுவாகத்தான் செல்வேன், சாலை விதிகளை மீற மாட்டேன். நம் நாட்டில் சாலையில் மாட்டு வண்டி, மீன் பாடி வண்டி, சைக்கிள், ஆட்டோ, சிட்டி பஸ், தண்ணீர் லாரி, நவீன ரக டூ வீலர்கள், பென்ஸ் கார், டாட்டா சுமோ என்று எல்லா வகை வாகனங்களும் அதனதன் வேகத்தில் விரையுமே. இதில் சைக்கிளையோ, மாட்டு வண்டியையோ முந்துவதால் நமக்கு எந்த பெருமையும் கிடையாது. டாட்டா சுமோவோடு போட்டி போடுவது அறிவீனம். நம் சௌகரியத்திற்க்காக நாம்  வண்டியில் செல்கிறோம், நாம் போக வேண்டிய இடத்திற்கு பாதுகாப்பாக செல்வதுதான் நம் வேலை. 

இதைப் போலத்தான் வாழ்க்கையும். அவரவர்க்கு வாய்த்த இடம் அவன் போட்ட பிச்சை. நம் வாழ்க்கையைத்தான் நாம் வாழ வேண்டுமே தவிர, மற்றவர்களோடு ஓப்பிட்டுக் கொள்ளுதல் சரியில்லை என்னும் மிகச்சிறந்த வாழ்க்கை பாடத்தை புரிந்து கொண்டேன். 

இது ஒரு விதம் என்றால், வெளிநாட்டுப் பயணங்கள் வேறு விதமாக வாழ்க்கை தத்துவத்தை புரிய வைத்தன. 

நம் நாட்டிலிருந்து வேறு ஒரு நாட்டிற்கு செல்லும்பொழுது அங்கு தங்குவதற்கு மூன்று மாதமோ, ஆறு மாதமோ, இரண்டு வருடங்களோ தங்கும்படி விசா கிடைக்கும். அத்தனை நாட்கள்தான் அங்கு தங்க முடியும். அதே போல நாமும் இந்த பூமியில் குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே வாழ அனுமதிக்கப் படுகிறோம். விசா முடிந்து விட்டால் தங்க முடியாதது போல நமக்கான காலம் முடிந்து விட்டால் இங்கிருந்து கிளம்ப வேண்டியதுதான். சில சிறப்பு காரணங்களுக்காக விசாவை நீட்டித்துக் கொள்ளலாம் என்பது போல, நம்மால் இங்கு ஏதாவது நன்மை விளையும், என்றால் குருவின் அருளோடு ஆயுளை நீட்டித்துக் கொள்ளலாம். சரி நம் காலம் முடிந்து நாம் கிளம்புகிறோம், நண்பர்கள் வீட்டிலேயே பை சொல்லி விடை கொடுத்து விடுவார்கள். மகனோ, மகளோ ஏர்போர்ட் வரைதான் நம்மோடு வர முடியும். அதன் பிறகு பாவ,புண்ணியம் போல லக்கேஜ், கேபின் பேகேஜ் என்னும் இரண்டு சுமையையும் நாம் மட்டும் தனியாகத்தான் சுமந்து செல்ல வேண்டும். எத்தனைக்கெத்தனை குறைவாக லக்கேஜ் இருக்கிறதோ, அத்தனைக்கத்தனை பயணம் சுகமாக இருக்கும். ஆனால் நாம் எங்கே குறைவாக லக்கேஜ் வைத்துக் கொள்கிறோம்?  செல்லும் இடங்களிலெல்லாம் எதையாவது வாங்கி அதிக சுமையோடுதானே திரும்புகிறோம். அப்போது அதற்கு எக்ஸெல் பேகேஜ் கட்டணம் கட்டித்தான் ஆக வேண்டும். இந்த எக்செஸ் பேகேஜ் கட்டணத்தை நாம் வியாதிக்காக செலவிடும் தொகையோடு ஒப்பிடலாமா?  

லக்கேஜ், அல்லது கேபின் பேகேஜ் குறைவாக இருந்தால், சில சமயம் நாம் எகானமி வகுப்பு டிக்கெட் வாங்கியிருந்தாலும், நம்மை முதல் வகுப்பிற்கு உயர்த்துவார்கள். இதனால் என்ன பயன்? என்று கேட்கலாம். பேகேஜ் அதிகம் எடுத்துச் செல்ல முடியும், விரைவாக வெளியே சென்று விடலாம்.  

