கணம்தோறும் பிறக்கிறேன் 

Monday, December 13, 2021

பார்ப்பது, கேட்பது, படிப்பது

பார்ப்பது, கேட்பது, படிப்பது 

இங்கு வந்ததிலிருந்து ஒரு நாளைக்கு ஒன்று என்ற ரேஞ்சில் நிறைய சினிமாக்கள் பார்க்கிறேன்.  தமிழ்தான் என்றில்லை, ஹிந்தி,  ஆங்கிலம்,  மலையாளம் எல்லாம்தான். அண்ணாத்த, அரன்மனை3 போன்ற படங்களை இதய நோயாளிகள் தவிர்ப்பது நலம். அந்த இரைச்சல் அவர்கள் உடம்பிற்கு ஆகாது. ரஜினிகாந்த் இனியும் தொடர்ந்து நடிக்கத்தான் வேண்டுமா?

இந்த படங்களை பார்த்த பொழுது இது தமிழ் சினிமாவின் இருண்ட காலமோ என்று தோன்றியது. நம்பிக்கையளிக்கும் விதம் வேறு சில படங்களும் வந்திருக்கின்றன.  

ஜெய் பீம் நன்றாகத்தான் இருந்தது. அந்தப் படத்தின் கான்ட்ரவர்சிகளை பலரும் எழுதி விட்டார்கள். ஜெய் பீமிற்கு ஒரு மாற்று போன்ற படம் 'ருத்ர தாண்டவம்'. நல்ல போலீஸ், வக்கீலாக வரும் ராதா ரவி,"இந்த நாட்டு மக்கள் அத்தனை பேருக்குமான அரசியல் அமைப்பு சட்டத்தை எழுதியவர் அம்பேத்கர். அவரை  ஒரு குறிப்பிட்ட இனத்திற்கு மட்டும் சொந்தக்காரர் என்பது போல சொல்கிறார்கள்" என்கிறார். ஒரு வேளை இதற்கு தியேட்டரில் கைதட்டல் கிடைத்திருக்கலாம்.

வெங்கட் பிரபுவின் மாநாடு ஒரு வித்தியாசமான முயற்சி. டைம் லூப் என்னும் கான்செப்ட் தமிழுக்கு புதுசு. இன்று,நேற்று,நாளை என்னும் படத்தில் டைம் மிஷின் கான்செப்ட்டிலும் இறந்தவர் மீண்டும் பிழைப்பது போல் வரும். இதில் மீண்டும் மீண்டும் வருவது, எஸ்.ஜெ. சூர்யா வார்த்தைகளில் "வந்தான், சுட்டான், செத்தான், ரிபீட்.." . இந்த கான்செப்ட் எத்தனை பேருக்கு புரியும் என்று தோன்றியது. ஒரு இடத்தில் கூட தேங்காத விறுவிறுப்பு படத்தின் பிளஸ் குறிப்பாக படத்தின் முதல் பாதி விறுவிறுவிறு.... 

ஒரு மாநிலத்தின் முதலமைச்சரை ஒரு மாநாட்டில் வைத்து கொலை செய்து அதை மதக் கலவரமாக மாற்ற நடக்கும் முயற்சி எப்படி முறியடிக்கப்படுகிறது என்பதுதான் கதை. இந்த சாதாரண கதையை டைம் லூப் என்னும் கான்செப்டை பயன்படுத்தி ஸ்வாரஸ்யமாக்கியிருப்பது இயக்குனரின் திறமை.   

இந்த படத்தின் கதாநாயகன் சிம்புவாக இருந்தாலும், எஸ்.ஜே.சூர்யா ஸ்டீல்ஸ் தி ஷோ. கொஞ்சம் ஓவர் ஆக்டிங் என்று தோன்றலாம், ஆனால் அப்படி நடித்தால்தான் அந்த காரெக்டர் நிற்கும். வில்லனாக ஒய்.ஜி.மகேந்திரன் சிறப்பாக செய்திருக்கிறார்.  சினிமா ஒரு கூட்டு முயற்சி என்பது இந்த படத்தில் நன்கு விளங்குகிறது. எடிட்டர், இசையமைப்பாளர், திரைக்கதாசிரியர் என்று அத்தனை பேரும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்கள். தவற விடக்கூடாத படம். 

