கணம்தோறும் பிறக்கிறேன் 

Tuesday, December 14, 2021

பார்ப்பது, கேட்பது, படிப்பது(தொடர்ச்சி)

பார்ப்பது, கேட்பது, படிப்பது(தொடர்ச்சி)



நான் இங்கே வருவதற்கு முன் என் மகன் இந்திரா நூயி எழுதிய மை லைஃப் இன் ஃபுல் என்ற புத்தகத்தை அமேசானில் வரவழைத்தான். ஊருக்கு வருவதற்கு முன் அதை படித்து விட வேண்டும் என்று நினைத்தேன், ஆனால் முடியவில்லை. இந்திரா நூயி பெப்ஸி கோவின் சிஇஓ வாக ஆவதோடு நிறுத்தி இருந்தேன். 

இங்கே வந்து லைப்ரரியில் தேடினால் வெயிட்டிங் லிஸ்ட் 93. ஒவ்வொருவரும் ஒரு புத்தகத்தை 14 நாட்கள் வைத்திருக்கலாம். அந்த கணக்கில் பார்த்தால் என் முறை வருவதற்கு வருடக்கணக்கில் ஆகிவிடும். ஆகவே நெட்டில் டவுன்லோட் செய்து படிக்க வேண்டும் அதற்கும் லைப்ரரியில் வசதி இருக்கிறது. ஆனால் அங்கேயும் இரண்டு வாரங்கள் காத்திருக்க வேண்டும். அதற்கு பிறகு தான் படித்து முடிக்க வேண்டும் படித்து முடித்த பிறகு அதை பற்றி சொல்கிறேன். 

இங்கிருக்கும் நூலகத்தில் தமிழ் புத்தகங்களும் பார்க்க முடிந்தது. அசோகமித்திரன், தி ஜானகிராமன், எஸ். ராமகிருஷ்ணன் போன்றவர்களின் புத்தகங்கள் இருந்தன இதுவரை எஸ்ராவின் கதை எதுவும் நான் படித்ததில்லை. எனவே அவர் எழுதிய 'நிமித்தம்' என்னும் புத்தகத்தை எடுத்து வந்தேன்.  

காதுகேளாத  ஒருவனின் அனுபவங்கள், சோகங்கள் கதையாக விரிந்திருக் கின்றன. "குளிக்கும் பொழுது தண்ணீர் கீழே விழும் சத்தம் கேட்காதா?" என்று ஒருவர் கேட்கிறார். அவனுக்கு கேட்காது. தண்ணீர் உடம்பில் படும் உணர்வுதான். காது கேட்காதவர்களின் இழப்புகளை துல்லியமாக புரிய வைத்த இடம் இது.  

தேவராஜ் என்னும் சிறுவன் குளிர் காய்ச்சலுக்கும் பிறகு தன் செவித்திறனை இழக்கிறான். இடது காது முற்றிலும் செயலிழக்க, வலது காது கொஞ்சமாக கேட்கும். இப்படிப்பட்ட ஒரு குழந்தைக்கு ஆதரவும், பரிவும் கிடைக்காததால் அவன் சந்திக்கும் அவமானங்களும் சோகங்களும் அவனை அலைக்கழிக்கின்றன. "செத்து தொலையாமல் இருந்து எங்களை தொல்லை செய்கிறாய்" என்று எப்போதும் அவனை கரித்துக் கொட்டும் மூர்க்கத்தனமான தந்தை, பள்ளியில் ஆசிரியர் பேசுவது புரியாமல் இவன் மதங்க மலங்க முழிக்கும் பொழுது, "செவிட்டு முண்டமே ஏன் இங்கே வந்து உயிரை வாங்குகிறாய்?" என்று புளியமர விளாரால் விளாசும் ஆசிரியரால் படிப்பை பாதியில் நிறுத்துகிறான். 

அவனுக்கு காது கேட்க வைப்பதற்காக அவன் தாய் எடுக்கும் முயற்சிகள் தோற்கின்றன. காது கேளாதோர் களுக்கான பள்ளியில் அவனை சேர்த்து விடுகிறாள். அங்கு அளவிற்கு அதிகமான மாணவர்கள் ஒரு சிறிய அறையில் ஒருவரோடு ஒருவர் இடித்துக் கொண்டு படுத்துக் கொண்டதில் ஒரு மாணவனுக்கிருந்த சரும நோய் இவனுக்கும் வந்துவிடுகிறது. அதை குணப்படுததிக்கொண்டு வா என்று வீட்டிற்கு அனுப்பி விடுகிறார்கள். வந்தவனுக்கு திரும்பிச் செல்ல பிடிக்கவில்லை.   தந்தையால் மூர்க்கமாக சிதைக்கப்படும் காதல், எந்த வேலையிலும் நிலைக்க முடியாமை என்று நூலறுந்த பட்டமாக அலைகிறது அவன் வாழ்வு. 