நம் நாட்டை அடைந்ததும் இங்கு சுங்க வரி(கஸ்டம்ஸ்) கட்ட வேண்டிய பொருள்களை நாம் வைத்திருந்தால் அதை கட்டாமல் இருக்க முடியாது. அப்படி எதுவும் இல்லை என்றால் க்ரீன் சேனல் வழியே விரைவாக வெளியேறி விடலாம்.  அரசை ஏமாற்றி விலக்கப்பட்ட பொருள்களை கடத்த நினைத்தால் கடுமையான தண்டனை நிச்சயம்.

அதைப்போலவே வரம்பு மீறாமல் வாழும் பொழுது நமது அடுத்த பிறவி நன்றாக அமைந்து விடும். நாலு பேருக்கு நல்லது செய்வதற்காக சில பாவங்களை செய்தால், அதற்கான கூலியை கொடுத்தேயாக வேண்டும். பேராசையால் பெரும் குற்றங்களை செய்யம் பொழுது, தண்டனையிலிருந்து தப்ப முடியாது. 

எப்படி பார்த்தாலும் லெஸ் லக்கேஜ், மோர் கம்ஃபார்ட் என்பது வண்டிப் பயணம், வாழ்க்கைப் பயணம் இரண்டுக்குமே நல்லது. என்ன என் கருத்து சரியா? நீங்கள் நினைப்பதை சொல்லுங்கள். 


Tuesday, November 13, 2018

மசாலா சாட்

மசாலா சாட்  

பயணங்களின் பொழுது பாடல்கள் கேட்பதுண்டு. என் மகனோடு பயணிக்கும் பொழுது ஸ்டாண்ட் அப் காமெடி போடச் சொல்லுவான். எனக்கென்னவோ கெட்ட வார்த்தைகள் நிறைந்த அந்த நகைச்சுவை கேட்க பிடிப்பதில்லை. எனவே பாடல்களுக்குப் பிறகு திருச்சி கே. கல்யாணராமனின் உபன்யாசங்களை போட்டேன். நகைச்சுவையாக, ஜனரஞ்சகமாக, புது விஷயங்களையும் சொல்கிறார். அவ்வப்பொழுது தலை காட்டும் சுய பிரதாபத்தை கொஞ்சம் சகித்துக் கொள்ள வேண்டும். மற்றபடி போகும் வழிக்கும் புண்ணியம்!.
பாடல்களில் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ், அனிருத் என்று எல்லோருடைய பாடல்களும் கேட்டோம். இளையராஜாவின் இசையில் வைரமுத்து எழுதிய சில பழைய பாடல்களையும், ஏ.ஆர்.ஆரின் இசையில் அவர் எழுதிய 'மரங்கள் கேட்டேன் வனமே தந்தனை..' பாடலையும் கேட்ட பொழுது, அதை முழுமையாக ரசிக்க முடியாமல் கடலை சாப்பிடும் பொழுது வாயில் அகப்பட்டு சுவையைக் கெடுக்கும் சொத்தைக் கடலையைப் போல 'மீ டூ' விஷயம் செய்தது.  இவ்வளவு நல்ல கவிஞரா இத்தனை சின்னத் தனமாக நடந்து கொண்டிருக்கிறார்? என்று தோன்றியது.

                                                                         


அதே நேரத்தில் கண்ணதாசனின் நினைவும் வந்தது. அவருக்கு மது மட்டுமல்ல போதை மருந்து பழக்கமும் இருந்தது என்பதை அவரே சொல்லியிருக்கிறார். பெண்கள் விஷயத்திலும் பலவீனமானவர் என்பதும் எல்லோருக்கும் தெரியும். ஆனாலும் அவர்மீது யாருக்கும் வெறுப்பு வந்ததில்லை. 

'போடா போ, காமுகனும் மாண்டான், 
கடவுள் நெறி பேசும் மாமுனியும் மாண்டான்
நம்மை நாம் பாப்போம்  நமதுடலை 
பெண் பார்ப்பாள்..'

'பட்ட கடன் தீர்ப்பதற்கு 
கட்டிக்கொண்ட பெண்களுக்கு 
கொட்டித் தந்த இன்பம் ஒரு கோடி, அதில் 
ஒட்டி வந்த ஞானம் ஒரு பாதி ..'

'ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு 
ஒரு கோல மயில் என் துணையிருப்பு..'

