நாள் காட்டியும், நாள் குறிப்பும்
புது வருடம் என்றால் தவிர்க்க முடியாத விஷயங்களில் முக்கியமானவை காலண்டரும் டைரியும். புது வருடம் பிறக்கும் பொழுது புது காலண்டர் வீட்டில் இருந்தே ஆக வேண்டும் என்று நினைக்காத குடும்பஸ்தர்கள் உண்டா? குறிப்பாக ஆண்களுக்கு டைரியில் இருக்கும் ஆர்வம் பெண்களுக்கு பண்டிகைகளுக்கு புத்தாடை வாங்கி கொள்வதில் இருக்கும் ஆர்வத்திற்கு நிகரானது.
பெண்கள் காலண்டரில் காட்டும் ஆர்வத்தை டைரியில் காட்டுவதில்லை. நல்ல டைரி ஏதாவது காம்ப்ளிமென்ட்டாக கிடைத்து, அதை வீட்டம்மாவிடம் ஐயா கொடுத்தாலும், அதில், தொலைக்காட்சியில் காட்டப்படும் சமையல் குறிப்புகள், பரிகார ஸ்லோகங்கள், போன்றவற்றை எழுதி வைக்கத்தான் பயன் படுத்துவார்கள். சிலர் ஸ்ரீ ராமஜெயம் எழுதவும் உபயோகப்படுத்திக் கொள்வதுண்டு.
தினசரி கணக்கெழுதும் எங்கள் தாத்தாவுக்கு அதற்கு லிஃ ப்கோ டைரிதான் வேண்டும். எங்கள் தாத்தா வயதொத்த பெரியவர்கள் பலருக்கு தினசரி டைரி எழுதும் பழக்கமிருந்தது. எங்கள் அப்பாவின் மாமா தினசரி விடாமல் டைரி எழுதுவார். ஒவ்வொரு வருடமும் புது டைரி வாங்கிய பிறகு சென்ற வருடத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை புது டைரியில் குறித்து வைத்து விடுவார். உதாரணமாக 2015 டிசம்பர் 2ல் சென்னையில் வெள்ளம் வந்ததல்லவா, அதை 2016 டைரி வாங்கியவுடன் டிசம்பர் மாத ரெண்டாம் தேதி அன்று சென்ற வருடம் வெள்ளம் வந்தது என்று குறித்து வைத்துக் கொள்வதோடு ஒவ்வொரு வருடமும் அப்டேட்டும் செய்து கொள்வார். இதனால் அவருடைய ஞாபக சக்தி மிகப் பிரமாதமாய் இருக்கும். குடும்பத்தில் நடந்த எல்லா நிகழ்வுகளையும் வருடம், தேதி, கிழமையோடு சொல்வார்.
அது மட்டுமல்ல நெருங்கிய உறவினர்களுக்கு குழந்தை பிறக்கும் பொழுது பிறந்த தேதி, கிழமை, நட்சத்திரம் நேரம் இவற்றை குறித்து வைத்துக் கொள்வார். எங்கள் குடும்பத்தில் பலர் தங்கள் குழந்தைகளுக்கு ஜாதகம் குறிக்க வேண்டும் என்னும் பொழுது அவரிடமிருந்துதான் தங்கள் குழந்தைகளின் பிறந்த விவரங்களை பெற்றுக் கொள்வார்கள். வருடத்தை சொன்னால் அந்த வருட டைரியை எடுத்துப் பார்த்து, தேவையான தகவல்களை சொல்லி விடுவார்.
மற்றபடி வேறு யாரும் அவ்வளவு முறையாக நாட்குறிப்பு எழுதி நான் அறியவில்லை. பெரும்பான்மையோர் அதிக பட்சமாக இரண்டு மாதம் வரை எழுதுகிறார்கள் பின்னர் லாண்டிரி கணக்கு எழுதத்தான் பயன்படும், அல்லது சும்மா கிடக்கும். சுஜாதா டைரி எழுதுவதை குறித்து,"மற்றவர்கள் டைரியை படிப்பது அநாகரீகம், நாம் எழுதுவதை மற்றவர்கள் படிக்கக் கூடாது என்றால் ஏன் டைரி எழுத வேண்டும்? அதனால் எழுதுவதில்லை" என்று கூறியிருந்தார்.
என் சிறு வயதில் நிறைய டைரிகள் வீட்டிற்கு வரும். அதன் பிறகு பேப்பர் விலை, அச்சிடும் செலவு இவை அதிகமானதும் பலர் டைரிகள் கொடுப்பதை நிறுத்தி விட்டார்கள்.
காலண்டர்கள் இன்னும் தங்கள் மவுசை இழக்கவில்லை. அப்போதெல்லாம் திருச்சியில் சிந்தாமணி சூப்பர் மார்க்கெட் காலண்டர் மிகவும் பிரசித்தி. அதில் தேதி பெரிய எழுத்தில் அச்சிடப்பட்டிருக்கும், மேலும் பக்கவாட்டில் தேதி குறிப்பிடப்பட்டு இடம் விடப்பட்டிருக்கும். அதில் பால் கணக்கு, போன்றவை குறித்துக் கொள்ளலாம். அதை பெண்கள் மிகவும் விரும்பி சமையல் அறையில் மாட்டி வைத்துக் கொள்வார்கள்.
