கணம்தோறும் பிறக்கிறேன் 

Tuesday, July 4, 2023

பதிலாகும் பதிவு! பிருந்தாவனமும் அதிஷ்டானமும்

 பதிலாகும் பதிவு! பிருந்தாவனமும் அதிஷ்டானமும்


நேற்று(ஞாயிறன்று) எ.பி.யில், "ஸ்ரீரெங்கத்தில் ராமானுஜரின் உடல் பதப்படுத்தபட்டு வைக்கப்பட்டிருப்பதால் அந்த சன்னதிக்குச் சென்றால் குளித்து விட்டுதான் கோவிலுக்குச் செல்ல வேண்டுமா? என்று ஜெயகுமார் சார் கேட்டிருந்தார்.

ஜெயகுமார் சாரின் கேள்விக்கு பதில்: ஆம்! ஸ்ரீரெங்கம் கோவிலுக்குள் தசாவதார சன்னிதிக்குள்தான் ராமானுஜரின் திருமேனி இருக்கிறது. ஆனால் அதை தரிசிப்பது அத்தனை சுலபம் இல்லை. என்னதான் மகானாக இருந்தாலும், ஜீவனைப் பிரிந்த உடல் இருக்கும் இடம் என்பதால் அங்கு சென்று விட்டு கோவிலுக்குள் செல்லக் கூடாது என்றுதான் சொல்வார்கள். பெருமாளை ஏளப் பண்ணும் பொழுது(ஊற்சவர் திருவீதி வலம் வருவதை வைணவர்கள் ஏளப் பண்ணுவது என்பார்கள்) அந்த வழியாக வர மாட்டார். தவிர்க்க முடியாமல் அந்த சன்னதியை கடக்க நேர்ந்தால் வாத்தியங்கள் இசைக்கப்படாது. பெருமாள் உள்ளே சென்றதும் தீர்த்தவாரி நடக்கும். தீர்த்தவாரி என்பது அபிஷேகம். அதாவது பெருமாளே குளிப்பதாக ஐதீகம். இவையெல்லாம் கோவில் ரகசியங்களாக இருந்தவை.

அந்த ராமானுஜரின் திருமேனிக்கு வருடத்தில் ஒரு நாளோ, அல்லது சில குறிப்பிட்ட நாட்களோ குங்குமபூவால் அபிஷேகம் நடக்கும். சிலர் குங்குமப்பூவால் உடலை ஒத்தி எடுப்பார்கள் என்றும் கூறுகிறார்கள். அந்த அபிஷேகத்திற்கு குங்குமப்பூ வாங்கித் தந்து, பிரசாதமாக அந்த குங்குமப்பூவை பெற்று, நரம்பு சம்பந்தமான வியாதி உடையவர்கள் சாப்பிட, வியாதி குணமாகும் என்பது நம்பிக்கை.  

ராகவேந்திர ஸ்வாமிகள் பிருந்தாவனம்

மஹாபெரியவா அதிஷ்டானம்

ராமானுஜரின் உடல் அடக்கம் செய்யப்படாமல் இருப்பதால்தான் அங்கு சென்று விட்டு பெருமாளை தரிசனம் செய்ய செல்லக் கூடாது என்பார்கள். மற்றபடி மகான்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்ட இடங்கள் பூஜிக்கத்தகுந்தவை. உதாரணமாக ராகவேந்திர ஸ்வாமிகளின் பிருந்தாவனம், கோவிந்தபுரம் போதேந்திராள் அதிஷ்டானம். நெரூர் சதாசிவ பிரும்மேந்திராள் அதிஷ்டானம் இவற்றைக் கூறலாம். ரமண மகரிஷி, சேஷத்திரி ஸ்வாமிகள், ஞானானந்தா, யோகி ராம்சூரத்குமார், அரவிந்தர், அன்னை, ஷிர்டி மற்றும் புட்டபர்த்தி சாயிபாபா போன்ற பல மகான்களின் சமாதிகள் வணங்கப்படுபவை. சமீபத்தில் நம்மிடையே வாழ்ந்து மறைந்த காஞ்சி காமகோடி பீடாதிபதி சந்திரசேகர சரஸ்வதி ஸ்வாமிகளின் அதிஷ்டானதிற்கு ஒவ்வொரு மாதமும் அனுஷ நட்சத்திரதன்று வருகை சென்று வழிபடுவதை சிலர் வழக்கமாக வைத்துக் கொண்டுள்ளனர். 