என்றெல்லாம் வெட்ட வெளிச்சமாக, திறந்த புத்தகமாக அவர் வாழ்ந்தது ஒரு காரணமோ?

தீபாவளிக்கு இனிப்புகள் செய்வதும், புத்தாடை அணிந்து கொள்வதும், பட்டாஸு வெடிப்பதும் மட்டுமா சம்பிரதாயம்? வீட்டிற்கு வந்திருக்கும் விருந்தினர்களை சினிமாவுக்கு அழைத்துச் செல்வதும் சம்பிரதாயம்தான். அந்த வகையில் 'பதாயி ஹோ' படம் பார்க்கச் சென்றோம். என்னைத் தவிர எல்லோருக்கும் ஹிந்தி புரியும் என்பதாலும், நகைச்சுவை படம் என்பதாலும் இதைத் தேர்ந்தெடுத்தார்கள். ஹிந்தி படங்களில் கதை என்ன என்று புரிந்து விடும். வசனங்களும் ஓரளவு புரிந்து விடும். நகைச்சுவை காட்சிகளின் பொழுதுதான் என் நிலைமை பரிதாபமாகி விடும். 'த்ரீ இடியட்ஸ்' படத்தில் அரங்கமே அதிர்ந்த ஒரு நகைச்சுவை காட்சியில் நான் மட்டும் கலந்து கொள்ள முடியாமல் பரிதாபமாக உட்கார்ந்திருந்தேன்.திருமண வயதில் ஒரு மகனையும், பிளஸ் டூ படிக்கும் இன்னொரு மகனையும் வைத்துக் கொண்டு மீண்டும் கர்ப்பமாகும் ஒரு மிடில் கிளாஸ் தாய். முதலில் அதை ஏற்றுக்கொள்ள 
முடியாமல் அவமானத்தில் மறுகும் அந்தக் குடும்பத்தினர் பின்னர் மனம் மாறுவதுதான் திரைப்படம். நீனா குப்தா(தாய்), சுரேகா சிக்ரி(மாமியார்) போன்ற தெரிந்த முகங்கள் இருக்கின்றன.  நீனா குப்தாவின் கணவராக வருபவர் நன்றாகவே நடித்திருக்கிறார். முதல் பாதியில் நகைச்சுவை அதிகம் போலிருக்கிறது. எல்லோரும் அதிகம் சிரித்தார்கள். நான் இதை தமிழில் எடுத்தால்(நிச்சயம் எடுத்து விடுவார்கள் என்றுதான் தோன்றுகிறது) யார் யாரை போடலாம் என்று ஆலோசித்துக் கொண்டிருந்தேன். 

என் மகள் இது 'ஃபாதர் ஆஃப் த பிரைட் பார்ட் டூ' வை உல்ட்டா செய்திருக்கும்   படம் என்றாள். நான் FOB part one பார்த்திருக்கிறேன். பார்ட் டூ பார்க்க வேண்டும்.  