இந்தப் படத்தின் கதாநாயகி கல்யாணி ப்ரியதர்ஷன். "இவள் 'வரனே அவஸ்யமுண்டு'  என்னும் மலையாள படத்தின் கதாநாயகியாச்சே? அதில் 
ஷோபனாவின் மகளாக நடித்திருக்கிறாள்"  என்று என் மகள் கூறியதும் ஷோபனா நடிப்பதை நிறுத்தி விட்டார் என்றல்லவா நினைத்தேன், பார்த்து விட வேண்டியதுதான் என்று அந்த மலையாள படத்தை பார்த்தேன். திருமண வயதில் பெண் இருக்கும் சிங்கிள் பேரண்டான ஷோபனாவுக்கும்,  கட்டுப்படுத்த முடியாத தன் கோபத்திற்கு மனோதத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ளும்  எக்ஸ் சர்வீஸ் மேனான சுரேஷ் கோபிக்கும் இடையே மலரும் நட்பை அழகாக சொல்லியிருந்த படம். இப்படியெல்லாம் ஏன் தமிழில் படங்கள் எடுப்பதில்லை என்னும் தாபம் வருகிறது. ஆனால் மலையாள இளம் கதா நாயகர்களுக்கும் ஹீரோயிசம் காட்ட வேண்டும் என்ற ஆசை வந்து விட்டதோ என்று தோன்றுகிறது. 

நிவின் பாலி நடித்திருந்த ஒரு படம் சரியாக சென்றுகொண்டே இருந்தது, தீடீரென்று தமிழ்.தெலுங்கு படங்களைப் போல மாறி விட்டது. துல்கர் சல்மான் படத்தில்கூட அவர் ஒரே ஒரு குத்து விடுகிறார், பேருந்தின் கண்டக்டர் பேருந்தின் முன் கண்ணாடியை உடைத்துக் கொண்டு கீழே விழுகிறார். ஹூம்ம்! காதை செவிடாக்கும் ஜாரிங் இசை இல்லை என்பது மலையாளப் படங்களின் சிறப்பு.

படித்த புத்தகங்களை பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்.



19 comments:

  1. ஜெய் பீம், மாநாடு, இரண்டு படங்களும் நன்றாக இருந்தன...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், பார்க்க வேண்டிய படங்கள்.

      Delete
  2. ருத்ர தாண்டவம் போல தெலுங்குப் படம் ஒன்று வந்திருக்கிறதாமே..  பார்க்கவில்லையா?

    ReplyDelete
  3. எல்லோரும் பாராட்டினாலும் மாநாடு பார்க்கத் தோன்றவில்லை.  ஜெய்பீமும் அப்படியே..

    ReplyDelete
    Replies
    1. மாநாடு கண்டிப்பாக பாருங்கள்.

      Delete
  4. புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை மறுபடி தொடங்க போராடி வருகிறேன்!!!!!

    ReplyDelete
    Replies
    1. என்னதான் நெட்டில் எல்லாம் கிடைத்தாலும், கையில் புத்தகத்தை வைத்துக் கொண்டு படிக்கும் அனுபவம் தனி.

      Delete
  5. நல்ல பட விமரிசனம் பானு மா.
    நானும் தினம் படம் பார்க்கிறேன்.

    நீங்கள் சொல்லி இருக்கும் படங்களில்
    மா நாடு பார்க்கலாமோ. சிம்பு அவ்வளவாக
    அப்பீல் இல்லை.

    சத்தம் கேட்டால் அலர்ஜி தான்.
    ஒரு மாற்றத்துக்கு
    பழைய படம் காதலா காதலா பார்த்தோம்:)
    ப்ளசண்ட்டாக இருந்தது.

    ReplyDelete
    Replies
    1. இதில் சிம்புவின் சேட்டைகள் இல்லை. பார்க்கலாம்.

