கணம்தோறும் பிறக்கிறேன் 

Tuesday, May 9, 2023

பொன்னியின் செல்வன் -2

 பொன்னியின் செல்வன் -2



ஊர் உலகமே பார்த்து விட்ட பொ.செ.2 ஐ நான் பார்க்காவிட்டால் சாமி குத்தமாகிவிடாதா? அதற்குள் அதைப் பற்றி நெகடிவ் விமர்சனங்கள் வந்து விட்டன, இருந்தாலும் பார்க்க வேண்டும் என்று ஒரு எண்ணம். ரஞ்சனி நாராயணன் அவர்கள்,"நாம் சேர்ந்து போகலாமா?" என்று கேட்டதும் சரி என்று சொல்லி விட்டேன். இத்தனைக்கும் நான் இருப்பது ஒரு இடம், அவர் இருப்பது ஒரு இடம். இரண்டு பேரும் பார்த்துக் கொண்டதும் இல்லை என்பது ஸ்வாரஸ்யம்.  அது இருக்கட்டும், படத்துக்கு வரலாம்.

பொ.செ.1 வந்த பொழுது அது எப்படி இருக்குமோ? என்று சந்தேகம் இருந்தது, ஆனால் படம் பிடித்தது. இரண்டாம் பாகம் நிச்சயம் நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கையில் எதிர்பார்த்தேன்.. ஹூம்..!

படத்தின் முதல் பகுதியில் என்னை மிகவும் கவர்ந்தவர் கேமிராமேன் ரவிவர்மன். இந்த பகுதியில் அவர் கூட பெரிதாக கவரவில்லை. தோட்டாத்ரணி ஏமாற்றவில்லை. பிரமாதமான செட்டுகள், அருமையான லைட்டிங். விக்ரம் வெளுத்து வாங்கியிருக்கிறார். கதையில் ஆதித்த கரிகாலன் பாத்திரம் ஒரு ஃப்ரீக் என்பது போல படைக்கப்பட்டிருக்கும். ஆனால் படத்தில் அவனை வீரனாகவும், கெட்டிக்காரனாகவும் காட்டியிருக்கிறார். அந்த அளவிற்கு மற்ற கதாபாத்திரங்கள் சித்தரிக்கப்பட்டிருக்கிறதா என்றால், இல்லை என்பது சோகம். கதையில் ஆழ்வார்கடியான் வரும் பகுதிகள் நகைச்சுவையாக இருக்கும். ஆனால் அவன் சாதுர்யம் மிக்கவனாகத்தான் படைக்கப்பட்டிருப்பான். படத்திலோ அவன் கோமாளியாக்கப்பட்டு விட்டான். அவனுடைய பாஸான அனிருத்த பிரும்மராயர் எப்படிப்பட்ட ராஜ தந்திரி! இங்கே இரண்டு காட்சிகளில் வருகிறாரா? வந்தியத் தேவன் டம்மியாக்கப்பட்டு விட்டார். 

மந்தாகினியின் கதா பாத்திரம் மோசமாக சிதைக்கப்பட்டிருக்கிறது. மேக்கப்பை கலைத்த ஐஸ்வர்யாவின் தலையில் நரைத்த முடி விக்கை வைத்து ஒரே ஒரு காட்சியில் இங்கும் அங்கும் ஓடு என்று சொன்னது போல இருக்கிறது. கடைசியில் மதுராந்தகனுக்குப்பதிலாக முடிசூட்டப்பட வேண்டும் என்பதற்காகத்தான் சேந்தன் அமுதன் கதா பாத்திரமே, அப்படி செய்யப் போவதில்லை என்னும் பொழுது எதற்கு அந்தப் பாத்திரம்?  

திரிஷாவிடம் இருக்கும் இயல்பான கம்பீரம் குந்தவையின் பாத்திர படைப்பிற்கு உதவியிருக்கிறது. பார்திபேந்திர பல்லவனாக நடிக்கும் விக்ரம் பிரபு நந்தினியாக நடித்த ஐஸ்வர்யா ராயிடம் பேசும் காட்சி, நந்தினியின் மோக வலையில் வீழ்ந்து கிடக்கும் ஒருவன் பேசுவது போல இல்லாமல், அம்மா பிள்ளை பேசுவது போல இருக்கிறது. ஐஸ்வர்யாவை விட அவரது குரல் நன்றாக நடித்திருக்கிறது. பாராட்டுகள் தீபா வெங்கட்!  ஜெயம் ரவியின் தோற்றமும் நடிப்பும் நல்ல கம்பீரம்! 

அகனக பாடலைத் தவிர மற்ற பாடல்கள் படத்தோடு ஒட்டவில்லை. ரவிதாசன்&கோவிற்கு காட்டுவாசி போல ஏன் இப்படி ஒரு ஒப்பனை? குறையையே சொல்ல வேண்டி வருமே என்பதால் விமர்சனமே எழுத வேண்டாம் என்று நினைத்தேன். 