Sunday, November 11, 2018

துரு துரு, திரு திரு

துரு துரு, திரு திரு 

"காலணிகள் வாங்கும் பொழுது அளவெடுத்துதானே வாங்குவோம், பிறகு எப்படி சிண்ட்ரெல்லாவின் ஒரு கால் ஷூ மட்டும் நழுவி விழும்?" என்று ஒரு வாண்டு கேட்டதாக ஏஞ்சல் கேட்டிருந்தார். இதைப் போல பல துரு துரு வாண்டுகள் நம்மிடம் கேள்வி கேட்டு நம்மை திரு திருவென்று முழிக்க வைக்கும். அப்படிப்பட்ட சில துரு துரு, திரு திரு விஷயங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.என் பெரிய அக்காவின் பெண் சிறு குழந்தையாக இருந்த பொழுது அவளுக்கு ராமாயணம் கதை சொல்ல ஆரம்பித்தேன். அதில் ராம ஜனன கட்டம். தசரத மகாராஜா புத்திர காமேஷ்டி யாகம் செய்த ஹோம குண்டத்திலிருந்து ஒரு யக்ஷன் கொண்டு வந்த பாயசத்தை தசரதனின் மூன்று மனைவிகளுக்கும் பகிர்ந்து கொடுத்த பிறகு மிச்சமிருந்த பாயசத்தை சுமித்திராவிற்கு இரண்டாவது தடவை கொடுத்து விட, கௌசல்யாவிற்கும், கைகேயிக்கும்  ராமனும், பரதனும் பிறந்தார்கள். சுமித்ரா மட்டும் இரண்டு முறை பாயசம் சாப்பிட்டதால் அவளுக்கு லக்ஷ்மணன், சத்ருஹனன் என இரண்டு குழந்தைகள் பிறந்தன என்று நான் கூறியதும், என் அக்கா பெண், "மறுபடியும் சொல்லுங்கோ" என்றாள். நான் மறுபடியும் கூற, ஏன் அவர்கள் இரண்டு பேருக்கும் ஒரு ஒரு குழந்தை, இவளுக்கு மட்டும் இரண்டு குழந்தைகள்?" என்று கேட்டாள். நான்," அதுதான் சொன்னேனே, பாயசம் கொஞ்சம் மிச்சம் இருந்தது, அதை சுமித்ராவிற்கு கொடுத்தார்கள், அவள் இரண்டு முறை பாயசம் சாப்பிட்டதால் அவளுக்கு இரட்டை குழந்தைகள்." என்றேன். உடனே என் அக்கா மகள்," ஏன் மிச்சமிருந்த பாயசத்தை ஒருத்திக்கு மட்டும் கொடுத்தார்கள்? மூன்று பேருக்கும் ஆளுக்கு கொஞ்சம் கொடுத்திருந்தால் மூன்று பேருக்குமே இரட்டை குழந்தைகள் பிறந்திருக்குமே? என்றாள் நான் என்ன பதில் சொல்ல முடியும்?  திரு திருதான். அப்புறம் மூன்று பேருக்கும் பகிர்ந்து கொடுக்க முடியாத அளவிற்கு குறைச்சலாக இருந்திருக்கும் என்று சமாளித்தேன்.இன்னொரு முறை, என் அக்காக்களின் குழந்தைகள் மற்றும் அவர்களின் தோழர்களுக்கு  தெனாலி ராமன் கதை சொல்லிக் கொண்டிருந்தேன். தெனாலி ராமனுக்கு முன் பிரசன்னமான காளி தன் இரு கைகளில் ஒன்றில் ஒரு கிண்ணத்தில் பால் சாதமும், இன்னொன்றில் தயிர் சாதமும் வைத்துக் கொண்டு அவனிடம், " இந்த இரண்டில் ஏதாவது ஒன்றைத்தான் நீ தேர்ந்தெடுக்க வேண்டும். பால் சாதத்தை சாப்பிட்டால் நீ சிறந்த அறிவாளியாக விளங்குவாய், தயிர் சாதத்தை சாப்பிட்டால் பெரிய செல்வந்தனாக விளங்குவாய், இந்த இரண்டில் எது உன் விருப்பம்?" என்று கேட்கிறாள்,என்று கூறி இந்த இடத்தில் கதையை கொஞ்சம் நிறுத்தி விட்டு, "உங்களுக்கு எதிரில் சாமி வந்து இப்படி கேட்டால், நீங்கள் எதை தேர்ந்தெடுப்பீர்கள்?" என்று கேட்டதும்,  சிலர் தயிர் சாதம் என்றும், சிலர் பால் சாதம் என்றும் கூறினர்.  என் பெரிய அக்காவின் மகன் மட்டும் எதுவும் சொல்லாமல் பேசாமல் இருந்தான். அவனிடம், "என்னடா, நீ எதுவும் கேட்க மாட்டாயா?" என்றதும் அவன், "நான் சாமிட்ட கொழம்பு சாதம்" கேட்பேன் என்றான். அவன் தயிர், மோர் வகையறாக்களை தொட மாட்டான். பால் சாதமும் பிடிக்காது. காரமான உணவுகளை விரும்பி சாப்பிடுவான், அதனால்தான் இப்படி ஒரு பதில். எனக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. அதோடு அவன் சாதுர்யத்தையும் பாராட்டினேன்.

