கணம்தோறும் பிறக்கிறேன் 

Friday, March 17, 2023

கடலைக் கடந்து - 10

 கடலைக் கடந்து - 10


டிராவல் ஏஜெண்டிடமிருந்து டிக்கெட்டைப் பெற்றுக் கொண்ட முரளி, அதை சரி பார்த்து விட்டு, மனைவிக்கு ஃபோன் செய்து, தான் ஊருக்கு வரப்போகும் நாளை உறுதி படுத்தினான்.

வளைகுடா நாடுகளிலிருந்து விடுமுறைக்கு ஊருக்கு வரும் எல்லோரையும் போல் முரளியும் மனைவியிடம், என்ன வாங்கிக் கொண்டு வர வேண்டும் என்று கேட்க, அவள் அப்போது(1990ன் துவக்க காலங்கள்) இந்தியாவில் கிடைக்காத நட்டெல்லா, ஃபேளவர்ட் சீஸ், குழந்தைகளுக்கு உடைகள், தனக்கு யார்ட்லி சோப், மாமியாருக்கு ஆக்ஸ் ஆயில், பாதாம், முந்திரி, குங்குமப்பூ என்று பட்டியலிட, எல்லாவற்றையும் குறித்துக் கொண்ட முரளி, அவள் கேட்காத நகை ஏதாவதும் வாங்கிச் செல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

தொடரும் முன் முரளியைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம். பம்பாயில் கெமிகல் இஞ்சினீயரிங் முடித்த முரளி அங்கேயே ஒரு கம்பெனியில் முதலில் வேலை பார்த்தான். பிறகு ஓமானில் ஒரு பிரபலமான  கம்பெனியில் வேலை கிடைத்து வந்தது அவனுடைய அதிர்ஷ்டம் என்றுதான் கூற வேண்டும். திருமணமாகி முதல் குழந்தைக்கு எட்டு வயதாகும் வரை ஒமானில் குடும்பதோடு வசித்தான். மனைவி இரண்டாவது முறை கருவுற்றபோது பிறக்கப் போவது இரட்டை குழந்தைகள் என்பது தெரிந்தது. மேலும் சில சிக்கல்களும் இருந்ததால், குடும்பத்தை இந்தியாவுக்கே திருப்பி அனுப்பி விட்டு, தான் மட்டும் மஸ்கட்டில் இருந்தான். பணி நிமித்தமாக அடிக்கடி இன்டீரியர் செல்ல வேண்டி வரும். ஊருக்குச் செல்லும் முன் ஒரு வாரம் அப்படி இன்டீரியரில் வேலை இருந்தது. அங்கு வேலையை முடித்து விட்டு புதன் கிழமை நகருக்குத் திரும்பி வெள்ளியன்று பம்பாய்க்கு பயணப்படலாம் என்று நினைத்தான். வியாழனன்று ஷாப்பிங் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்தான்.  

புதன் மாலை இண்டீரியரில் வேலையை முடித்துக் கொண்டு அலுவலகத்தில் விடை பெற்றுக் கொண்டு, அலுவலக வண்டியில் வீட்டு வாசலில் இறங்கிக் கொண்டான்.

வெள்ளி இரவு ஒரு மணிக்கு ஓமானிலிருந்து புறப்படும் விமானம், பம்பாயை அதிகாலை அடைந்து விடும். இமிக்ரேஷன், கஸ்டம்ஸ் போன்ற சடங்குகளை முடித்துக் கொண்டு வெளியே வந்து, டாக்ஸி பிடித்தால் ஏழு மணிக்கு வீட்டை அடைந்து விடலாம்.

ஆனால் ஏழு மணிக்கு அவன் வீட்டிற்கு வரவில்லை, எட்டு மணியானது, ஒன்பது, பத்து என்று நேரம் ஓடியதே தவிர முரளி வரவில்லை. அவன் மனைவி லதாவுக்கு கவலை வந்தது. அவளுக்கு ஏனோ பேசஞ்செர்ஸ் மேனிஃபெஸ்ட் வாங்கிப் பார்க்க வேண்டும் என்று தோன்றவில்லை. மஸ்கட்டில் கணவனின் வீட்டு டெலிஃபோனை தொடர்பு கொண்டாள். ரிங்க் போனது, யாரும் எடுக்கவில்லை. அலுவலகத்தை தொடர்பு கொண்டாள். அவர்கள் அவன் புதன் கிழமை கேபிடலுக்கு திரும்பி விட்டான் என்றதோடு நிற்காமல், விமான நிலையத்தில் விசாரித்து அவன் வெள்ளியன்று ஓமானிலிருந்து கஸ்டம்ஸ் மற்றும் இமிக்ரேஷன் முடித்து விமானம் ஏறியதை உறுதி படுத்தினாகள். அதன் பிறகு பம்பாய் விமான நிலையத்தில் அவன் பயணம் செய்த விமானத்தின் பேசஞ்சர்ஸ் மேனிஃபெஸ்ட் பார்த்ததில் அதில் முரளியின் பெயர் இருந்தது. ஓமானிலிருந்து கிளம்பியவன் பம்பாய் வந்திருக்கிறான், ஆனால் வீடு திரும்பவில்லை. எங்கே சென்றான்? எந்த தகவலும் இல்லை. லதா பூஜைகள், ஜோசியர்கள் என்று போனாளே தவிர, போலீஸ் கம்ப்ளெய்ண்ட் கொடுக்க வேண்டும் என்று தோன்றவில்லை.

