கணம்தோறும் பிறக்கிறேன் 

Friday, March 19, 2021

மறந்தே போச்சு..

 மறந்தே போச்சு..

ஒரு காலத்தில் கொழுப்பு என்பதே உடல் நலத்திற்கு கேடானது என்ற எண்ணம் இருந்தது,ஆனால் இப்போதோ கொழுப்பு என்பதும் உடலுக்கு தேவையான ஒன்றுதான் என்பதோடு கொழுப்பில் இரண்டு வகை உண்டு,ஒன்று நல்ல கொழுப்பு, இன்னொன்று கெட்ட கொழுப்பு என்கிறார்கள். அதைப் போலவேத்தான் மறதியிலும் நல்ல மறதி,கெட்ட மறதி என்று இரண்டு உண்டு.

நமக்கு இழைக்கப்பட்ட துரோகங்களை மறந்து விட்டால் அவைகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள முடியுமா? துரோகங்களை  மன்னிக்கலாம், மறக்கக்கூடாது. 

இயக்குனர் சேரன்,   "என் உதவியாளர்களிடம் செய்த தவற்றையே மறுபடியும் செய்யாதீர்கள், புதிதாக செய்யுங்கள்" என்று கூறுவேன் என்றார். தவறுகளிடமிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டுமென்றால் அதை மறந்தால் எப்படி இயலும்?

ஏதாவது ஒன்றை கற்றுக் கொள்ளும் பொழுது மீண்டும் மீண்டும் அதை செய்யச் சொல்வதற்கு(பயிற்சி) காரணம் கற்றுக் கொண்டதை மறக்க கூடாது என்பதற்காகத்தானே?

நம் வாழ்க்கையில் நடந்த சில விஷயங்களில் நம் கையை மீறி நடப்பவை, நம்மால் மாற்றவே முடியாது என்ற விஷயங்களை மறப்பதுதான் நலம். 

குடும்பத்திலும், நட்பிலும் சில விஷயங்களை மறக்கும் பொழுதுதான் சந்தோஷமாக வாழ  முடியும். சிலர் சிறு வயதில் பட்ட கஷ்டங்களை மறக்காமல் ஆயுள் முழுவதும் வருந்திக் கொண்டே இருப்பார்கள். 

எக்ஸாஸ்ட் ஃபேனை நிறுத்த மறந்ததால் தீ விபத்துகள் நிகழ்ந்திருக்கின்றன.

மனைவியின் பிறந்த நாளையும், தங்கள் திருமணநாளையும் மறப்பதால் குடும்பத்தில் சலசலப்பு நிச்சயம். 

மறதியால் கிடைத்த ஒரு நன்மை, ஞாபகமறதிக்காரர்களைப் பற்றிய ஜோக்குகள். 

திருச்சி.கே.கல்யாணராமன் தன் உபன்யாசங்களில்,"உங்களுடைய மறதிதான் எங்கள் பலம். நீங்கள் ராமாயணத்தையும், மஹாபாரதத்தையும் மறப்பதால்தான் நாங்கள் கதை சொல்லி பிழைக்க முடிகிறது" என்பார். 

நமக்கு ஈடுபாடு இருக்கும் விஷயங்களை நாம் மறப்பதில்லை. நெட் பாங்கிங் கடவுச்சொற்களையும், பின் நம்பர்களையும் மறக்கும் நான் லைப்ரரி மெம்பர்ஷிப் எண்ணை மறக்க மாட்டேன். எப்போதோ படித்த கதை, கவிதை வரிகள் நினைவில் இருக்கும். உறவிலும், நட்பிலும் எல்லோருடைய பிறந்த நாள், திருமண நாள் போன்றவைகளை மறக்காமல் நினைவில் வைத்துக் கொண்டு வாழ்த்துவேன். பிரபலங்கள் உட்பட பலரின் ஜாதகங்கள் கூட எனக்கும் என்னுடைய இன்னொரு சகோதரிக்கும் மனப்பாடம், காரணம் ஈடுபாடு. 