முன்பெல்லாம்அதாவது எழுபதுகளின் இறுதி வரை ஸ்ரீரெங்கத்தில் ஸ்ரீஜெயந்தியின் பொழுது சிறுவர்கள் சப்பரம் செய்து அதில் கிருஷ்ணன் படத்தை வைத்து ஊர்வலமாக எடுத்து வருவார்கள். அதற்கு எல்லா வீடுகளிலும் வந்து "ஸ்ரீஜெயந்திக்கு காசு" என்று கேட்பார்கள். எல்லோரும் அதிகபட்சமாக நாலணா கொடுப்பார்கள். அதைப்போன்ற ஒரு ஸ்ரீஜெயந்தியில் குரூப் குரூப்பாக சிறுவர்கள் வந்து காசு வாங்கி சென்றனர். சிறுமிகள் மட்டும் ஒரு க்ரூப்பாக வந்து ஸ்ரீஜெயந்திக்கு காசு என்று கேட்டபொழுது, நான் சற்று கேலியாக, " இது எந்த கிருஷ்ணருக்கு?" என்றதும் அதிலிருந்த ஒரு பொடிப் பெண், வெடுக்கென்று " எத்தனை கிருஷ்ணர் இருக்கார்? ஒரு கிருஷ்ணர்தானே உண்டு?" என்றதும் நான் விக்கித்துப் போனேன். ஒரு சிறு குழந்தை எத்தனை பெரிய விஷயத்தை அனாயாசமாக  சொல்லி விட்டது!  

என் அண்ணா கூறிய சம்பவம் இது, அவர் ஒரு பள்ளியில் மோட்டிவேஷனல் வகுப்பு எடுக்க சென்ற பொழுது, தன் உரையை முடித்து விட்டு, "உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் கேட்கலாம் என்றதும்,ஒரு பெண் குழந்தை,"அங்கிள் வொய் தி பம்ப்கின்ஸ் ஆர் ஸோ பிக்?" என்று கேட்டதாம். 


வெளிநாட்டில் வசிக்கும் என் அக்காவின் பேத்தி சமீபத்தில் விடுமுறைக்காக சென்னை வந்திருந்த பொழுது, தொலை காட்சியில் திருவிளையாடல் படம் ஓடிக்கொண்டிருந்தது. அதில் பார்வதியாக நடித்த சாவித்திரியின் உடல்முழுவதும் பச்சை வர்ணம் பூசப்பட்டிருந்ததை பார்த்து, " ஏன் இவள் பாடி க்ரீன் கலராக இருக்கிறது?" என்று கேட்டாள்? அவள் பர்வத ராஜாவின் மகள், அதாவது மலை மகள். ஒரு மலையை தூரத்தில் இருந்து பார்க்கும் பொழுது மலை எப்படி தெரியும்? மரங்கள் அடர்ந்து பசுமையாகத்தானே? அதனால்தான் பார்வதியை பச்சை நிறமாக காண்பித்திருக்கிறார்கள்" என்றேன். சரிதானே?

படங்கள் நன்றி கூகுள்.Thursday, November 8, 2018

திருக்கண்டேன் பொன் மேனி கண்டேன் (திருகோவிலூர் திவ்ய தரிசனம்)

திருக்கண்டேன் பொன் மேனி கண்டேன் 
(திருகோவிலூர் திவ்ய தரிசனம்)


அன்று திருகோவிலூரில் நல்ல மழை. தங்க ஒரு இடம் தேடிய அந்த வைணவருக்கு ஒரு வீட்டின் 
இடை கழியில் இடம் கிடைத்தது. அங்கேயே படுத்துக் கொண்டார். சற்று நேரத்தில் கதவு தட்டப் 
பட்டது. திறந்தால்,  மழைக்கு ஒதுங்க இங்கே இடம் கிடைக்குமா? என்று கேட்டபடி வாசலில் ஒரு அந்தணர்! நான் ஒருவன் இங்கே படுத்துக் கொண்டிருந்தேன், நாம் இருவர் உட்கார்ந்து கொள்ளலாம் உள்ளே வாருங்கள் என்று அழைத்தார். அந்த இருவரும் அமர்ந்து கொண்டனர். 

