கணம்தோறும் பிறக்கிறேன் 

Thursday, July 25, 2024

அண்ணாமலையாருக்கு அரோகரா

திருவண்ணாமலைக்கு செல்ல வேண்டும் என்று கொஞ்ச நாட்களாக ஆசை. இந்த முறை சென்னை வந்திருந்த பொழுது "திருவண்ணாமலைக்கு போகலாமா?" என்று அக்காக்களிடம் கேட்டேன், அவர்களும் ஒப்புக் கொள்ள 23ஆம் தேதி செல்லலாம் என்று முடிவு செய்தோம். 

23ஆம் தேதி,செவ்வாயன்று காலை 6:45க்கு கிளம்பிய நாங்கள், வழியில் 'ஒன்லி காபி'யில் சிற்றுண்டி யை முடித்துக் கொண்டு 10:25க்கு(காலை என்று கூறா விட்டால் காலையா? இரவா? என்ற சந்தேகம் யாருக்காவது வரும்)திருவண்ணாமலையை அடைந்து விட்டோம். 

பெளர்ணமி முடிந்து இரண்டு நாட்களாகி விட்டதே, கும்பல் இருக்காது என்று நினைத்ததற்கு மாறாக நல்ல கும்பல். பிரதான கிழக்கு கோபுரம் வாயில் வழியாக விடாமல், வடக்கு கோபுரம்  வழியாகத்தான் அனுமதித்தார்கள். எங்களை அழைத்துச் சென்றிருந்த எங்கள் பெரிய அக்கா மகனுக்கு தெரிந்தவர் ஒருவர் மூலம் வி.ஐ.பி. வரிசையில் சென்றதால் சீக்கிரம் பார்க்க முடிந்தது.  ஆனால் எங்களைப் போல  பல வி.ஐ.பி.க்கள்!!

அண்ணாமலையார் பாதம் 

அண்ணாமலையார் சன்னதியை சுற்றி வரும் பொழுது பின் பக்கத்தில், அண்ணாமலையார் பாதம், அம்மையப்பன் சன்னிதி, அதற்கு அருகில் இருக்கும் கிணறு போன்றவைகளை முதல்முறையாக தரிசித்தோம். அந்த கிணற்றில் ஊரும் நீர் கங்கை என்று நம்பிக்கையாம்.

அதைப்போல உண்ணாமுலையம்மனை தரிசித்துவிட்டு வெளியே வரும்பொழுது இடது கைப்புறத்தில் அரச மரம், வில்வ மரம் இரண்டும் சேர்ந்து அதாவது அரச மரத்தின் மத்தியில் வில்வமரம் முளைத்திருக்கிறது.  அந்த மரத்தில் இரவில் சூட்சும வடிவில் சித்தர்கள் வந்து தவம் செய்கிறார்கள் என்பதும் நம்பிக்கை என்றார்கள் அதையும் முதல் முறையாக பார்த்தேன்.

உண்ணாமலையம்மன் சன்னதிக்கு வெளியே நவகிரக சன்னதிக்கு அருகில் சித்ரகுப்தருக்கு தனி சன்னதி இருக்கும். சித்திரகுப்தரை நேரில் பார்க்கக் கூடாது,  பக்கவாட்டில் இருக்கும் ஜன்னல் வழியேதான் தரிசிக்க வேண்டும் என்பார்கள். அன்று அங்கு barricade வைத்திருந்தார்கள். வெகுசிலர் அதை சற்று நகர்த்தி வழி ஏற்படுத்தி சித்ரகுப்தன் பக்கவாட்டில் தரிசித்தோம்.

இதன் பிறகு கொடிமரத்தருகில் நமஸ்கரித்துவிட்டு, சிவகங்கை குளத்திற்கு எதிரே இருக்கும் இடைக்காட்டு சித்தர் ஜீவ சமாதியையும் முதல்முறையாக தரிசித்தோம். இந்த முறை திருவண்ணாமலை பயணம் சிறப்பானது என்றுதான் கூற வேண்டும்.