கணம்தோறும் பிறக்கிறேன் 

Saturday, December 18, 2021

திருவெம்பாவை - 3

திருவெம்பாவை - 3



முத்தன்ன வெண்நகையாய் முன்வந்து எதிர் எழுந்தென்
அத்தன் ஆனந்தன் அமுதனென்ற உள்ளுறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடை திறவாய்
பத்துடையீர் ஈசன் பழஅடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மை தீர்த்தாட் கொண்டாற் பொல்லாதே
எத்தோ நின் அன்புடமை எல்லோம் அறியோமே
சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை
இத்தனையும் வேண்டும் 
நமக்கேலோர் எம்பாவாய்.

இந்தப் பாடலும், வெளியே நிற்கும் தோழிகளுக்கும் உள்ளே உறங்கிக் கொண்டிருக்கும் பெண்ணிற்கும் இடையே நிகழும் ஒரு உரையாடலாகத்தான் அமைந்திருகாகிறது.

"முத்துப்போல் பளிச்சென்ற புன்னகை கொண்டிருக்கும் பெண்ணே! எங்களோடு பேசும் பொழுது சிவபெருமான்தான் என் தந்தை, என் சந்தோஷமே அவன்தான், எனக்கு மரணமற்ற வாழ்வை அளிக்கவல்ல அமுதம் போன்றவன் என்றெல்லாம் நாவினிக்க பேசுவாய்.‌ உன் வீட்டு கதவைத் திறப்பாயாக". என்று கேலியாக கூறியதும்... 

உள்ளே இருப்பவளுக்கு நாணமும்,குற்ற உணர்ச்சியும் மேலிட, நல்ல பண்புகள் கொண்ட பெண்களே, நீங்கள் எல்லோரும் சிவபெருமான் மீது பற்று கொண்டவர்கள், நீண்ட நாட்களாக அவருடைய அடியவர்கள், நானோ புதியவள், உங்கள் நடைமுறைகளை எனக்கு சொல்லிக் கொடுத்து, என் குற்றங்களை மன்னித்தால் ஆகாதா? இதுதான் உங்கள் அன்பா? என்கிறாள்.
அவர்கள் விட்டு விடுவார்களா?

"அடியே, நீ சிவபெருமான் மீது கொண்டிருக்கும் பக்தி எங்களுக்குத் தெரியும்" என்றதும்
அவள் வாளாதிருப்பாளா?

"உள்ளம் தூய்மையாக இருப்பவர்கள் சிவனின் பெருமையை பேசுவதைத்தானே விரும்புவார்கள்? (இப்படி மற்றவர்களை குறை கூறுவார்களா? என்பது உட்கிடை)என்றதும், 

வெளியே நிற்கும் தோழிகளோ, "உன்னையும் சேர்த்துக் கொண்டதற்கு எங்களுக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்" என்பதாக இந்தப் பாடலை முடிக்கிறார்.

என்ன ஒரு அழகிய நாடகம் போன்ற படைப்பு!

Friday, December 17, 2021

திருவெம்பாவை பாடல் 2

திருவெம்பாவை பாடல் 2




பாசம் பரஞ்சோதிக்கென்பாய் இராப்பகல் நாம் 
பேசும் போதெப்போது இப்போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீசி இவையுஞ் சிலவோ விளையாடி
ஏசும் இடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள்
ஈசனார்க்கு அன்பர் யாம் ஆரேலோர் எம்பாவாய்.