மீண்டும் பட பட படபடவென்று கதவு தட்டப்பட்டது. திறந்தால் இம்முறையும் ஒரு வைணவர் 
நிற்கிறார். "வெளியே நல்ல மழை. அது நிற்கும் வரை இங்கே தங்கி விட்டு செல்லலாமா"? என்று 
வந்தவர் கேட்க,  தாரளமாக... உள்ளே வாருங்கள், நாங்கள் இருவர் அமர்ந்து கொண்டிருக்கிறோம், 
நாம் மூவர் நிற்க முடியும் உள்ளே வாங்கள், என்று அவரையும் வரவேற்றனர். இருக்கும் இடத்தில் 
மூன்று பேரும் நெருக்கி அடித்து நின்று கொண்டிருந்தனர்,மழை சாரலைத் தவிர்க்க கதவையும் சாற்றியாகி  விட்டது. அகவே கும்மிருட்டு! இந்த நிலையில் அந்த மூவருக்கும் இடையே இன்னும் 
ஒருவர் புகுந்தது போல இட நெருக்கடி..."சற்று தள்ளிதான் நில்லுங்களேன் ஏன் இப்படி 
நெருக்குகிரீர்கள்?"  "நான் எங்கே ஐயா நெருக்குகிறேன்? நீங்கள் அல்லவா என்னை நெருக்குகிறீர்கள்?" என்று ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொள்கின்றனர். அந்த மூவருக்கும் இடையே இன்னும் 
ஒருவரும் நிற்கிறார் என்பது எலோருக்கும் தெரிகிறது, ஆனால் அவருடைய உருவம் தென்படவில்லை. ஒரு விளக்கு இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது ஆனால் விளக்கிற்கு எங்கே போவது? 

முதலாமவர்க்கு சட்டென்று ஒரு எண்ணம் உதிக்க ஒரு பெரிய விளக்கை ஏற்றினார். ஆம் இந்த உலகத்தையே ஒரு விளக்காக்கி அதில் சமுத்திரத்தை எண்ணையாக ஊற்றி, கதிரவனையே 
விளக்காக ஏற்றிய விளக்கு.. அதில் அந்த மூவருக்கும் இடையே புகுந்தது யார் என்று ஓரளவுக்கு புலப்பட்டது என்றாலும் தெளிவாக தெரியவில்லை. இன்னொரு விளக்கு இருந்தால் நன்றாக 
இருக்குமே என்று நினைத்த இரண்டாமவர் மற்றொரு விளக்கை ஏற்றினார் அன்பை விளக்காகவும் ஆர்வத்தை நெய்யாகவும் தம் சித்தத்தை திரியாகவும் கொண்ட விளக்கு.. அதை ஏற்றியவுடன் மூன்றாமவருக்கு பளிச்சென்று புலப்பட்டுவிட்டது. "திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்" என்று தொடங்கி தங்களுக்கு இடையே புகுந்திருப்பது சங்கும் சக்கரமும் ஏந்திய தடக்கையினனாகிய நாராயணனே என்று அறிவித்தார். இப்படித்தான் நாலாயிர திவ்ய ப்ரபந்தம் பிறந்தது. அந்த மூவரும் 
வேறு யாரும் இல்லை, பன்னிரெண்டு ஆழ்வார்களில் முதல் மூவரான பொய்கை ஆழ்வார் பூதத்தாழ்வார், மற்றும் பேய் ஆழ்வார், ஆகும். அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த திருத்தலமான திருகோவிலூருக்கு  செல்லும் பாக்கியம் கிடைத்தது.


புராதனமான கோவில். 192 அடி  உயரமுள்ள கிழக்கு கோபுரம் 108 வைணவ திவ்ய தேச கோவில்களில் உயரமான  கோபுரத்தை உடைய ஒன்று. கருடாழ்வாரை சேவித்துக் கொண்டு 
மூலவரை தரிசிக்க உள்ளே செல்கிறோம். எந்த வைணவ கோவிலிலும் இல்லாத வழக்கமாய் 
அர்த்த மண்டபத்தில் விஷ்ணு துர்க்கை காட்சி அளிக்கிறாள். உலகளந்த அண்ணனுக்கு காவலாம் 
தங்கை!! 

அவளை வணங்கி உள்ளே செல்கிறோம். பெருமாளின் த்ரிவிக்ரம கோலத்தை தரிசிக்க விரும்பிய ம்ருகண்டு முனிவருக்கு அவரின் தவத்தை மெச்சி பெருமாள் அளித்த தரிசனம்.  அடடா! என்ன திருக்கோலம்! பிரும்மாண்டமாய், இடது திருவடியை தரையில் ஊன்றி, வலது திருவடியை 
உயர்த்தி, வலது கையில் சங்கும் இடது கையில் சக்கரமும் ஏந்தி புன்னகை தவழும் 
திருமுகத்தோடு 20 அடி உயர சிலா மேனி பார்க்க பார்க்க பரவசமூட்டுகிறது! உயர்த்திய 
திருவடிக்கருகே மஹாலட்சுமி, ஊன்றிய  திருவடியின் கீழே மஹாபலி, ஆதிசேஷன், இடது 
திருவடியை பூஜிக்கும் பிரும்மா என்று அற்புத கோலம்!  கர்ப்பக்ரத்திலேயே முதல் மூன்று 
ஆழ்வார்களையும்,  ம்ருகண்டு மகரிஷியையும் தரிசிக்க முடிகிறது.  பிரகாரத்தில் தனி சந்நிதியில் புஷ்பவல்லி தாயார். 

