பொன்னியின் செல்வன் -2
ஊர் உலகமே பார்த்து விட்ட பொ.செ.2 ஐ நான் பார்க்காவிட்டால் சாமி குத்தமாகிவிடாதா? அதற்குள் அதைப் பற்றி நெகடிவ் விமர்சனங்கள் வந்து விட்டன, இருந்தாலும் பார்க்க வேண்டும் என்று ஒரு எண்ணம். ரஞ்சனி நாராயணன் அவர்கள்,"நாம் சேர்ந்து போகலாமா?" என்று கேட்டதும் சரி என்று சொல்லி விட்டேன். இத்தனைக்கும் நான் இருப்பது ஒரு இடம், அவர் இருப்பது ஒரு இடம். இரண்டு பேரும் பார்த்துக் கொண்டதும் இல்லை என்பது ஸ்வாரஸ்யம். அது இருக்கட்டும், படத்துக்கு வரலாம்.
பொ.செ.1 வந்த பொழுது அது எப்படி இருக்குமோ? என்று சந்தேகம் இருந்தது, ஆனால் படம் பிடித்தது. இரண்டாம் பாகம் நிச்சயம் நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கையில் எதிர்பார்த்தேன்.. ஹூம்..!
படத்தின் முதல் பகுதியில் என்னை மிகவும் கவர்ந்தவர் கேமிராமேன் ரவிவர்மன். இந்த பகுதியில் அவர் கூட பெரிதாக கவரவில்லை. தோட்டாத்ரணி ஏமாற்றவில்லை. பிரமாதமான செட்டுகள், அருமையான லைட்டிங். விக்ரம் வெளுத்து வாங்கியிருக்கிறார். கதையில் ஆதித்த கரிகாலன் பாத்திரம் ஒரு ஃப்ரீக் என்பது போல படைக்கப்பட்டிருக்கும். ஆனால் படத்தில் அவனை வீரனாகவும், கெட்டிக்காரனாகவும் காட்டியிருக்கிறார். அந்த அளவிற்கு மற்ற கதாபாத்திரங்கள் சித்தரிக்கப்பட்டிருக்கிறதா என்றால், இல்லை என்பது சோகம். கதையில் ஆழ்வார்கடியான் வரும் பகுதிகள் நகைச்சுவையாக இருக்கும். ஆனால் அவன் சாதுர்யம் மிக்கவனாகத்தான் படைக்கப்பட்டிருப்பான். படத்திலோ அவன் கோமாளியாக்கப்பட்டு விட்டான். அவனுடைய பாஸான அனிருத்த பிரும்மராயர் எப்படிப்பட்ட ராஜ தந்திரி! இங்கே இரண்டு காட்சிகளில் வருகிறாரா? வந்தியத் தேவன் டம்மியாக்கப்பட்டு விட்டார்.
மந்தாகினியின் கதா பாத்திரம் மோசமாக சிதைக்கப்பட்டிருக்கிறது. மேக்கப்பை கலைத்த ஐஸ்வர்யாவின் தலையில் நரைத்த முடி விக்கை வைத்து ஒரே ஒரு காட்சியில் இங்கும் அங்கும் ஓடு என்று சொன்னது போல இருக்கிறது. கடைசியில் மதுராந்தகனுக்குப்பதிலாக முடிசூட்டப்பட வேண்டும் என்பதற்காகத்தான் சேந்தன் அமுதன் கதா பாத்திரமே, அப்படி செய்யப் போவதில்லை என்னும் பொழுது எதற்கு அந்தப் பாத்திரம்?