இந்த படத்தால் ஒரு நன்மை என்னவென்றால் இப்போது யூ டியூபில் எக்கச்சக்க சோழர் காலத்தைப் பற்றிய பதிவுகள். 



Monday, May 8, 2023

ஓடிஷா யாத்திரை - 5

 ஓடிஷா யாத்திரை - 5

ஸிலிகா ஏரி, பூரி சங்கர மடம், ப்ளூ ஃப்ளாக் பீச்:

சிலிகா பீச்சில் என்னோடு அறையை பகிர்ந்து கொண்டவர்

ஒரு வழியாக ஹோட்டல் அறைக்கு வந்து கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொண்டு சாப்பிடச் சென்றோம். சூப் தொடங்கி, ஐஸ் க்ரீம் வரையான சுவையான உணவு. என் அறைத் தோழி “கோவில் இரவு 11 வரை திறந்திருக்குமாம், மீண்டும் ஒரு முறை செல்லலாமா?” என்றார். எனக்கு தூங்கினால் போதும் என்றிருந்தது.

மறுநாள் காலை 7:30க்கு ப்ரேக்ஃபாஸ்ட் ரெடியாகிவிடும். ரெஸ்டாரெண்ட் வந்து விடுங்கள் என்றதால், குளித்து ரெடியாகி கீழே வந்தோம். ப்ரெட், பட்டர், ஜாம், சாண்ட்விச், கார்ன் ஃப்லெக்ஸ், சாக்கோ ஃப்லெக்ஸ், இட்லி, வடை, சட்னி, சாம்பார், ஆலு பரோடா, வாழைப்பழம், தர்பூசணி துண்டுகள். ஆரஞ்சு மற்றும் திராட்சை பழச்சாருகள், வேகவைத்த முட்டை, காபி, டீ என்று ப்ஃபே முறையில் ராஜபோக காலை உணவு. அதை முடித்துக் கொண்டு சிலிகா ஏரிக்கு கிளம்பினோம்.



சிலிகா ஏரி 1,100 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் விரிந்திருக்கும் இந்தியாவின் மிகப்பெரிய ஏரி. அங்கு படகு சவாரி செய்யும் பொழுது  வித்தியாசமான பறவைகளை பார்க்கலாம். அதிர்ஷ்டம் இருந்தால் டால்ஃபின்களும் கண்ணில் படலாம் என்றார்கள். போகும் வழி எங்கும் மா, பலா,வாழை தோப்புகள், அதிகமாக பலா மரங்கள் அதிகம் கண்ணில் பட்டதால் தஞ்சை, மாயவரம், கும்பகோணம் பகுதியில் பயணம் செய்கிறோமொ என்று தோன்றியது. பூரியிலிருந்து சிலிகா ஏரி 70கி.மீ. தொலைவில் இருக்கிரது, பயண நேரம் கிட்டத்தட்ட 11/2 மணி நேரம். அந்த நேரத்தில் எல்லோரையும் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளச் சொன்னார். எல்லோரும் தங்களைப் பற்றிய விவரங்களை பகிர்ந்து கொண்டோம்.

சிலிகா எரியை அடைந்த பொழுது, அங்கிருக்கும் கடைகளில் பறவைகளுக்கு போடுவதற்கு உணவு  சிறிய பாக்கெட்டுகளில் விற்கிறார்கள். அதைத் தவிர படகில் செல்லும் பொழுது அணிந்து கொள்ள தொப்பி வாடகைக்கு கிடைக்கிறது. தொப்பி இல்லாதவர்கள் வாடகைக்கு எடுத்துக் கொண்டார்கள். எங்கள் குழுவினருக்கு மொத்தம் மூன்று படகுகள் தேவையாக இருந்தது. படகில் சென்ற பொழுது பறவைகளுக்கான உணவை நீரில் போட்டதும், அவற்றை சாப்பிட பறவைகள் கூட்டம் கூட்டமாக வந்து பரவசமூட்டின. டால்ஃபின் எதுவும் எங்கள் கண்களில் படவில்லை.

அங்கிருந்து அந்த ஏரி வங்காள விரிகுடாவில் கலக்கும் முகத்துவாரத்திற்கு அருகில் படகை நிறுத்திய அந்த படகோட்டி ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொண்டு வந்தான். சிப்பிகள் நிறைந்திருந்த அந்த பாத்திரத்திலிருந்து சிப்பிகளை எடுத்து தட்டி தட்டி உடைத்தான். சில சிப்பிகளுக்குள் முத்து இருப்பது தெரிந்தது. சில முத்துக்கள் வெண்மை நிறத்திலும், சில சிப்பிகளுக்குள் கருப்பு நிற முத்துக்களும் இருந்தன. வெண்மை நிற முத்துக்கள், ரூ.ஐநூறும், கருப்பு நிற முத்துக்கள் ரூ.ஆயிரமும் சொன்னான். நாங்களும் வாங்கினோம். முத்துக்கள் விற்பனையானபின் மண் கட்டி போல ஒன்றை(பவளப்பாறை?) கொண்டு வந்து அதை உடைத்து பவளங்களும், பளபளவென்று கற்களும்(அதை நவரத்தினம் என்றான்) எடுத்தான். அவைகளும் முறையே ரூ.ஆயிரதிற்கும், அயிரத்து ஐநூறுக்கும் விற்க்கப்பட்டன.

