கணம்தோறும் பிறக்கிறேன் 

Saturday, July 10, 2021

நவாப்பழம் வாங்கலையோ..நவாப்பழம்...

நவாப்பழம் வாங்கலையோ..நவாப்பழம்...


அன்று காய் வாங்குவதற்காக வெளியே சென்ற பொழுது, ஒருவர் வண்டியில் நாவல் பழங்களை வைத்து விற்றுக் கொண்டிருந்தார். அது எத்தனையோ பழைய நினைவுகளை கிளறி விட்டது. பள்ளிக்கூட நாட்களில் ஸ்கூல் வாசலில் ஒரு கூடையில் நாவல் பழங்களை விற்றுக் கொண்டிருக்கும் கிழவி நினைவுக்கு வந்தார் . ஒரு கூறு பத்து பைசா. மந்தார இலையில், அல்லது நீயூஸ் பேப்பரில் கட்டித் தருவார். இப்போதெல்லாம் கூறெல்லாம் கிடையாது கால் கிலோதான் தருவேன் என்றார். 

விநாயகருக்கும், கிருஷ்ணருக்கும் மிகவும் பிடித்தது என்று நம்பப் படுகிறது. விநாயக சதுர்த்தி அன்றும், கோகுலாஷ்டமி அன்றும் முக்கியமான நைவேத்தியம். "ஜம்பு பலஸார பக்ஷிதம் .." என்று ஸ்லோகத்தில் வருகிறது. ஜம்பு பலம் என்பது நாவல் பழம்தான்.

நாவல் மரத்தை ஸ்தல விருட்சமாக கொண்ட கோவில் திருச்சிக்கும், ஸ்ரீரெங்கத்திற்கும் இடையில் இருக்கும் திருவானைக்கோவில். அங்கிருக்கும் ஸ்வாமி ஜம்புகேஸ்வரர் என்றும், அந்த ஷேத்திரமே ஜம்புகேஸ்வரம் என்றும் வழங்கப் படுகிறது. 

இந்த நாவல் பழம் பல நல்ல மருத்துவ குணங்களை கொண்டது.  நாவல் பழம் உடலில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த மிகவும் உதவும் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். நாவல் பழத்தின் கொட்டைகளை காய வைத்து இடித்து,அந்த பொடியை நீரில் கொதிக்க வைத்து சர்க்கரை நோயாளிகள் காலையில் வெறும் வயிற்றில் அருந்துவார்கள். இப்போதெல்லாம் அந்த பொடியே கிடைக்கிறது. இதைத் தவிர பொட்டாசியம் அதிகம் இருப்பதால் இதயத்திற்கும் நல்லது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், இதில் இரும்புசத்து நிறைய இருப்பதால் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து ரத்தத்தை சுத்தமாக்கும்.எனவே தோல் மினுமினுப்பு பெறும், இதில் இருக்கும் வைட்டமின்கள் 'ஏ' மற்றும் 'சி ' கண்களுக்கு நல்லது என்று நன்மைகளை பட்டியல் இடுகிறது கூகுள். இதுதான் சீசன், வழியில் வண்டியில் யாரவது நாவல் பழம் விற்றுக் கொண்டிருந்தால் வாங்கி நீங்களும் சாப்பிடுங்கள், குழந்தைகளுக்கும் கொடுங்கள்.