கணம்தோறும் பிறக்கிறேன் 

Tuesday, May 11, 2021

மசாலா சாட்

மசாலா சாட் 

அதைப் பற்றி பேச வேண்டாம் என்றுதான் நினைத்தேன். ஊடகங்களில் இதை தவிர வேறு பேச்சு இல்லை.  எங்கேயோ இருக்கிறது, அங்கே இருக்கிறது, இங்கே இருக்கிறது என்ற நிலை மாறி நம் நெருங்கிய உறவுகளையும், நட்புகளையும் பீடிக்கும் பொழுது கவலை, இப்போது எங்கள் அப்பார்ட்மெண்டிலேயே எங்கள் வீட்டிற்கு நேர் கீழே, இரண்டு மாடிகளுக்கு கீழே ஒருவரை பாதித்து விட்டது என்று அறிந்தவுடன் அச்சம்! ஜன்னல் கதவை திறக்கலாமா? வேண்டாமா? என்று தோன்றுகிறது.  ஆனால் இப்பொழுது கூட முகக்கவசம் அணியாமல் சந்தைகளில் கூடும் மக்களையும், வியாபாரிகளையும் பார்க்கும் பொழுது என்ன சொல்வது என்று தெரியவில்லை.  

என்னதான் லாக் டவுன் என்றாலும் பால், மளிகை சாமான்கள், கறிகாய்கள், இறைச்சி போன்றவை விற்கும் கடைகள் காலை ஆறு மணி முதல் பத்து மணி வரை கர்நாடகாவிலும், மதியம் பன்னிரெண்டு மணி வரை தமிழகத்திலும் திறந்திருக்கும் என்று அரசு அறிவித்திருக்கிறது. அப்படியிருக்க ஞாயிறு அன்று ஏன் கடைகளை முற்றுகை இடவேண்டும் என்று புரியவில்லை. 

--------------------------------------

அன்றொரு நாள் பாலை அடுப்பில் வைத்தவுடன் டொப்,டொப் என்று சப்தம் கேட்டது. பால் திரிந்து விட்டது. அதை இன்னும் சற்று நேரம் அடுப்பில் வைத்து, கிளறி, கோவாவாக செய்து கொண்டேன். கொஞ்சமாக பயத்தம் பருப்பை வறுத்து, ஊற வைத்து அரைத்துக் கொண்டேன். வெல்லத்தில்  பாகு வைத்துக் கொண்டு, அதில் கொஞ்சம் தேங்காய் துருவல், அரைத்த பயறு விழுது, மற்றும் கோவாவையும் சேர்த்து கிளறியதில் ஒரு நல்ல இனிப்பு கிடைத்து விட்டது. அதற்கு பெயர்தான் கிடைக்கவில்லை. 

வாணலியில் வறுபடும் பயத்தம் பருப்பு 

அரைத்த விழுது, தேங்காய், பால் கோவா 



வெல்லம் பாகாகிறது 

End product

------------------------------


இந்த படத்தில் இருப்பவர் யார் என்று யூகிக்க முடிகிறதா? ஒரு நல்ல அரசியல் தலைவரின் இளம் வயது புகைப்படம்.  

---------------------------


பூஜ்யஸ்ரீ ஓம்காரானந்தா இன்று மாலை(10.05.21) மஹாசமாதி அடைந்தார் என்னும் செய்தி இடியாக இறங்கியது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட இவர் மதுரையில் சிகிச்சை பெற்று வந்தார், விமானத்தில் சென்னைக்கு அழைத்து வந்து சிகிச்சை அளிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்ட நிலையில் அவர் இறைவனடி சேர்ந்து விட்டார். இவர் மஸ்கெட்டிற்கு வருகை தந்த பொழுது இவரது கீதை உரைகளை கேட்டிருக்கிறேன். எளிமையாக இருக்கும். சமஸ்க்ருதம், தமிழ் இரண்டிலும் நிபுணர்.  திருக்குறளிலிருந்து நிறைய மேற்கோள் காட்டுவார். திருக்குறளுக்கும், பகவத் கீதைக்கும் இருக்கும் ஒற்றுமைகளை விளக்கி உரைகள் நிகழ்த்தியிருக்கிறார். திருக்குறளை பள்ளி மாணவர்களுக்கு முழுமையாக கற்றுத் தர வேண்டும் என்பதில் மிகுந்த ஆவல் கொண்டவர்.    ஓம் சாந்தி!

---------------------------------------------

நானும் தில்லையகத்து கீதாவும் இணைந்து எங்கள் பிளாகில் எழுதிய 'நானும் நீயும் சேர்ந்தே செல்லும் நேரமே....'  என்னும் கதை  கிண்டலில் புத்தகமாக வெளியாகியிருக்கிறது. அதோடு ஒரே கருவிற்கு நாங்கள் இருவரும் தனித்தனியாக எழுதிய இரு வேறு கதைகளும் படிக்க கிடைக்கும். திரு. வெங்கட் தன்னுடைய வேலைப்பளுவிற்கு இடையிலும் இதற்கு நேரம் ஒதுக்கி உதவியிருக்கிறார். 


இந்த புத்தகத்தை படித்துக் கொண்டிருங்கள், அடுத்த பதிவில் சந்திக்கலாம்.