மகான்களின் சமாதி மேல் துளசி செடி வைக்கப்பட்டால் அது பிருந்தாவனம் என்றும், சாளகிராமம் வைக்கப்பட்டால் அதிஷ்டானம் என்றும் அழைக்கப்படும்.

சன்னியாசிகள் மறைந்து, அடக்கம் செய்யப்பட்ட ஒரு வாரத்திற்குள் அந்த இடத்தை தரிசிப்பது மிகவும் சிறப்பாம். எனக்கு அப்படி ஒரு வாய்ப்பு ஒரு முறை கிடைத்தது. ஸ்ரீரங்கதில் இருந்த அஹோபிலம் மடத்து ஜீயர், மறைந்து ஒரு வாரத்திற்குள் அந்த இடத்தை தரிசிக்கும் பாக்கியம் எனக்கு கிட்டியது. ஸ்ரீரெங்கதில் கொள்ளிடக்கரைக்கு அருகில் ஒரு தசாவதார சன்னிதி உண்டு. அங்குதான் ஜீயரின் திருமேனி அடக்கம் செய்யப்பட்டிருந்தது. என் அப்பா அப்போது அங்குதான் இருந்தார். அவரைப்பார்க்கச் சென்றிருந்த என்னை, அப்பாவின் நண்பர் அழைத்துச் சென்று, ஜீயரின் உடல் அடக்கம் செய்யப்பட்டிருந்த இடத்தை சேவிக்க வைத்தார். அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அன்று அங்கு வருகை தரவிருந்தார். அவருக்காக, மரத்தில் சரிவு பாதை அமைத்து, அதன் மீது கம்பளம் விரிக்கும் வேலை ஜரூராக நடை பெற்றுக் கொண்டிருந்தது. பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது, ஏகப்பட்ட கெடுபிடி.. இருந்தாலும் அப்பாவின் நண்பருக்கு அங்கு பல பேரை தெரிந்திருந்ததால் என்னை சுலபமாக அழைத்துச் சென்றார். எல்லாம் குருவருள்!. குரு பூர்ணிமாவாகிய இன்று இந்த கட்டுரையை எழுத நேர்ந்ததும் ஒரு இனிய கோயின்சிடென்ஸ்!

26 comments:

  1. ஸ்ரீரங்கம் கோவில் - புதிய தகவல்கள்.  ஸ்ரீரங்கம் சென்றபோது சரியாகப் பார்க்காமல் ராமானுஜர் சன்னதி சென்று வந்த நினைவு.  அதிருஷ்டம் இல்லை.  காஞ்சி மகானை இன்று வரை தரிசிக்கவில்லை.  சென்ற வாரம் கூட பாஸ் என் தங்கையுடன் அதிஷ்டானம் சென்று வந்தார்.  எனக்கு வாய்ப்பு அமையவில்லை.

    ReplyDelete
    Replies
    1. மஹா பெரியவா அதிஷ்டானம் செல்லவில்லையா? அவர் இன்னும் உங்களை அழைக்கவில்லை. விரைவில் தரிசனம் கிடைக்கட்டும்.

      Delete
  2. அதிஷ்டானம் - பிருந்தாவனம் விளக்கமும் இன்றுதான் தெரிந்து கொண்டேன்.