இந்த கோவிலின் மற்ற சிறப்புகள், 108 வைணவ திவ்ய தேசங்களுள் ஒன்று. அதே போல பஞ்ச கிருஷ்னாரண்யா ஷேத்ரங்களுள் ஒன்று. திவ்ய ப்ரபந்தம் தோன்றிய இடம். திருமங்கை 
ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது. சாதாரணமாக எல்லா கோவில்களிலும் இருப்பதை 
போல வலது  கையில் சக்கரம், இடது கையில் சங்கு என்றில்லாமல்,மாற்றி வலது கையில் சங்கை ஏந்தியிருப்பதால் ஞானத்தை அருளக் கூடியவர் என்று நம்பிக்கை. 

புன்னகை தவழும் பெருமாளின் மலர்ந்த முகத்தை தரிசனம் செய்தால் நம் கவலைகள் மறையும் 
என்று கோவில் தலபுராணம் தெரிவிக்கிறது. உண்மைதான்! உலகளந்த பெருமாளின் அழகை காணும் போது ராமனின் அழகை வர்ணிக்க முயன்ற கம்பர்,தோற்றுப்  போய்  "ஐயோ! இவன் அழகை எப்படி சொல்வேன்?" என்று முடித்திருப்பார். அதுதான் நினைவுக்கு வருகிறது. இந்தக் கால இளசுகளின் பாஷையில் சொன்னால்,"சான்சே இல்ல, அல்டிமேட்!"

பெருமாளின் திருமுகத்தைப் பார்க்கப் பார்க்க நம் மனதில் ஆனந்தம் பெருகுகிறது. எங்கே 
ஆனந்தம் இருக்கிறதோ அங்கே கவலைகள் இருக்குமா என்ன? ஒரு முறை திருகோவிலூர் 
சென்று உலகளந்த பெருமாளை தரிசித்து ஆனந்தம் அடையுங்கள்! விழுபுரத்திலிருந்து 40 கிலோ 
மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் திருகோவிலூருக்கு விழுபுரதிலிருந்து ஏராள பேருந்துகள் 
உள்ளன! 


பி.கு.: இது ஒரு மீள் பதிவு.


Monday, November 5, 2018

அலைச்சல் அனுபவங்கள்

அலைச்சல் அனுபவங்கள் 
திருவண்ணாமலை 
அண்ணாமலையார் கோவில் கோபுரம் 
மலை மீது தவழும் மேகம் 


கிட்டதட்ட பத்து நாட்களாக ஒரே அலைச்சல். பங்களூர், ஷீர்டி, மும்பை, பங்களூர், திருவண்ணாமலை, சென்னை மீண்டும் பங்களூர் என்று சூறாவளி சுற்றுப் பயணம்! திருமணம், பூணூல், பிரிந்தவர் கூடுதல், தினசரி எல்லோரோடும் கதைத்து விட்டு இரவு நேரம் கழித்து உறங்கி, காலையில் சீக்கிரம் எழுந்து, விருந்து சாப்பாடு சாப்பிட்டு, விமானம், பேருந்து, ஆட்டோ, கார் என்று அனைத்திலும் பயணித்து, வரிசைகளில் நின்று…. ஊஃப்! உடம்பு களைத்து விட்டது. தலையிலிருந்து கால் வரை வலி. இன்னும் அசதி தீரவில்லை. இதற்கிடையில் வீட்டிற்கு விருந்தினர் வருகை. விரைந்து வந்து கொண்டிருக்கும் தீபாவளி.

சாயி சத்சரிதாவை படித்துவிட்டு ஷிர்டிக்கு முதல் முறையாக செல்பவர்கள் ஏமாந்து போவார்கள். எல்லா புனித தலங்களையும் போலவே ஷிர்டியும் வியாபார தலமாகி விட்டது. ஆன்லைனில் நாங்கள் புக் பண்ணியிருந்த ஹோட்டல் கோவிலிலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் இருந்ததால் அங்கு தங்காமல், கோவிலுக்கு அருகில் வேறு ஒரு ஹோட்டலில் தங்கினோம். அன்று வியாழக்கிழமையாக இருந்தாலும் நாங்கள் ஷிர்டியை அடைந்த பொழுது, நேரம் அதிகமாகி விட்டதால் அன்று இரவு தரிசனம் செய்ய முடியவில்லை.