அங்கிருந்து அந்த ஏரி கடலில் கலக்கும் முகத்துவாரத்தை பார்க்கச் சென்றோம். நல்ல வெய்யிலில் கிட்டத்தட்ட ஒன்றரை கிலோ மீட்டர் மணலில் நடந்து சென்றோம். கடற்கரைக்குச் சென்றோமே தவிர முகத்துவாரம் எது என்று தெரியவில்லை.

பூரி சங்கர மடம் முகப்புத் தோற்றம்

பூரி சங்கர மடத்தில் இருக்கும் பழமையான கிணறு


ஆதி சங்கரர் உறங்கியதாக கூறப்படும் சலவைக்கல் படுக்கை

ஹோட்டலுக்கு திரும்பி, உணவு உண்டு விட்டு, கொஞ்சம் ஒய்வெடுத்துக் கொண்டு மாலை பூரி சங்கர மடம் சென்றோம். சங்கர மடம் என்பது அஜென்டாவில் இல்லாததால் விரும்பியவர்கள் தனித்தனி குழுவாக சென்றோம். செல்லும் வழியில் பூரியின் கடற்கரையைத் தாண்டித்தான் செல்ல வேண்டியிருந்தது. அது பப்ளிக் பீச். எங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டது ப்ளு ஃப்ளாக் பீச் என்ற தனியார் பீச். அதை பார்த்து விட்டு புடவை ஷாப்பிங்க் என்று நினைத்துக் கொண்டிருந்தோம்.


நாங்கள் சங்கர மடத்திற்கு ஒரு ஷேர் ஆட்டோவில் சென்று விட்டோம். அந்த தெரு குறுகலாக இருந்ததால் ஆட்டோ நிற்க முடியாது என்பதால் அனுப்பி விட்டோம். திரும்பும் பொழுது ஆட்டோ கிடைக்காமல் நடக்கத் தொடங்கினோம். எதிரே வந்த சில ஆட்டோக்களை நிறுத்தி, சந்திரபாகா பீச் போக வேண்டும் என்றதும், எல்லோரும் தலை தெறிக்க ஓடி விட்டார்கள். சந்திரபாகா பீச் என்பது பூரியிலிருந்து புவனேஷ்வர் செல்லும் வழியில் இருக்கிறது. மயிலாப்பூரிலிருந்து மெரீனா பீச் போக வேண்டும் என்பதற்கு பதிலாக கோவளம் பீச் போக வேண்டும் என்றால் எந்த ஆட்டோக்காரர் வருவார்?

தப்பாக சொல்கிறோமோ என்ற சந்தேகத்தில் எங்கள் ஐடனரியை செக் பண்ணிய ஒரு பெண் ப்ளூ ஃப்ளாக் பீச் என்று கூற அதன்பின் ஆட்டோ கிடைத்து ப்ளூ ஃப்ளாக் பீச் சென்றோம். அங்கு குளிக்க, நீந்த ஐம்பது ரூபாய் கட்டணம், இல்லாவிட்டால் இருபது ரூபாய் கட்டணம். நாங்கள் இருபது ரூபாய் டிக்கெட் எடுத்துக்கொண்டு சென்றோம். இந்தியாவின் சுத்தமான கடற்கரைகளுள் இதுவும் ஒன்றாம். கோல்டன் பீச் என்றழைக்கப்படும் இந்த கடற்கரை இந்தியாவின் பெருமைக்குரிய ப்ளூ ஃபளாக் சர்டிஃபிகேட் பெற்ற எட்டு கடற்கரைகளில் ஒன்றாம். நாங்கள் சென்றபொழுது இருட்டி விட்டது. கடல் உள்வாங்கியிருபது போல் தோன்றியது. கடலுக்குள் அதிக தூரம் செல்ல வேண்டாம் என்று அங்கிருந்த பணியாளர்கள் எச்சரித்தனர். சில புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு ஹோட்டலுக்குத் திரும்பினோம்.


சாப்பிடும் பொழுது, “நாளை காலை அறையை காலி செய்து கொண்டு சீக்கிரம் கீழே வந்து விடுங்கள். ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிட்டு விட்டு இங்கிருந்து எட்டு மணிக்குள் கிளம்பினால்தான் வெய்யிலுக்கு முன் கொனார்க் செல்ல முடியும்” என்றார் கைட். அதைப்போலவே எல்லோரும் சீக்கிரம் ரெடியாகி காலை உணவை முடித்துக் கொண்டு, டாணென்று எட்டு மணிக்கெல்லாம் ரெடியாகி விட்டோம். ஆனாலும் எங்களால் வெய்யிலுக்கு முன்னால் கோனார்க் செல்ல முடியவில்லை. ஏன் தெரியுமா?

-தொடரும்