    ReplyDelete
  3. விவரமான கட்டுரை. இன்றைய மாறிய அவசர உலகில் சாவுக்குச் சென்று விட்டு அங்கிருந்து நேரே அலுவலகம் செல்லும் நபர்களையும் நான் கண்டிருக்கிறேன். பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல என்பதே என் கோட்பாடு.
    நன்றி
    Jayakumar

    ReplyDelete
    Replies
    1. எல்லாவற்றிலும் மாற்றங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. மாற்றம் ஒன்றே மாறாதது.

      Delete
  4. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. கேள்விக்கு பதிலாக அமைந்த பதிவில் விபரங்களை படித்து தெரிந்து கொண்டேன். ஸ்ரீரங்கம் கோவில் பற்றிய விபரங்களும் எனக்குப் புதிதுதான். நாங்கள் சென்ற வருடத்திற்கு முந்தைய வருடம் ஸ்ரீ ரங்கம் கோவிலுக்குச் சென்று ஸ்ரீ ரங்க நாதரை தரிசித்து வந்தோம். அங்கு முறையாக நிறைய சன்னிதிகளை பார்க்கவில்லை. அதில் ஸ்ரீ ராமானுஜர் சன்னதியும் செல்லத் தெரியவில்லை. (பெரிய கோவில் அல்லவா? சென்ற நேரமும் குறைவு. இதில் அனைத்தும் தரிசிக்க வேண்டிய எங்கள் "நேரமும்" அப்போது அமையவில்லை என்றுதான் நினைக்கிறேன்.) இன்னமும் ஒருதடவை சென்று எல்லா சன்னதிகளையும் பார்க்க வேண்டுமென ஆசை இருக்கிறது. அதற்கும் இறைவன்தான் அருள வேண்டும்.

    பிருந்தாவனம், அதிஷ்டானம் வேறுபாடு இன்று தெரிந்து கொண்டேன். இறையருளும், குருவருளும் இணைந்து அமைந்தால், உடல், மன சந்தோஷங்கள் ஒரளவு தளர்வின்றி வாழ்வில் நீடித்து இருக்கும். தங்களின் பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீரெங்கம், மதுரை போன்றவை நிதானமாக பார்க்க வேண்டியவை. அடுத்த முறை நாம் சேர்ந்து செல்லலாம். உங்களுக்கு வழிகாட்டியாக நான் வருகிறேன்.

      Delete
  5. தகவல்கள் தெரிந்தது பானுக்கா.
    எனக்கு இப்படியான விஷயங்கள் எதுவுமே தெரிந்ததில்லை.

    //மகான்களின் சமாதி மேல் துளசி செடி வைக்கப்பட்டால் அது பிருந்தாவனம் என்றும், சாளகிராமம் வைக்கப்பட்டால் அதிஷ்டானம் என்றும் அழைக்கப்படும்.//

    இதுவும் இப்போதுதான் அறிகிறேன்..

    கீதா

    ReplyDelete
    Replies
    1. அறிந்து கொண்டது குறித்து மகிழ்ச்சி!

      Delete
  6. இந்தத் தகவல்கள் எல்லாம் இப்போதுதான் அறிகிறேன், பானுக்கா.

    மகான்களின் சமாதி மேல் துளசி செடி வைக்கப்பட்டால் அது பிருந்தாவனம் என்றும், சாளகிராமம் வைக்கப்பட்டால் அதிஷ்டானம் என்றும் அழைக்கப்படும்.//

    இதுவும் இந்த வித்தியாசமும் இப்போதுதான் தெரிந்து கொண்டேன்.

    கீதா

    ReplyDelete
  7. பிருந்தாவனமும் அதிஷ்டானமும் பதிவு அருமை.
    மகான்களின் தரிசனம் நல்லது.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி அக்கா! நன்றி!