      Delete
  6. ஆஹா! எனக்கும் அம்பேரிக்காவில் தான் படங்கள் பார்க்கும் மனோநிலையே ஏற்படும். அதிலும் நெட்ஃப்ளிக்ஸின் ஆங்கில சீரியல்களைத் தவற விட மாட்டேன். ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், தமிழ்ப்படங்களையும் பார்ப்பேன். உண்மையிலேயே மலையாளப்படங்களின் தரம் தமிழில் இல்லைதான். ஆனால் சொன்னால் வம்பு! தமிழில் கதாநாயகர்களைப் போற்றிப் பாடி அவர் என்ன செய்தாலும் அது தான் சாகசம்னு ஒத்துக்கணும். மலையாளத்தில் நம் போன்ற சாமானியர்களே கதை நாயகனாக இருப்பார்கள்.

    ReplyDelete
    Replies
    1. நான் இந்தியாவிலும் படம் பார்த்துக் கொண்டுதான் இருந்தேன். விட்டுப்போயிருந்த மலையாளப் படங்ளை மீண்டும் பார்க்கும் வாய்ப்பு.
      தெலுங்கு, தமிழ் இரண்டும் ஒரே மட்டம்தான்.
      தமிழிலும் புதிய சிந்தனைகளோடு இளம் இயக்குனர்கள் வருகிறார்கள். என்ன? அவர்கள் ஸ்டார் நடிகர்களின் கூடாரத்திற்கு அழைக்கப்பட்டதும் மாற்றப்பட்டு விடுகிறார்கள். அவர்களும் சம்பாதிக்க வேண்டாமா? நட்சத்திர நடிகர்களின் படங்களை இயக்கினால் நாலு காசு பார்க்க முடியும்.

      Delete
  7. பானுக்கா நம்மூர் மக்கள் அமெரிக்கா, கனடா செல்லும் போதுதான் இப்படியானவை நிறைய பார்க்க முடியும் என்று சொல்வதைக் கேட்டிருக்கிறேன். பின்னே? கொஞ்சம் தூரம் என்றால் வண்டி இல்லாமல் தனியாகச் செல்ல முடியாது. சில இடங்களில் மட்டுமே பொதுப்போக்குவரத்து உண்டு. எனவே டைம் பாஸ்!! ஹாஹாஹாஹாஹா...ஜஸ்ட் ரிலாக்ஸ்!!

    கீதா

    ReplyDelete
  8. வரனே ஆவஷ்யமுண்டு படம் துல்கரும் இருக்கிறார் போல!! கல்யாணி பிரியதர்ஷன் - டைரக்டர் பிரியதர்ஷனின் பெண். நீங்கள் சொன்னதும் ட்ரெய்லர் மட்டும் பார்த்தேன். காமெடியும் இருக்கிறது போலத் தெரிகிறது. படம் எதில் ஃப்ரீயா இருக்கு என்று தெரியவில்லை.

    மாநாடு நன்றாக இருக்கிறதா! நோட்டட். ஆனால் எந்தப் படமாக இருந்தாலும் எனக்கு பார்க்கும் வாய்ப்பு அதற்கான சூழல் வேண்டும்..அடுத்தப்ல .ஃப்ரீயாக வரும் தளம் வேண்டும் இத்தனையும் கூடி வரும் சுபவேளை!!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. //வரனே ஆவஷ்யமுண்டு படம் துல்கரும் இருக்கிறார் போல!!//அவருடைய சொந்த தயாரிப்பு. சென்னையில் நடப்பது போல கதையமைப்பு.

      Delete
    2. ஷோபனாவின் பாவங்கள்..கொள்ளை அழகு!

      Delete
  9. ஹீரோயிஸம் ஒரு சில படங்களில் எட்டிப் பார்க்கிறது மல்லுவுட்டிலும்.

    புத்தகங்கள் நானும் ஆன்லைனில்தான்...வாசிக்கத் தொடங்கியிருந்தேன். இடையில் தடைப்பட்டுள்ளது. மீண்டும் தொடங்க முயற்சி..

    கீதா

    ReplyDelete
  10. நீங்கள் எனக்கு அனுப்பிய சில கதைகளை இனிமேல்தான் வாசிக்க வேண்டும். Dry eye problem வேறு பயமுறுத்துகிறது.

    ReplyDelete