மகா வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை தன் நண்பர்களோடு திருச்சி உறையூரில் இருக்கும் குடமுருட்டி ஆற்றுக்கு குளிக்கச் செல்வாராம். எல்லோரும் பல் தேய்த்து விட்டு ஆற்றில் துளைத்து நீராடி விட்டு திரும்பி வந்தால் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அப்போதும் பல் தேய்த்துக் கொண்டே இருப்பாராம். அதிர்ச்சி அடைந்த நண்பர்கள், "இன்னுமா பல் தேய்த்து முடிக்கவில்லை?" என்று கேட்டால், "சங்கப் பாடலின் ஒரு வரியை யோசித்துக் கொண்டேயிருந்ததில் மறந்து விட்டது" என்பாராம்.

சர்.சி.வி. ராமன் வாக்கிங் சென்று வருகிறேன் என்று கூறி விட்டு நடக்க ஆரம்பித்தால் நடந்து கொண்டே இருப்பாராம், வீட்டிற்கு திரும்பி வர வேண்டும் என்பதே மறந்து விடுமாம் உடன் செல்பவர்கள் யாராவது நினைவூட்ட வேண்டுமாம். ஆனால் இவையெல்லாம் மறதி என்பதில் வராது, ஓவர் தி்ங்கிங் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

ஞாபகமறதியுள்ள மற்றொரு பிரபலம், பாடகர் உன்னி கிருஷ்ணன். அவருடைய ஞாபக மறதியைப் பற்றி அவருடைய தாயாரும், மனைவியும் காஃபி வித் அனு நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டார்கள்.  பொள்ளாச்சிக்கு கச்சேரிக்கு சென்ற பொழுது, ரயில்வே ஸ்டேஷனில் டிக்கெட் கலெக்டரிடம் சென்னை−பொள்ளாச்சி டிக்கெட்டை கோடுப்பதற்கு பதிலாக, பொள்ளாச்சியிலிருந்து சென்னைக்கு வர வேண்டிய ரிடர்ன் டிக்கெட்டை கொடுத்து விட்டாராம். ரூமுக்குச் சென்று ரிடர்ன் டிக்கெட் இல்லாததை பார்த்த அவருடைய அம்மா, நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்களிடம் சொல்லி, அந்த டிக்கெட்டை மீட்டெடுத்தாராம். 

ஹனிமூன் சென்ற பொழுது மனைவியின் பெட்டியை லிஃப்டிலிருந்து எடுக்கவே மறந்து விட்டாராம், மனைவி உடை மாற்றிக்கொள்ள பெட்டியை தேடிய பொழுதுதான் பெட்டியை லிஃப்டிலேயே விட்டு விட்டது நினைவுக்கு வந்து சென்று பார்த்ததில், நல்ல வேளை பெட்டி லிஃப்டிலேயே இருந்திருக்கிறது.

கச்சேரிகளில் பாடல் வரிகள் மறந்து விடுவாராம். வயலின் வாசிப்பவர் எடுத்துக் கொடுத்தால் உண்டு என்று அவரே சிரித்தபடி கூறினார்.

எழுபது வயதாகும் ஒரு முதியவர் தன் மனைவியை "ஹனி","டார்லிங்" என்றெல்லாம் அழைப்பதை பார்த்த ஒரு இளைஞர், "உங்களுக்கு திருமணமாகி இத்தனை வருடங்கள் ஆகியும் மனைவியை, ஹனி,டார்லிங் என்றே அழைக்கிறீர்களே, அவ்வளவு காதலா?" என்று கேட்டானாம்.அதற்கு அந்த முதியவர்,"என் மனைவியின் பெயர் என்ன என்பது பத்து ஆண்டுகளுக்கு முன்பே மறந்து விட்டது,அதை அவளிடம் கேட்க பயம், அதனால்தான் இப்படி கூப்பிட்டு சமாளிக்கிறேன்" என்றாராம். எப்பூ..டி?