      Delete
  8. அதிஷ்டானம், பிருந்தாவனம் விளக்கம் தெரிந்திருந்தாலும் இங்கே கொடுத்திருப்பது மிகப் பொருத்தமாக அமைந்து விட்டது. நாங்க இருவருமே இன்னமும் ஸ்ரீரங்கம் கோயிலில் ஸ்ரீராமானுஜரின் தரிசனத்திற்குச் சென்றதில்லை. ஆனால் மஹா பெரியவா அதிஷ்டானம், மந்த்ராலயம், போதேந்திராள் அதிஷ்டானம் போன்றவை போயிருக்கோம். இங்கேயே பக்கத்தில் திருப்பட்டூரில் சித்தர்களின் ஜீவ சமாதி உள்ள கோயில்கள் உள்ளன. அவற்றுக்கெல்லாமும் போயிருக்கோம். நெரூர் போக மிகுந்த முயற்சி எடுத்தும் கிடைக்கவில்லை. மாயவரம் அருகே உள்ள சித்தர் காடு கூடப் போயிட்டு வந்தோம்.

    ReplyDelete
    Replies
    1. நானும் ஸ்ரீரெங்கத்தில் பல ஆண்டுகள் வசித்திருந்தாலும், ராமானுஜர் திருமேனி தரிசனம் செய்ததில்லை. அதற்கெல்லாம் பெரிய இடத்து சிபாரிசு தேவை. நெரூர் செல்ல வேண்டும் என்று எங்க்கும் பல வருடங்களாக ஆசை. அங்கு ஒரு முஸ்லிம் பிரமிடு ஒன்றை கட்டியிருக்கிறாராம், அதற்குள் அமர்ந்து தியானம் செய்யும் பொழுது மனம் விரைவில் ஒருமைப்படுமாம். என் தோழி ஒருத்தி சொன்னாள். கட்டியிருப்பது முஸ்லிம் என்றாலும், மதத்திற்கு அப்பார்பட்ட இடமாம்.
      முடிந்தால் பின்னவாசல் சென்று, அங்கிருக்கும் பின்னவாசல் பெரியவா அதிஷ்டானத்தை தரிசனம் செய்யுங்கள். பின்னவாசல் லால்குடி, பூவாளூருக்கு அருகில் கொள்ளிடத்தின் வடகரையில் உள்ளது.

      Delete
  9. அதிஷ்டானம், பிருந்தாவனம் விளக்கம் தெரிந்திருந்தாலும் இங்கே கொடுத்திருப்பது மிகப் பொருத்தமாக அமைந்து விட்டது. நாங்க இருவருமே இன்னமும் ஸ்ரீரங்கம் கோயிலில் ஸ்ரீராமானுஜரின் தரிசனத்திற்குச் சென்றதில்லை. ஆனால் மஹா பெரியவா அதிஷ்டானம், மந்த்ராலயம், போதேந்திராள் அதிஷ்டானம் போன்றவை போயிருக்கோம். இங்கேயே பக்கத்தில் திருப்பட்டூரில் சித்தர்களின் ஜீவ சமாதி உள்ள கோயில்கள் உள்ளன. அவற்றுக்கெல்லாமும் போயிருக்கோம். நெரூர் போக மிகுந்த முயற்சி எடுத்தும் கிடைக்கவில்லை. மாயவரம் அருகே உள்ள சித்தர் காடு கூடப் போயிட்டு வந்தோம்.

    ReplyDelete
  10. எனது கருத்தும் இதுவே இறந்தவர் சமாதிக்கு சென்றால் குளித்த பிறகே வீட்டுக்குள் செல்லவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்து சரியானதுதான். நன்றி.