திரிஷாவிடம் இருக்கும் இயல்பான கம்பீரம் குந்தவையின் பாத்திர படைப்பிற்கு உதவியிருக்கிறது. பார்திபேந்திர பல்லவனாக நடிக்கும் விக்ரம் பிரபு நந்தினியாக நடித்த ஐஸ்வர்யா ராயிடம் பேசும் காட்சி, நந்தினியின் மோக வலையில் வீழ்ந்து கிடக்கும் ஒருவன் பேசுவது போல இல்லாமல், அம்மா பிள்ளை பேசுவது போல இருக்கிறது. ஐஸ்வர்யாவை விட அவரது குரல் நன்றாக நடித்திருக்கிறது. பாராட்டுகள் தீபா வெங்கட்! ஜெயம் ரவியின் தோற்றமும் நடிப்பும் நல்ல கம்பீரம்!
அகனக பாடலைத் தவிர மற்ற பாடல்கள் படத்தோடு ஒட்டவில்லை. ரவிதாசன்&கோவிற்கு காட்டுவாசி போல ஏன் இப்படி ஒரு ஒப்பனை? குறையையே சொல்ல வேண்டி வருமே என்பதால் விமர்சனமே எழுத வேண்டாம் என்று நினைத்தேன்.
இந்த படத்தால் ஒரு நன்மை என்னவென்றால் இப்போது யூ டியூபில் எக்கச்சக்க சோழர் காலத்தைப் பற்றிய பதிவுகள்.
எப்படியோ... செம காசு பார்த்து விட்டார்கள்!
ReplyDeleteஉண்மைதான்!
Deleteஅவருக்கு நந்தினி ஆதித்ய கரிகாலன் காதல் பிடித்து விட்டது. அதை மட்டும் மையப்படுத்தி எடுத்து விட்டு ஊறுகாயாக மற்ற பாத்திரங்களை சேர்த்திருக்கிறார். வந்து போக மட்டுமா குந்தவை? அநியாயம் நடந்திருக்கிறது அநிருத்தருக்கு. செந்தில் பார்த்தால் சோர்ந்து போவார். கந்தமாறன் நொந்தமாறன் ஆனான். மணிமேகலை ஆபுத்திரனிடம் முறையிடச் சென்று விட்டாள்!
ReplyDelete//மணிமேகலை ஆபுத்திரனிடம் முறையிடச் சென்று விட்டாள்!// ஹா ஹா! சட்டென்று புரியவில்லை. சீத்தலை சாத்தனாரின் மணிமேகலையை சொல்கிறீர்கள் என்பது புரிந்தது.:))
Deleteவானதி சோழ சிம்மாசனத்தில் ஏறுவதில்லை என்று செய்யும் சபதம் புத்தகத்தில் படிக்கும்போது நம்மை உலுக்கி விடும். படத்தில் சம்மந்தமே இல்லாமல் ஒரு காட்சியில் அவள் அதை துளிக்கூட உணர்ச்சி இல்லாமல் சொல்லும்போது மணிரத்தினம் கதை சொல்லுவதில் சறுக்கி இருப்பது தெரிகிறது. மறுபடியும் பொன்னியின் செல்வனை 5 பாகமும் படித்து இந்த சினிமா பார்த்ததை மறக்க வேண்டும்.
ReplyDeleteகதையில் வரும் வானதி பொட்டு பொட்டென்று மயங்கி விழுந்தாலும் பிடித்திருந்தது இல்லையா?
Deleteபொன்னியின் செல்வன் திரைப்படம் 1, 2 பார்த்த பாவத்தை எங்கே சென்று தீர்த்துக் கொள்வது?..
ReplyDeleteஅதையும் சொல்லி இருக்கலாம்..
//பொன்னியின் செல்வன் திரைப்படம் 1, 2 பார்த்த பாவத்தை எங்கே சென்று தீர்த்துக் கொள்வது?..// இங்கேதான்...
Deleteநல்லவேளை..
ReplyDeleteநான் பார்க்க வில்லை..
:))
Deleteசும்மாவே காட்டினாலும் நானெல்லாம் இந்தப் படத்தைப் பார்க்கப் போவதில்லை. விமரிசனங்கள் நிறையப் படிச்சேன்.
