கணம்தோறும் பிறக்கிறேன் 

Tuesday, July 4, 2023

பதிலாகும் பதிவு! பிருந்தாவனமும் அதிஷ்டானமும்

 பதிலாகும் பதிவு! பிருந்தாவனமும் அதிஷ்டானமும்


நேற்று(ஞாயிறன்று) எ.பி.யில், "ஸ்ரீரெங்கத்தில் ராமானுஜரின் உடல் பதப்படுத்தபட்டு வைக்கப்பட்டிருப்பதால் அந்த சன்னதிக்குச் சென்றால் குளித்து விட்டுதான் கோவிலுக்குச் செல்ல வேண்டுமா? என்று ஜெயகுமார் சார் கேட்டிருந்தார்.

ஜெயகுமார் சாரின் கேள்விக்கு பதில்: ஆம்! ஸ்ரீரெங்கம் கோவிலுக்குள் தசாவதார சன்னிதிக்குள்தான் ராமானுஜரின் திருமேனி இருக்கிறது. ஆனால் அதை தரிசிப்பது அத்தனை சுலபம் இல்லை. என்னதான் மகானாக இருந்தாலும், ஜீவனைப் பிரிந்த உடல் இருக்கும் இடம் என்பதால் அங்கு சென்று விட்டு கோவிலுக்குள் செல்லக் கூடாது என்றுதான் சொல்வார்கள். பெருமாளை ஏளப் பண்ணும் பொழுது(ஊற்சவர் திருவீதி வலம் வருவதை வைணவர்கள் ஏளப் பண்ணுவது என்பார்கள்) அந்த வழியாக வர மாட்டார். தவிர்க்க முடியாமல் அந்த சன்னதியை கடக்க நேர்ந்தால் வாத்தியங்கள் இசைக்கப்படாது. பெருமாள் உள்ளே சென்றதும் தீர்த்தவாரி நடக்கும். தீர்த்தவாரி என்பது அபிஷேகம். அதாவது பெருமாளே குளிப்பதாக ஐதீகம். இவையெல்லாம் கோவில் ரகசியங்களாக இருந்தவை.

அந்த ராமானுஜரின் திருமேனிக்கு வருடத்தில் ஒரு நாளோ, அல்லது சில குறிப்பிட்ட நாட்களோ குங்குமபூவால் அபிஷேகம் நடக்கும். சிலர் குங்குமப்பூவால் உடலை ஒத்தி எடுப்பார்கள் என்றும் கூறுகிறார்கள். அந்த அபிஷேகத்திற்கு குங்குமப்பூ வாங்கித் தந்து, பிரசாதமாக அந்த குங்குமப்பூவை பெற்று, நரம்பு சம்பந்தமான வியாதி உடையவர்கள் சாப்பிட, வியாதி குணமாகும் என்பது நம்பிக்கை.  

ராகவேந்திர ஸ்வாமிகள் பிருந்தாவனம்

மஹாபெரியவா அதிஷ்டானம்

ராமானுஜரின் உடல் அடக்கம் செய்யப்படாமல் இருப்பதால்தான் அங்கு சென்று விட்டு பெருமாளை தரிசனம் செய்ய செல்லக் கூடாது என்பார்கள். மற்றபடி மகான்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்ட இடங்கள் பூஜிக்கத்தகுந்தவை. உதாரணமாக ராகவேந்திர ஸ்வாமிகளின் பிருந்தாவனம், கோவிந்தபுரம் போதேந்திராள் அதிஷ்டானம். நெரூர் சதாசிவ பிரும்மேந்திராள் அதிஷ்டானம் இவற்றைக் கூறலாம். ரமண மகரிஷி, சேஷத்திரி ஸ்வாமிகள், ஞானானந்தா, யோகி ராம்சூரத்குமார், அரவிந்தர், அன்னை, ஷிர்டி மற்றும் புட்டபர்த்தி சாயிபாபா போன்ற பல மகான்களின் சமாதிகள் வணங்கப்படுபவை. சமீபத்தில் நம்மிடையே வாழ்ந்து மறைந்த காஞ்சி காமகோடி பீடாதிபதி சந்திரசேகர சரஸ்வதி ஸ்வாமிகளின் அதிஷ்டானதிற்கு ஒவ்வொரு மாதமும் அனுஷ நட்சத்திரதன்று வருகை சென்று வழிபடுவதை சிலர் வழக்கமாக வைத்துக் கொண்டுள்ளனர். 

மகான்களின் சமாதி மேல் துளசி செடி வைக்கப்பட்டால் அது பிருந்தாவனம் என்றும், சாளகிராமம் வைக்கப்பட்டால் அதிஷ்டானம் என்றும் அழைக்கப்படும்.

சன்னியாசிகள் மறைந்து, அடக்கம் செய்யப்பட்ட ஒரு வாரத்திற்குள் அந்த இடத்தை தரிசிப்பது மிகவும் சிறப்பாம். எனக்கு அப்படி ஒரு வாய்ப்பு ஒரு முறை கிடைத்தது. ஸ்ரீரங்கதில் இருந்த அஹோபிலம் மடத்து ஜீயர், மறைந்து ஒரு வாரத்திற்குள் அந்த இடத்தை தரிசிக்கும் பாக்கியம் எனக்கு கிட்டியது. ஸ்ரீரெங்கதில் கொள்ளிடக்கரைக்கு அருகில் ஒரு தசாவதார சன்னிதி உண்டு. அங்குதான் ஜீயரின் திருமேனி அடக்கம் செய்யப்பட்டிருந்தது. என் அப்பா அப்போது அங்குதான் இருந்தார். அவரைப்பார்க்கச் சென்றிருந்த என்னை, அப்பாவின் நண்பர் அழைத்துச் சென்று, ஜீயரின் உடல் அடக்கம் செய்யப்பட்டிருந்த இடத்தை சேவிக்க வைத்தார். அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அன்று அங்கு வருகை தரவிருந்தார். அவருக்காக, மரத்தில் சரிவு பாதை அமைத்து, அதன் மீது கம்பளம் விரிக்கும் வேலை ஜரூராக நடை பெற்றுக் கொண்டிருந்தது. பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது, ஏகப்பட்ட கெடுபிடி.. இருந்தாலும் அப்பாவின் நண்பருக்கு அங்கு பல பேரை தெரிந்திருந்ததால் என்னை சுலபமாக அழைத்துச் சென்றார். எல்லாம் குருவருள்!. குரு பூர்ணிமாவாகிய இன்று இந்த கட்டுரையை எழுத நேர்ந்ததும் ஒரு இனிய கோயின்சிடென்ஸ்!