      Delete
  11. அபத்தமான பதிவு. எந்த ஆதாரத்தின் பேரில் இதை எழுதினீர்கள் என்று தெரியவில்லை. எழுதுவதற்கு முன் செய்தி உண்மையா என்று பார்க்க மாட்டீர்களா?
    ஸ்வாமி ராமானுஜர் மனிதப் பிறவி அல்லர். ஆதிசேஷனின் அவதாரம். ஶ்ரீமன் நாராயணனின் கட்டளைப்படி ஆதிசேஷன் ராமானுஜராக அவதரிக்கிறார்.
    ஶ்ரீரங்கத்தில் பிறந்தவள் நான். எத்தனையோ முறை ஸ்வாமியின் சந்நிதிக்கு போய்விட்டு வந்திருக்கிறேன். ஒருதடவை கூட எங்கள் பாட்டியோ அம்மாவோ குளித்துவிட்டு வா என்று சொல்லியதில்லை.
    ஸ்வாமி ராமானுஜர் இன்னும் வாழ்ந்து வருவதாக தான் ஶ்ரீவைஷ்ணவர்கள் எண்ணுகிறோம். இன்றைக்கும் தினமும் கோவில் நடைமுறைகளை ஸ்வாமியிடம் சொல்லிவிட்டு வந்துதான் நடத்துவார்கள். அவரது சந்நிதியில் தான் தினசரி தமிழ் திவ்ய பிரபந்தங்கள் சேவிக்கப்படும்.

    அவர் பரமபதித்தவுடன் ஶ்ரீ ரங்கநாதன் கட்டளை படி அவரது திருமேனி கோவிலுக்கு உள்ளேயே திருப்பள்ளி படுத்தப் பட்டது.

    தயவு செய்து உடனடியாக இந்தப் பகுதி யை நீக்கவும். உலகமே போற்றும் ஜகதாசாரியனை பற்றி வேண்டுமென்றே
    அவதூறு எழுதியிருப்பதாக நான் உங்கள் மேல் வழக்கு தொடுக்கும் நிலை வர வேண்டாம்.

    ReplyDelete
    Replies
    1. நான் மிகவும் மதிக்கும் சமயத் தலைவர்களுள் முதன்மையானவர் ஸ்ரீமத் ராமானுஜர். அவர் மீது அவதூறு கிளப்பும் அளவிற்கு எனக்கு எந்த தகுதியும் கிடையாது. எனக்கு தெரிந்த தகவல்களை பகிர்ந்து கொண்டேன். நன்றி

      Delete
  12. மிகவும் அபத்தமான பதிவு. ஒரு தகவலைப் பகிர்வதற்கு முன் சரியாக தெரிந்து கொண்டு எழுத வேண்டும். நான் ஸ்ரீரங்கத்தில் பிறந்தவள். இன்றும் என் மாமாக்கள் ஸ்ரீரங்கத்தில் இருக்கிறார்கள். ஸ்வாமி சந்நிதிக்கு ஒவ்வொரு முறை ஸ்ரீரங்கம் போகும்போதும் போய் சேவித்துவிட்டு வருவேன். ஒருமுறை கூட ஏன் பாட்டியோ மாமாக்களோ குளித்துவிட்டு வா என்று சொல்லியதில்லை.
    நேற்று இரவு இந்தப் பதிவைப் படித்ததுமே என் எதிர்ப்பை இங்கு பதிவு செய்தேன். அதை ஏனோ நீங்கள் இன்னும் பிரசுரிக்கவில்லை.
    எத்தனை பெரிய அவமானம் அவதூறு கிளப்பியிருக்கிறீர்கள் நீங்கள்! அதிர்ச்சியாகவும் வருத்தமாகவும் இருக்கிறது. படித்தவர்களும் இந்தச் செய்தி உண்மையா தவறா என்று யோசித்துப் பார்க்காமல் பதிலை எழுதியிருக்கிறார்கள். தகவலைச் சொல்லுபவர்களுக்கு முதலில் பொறுப்பு வேண்டும். எந்த ஆதாரத்தின் பேரில் இதை எழுதினீர்கள் என்று தெரியவில்லை. ஆதாரத்தைக் காட்டுங்கள் நான் என் எதிர்ப்பை வாபஸ் வாங்கிக் கொள்ளுகிறேன்.
    உடனடியாக இப்படி ஒரு பொய்த் தகவலைக் கொடுத்ததற்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டு இந்த பதிவை எடுத்துவிடுங்கள். ஒவ்வொரு ஸ்ரீவைஷ்ணவனுடைய மனதையும் புண்படுத்தியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
  13. கமெண்ட் மாடரேஷன் செய்து பழக்கமில்லாததால் தினசரி பார்த்து அப்ரூவ் பண்ண வேண்டும் என்பது தெரியவில்லை. அதனால்தான் உங்கள் கமெண்ட் வெளியாகவில்லை. தாமததிற்கு மன்னிக்கவும்.