ReplyDelete//சும்மாவே காட்டினாலும் நானெல்லாம் இந்தப் படத்தைப் பார்க்கப் போவதில்லை.// நீங்க யாரு? தெளிவாச்சே
Deleteஇந்த படத்தை ரெண்டு முறையெல்லாம் பார்க்கிறார்கள். ஏதோ அவர்கள் விருப்பம்.
Deleteசரியில்லை தான்...
ReplyDeleteநிறை ய பேர்கள் இப்படி கருதுகிறோம். ஆனாலும் படம் ஓடுகிறது.
Deleteஅக்கா அது ஓடுவது, கல்கியின் பொ செ வைப் படிக்காதவர்கள், மணிரத்தினத்தின் விசிறிகள், ஜெர, விக்ரம், ஐஷ், த்ரிஷா ரசிகர்கள், ஏஆர் ஆர் அபிமானிகள், பிரம்மாண்டம் என்பதற்காக
Deleteகீதா
வணக்கம் சகோதரி
ReplyDeleteபடத்தின் இரண்டாவது பாகம் விமர்சனங்கள் முதல் பாகத்தை பார்க்கும் ஆவலைப்போல தூண்டவில்லை. அதனால் இதுவரை பார்க்கும் எண்ணம் வரவில்லை. இப்போது இனி வருமா என்பதும் தெரியவில்லை. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
எப்படியும் டி.வி.யில் போடப் போகிறார்கள், அப்போது பார்த்துக் கொள்ளுங்கள்.
Deleteபானுக்கா சூப்பரா சொல்லிட்டீங்க. எனக்குப் பிடிக்கவே இல்லை. (அட! பார்த்திட்டியா என்று நீங்கள் வியப்பது இங்கிருந்தே தெரிகிறது!!!! பேசும் போது சொல்ல வரவில்லை. அந்த அளவு படம் ஈர்க்கவில்லை!!)
ReplyDeleteஅனிருத்த பிரம்மராயர் படத்தில் இருந்தாரா??!!!!!!!!!!!!!!! ஹாஹாஹா சேந்தன் அமுதன்?
பார்க்கப் போனால் கதாபத்திரங்கள் கதையில் உள்ளது ஆழமாகப் பிரதிபலிக்காததால் பல கதாபாத்திரங்கள் யாரென்று படத்தில் தேட வேண்டியதாக இருந்தது. ஆதித்தகரிகாலன், நந்தினி காதல் சீன்கள் தேவையா என்று தோன்றியது. அதைவிட அரச சதிகள், எப்படி அவை அரங்கேறின என்பதானவற்றிற்கு அழுத்தம் கொடுத்திருக்கலாம்.
எடுத்த விதம் மனதில் பதியவில்லை.
படம் பிரம்மாண்டம்! ஆழமில்லாத பகட்டுப் பிரம்மாண்டமாகத் தோன்றியது. போட்ட பணத்தை விட அதிகமாகவே அள்ளிவிட்டார்கள்! அதுமட்டும்தான்.
கல்கி ட்ரஸ்டிற்குப் பணம் கொடுத்திருந்தார்கள் என்பதால் கதையை மாற்ற வேண்டுமா என்ன? மாற்றலாமா?
இதில் வியப்பு என்னவென்றால் கல்கியின் பேத்தியும், மாற்றியதற்கு மறுப்பேதும் சொல்லாமல் பேசியிருப்பது! கல்கி இருந்திருந்தால் அவரும் இதை மறுத்திருக்கமாட்டார் என்று வேறு பேத்தி சொல்லியது இன்னும் ஆச்சரியம்?!!!!
பணம் பத்தும் செய்யும்!! இதுதான் எனக்குத் தோன்றியது அந்தப் பேட்டியைப் பார்த்த போது!
நான் படம் பார்ப்பதே அரிது. அப்படிப் பார்த்ததில் ஏமாற்றம்.
கீதா