தேவராஜின் வாழ்க்கையில் தென்றலாய் இருப்பவர்கள் அவன்மீது அன்பாக இருக்கும் புஷ்பா டீச்சரும், ஓவியரான அவர் கணவரும், மற்றும் நண்பன் ராமசுப்பு மட்டுமே. இறுதியில் ராமசுப்பு வால் நிறந்தர வருமானத்திற்கு வழி பிறக்க, அவனுடைய 47 வயதில் கணவனை இழந்த ஒரு நர்ஸை மணந்து கொள்ள சம்மதிக்கிறான்.  திருமண சடங்குகள் ஒரு அபத்தமான நாடகமாக தோன்றுகிறது. முன்பை விட இப்போதுதான் வாழ்க்கையை நினைத்து பயமாக இருக்கிறது என்று முடிகிறது கதை.

கதையின் நீளம் அதிகம்.  காது கேட்காத ஒருவன் அனுபவிக்கும் துயரங்களை மட்டும் சொல்லி இருந்தால் அதற்கு ஒரு தீர்வும் சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். சொல்ல வந்த விஷயம் நச்சென்று பதிந்திருக்கும்.  இந்த கதையில் அவன் சந்தித்த மனிதர்கள், அவர்களுடைய வாழ்க்கை என்று பிரிந்து போய் அவன் யார் யாரிடம் பழகினாலும் அவர்களை பற்றி எல்லாம் ஒவ்வொரு அத்தியாயம். அவர் திரட்டிய பல விஷயங்கள் அத்தனையையும் ஒரு நாவலில் கொட்டியிருக்கிறார். அதனால் மூலக்கரு சிதைந்து போகிறது. பாஸிட்டிவாக முடிக்காததும்,  செவித்திறன் அற்றவர்கள் எப்படி வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற வழிகாட்டுதல்கள் இல்லாததும் குறைகளாக எனக்குப்பட்டன. 




18 comments:

  1. எஸ்ரா கதைகளில் ஒரே சிந்தனைச் சிதறல்களாக இருக்கும்! அவருடைய துணையெழுத்து படியுங்கள், ரசிக்கலாம்.

    ReplyDelete
  2. அவருடைய உபபாண்டவம் தொடங்கி விட்டு தொடர முடியாமல் விழித்துக் கொண்டிருக்கிறேன். மஹாபாரதம் சம்பந்தமாக எந்த நூலைப் பார்த்தாலும் வாங்கும் என் பலவீனத்தை நிறுத்திக் கொள்ளவேண்டும்!

    ReplyDelete
    Replies
    1. இதுவே கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. படிக்க ஆரம்பித்து தொடர முடியாமல் வைத்து விட்டேன். உடையாரே படித்து விட்டோம், இது என்ன? என்று தொடர்ந்தேன்.
      நூலகத்தில் எடுத்த அந்த புத்தகம் புத்தம் புதியதாக இருந்தது. வாங்கிய யாரோ படிக்க முடியாமல் நூலகத்திற்கு கொடுத்து விட்டார்கள் போலிருக்கிறது.

      Delete
  3. தலைப்பு தினமலர் அந்துமணி வாரமலரில் எழுதும் பா கே ப வை நினைவு படுத்துகிறது.

    ReplyDelete
  4. காதுகேளாத ஒருவனின் அனுபவங்கள், சோகங்கள் கதையாக விரிந்திருக் கின்றன.//

    வாசிக்க வேண்டும்.

    நானும் காது கேளாதது குறித்து ஒரு கதை தொடங்கியது அப்படியே உள்ளது. அதில் கொஞ்சம் தான் ஒரு சின்ன பகுதிதான் எபி யில் கே வா போ க வில் வேறு தலைப்பில் வேறு பெயரில் வந்தது. நான் எழுதி முடித்த பின் எஸ் ராவின் கதையை வாசிக்க வேண்டும்.

    கீதா

    ReplyDelete
  5. படிக்க கொஞ்சம் பொறுமை வேண்டும்.