பதினைந்து நாட்கள் கழிந்து அவள் வீட்டிற்கு கோயம்புத்தூரிலிருந்து ஒரு பார்சல் வந்தது. அதில் முரளியின் ஒரு பேண்ட்,ஷர்ட்,பர்ஸ் மற்றும் பாஸ்போர்ட் இருந்திருக்கின்றன. அனுப்பியவர் விவரம் எதுவும் இல்லை. முரளியின் குடும்பதினர்களுக்கு எதுவும் புரியவில்லை.

அந்த சமயம் அவர்கள் பக்கத்து வீட்டிற்கு வந்திருந்த ஒருவர் இந்த விஷயங்களை கேள்விப்பட்டு, சில நாட்களுக்கு முன் மராட்டிய தினசரி ஒன்றில் சாலையோரத்தில் கண்டெடுக்கப்பட்ட சடலம் ஒன்றின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, உறவினர்கள் தகுந்த ஆதாரம் காட்டி அந்த உடலை பெற்றுக் கொள்ளலாம் என்று ஒரு அறிவிப்பு வெளியானது என்று கூறியிருக்கிறார். அந்த செய்தி தாளை வாங்கி பார்த்ததில் அது முரளிதான் என்று தெரிந்திருகிறது. உடனே போலீஸை அணுகியதில்,“இத்தனை நாட்களாக யாரும் க்ளைம் செய்யாததால், நாங்களே எரித்து விட்டோம்” என்றார்களாம்.

என்ன கொடுமை பாருங்கள்? முரளி எப்படி இறந்தான்? விபத்தினாலா? அல்லது கொலை செய்யப்பட்டனா? கொலை என்றால் என்ன காரணம்? இப்படி எதுவுமே தெரியாது. அவன் மனைவி அந்த கேசை தோண்ட வேண்டாம் என்று கூறி விட்டாள்.

எங்களுக்கு மிகவும் அதிர்ச்சி அளித்த மரணம் இது. முரளியைத் தெரியும். நெருங்கிய நட்பு என்று கூற முடியாவிட்டாலும் பழக்கம் உண்டு. நாங்கள் அறிந்த வரையில் நாகரீகமானவர். இந்த மாதிரி மரணங்களில் என்னென்னவோ புரளிகள் வருமே, அது போல முரளியைப் பற்றியும் அவர் ஹவாலா பணப்பறிமாற்றம் செய்தார் என்று செய்திகள் வந்தன. நாங்கள் அவற்றை புறம் தள்ளி விட்டோம்.

இது இப்படி என்றால், இன்னொருவர் குடும்பம் இந்தியாவில் இருந்தது, அவர் மட்டும் தனியாக மஸ்கட்டில் இருந்தார். காலை அலுவலகத்திற்கு சென்று விட்டு, உணவு இடைவேளையின் பொழுது வீட்டிற்கு வந்தவர் உணவு இடைவேளைக்குப் பிறகு அலுவலகம் திரும்பவில்லை. அலுவலகத்தில் அதை பெரிதாக நினைக்கவில்லை. மறுநாளும் அவர் அலுவலகதிற்கு வரவில்லை, எந்த தவலும் அவரிடமிருந்து இல்லை, என்றதும் அலுவலகத்திலிருந்து அவரை ஃபோனில் அழைத்திருக்கிறார்கள், ஃபோன் எடுக்கப்படவில்லை, மதியம் ஒரு முறை அழைத்திருக்கிறார்கள், அப்போதும் பதில் இல்லை, ஏதோ தவறாக இருக்கிறதே? இப்படி சொல்லாமல், கொள்ளாமல் லீவு போடுகிறவர் இல்லையே? என்ற சந்தேகத்தோடு அவர் வீட்டு கதவை உடைத்துப் பார்த்தால், சோபாவில் உட்கார்ந்த நிலையிலேயே மரணத்திருக்கிறார்.

இப்படிபட்ட செய்திகளை கேள்விப்படும்பொழுதெல்லாம் ‘திக்’கென்றிருக்கும். கடவுளே! நான் இந்த ஊருக்கு பயணியாகத்தான் வந்தேன், பயணியாகவே திரும்பச் செல்ல வேண்டும் என்று வேண்டிக் கொள்ளத் தோன்றும்.