கணம்தோறும் பிறக்கிறேன் 

Sunday, December 16, 2018

Sridhara Aiyawal Thiruvisanallur - Part 1

திருவிசநல்லூர் ஸ்ரீதர ஐயாவாள் - கங்கோதாரண உற்சவம் 


கும்பகோணத்திற்கு அருகில் இருக்கும் திருவிசநல்லூரில் 6.12.2018 அன்று அதாவது கார்த்திகை மாதத்து அமாவாசை அன்று கங்கோதாரண உற்சவம் நடைபெற்றது. அன்று திருவிசநல்லூரில் இருக்கும் ஸ்ரீதர ஐயாவாளின் மடத்தில் உள்ள கிணற்றில் கங்கை பொங்கி வருவதாக ஐதீகம். ஆயிரக்கணக்கான மக்கள் அன்று அங்கு சென்று அந்த கிணற்று நீரில் நீராடுவார்கள். 

ஏறக்குறைய அறநூறு ஆண்டுகளுக்கு முன் மைசூர் சமஸ்தானத்தில் திவானாக இருந்தவர் வெங்கடேச தீக்ஷதர் என்பவர். அவருடைய மகனான ஸ்ரீதரன் சிறு வயதிலிருந்தே தெய்வ வழிபாட்டிலும், ஆன்மீக சிந்தனையிலும் அதிக ஈடுபாடு உடையவராக இருந்தார். அதனாலோ என்னவோ தன் தந்தையின் மறைவிற்குப் பிறகு தனக்களிக்கப்பட்ட திவான் பதவியை ஏற்றுக்கொள்ளாமல் திருச்சிராப்பள்ளிக்கு(திருச்சி) புலம் பெயர்ந்தார். 

திருச்சிராப்பள்ளியில் இருக்கும் தாயுமானவர் மீது அதிக பக்தி கொண்டு தினசரி தாயுமானவரை தரிசிப்பதை வழக்கமாக  கொண்டிருந்தார். ஒரு முறை அங்கு பாம்பு கடித்து இறந்த ஒரு சிறுவனை இவர் மீண்டும் உயிர்ப்பிக்க, அந்த ஊர் மக்கள் இவரை தெய்வத்திற்கு நிகராக வணங்க ஆரம்பித்தனர். 

அதை விரும்பாத இவர் அங்கிருந்து, திருவிடைமருதூர், கோவிந்தபுரம் இவைகளுக்கு அருகில் உள்ள திருவிசநல்லூர் கிராமத்தில் குடியேறினார். திருவிடைமருதூரில் உள்ள ஸ்ரீமஹாலிங்கேஸ்வரர் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தார். தினசரி திருவிடைமருதூருக்குச் சென்று மஹாலிங்கேஸ்வரரை தரிசிப்பாராம். 

கனத்த மழை பெய்த ஒரு நாளில் இவரால் திருவிடைமருதூர் செல்ல முடியவில்லை. அதனால் மிகவும் மனது வருத்தப்பட்டுக்  கொண்டிருந்தாராம். அன்று இரவு திருவிடைமருதூர் கோவில் அர்ச்சகர் இவர் வீட்டிற்கு வந்து, "இன்று மழையாக இருப்பதால் உங்களால் கோவிலுக்கு வர முடியாது என்பதால் நானே பிரசாதம் தந்து விட்டு போகலாம் என்று வந்தேன்" என்று கூறி, பிரசாதம் கொடுத்தாராம். அப்போது மழை பெய்து கொண்டிருந்ததால், "இந்த மழையில் நீங்கள் செல்ல வேண்டாம், இரவு எங்கள் வீட்டிலேயே தங்கி விட்டு, காலையில் செல்லுங்கள் என்று அவரை திண்ணையில் உறங்க ஒரு பாயும், குளிராக இருந்ததால் பொருத்திக்கொள்ள ஒரு கம்பளி சால்வையின் தந்திருக்கிறார். காலையில் எழுந்திருந்து பார்த்தால், திண்ணையில் படுத்துத்துக் கொண்டிருந்த அர்ச்சகரை காணவில்லை. தன்னிடம் விடை  கொள்ளாமலேய சென்று விட்டாரே என்று நினைத்துக் கொண்ட ஐயாவாள், மறுநாள் திருவிடைமருதூர் கோவிலுக்குச்சென்ற பொழுது அங்கிருந்த அர்ச்சகரிடம், என்ன நேற்று எனக்கு பிரசாதம் தருவதற்காக எங்கள் வீட்டுக்கு வந்த நீங்கள் என்னிடம் சொல்லிக் கொள்ளாமலேயே வந்து விட்டீர்களே?" என்று கேட்டதும், அந்த அர்ச்சகர், "நானா? உங்கள் வீட்டுக்கா? நான் வரவேயில்லையே?" 
என்றதும்தான் ஸ்ரீதர ஐயாவாளுக்கு சாஷாத் பரமசிவனே தனக்காக, தங்கள் வீட்டுக்கு வந்திருக்கிறார் என்று புரிந்து நெகிழ்ந்து போனாராம். 