    ReplyDelete
  6. வணக்கம் சகோதரி

    படித்த புத்தகங்களில், எஸ்ராவின் நிமித்தம் கதையின் விமர்சனத்தை அழகாக செய்துள்ளீர்கள். காது கேட்கவில்லையென்றால்,கஸ்டந்தான். அதன் பிரச்சனைகளை சந்தித்தவன் அதன் தீர்வையும் கண்டிருந்தால் ஒரளவிற்கு பயனுள்ளதாக இருந்திருக்கும். கதை என வரும் போது அதில் திருப்பங்கள் முக்கியம் என எழுதியவர் தீர்மானித்திருக்கலாம். தங்கள் பதிவை மேலும் தொடர்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  7. //ஒரு மாணவனுக்கிருந்த சரும நோய் இவனுக்கும் வந்துவிடுகிறது. அதை குணப்படுததிக்கொண்டு வா என்று வீட்டிற்கு அனுப்பி விடுகிறார்கள்.// எந்த மாணவனால் தொற்றுப் பரவியதோ அவனை அல்லவோ முதலில் அனுப்பி இருக்கணும்? ஏன் இவனை அனுப்பணும்? முரணாக இல்லையோ? :(

    ReplyDelete
    Replies
    1. நல்ல கேள்வி. எனக்கும் தோன்றியது.

      Delete
    2. அதே கீதாக்கா மீக்கும் தோன்றியது.

      கீதா

      Delete
    3. வந்தவனுக்கு திரும்பிச் செல்ல பிடிக்கவில்லை. //

      என்றும் சொல்லப்பட்டிருக்கிறதே. ஆசிரியர்/எஸ்ரா இங்கு ஏதோ மிஸ் செய்திருக்கிறாரோ..லூப் ஹோல்?

      கீதா

      Delete
  8. இன்னிக்குப்போகும் இடமெல்லாம் ரோபோ! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், எஸ்ராவை எல்லாம் நான் முதலில் அவர் எழுதிய கட்டுரைகளோடு படிப்பதை நிறுத்திட்டேன். நல்லவேளையா அவர் எழுதின மற்ற நாவல்கள்/கதைகள், உப பாண்டவம்னு எதையும் படிக்கலை.

    ReplyDelete
    Replies
    1. ​எனக்கு​ எல்லா தளங்களிலும் வந்து கொண்டிருந்தது. இரண்டு நாட்களாய் இல்லை!

      Delete
    2. கீதாக்கா ரோபோ இன்றிலிருந்து எனக்கு இல்லை. முந்தைய நாள் ஒரு படம் கொடுத்து டெஸ்ட். நேற்று இரண்டு படம் கொடுத்து. முதலில் கொடுத்து சரிபார்த்து சொல்லிட்டு இன்னொரு படமும் கொடுத்து ரொம்ப தொல்லை!! ஹப்பா இன்றிலிருந்து இல்லை...

      கீதா

      Delete
  9. பழம்பெரும் எழுத்தாளர் எம்.வி.வி. "காதுகள்" என ஒரு மிகப் பெரிய நாவலைத் தன் காது கேட்காமல் போனதின் அனுபவங்களை வைத்து எழுதி இருக்கார். ஹூஸ்டன் மீனாக்ஷி கோயில் நூலகத்தில் இருந்தது. நான் எடுக்கும் முன்னர் யாரோ எடுத்து விட்டார்கள். பின்னர் அது கிடைக்கவில்லை. :( ஆனால் சில/பல விமரிசனங்கள் படித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. பி டி எஃப் பி ல் தேடி அலுத்துப் போன புத்தகம்.  காசு கொடுத்த வாங்கக் கூடாதா என்றெல்லாம் கேட்கக் கூடாது!

      Delete
    2. ஓ! குறித்துக் கொண்டேன். இணையத்தில் கிடைக்கவில்லை என்று ஸ்ரீராம் சொல்லிருப்பதையும் பார்த்தேன். தேடிக் கிடைத்தால் வாசிக்க வேண்டும்...

      காது கேளாமை குறித்து நிறையப்பேர் எழுதியிருப்பாங்க போல.

      நான் எழுதத் தொடங்கி அப்படியே இருக்கிறது. பாதியில் நிற்கும் எந்தக் கதையை முடித்து எபி க்கு அனுப்ப என்று தெரியாமல் ...புலம்பத் தொடங்குவதற்குள் போய்விடுகிறேன்...

      கீதா

      Delete