முதல் பாடலில் ஒரு பெண்ணை எழுப்பி அழைத்துக் கொண்டு வந்தவர்கள் அடுத்த பெண்ணின் வீட்டிற்கு வருகிறார்கள். அவளும் இன்னும் எழுந்திருக்கவில்லை. வாசலில் நிற்பவர்களுக்கு அலுப்பாக இருக்கிறது ஏனென்றால் இந்த பெண் எப்படிப்பட்டவள் என்றால், இரவும் பகலும் தோழிகளோடு பேசும் பொழுதெல்லாம் தனக்கு மிகவும் விருப்பமானவர் பரஞ்சோதியாகிய அந்த சிவபெருமான்தான் என்று கூறுகிறவள். ஆனால் இன்று இன்னும் எழுந்திருக்காமல் உறங்கிக் கொண்டிருப்பதை பார்த்து வெளியே நிற்கும் தோழிகள் சற்றே கேலியாக," அழகான ஆபரணங்களை அணிந்து கொண்டிருக்கும் பெண்ணே,எங்களிடம் சிவபெருமான்தான் என் பாசத்திற் குரியவர் என்று கூறினாய். ஆனால் உன் பாசம்  படுக்கையின் மீதுதான் என்று புரிந்து விட்டது"  என்றதும் உள்ளே இருப்பவளுக்கு கோபம் வந்து விடுகிறது. "நீங்களும்தான் அழகான ஆபரணங்களை அணிந்திருக்கிறீர்கள். என்னை கேலி செய்து ஏசும் நேரமா இது? நாம் எல்லோருமே தேவர்களுக்கு கூட காட்ட விரும்பாத தன்னுடைய திருவடியை பக்தர்களுக்கு காட்டி அருளக்கூடிய, தில்லையில் இருக்கும் ஈசனின் அன்பர்கள் தானே?" என்று சமாதானமாக பேசி சமாளிக்கிறாள். 




Thursday, December 16, 2021

திருவெம்பாவை - 1

 திருவெம்பாவை



ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதியை

யாம் பாடக் கேட்டேயும் வாள் தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலி போய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின் மேல் நின்றும் புரண்டு இங்ஙன்
ஏதேனும் ஆகான் கிடந்தாள் என்னே என்னே
ஈதே எந்தோழி பரிலோர் எம்பாவாய்

பாவை நோன்பு என்பது நாட்டில் நல்ல மழை பெய்து பயிர்கள் செழிக்கவும், நல்ல கணவனை அடைந்து தங்கள் வாழ்க்கை செழிக்கவும் பெண்கள் அனுசரிக்கும் நோன்பு.

மாணிக்கவாசகர் தன்னை ஒரு பெண்ணாக உருவகப்படுத்திக் கொண்டு நாயகன்,நாயகி பாவத்தில் திருவண்ணாமலையில் குடி கொண்டிருக்கும் அண்ணாமலையாரை துதித்து பாடியதுதான் திருவெம்பாவை பாடல்கள். இதில் முதல் ஒன்பது பாடல்கள் முதலில் எழுந்த பெண்கள், விடியற்காலையில் எழுந்து, பாவை நோன்பு நோற்பதற்கு வருவதாக கூறிவிட்டு, எழுந்திருக்காமல் உறங்கிக் கொண்டிருக்கும் பெண்களை எழுப்புவதாக அமைந்திருக்கும். 

முதல் பந்திலேயே சிக்ஸர் அடிப்பதை போல, முதல் பாடலின் முதல் வரியிலேயே யாரைக் குறித்து இந்த பாடல்கள் பாடப்பட்டன என்று தெளிவு படுத்தி விடுகிறார். 

ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதியாக எழுந்து, உயர்ந்து நின்றவன் அந்த அண்ணாமலையான் தானே? அப்படிப்பட்ட அந்த அண்ணாமலையானின் பெருமைகளை நாங்கள் பாடக் கேட்டும் பெரிய கண்களை உடைய பெண்ணே  நீ உறங்கிக் கொண்டிருக்கிறாயே? உன் செவிகள் என்ன இரும்பாலானவையா? 
வீதியில் யாராவது சிவபெருமானின் பெருமைகளை பேசிக்கொண்டு செல்வதை கேட்டாலே உணர்ச்சி வசப்பட்டு அழுவாயே? இப்போது நாங்கள் உன் வீட்டு வாசலில் வந்து சிவநாமத்தை சொல்கிறோம், நீயானால் எழுந்து வராமல் மெத்தையிலே புரண்டு கொண்டிருக்கிறாய். இதுதான் உன் சிறப்பா?
 

Tuesday, December 14, 2021

பார்ப்பது, கேட்பது, படிப்பது(தொடர்ச்சி)

பார்ப்பது, கேட்பது, படிப்பது(தொடர்ச்சி)



நான் இங்கே வருவதற்கு முன் என் மகன் இந்திரா நூயி எழுதிய மை லைஃப் இன் ஃபுல் என்ற புத்தகத்தை அமேசானில் வரவழைத்தான். ஊருக்கு வருவதற்கு முன் அதை படித்து விட வேண்டும் என்று நினைத்தேன், ஆனால் முடியவில்லை. இந்திரா நூயி பெப்ஸி கோவின் சிஇஓ வாக ஆவதோடு நிறுத்தி இருந்தேன். 

