பண்டிகைகள்
அனைவருக்கும் இனிய பொங்கல் மற்றும் கனுப் பொங்கல் வாழ்த்துக்கள்!
பண்டிகைகள் எல்லாம் பேட்டரி சார்ஜரைப் போல. சலிப்பூட்டும் ரொடீன் வாழ்க்கையிலிருந்து ஒரு மாறுதல். வித்தியாசமான சமையல், தெரிந்தவர்களுக்கு வாழ்த்து கூறுதல் என்று நம்மை புதுப்பித்துக் கொள்ள ஒரு வழி.
இன்னும் கொஞ்சம் ஆழமாக யோசித்தால் பணத்தை ஒரே இடத்தில் தேங்க விடாமல் சமூகம் முழுவதும் பரவச் செய்வதில் பண்டிகைகளுக்கு பெரும் பங்கு உண்டு. ஒரு பண்டிகை கொண்டாட வேண்டுமென்றால் எத்தனையத்தனை விதமாக பணத்தை செலவு செய்ய வேண்டியிருக்கிறது? ஆடை, உணவுப் பொருள்கள் என்று தொடங்கி வீட்டில் கட்ட வேண்டிய மாவிலைத் தோரணங்கள் உட்பட சமுதாயத்தில் பல மட்டங்களில் இருக்கும் மக்களுக்கும் வருவாய்க்கு வழி வகுக்கின்றன பண்டிகைகள். அதோடு கூட பெண்களுக்கு பலகாரங்கள் செய்வது, வீட்டை அலங்கரிப்பது, பாட்டுப் பாடுவது, கோலம் போடுவது, கும்மி அடிப்பது என்று தங்களின் பல்வேறு திறமைகளை வெளிக்கொண்டுவரவும் பண்டிகைகள் உதவுகின்றன.
இந்தியாவைப் பொறுத்தவரை எல்லாப் பண்டிகைகளும் எல்லா மாநிலங்களிலும்(கேரளா தவிர) வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்பட்டாலும், ஒவ்வொரு மாநிலமும் ஏதோ ஒரு பண்டிகையை சிறப்பாக கொண்டாடும். நம் தமிழ் நாட்டில் பொங்கல் ஒரு விசேஷமான பண்டிகை.
மற்ற மாநிலங்கள் சூரியன் தன் கதியை வடக்கு நோக்கி மாற்றிக் கொள்வதை மட்டும் மகர சங்கராந்தி என்று ஒரே ஒரு நாள் கொண்டாடுகிறார்கள். நாமோ, போகி, பொங்கல், மாட்டுப்பொங்கல்(அன்றுதான் கனுப் பொங்கலும் கூட), காணும் பொங்கல் என்று நான்கு நாட்கள் திகட்ட திகட்ட கொண்டாடுகிறோம்.
ஒவ்வொரு பிரதேசத்திற்கும் ஒரு வாசம் இருப்பதை போல அந்த பிரதேசத்திற்குரிய பண்டிகைகள் சமயத்தில் அங்கிருக்கும் கொண்டாட்ட மனோநிலையை(festivel mood) மற்ற இடங்களில் உணர முடிவதில்லை.
ஓமானில் ரம்ஜான் களை கட்டும். கடைகள், பூங்காக்கள் போன்றவை இரவு 11:00 மணி வரை திறந்திருக்கும். திருச்சியில் தீபாவளி சிறப்பாக இருக்கும்.
சென்னை எல்லா பண்டிகைகளையும் கொண்டாடுகிறது என்றாலும், டிசம்பர் சீசனில் தொடங்கும் இசை விழா, மார்கழி உற்சவங்கள் தைப் பொங்கல், காணும் பொங்கலுக்கு பீச்சுக்கு சென்று அங்கு பிளாஸ்டிக் குப்பைகளை போட்டு முடிக்கிறோம். இந்த சமயத்திலேயே புத்தக கண்காட்சியும் நடப்பது ஒரு அடிஷனல் சிறப்பு. புத்தக கண்காட்சியை புத்தகத்திருவிழா என்றுதானே குறிப்பிடுகிறோம். இந்த சமயங்களில் சென்னையின் காற்றிலேயே பண்டிகையின் வாசம் இருக்கும்.
எனக்கு வாட்ஸாப்பில் வந்த ஒரு கனுப்பொங்கல் பாடல் என்னைக்கவர்ந்ததால் அதைப் பாடி இணைத்துள்ளேன்.