கணம்தோறும் பிறக்கிறேன் 

Friday, June 23, 2023

குழந்தை சொன்ன பொய்...

 குழந்தை சொன்ன பொய்...


சனிக்கிழமையன்று(17.6.23) தினசரியில் படித்த ஒரு செய்தி மிகவும் அதிர்ச்சியளித்தது. பெங்களூரு, எலக்ட்ரானிக் சிட்டியில் எட்டு வயது பெண் குழந்தை ஒன்றை வீட்டில் தனியாக விட்டு விட்டு, வீட்டை விட்டு எங்கும் வெளியே செல்லக்கூடாது, ஆன் லைனில் படிப்பைத் தொடர வேண்டும் என்று எச்சரித்து விட்டு அந்த்க் குழந்தையின் தாய் பள்ளியிலிருந்து மகனை அழைத்து வர சென்றிருக்கிறார்.

அம்மா அந்தப் பக்கம் சென்றதும், குழந்தை இந்தப் பக்கம் விளையாடுவதற்காக வெளியே ஓடி விட்டது. அம்மா, திரும்பி வந்த பொழுது வெளியே நின்று கொண்டிருந்த மகளிடம், “ஏன் வெளியே நிற்கிறாய்?” என்று கேட்ட அம்மாவிடம் உண்மையைச் சொன்னால் என்ன நடக்குமோ என்று பயந்த அந்தக் குழந்தை, அங்கு ஒரு வீட்டிற்கு டெலிவரி கொடுக்க வந்த பையனை சுட்டிக் காட்டி, “இந்த ஆள் என்னை கடத்திப் போக முயற்சி செய்தான். அவனிடமிருந்து தப்பித்து இங்கே நின்று கொண்டிருக்கிறேன்” என்று சொல்லியிருக்கிறது, உடனே அந்தக் குழந்தையின் தாய், மற்றும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அந்த டெலிவரிபாயை அடித்திருக்கிறார்கள். ஆனால் அங்கிருந்த சி.சி.டி.வி. காமிரா ஃபுட்டேஜை பார்த்ததில் அப்படியோரு சம்பவம் நடக்கவில்லை, என்று தெரிந்திருக்கிறது. பிறகு அந்த்ப் பையனிடம் மன்னிப்பு கேட்டார்களாம்.

சாதரணமாக குழந்தைகள் பொய் சொல்லாது என்பார்கள். இந்தக் குழந்தை பொய் சொன்னது மட்டுமல்லாமல், தான் செய்த தவறை மறைக்க ஒரு பாவமும் அறியாத வெறொருவர் மீது பழி சுமத்தியிருக்கிறது. இதற்கு காரணம், அந்தக் குழந்தையை அதன் பெற்றோர்கள் விளையாடவே அனுமதிக்க மாட்டார்களாம். அதனால் பெற்றோர்கள் வீட்டில் இல்லாத பொழுது குழந்தை விளையாடுவதற்காக வெளியே ஓடுவதை வழக்கமாக வைத்திருக்கிறது. அன்று அம்மாவைப் பார்த்ததும் பயத்தில் அந்த டெலிவரி பாய் மீது அபாண்டமாக பழி சுமத்தி விட்டது. இதில் அந்த்க் குழந்தையை விட, அந்த தாயின் மீதுதான் அதிகம் தவறு இருப்பதாத தோன்றுகிறது. குழந்தை பருவத்தில் விளையாட்டு என்பது மிகவும் முக்கியம். அதற்கு அனுமதிக்காமல் இருப்பது சரி இல்லை. சாப்பாடு, தூக்கம், படிப்பு, இதர ஆக்டிவிடீஸ் எவ்வளவு அவசியமோ அவ்வளவு விளையாட்டும் அவசியம். விளையாட அனுமதிக்காததே இந்தக் குழந்தையின் தவறுக்கு காரணம். குழந்தைகளை குழந்தைகளாக இருக்க அனுமதிக்க வேண்டும். திரும்ப கிடைக்காத அந்த அழகான பருவத்தை பெற்றோர்கள் பறித்துவிடக் கூடாது.