இங்கே வந்து லைப்ரரியில் தேடினால் வெயிட்டிங் லிஸ்ட் 93. ஒவ்வொருவரும் ஒரு புத்தகத்தை 14 நாட்கள் வைத்திருக்கலாம். அந்த கணக்கில் பார்த்தால் என் முறை வருவதற்கு வருடக்கணக்கில் ஆகிவிடும். ஆகவே நெட்டில் டவுன்லோட் செய்து படிக்க வேண்டும் அதற்கும் லைப்ரரியில் வசதி இருக்கிறது. ஆனால் அங்கேயும் இரண்டு வாரங்கள் காத்திருக்க வேண்டும். அதற்கு பிறகு தான் படித்து முடிக்க வேண்டும் படித்து முடித்த பிறகு அதை பற்றி சொல்கிறேன். 

இங்கிருக்கும் நூலகத்தில் தமிழ் புத்தகங்களும் பார்க்க முடிந்தது. அசோகமித்திரன், தி ஜானகிராமன், எஸ். ராமகிருஷ்ணன் போன்றவர்களின் புத்தகங்கள் இருந்தன இதுவரை எஸ்ராவின் கதை எதுவும் நான் படித்ததில்லை. எனவே அவர் எழுதிய 'நிமித்தம்' என்னும் புத்தகத்தை எடுத்து வந்தேன்.  

காதுகேளாத  ஒருவனின் அனுபவங்கள், சோகங்கள் கதையாக விரிந்திருக் கின்றன. "குளிக்கும் பொழுது தண்ணீர் கீழே விழும் சத்தம் கேட்காதா?" என்று ஒருவர் கேட்கிறார். அவனுக்கு கேட்காது. தண்ணீர் உடம்பில் படும் உணர்வுதான். காது கேட்காதவர்களின் இழப்புகளை துல்லியமாக புரிய வைத்த இடம் இது.  

தேவராஜ் என்னும் சிறுவன் குளிர் காய்ச்சலுக்கும் பிறகு தன் செவித்திறனை இழக்கிறான். இடது காது முற்றிலும் செயலிழக்க, வலது காது கொஞ்சமாக கேட்கும். இப்படிப்பட்ட ஒரு குழந்தைக்கு ஆதரவும், பரிவும் கிடைக்காததால் அவன் சந்திக்கும் அவமானங்களும் சோகங்களும் அவனை அலைக்கழிக்கின்றன. "செத்து தொலையாமல் இருந்து எங்களை தொல்லை செய்கிறாய்" என்று எப்போதும் அவனை கரித்துக் கொட்டும் மூர்க்கத்தனமான தந்தை, பள்ளியில் ஆசிரியர் பேசுவது புரியாமல் இவன் மதங்க மலங்க முழிக்கும் பொழுது, "செவிட்டு முண்டமே ஏன் இங்கே வந்து உயிரை வாங்குகிறாய்?" என்று புளியமர விளாரால் விளாசும் ஆசிரியரால் படிப்பை பாதியில் நிறுத்துகிறான். 

அவனுக்கு காது கேட்க வைப்பதற்காக அவன் தாய் எடுக்கும் முயற்சிகள் தோற்கின்றன. காது கேளாதோர் களுக்கான பள்ளியில் அவனை சேர்த்து விடுகிறாள். அங்கு அளவிற்கு அதிகமான மாணவர்கள் ஒரு சிறிய அறையில் ஒருவரோடு ஒருவர் இடித்துக் கொண்டு படுத்துக் கொண்டதில் ஒரு மாணவனுக்கிருந்த சரும நோய் இவனுக்கும் வந்துவிடுகிறது. அதை குணப்படுததிக்கொண்டு வா என்று வீட்டிற்கு அனுப்பி விடுகிறார்கள். வந்தவனுக்கு திரும்பிச் செல்ல பிடிக்கவில்லை.   தந்தையால் மூர்க்கமாக சிதைக்கப்படும் காதல், எந்த வேலையிலும் நிலைக்க முடியாமை என்று நூலறுந்த பட்டமாக அலைகிறது அவன் வாழ்வு. 