ஒரு கார்த்திகை மாத அமாவாசையன்று, அவருடைய தகப்பனாரின் ஸ்ரார்த்தம் அதாவது தகப்பனாருக்கு திதி கொடுக்க வேண்டிய நாள், வீட்டில் சமையல் செய்து கொண்டிருக்கிறார்கள். 
சமையல் வாசனையை மோப்பம் பிடித்த அவர் வீட்டில் வேலை செய்யும் பெண்மணி அவள் கணவனிடம்,"அப்பா, நல்ல வாசனை! இந்த மனமே இவ்வளவு நல்லா இருக்கே? சமையல் எவ்வளவு ருசியா இருக்கும்? நமக்கு கிடைக்குமா?" என்கிறாள். உடனே அவள் கணவன்,"சீ சீ! என்ன புள்ள பேசற?  இன்னிக்கு அவங்க வீட்டில் திதி, நாம அதை சாப்பிடக்கூடாது." என்று அதட்டுகிறான். எதற்காகவோ கொல்லைப்புறம் சென்ற அவரின் காதில் இந்த உரையாடல் விழுகிறது.   

இந்த சாப்பாட்டை சாப்பிட வேண்டும் என்று ஒருவர் ஆசைப்பட்டு விட்டார். ஆகவே அவருக்கு தராமல் இருக்கக்கூடாது என்று திவசத்திற்காக சமைத்த உணவை எடுத்து அந்த குடியானவ தம்பதியினருக்கு வழங்கி விடுகிறார்.

இதைப்பார்த்த சனாதிகர்களான மற்ற பிராமணர்கள், "பிதுர்களுக்காக சமைக்கப்பட்ட உணவை நீங்கள் குடியானவர்களுக்கு வழங்கி விட்டீர்கள். இதனால் திவசம் செய்யம் யோக்கியதையை இழந்து விட்டீர்கள். காசியில் சென்று கங்கையில் நீராடி வந்தால்தான் இந்த தோஷத்திலிருந்து நீங்கள் விடுபட முடியும். அதை செய்து விட்டு வாருங்கள், நாங்கள் உங்களுக்கு திவசம் செய்து வைக்கிறோம்" என்று கூறி விட்டு சென்றுவிட, மனம் வருந்திய ஸ்ரீதர ஐயாவாள், கங்கா தேவி மேல் கங்காஷ்டகம் என்னும் ஸ்லோகத்தை இயற்றுகிறார். உடனே அவர் வீட்டு கிணற்றில் கங்கை பொங்கி பெருகி, அக்கிரஹாரத்தில் பிரவாகமாக ஓடினாளாம். இதைக் கண்ணுற்ற மற்ற பிராமணர்கள் தங்கள் தவறை உணர்ந்து, ஐயாவாள் வீட்டில் திதியை முறையாக செய்து வைத்தார்களாம். 

அதிலிருந்து ஒவ்வொரு கார்த்திகை மாத அமாவாசை அன்றும் ஸ்ரீதர ஐயாவாள் வீட்டில் உள்ள கிணற்றில் கங்கை ஆவிர்பவிப்பதாக ஐதீகம். ஆயிரக்கணக்கான பேர்கள் அன்று அந்த கிணற்று நீரில் நீராடுகிறார்கள். இதை கங்கோத்தாரண உற்சவம் என்கிறார்கள்.  


8 comments:

  1. அருமை. இதுவரை நான் படித்திராத சம்பவம். பின்னர்தான் கேட்கவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி. இப்போது கேட்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

      Delete
  2. இந்த நிகழ்வைக் கேட்டதுண்டு.. படித்ததுண்டு..

    தாங்கள் சொல்லியிருக்கும் விதம் அருமை... வாழ்க நலம்..

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சார். உங்கள் பாராட்டு உற்சாகமளிக்கிறது.

      Delete
  3. இது பற்றி நிறையப் படிச்சுக் கேட்டிருக்கேன். திருவிசநல்லூரும் போய் வந்தோம். ஆனால் கார்த்திகை அமாவாசைக்கு அல்ல. அன்று கூட்டம் தாங்காது!

    ReplyDelete
    Replies
    1. நாங்களும் திருவிசநல்லூர் சென்றிருக்கிறோம்,ஆனால் கார்த்திகை மாதத்தில் அல்ல. அவர் வாழ்ந்த வீட்டை நவீனமாக்கி விட்டார்கள். அது வருத்தமாக இருந்தது.

      Delete
  4. இந்தக் கதை கேட்டதில்லை. புது வடிவமாக இப்படி நீங்கள் வீடியோ வழியாகவும் சொல்வது அருமையாக இருக்கிறது சகோதரி.

    துளசிதரன்

    ஹை பானுக்கா இந்தக் கதை இதுவரை கேட்டதில்லை, வாசித்ததும் இல்லை. புது கதை. அழகான கதை. வீடியோவும் பார்த்தேன். எப்படி இவ்வளவு அழகா கோர்வையா கேமரா முன் சொல்றீங்கக்கா... சூப்பர்...

    கீதா

    ReplyDelete
  5. நன்றி துளசிதரன்.
    மேடைத்தமிழில் இல்லாமல் சாதாரணமாக பேசுகிறேனோ என்று தோன்றியது.அது ஓ.கே வா?

    ReplyDelete