    ReplyDelete
  14. Akkas, I do not know anything about these information or samprathayams followed. But When I went through the net i got to read this...

    https://www.srirangapankajam.in/blogs/ramanujacharya-body-preserved.php#:~:text=Srirangam%20Ramanujar's%20shrine%20is%20located,used%20to%20protect%20the%20mummy

    geetha

    ReplyDelete
  15. அன்புள்ள பானு,
    உங்கள் மேல் personal ஆ எனக்கு எந்தவிதக் கோபமும் இல்லை. நீங்கள் எழுதிய பதிவின் மேல் தான் வருத்தம்.
    தவறான விஷயத்தைப் பரவ விடக் கூடாது. அதனால் தான் அந்த பதிவை எடுத்த விடச் சொன்னேன். ஆனால் எடுக்க உங்களுக்கு விருப்பம் இல்லை என்று புரிந்து கொண்டேன்.
    எனது எதிர்ப்பு அங்கு இருக்கும் வரை அந்தப் பதிவு ஸ்வாமியின் பெருமைக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது. அவரது வாழ்நாளிலேயே பலவிதமான எதிர்ப்புகளை எதிர்கொண்டவர் அவர்.
    நான் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றாலும் எதுவும் ஆகியிருக்காது. அதற்கெல்லாம் அப்பாற்பட்டவர் அவர். ராமானுஜ தாசி என்று மிகுந்த பெருமையுடன் சொல்லிக் கொள்பவள் நான். என் மன நிம்மதிக்காக என் எதிர்ப்பைத் தெரிவித்தேன். குரும் பிரகாஷயேத் தீமான் என்பார்கள். அதாவது குருவின் பெருமையை பரப்ப வேண்டும். ஒரு சிஷ்யனுக்கு மிகவும் தேவையான குணம் இது. அவருக்கு ஒரு
    இழுக்கு என்றால் பொங்கி எழ வேண்டும். அதைத்தான் நான் செய்திருக்கிறேன்.
    மறுபடியும் சொல்லுகிறேன். உங்கள் மேல் எந்தக் கோபமும் இல்லை.
    இன்னொரு விஷயம்
    ஸ்வாமியின் சந்நிதிக்கு அருகில் பெருமாள் எழுந்தருளும் போது வாத்ய இசைகளை நிறுத்திவிட்டு இராமானுச நூற்றந்தாதி சேவிப்பார்கள். நம் இராமானுசனின் பெருமையை எந்தவிதத் தடங்கலும் இல்லாமல் கேட்க விரும்புவாராம் நம் பெருமாள்.
    நன்றி.

    ReplyDelete
  16. உங்களுக்கு என் மீது தனிப்பட்ட முறையில் எந்தவித மனத்தாங்கலும் இல்லை என்பது நீங்கள் எழுதியிருக்கும் விதத்திலேயே தெரிகிறது. நீங்கள் என் கருத்தை மட்டுமே மறுத்திருக்கிறீர்கள், என்னை பர்ஸ்னலாக அட்டாக் பண்ணவில்லை அதற்கு நன்றி. உங்கள் நேர்மையையும், குரு பக்தியையும் பாராட்டுகிறேன். தகவலுக்கு நன்றி.

    ReplyDelete