தேவராஜின் வாழ்க்கையில் தென்றலாய் இருப்பவர்கள் அவன்மீது அன்பாக இருக்கும் புஷ்பா டீச்சரும், ஓவியரான அவர் கணவரும், மற்றும் நண்பன் ராமசுப்பு மட்டுமே. இறுதியில் ராமசுப்பு வால் நிறந்தர வருமானத்திற்கு வழி பிறக்க, அவனுடைய 47 வயதில் கணவனை இழந்த ஒரு நர்ஸை மணந்து கொள்ள சம்மதிக்கிறான்.  திருமண சடங்குகள் ஒரு அபத்தமான நாடகமாக தோன்றுகிறது. முன்பை விட இப்போதுதான் வாழ்க்கையை நினைத்து பயமாக இருக்கிறது என்று முடிகிறது கதை.

கதையின் நீளம் அதிகம்.  காது கேட்காத ஒருவன் அனுபவிக்கும் துயரங்களை மட்டும் சொல்லி இருந்தால் அதற்கு ஒரு தீர்வும் சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். சொல்ல வந்த விஷயம் நச்சென்று பதிந்திருக்கும்.  இந்த கதையில் அவன் சந்தித்த மனிதர்கள், அவர்களுடைய வாழ்க்கை என்று பிரிந்து போய் அவன் யார் யாரிடம் பழகினாலும் அவர்களை பற்றி எல்லாம் ஒவ்வொரு அத்தியாயம். அவர் திரட்டிய பல விஷயங்கள் அத்தனையையும் ஒரு நாவலில் கொட்டியிருக்கிறார். அதனால் மூலக்கரு சிதைந்து போகிறது. பாஸிட்டிவாக முடிக்காததும்,  செவித்திறன் அற்றவர்கள் எப்படி வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற வழிகாட்டுதல்கள் இல்லாததும் குறைகளாக எனக்குப்பட்டன. 




Monday, December 13, 2021

பார்ப்பது, கேட்பது, படிப்பது

பார்ப்பது, கேட்பது, படிப்பது 

இங்கு வந்ததிலிருந்து ஒரு நாளைக்கு ஒன்று என்ற ரேஞ்சில் நிறைய சினிமாக்கள் பார்க்கிறேன்.  தமிழ்தான் என்றில்லை, ஹிந்தி,  ஆங்கிலம்,  மலையாளம் எல்லாம்தான். அண்ணாத்த, அரன்மனை3 போன்ற படங்களை இதய நோயாளிகள் தவிர்ப்பது நலம். அந்த இரைச்சல் அவர்கள் உடம்பிற்கு ஆகாது. ரஜினிகாந்த் இனியும் தொடர்ந்து நடிக்கத்தான் வேண்டுமா?

இந்த படங்களை பார்த்த பொழுது இது தமிழ் சினிமாவின் இருண்ட காலமோ என்று தோன்றியது. நம்பிக்கையளிக்கும் விதம் வேறு சில படங்களும் வந்திருக்கின்றன.  

ஜெய் பீம் நன்றாகத்தான் இருந்தது. அந்தப் படத்தின் கான்ட்ரவர்சிகளை பலரும் எழுதி விட்டார்கள். ஜெய் பீமிற்கு ஒரு மாற்று போன்ற படம் 'ருத்ர தாண்டவம்'. நல்ல போலீஸ், வக்கீலாக வரும் ராதா ரவி,"இந்த நாட்டு மக்கள் அத்தனை பேருக்குமான அரசியல் அமைப்பு சட்டத்தை எழுதியவர் அம்பேத்கர். அவரை  ஒரு குறிப்பிட்ட இனத்திற்கு மட்டும் சொந்தக்காரர் என்பது போல சொல்கிறார்கள்" என்கிறார். ஒரு வேளை இதற்கு தியேட்டரில் கைதட்டல் கிடைத்திருக்கலாம்.