ஷீர்டி பாபா கோவில் கோபுரம் 
மறு நாள் காலை முதல் தரிசனம் காணச்சென்றால் அவ்வளவாக கும்பல் இருக்காது என்றார்கள். எங்களிடம் யாரோ சொன்னது போல பல பேரிடம் பலர் சொல்லியிருப்பார்கள் போலிருகிறது. நல்ல கும்பல் இருந்தது. தரிசனம் முடித்து விட்டு வந்து, செல்ஃபோனை திரும்ப பெற்றுக்கொள்ள சென்ற பொழுது காற்று வாங்கியது. ஹூம்!

மும்பையில் நடந்த திருமணம் ஒரு ஃபுயூஷன் வெட்டிங். ஊஞ்சலுக்கு பதிலாக சேரில் மணமக்களை அமரச்செய்து, பாடச் சொன்னார்கள். பாடத்தெரிந்தவர்கள் இல்லாததால், நான், ‘கன்னூஞ்சல் ஆடி நின்றாள் காஞ்சனமாலை மனமகிழ்ந்தாள்..’ தொடங்கி, ‘மல்லிகை முல்லை பூப்பந்தல்..’வரை பாடி தீர்த்து விட்டேன். மேளம் கிடையாது. டி.ஜே.யில் மேளம், அதிலேயே கெட்டி மேளம் கூட இருக்கிறது.

மும்பையிலிருந்து வந்த அடுத்த நாளே திருவண்ணாமலையில் ஒரு பூனூல் கல்யாணதிற்காக செல்ல வேண்டியிருந்தது. திருவண்ணாமலை அதிகம் மாறவில்லை. குறிப்பாக ரமணாஸ்ரமம். ஷிர்டி சாயி பாபா, ரமண மஹரிஷி இருவருமே மிகவும் எளிமையாக வாழ்ந்தவர்கள்தான். ஷிர்டி ஒரு ப்ரார்த்தனை ஸ்தலமாக இருப்பதால் அங்கு லோகாயதமான விஷயங்களை வேண்டிச் செல்பவர்கள் அதிகமாக இருக்கிரார்கள். அதனால் அந்த இடமும் வணிக தலமாக இருக்கிறது. ரமணாஸ்ரமத்துக்கு வருபவர்கள் ஆழமான ஆன்மீக தேடலை உடையவர்களாக இருப்பதால் இன்னும் மாறவில்லை. இதுவும் அவர்களுடைய சங்கல்பமே.

திருக்கோவிலூர் உலகளந்த பெருமாளை தரிசனம் செய்யச் சென்ற பொழுது என் மகனுக்கு வாயு பிடிப்பா, தசைப் பிடிப்பா என்று தெரியாமல் திடீரென்று வயிற்று வலியால் துடிக்க ஆரம்பித்ததும், அங்கு ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று எக்ஸ் ரே, எடுத்து, அதில் எதுவும் ப்ரச்சனை இல்லை என்று தெரிந்து, ஊசி போட்டு, மருந்துகள் வாங்கிக் கொண்டு வந்தது ஒரு தனி கிளை கதை.

ரமணாஸ்ரமத்தில் தியானம் செய்வது ஒரு அற்புத அனுபவம். அந்த அனுபவதிற்குப் பிறகு, “இன்னும் எத்தனை நாட்கள் இப்படி தேடி நிதம் சோறு தின்று பல சின்னஞ் சிறு கதைகள் பேசி, வாடி மிக உழன்று கொண்டிருக்கப் போகிறோமோ?” என்று தோன்றியது.

ரமணாஸ்ரமத்திலிருந்து மலையின் காட்சி 
வீட்டிற்கு வந்ததும் விருந்தினர்களுக்காக கல்கண்டுபாத், வடை என்று  
சம்பிரமமாக சமையல், தீபாவளி பட்சண பிரிபரேஷன், புடவைக்கு மேட்சாக தைக்க கொடுத்திருந்த ப்லௌஸ் சரியாக தைக்கப்பட்டிருப்பதில் சந்தோஷம், இன்னும் மேட்சிங் ஆக உள் பாவாடை வாங்க வேண்டும்.. அடுத்த ஜென்மத்தில் ஞானம் வரலாம்.