எனக்கு நினைவில் இருக்கும் வேறு சில பிரபலமான காலண்டர்கள் என்றால் மேட்டூர் கெமிக்கல்ஸ் வெளியிடும் காலண்டர். ஒவ்வொரு வருடமும் ஆயில் பெயிண்டிங்கில் மிக அழகான கடவுள் படங்களை வெளியிடுவார்கள். அவற்றில் மிக முக்கியமானவை ஸ்ரீகுருவாயூரப்பன், மீனாட்சி கல்யாணம் போன்றவை. அவைகளை பலர் சட்டமிட்டு தங்கள் பூஜை அறையில் மாட்டி வைத்திருக்கிறார்கள். பின்னர் மேட்டூர் கெமிக்கல்ஸ் காலண்டர் வெளியிடுவதை நிறுத்தி விட்டார்கள்.
ஏர் இண்டியாவின் காலண்டர்கள் ஒவ்வொரு வருடமும் இந்தியாவின் பாரம்பரிய சிறப்பை விளக்குவதாக இருக்கும். இப்போது அவையும் வருவதாக தெரியவில்லை.
பாம்பே டையிங் காலண்டர்கள் பிரும்மச்சாரிகளுக்காக என்று நினைக்கிறேன். ஓவ்வொரு வருடமும் அந்த வருடத்தின் பிரபல பாலிவுட் நடிகைகளின் பெரிய அளவு புகைப்படம் இடம் பெற்றிருக்கும் பெரிய சைஸ் காலண்டர்கள் அவை.
இப்போது நிறைய பேர் விரும்புவது GRT நிறுவனத்தின் காலண்டர் என்று நினைக்கிறேன். ஒரு மினி பஞ்சாங்கம் போல அதில் எல்லா விவரங்களும் அடங்கியிருக்கும். அதைப் போலவே வேறு சில நகை கடைகளும் காலண்டர்கள் வெளியிடுவதே அதன் சிறப்பை உணர்த்துகிறதே. இதைத் தவிர தினமலர் காலண்டருக்கும் நல்ல டிமாண்ட் இருக்கிறது. பாலக்காட்டுக்காரர்கள் விரும்புவது மாத்ரு பூமி காலண்டர்களை.
![]() |
| இது அட்லாண்டாவிற்கான காலண்டர் |
டேட் ஷீட் காலண்டர் எல்லாம் ஒரே மாதிரி அமைப்பு கொண்டவைதான். கிரிகோரியன் காலண்டர் தேதி (ஆங்கில வருட தேதி), முஸ்லீம்களுக்கான காலண்டர் தேதி, இந்துக்களுக்கான தேதி என்ற மூன்றோடு அந்த நாளின் நட்சத்திரம், யோகம், நல்ல நேரம், போன்ற விஷயங்கள் தவிர, அகத்திக்கீரை சாப்பிடுவது வாய்ப்புண்ணை ஆற்றும் போன்ற தகவல்களும் இடம் பெற்றிருக்கும்.
மஸ்கட்டில் எங்களுக்கு உயர் அதிகாரியாக பணியாற்றிய ஒருவர் ஒரு குறிப்பிட்ட தினசரி காலண்டர்தான் வேண்டும் என்பார். அவருக்கு நட்சத்திரம், நல்ல நேரம் போன்ற விவரங்கள் தேவை இல்லை. ஆனால் டெய்லி ஷீட் பெரிய சைசில் இருக்க வேண்டும், ஆங்கில,தமிழ்,இஸ்லாமிய தேதிகள் மூன்றும் பெரிதாக அச்சிடப்பட்டிருக்க வேண்டும் என்பார். நம் கையில் ஒரு சாம்பிள் ஷீட்டையும் கொடுத்து விடுவார். யாரெல்லாம் டிசம்பர் மாதத்தில் இந்தியா வருகிறார்களோ அவர்கள் எல்லோரிடமும் சொல்லி வைத்து விடுவார். எனவே எல்லோரும் ஒரு காலண்டர் வாங்கி வந்து விடுவார்கள். அவர்கள் வீட்டில் சென்று பார்த்தால் ஹாலில் ஒன்று, டைனிங் ரூமில் ஒன்று, இரண்டு படுக்கை அறைகளிலும் தலா ஒன்று, சமையல் கட்டில் ஒன்று, நடைபாதையில் ஒன்று என்று எல்லா இடங்களிலும் நாள்காட்டிகள் நீக்கமற நிறைந்திருக்கும்.
இந்த வருடம் கனடாவில் இருக்கும் என் பெண்ணிற்காக ஒரு டெய்லி ஷீட் காலண்டர் வாங்கி அங்கிருந்து வந்திருக்கும் அவளுடைய தோழியிடம் கொடுத்தனுப்ப விரும்பினேன். என் மகனும், கணவரும் இப்போதெல்லாம் செல் போனில் நாள் காட்டிகள் வந்து விட்டன. எதற்கு காலண்டர் என்கிறார்கள்.