வெங்கட் பிரபுவின் மாநாடு ஒரு வித்தியாசமான முயற்சி. டைம் லூப் என்னும் கான்செப்ட் தமிழுக்கு புதுசு. இன்று,நேற்று,நாளை என்னும் படத்தில் டைம் மிஷின் கான்செப்ட்டிலும் இறந்தவர் மீண்டும் பிழைப்பது போல் வரும். இதில் மீண்டும் மீண்டும் வருவது, எஸ்.ஜெ. சூர்யா வார்த்தைகளில் "வந்தான், சுட்டான், செத்தான், ரிபீட்.." . இந்த கான்செப்ட் எத்தனை பேருக்கு புரியும் என்று தோன்றியது. ஒரு இடத்தில் கூட தேங்காத விறுவிறுப்பு படத்தின் பிளஸ் குறிப்பாக படத்தின் முதல் பாதி விறுவிறுவிறு.... 

ஒரு மாநிலத்தின் முதலமைச்சரை ஒரு மாநாட்டில் வைத்து கொலை செய்து அதை மதக் கலவரமாக மாற்ற நடக்கும் முயற்சி எப்படி முறியடிக்கப்படுகிறது என்பதுதான் கதை. இந்த சாதாரண கதையை டைம் லூப் என்னும் கான்செப்டை பயன்படுத்தி ஸ்வாரஸ்யமாக்கியிருப்பது இயக்குனரின் திறமை.   

இந்த படத்தின் கதாநாயகன் சிம்புவாக இருந்தாலும், எஸ்.ஜே.சூர்யா ஸ்டீல்ஸ் தி ஷோ. கொஞ்சம் ஓவர் ஆக்டிங் என்று தோன்றலாம், ஆனால் அப்படி நடித்தால்தான் அந்த காரெக்டர் நிற்கும். வில்லனாக ஒய்.ஜி.மகேந்திரன் சிறப்பாக செய்திருக்கிறார்.  சினிமா ஒரு கூட்டு முயற்சி என்பது இந்த படத்தில் நன்கு விளங்குகிறது. எடிட்டர், இசையமைப்பாளர், திரைக்கதாசிரியர் என்று அத்தனை பேரும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்கள். தவற விடக்கூடாத படம். 

இந்தப் படத்தின் கதாநாயகி கல்யாணி ப்ரியதர்ஷன். "இவள் 'வரனே அவஸ்யமுண்டு'  என்னும் மலையாள படத்தின் கதாநாயகியாச்சே? அதில் 
ஷோபனாவின் மகளாக நடித்திருக்கிறாள்"  என்று என் மகள் கூறியதும் ஷோபனா நடிப்பதை நிறுத்தி விட்டார் என்றல்லவா நினைத்தேன், பார்த்து விட வேண்டியதுதான் என்று அந்த மலையாள படத்தை பார்த்தேன். திருமண வயதில் பெண் இருக்கும் சிங்கிள் பேரண்டான ஷோபனாவுக்கும்,  கட்டுப்படுத்த முடியாத தன் கோபத்திற்கு மனோதத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ளும்  எக்ஸ் சர்வீஸ் மேனான சுரேஷ் கோபிக்கும் இடையே மலரும் நட்பை அழகாக சொல்லியிருந்த படம். இப்படியெல்லாம் ஏன் தமிழில் படங்கள் எடுப்பதில்லை என்னும் தாபம் வருகிறது. ஆனால் மலையாள இளம் கதா நாயகர்களுக்கும் ஹீரோயிசம் காட்ட வேண்டும் என்ற ஆசை வந்து விட்டதோ என்று தோன்றுகிறது. 

நிவின் பாலி நடித்திருந்த ஒரு படம் சரியாக சென்றுகொண்டே இருந்தது, தீடீரென்று தமிழ்.தெலுங்கு படங்களைப் போல மாறி விட்டது. துல்கர் சல்மான் படத்தில்கூட அவர் ஒரே ஒரு குத்து விடுகிறார், பேருந்தின் கண்டக்டர் பேருந்தின் முன் கண்ணாடியை உடைத்துக் கொண்டு கீழே விழுகிறார். ஹூம்ம்! காதை செவிடாக்கும் ஜாரிங் இசை இல்லை என்பது மலையாளப் படங்களின் சிறப்பு.

படித்த புத்தகங்களை பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்.