கணம்தோறும் பிறக்கிறேன் 

Showing posts with label Meeting with Saravedi Sridhar-Humourist at Mambalam health centre. Show all posts
Showing posts with label Meeting with Saravedi Sridhar-Humourist at Mambalam health centre. Show all posts

Wednesday, January 9, 2019

சந்திப்பு - சரவெடி ஸ்ரீதர்


சந்திப்பு - சரவெடி ஸ்ரீதர் 




சில நாட்களுக்கு  முன் என் சகோதரியின் மகளின் உடல் நிலை சரியாக பிரார்த்தனை செய்யும்படி உங்களிடம் கேட்டிருந்தேன். உங்கள் எல்லோரின் பிரார்த்தனையாலும், கடவுள் அருளாலும் அக்கா மகளின் உடல் நிலை தேறி வருகிறது. உங்கள் எல்லோருக்கும் பிரத்யேகமாக தன் நன்றிகளை என் அக்கா தெரிவிக்க சொன்னார். நன்றி! நன்றி! நன்றி!

அக்கா மகளுக்கு உதவியாக ஆஸ்பத்திரியில் இருந்த பொழுது அங்கிருந்த லிஃட் ஆபரேட்டர்  எல்லோரோடும் கனிவாக பேசிக்கொண்டும், ஜோக் அடித்துக்கொண்டும் பணி புரிவதை பார்க்க முடிந்தது. அவரோடு பேச்சு கொடுத்த பொழுது தன்னைப்பற்றிய விவரங்களை சொன்னார்.

பாரதியாரின் சொந்த ஊரான எட்டையபுரம்தான் இவருக்கும் சொந்த ஊராம். எட்டையபுரம் அரண்மனையில் பணியாற்றிய இவர் தந்தை பாரதிக்கு நண்பராம். தந்தை பொதுப்பணித்துறையில் பணி புரிந்ததால், பணி நிமித்தம் பல ஊர்களுக்கு மாற்றல், எனவே இவரும் எட்டயபுரம், ஸ்ரீவைகுண்டம், அம்பாசமுத்திரம், என்று வெவேறு ஊர்களில் படித்தாராம். ஸ்ரீவைகுண்டம் குமரகுருபரர் ஆண்கள் உயர்நிலைப்பள்ளியில் படித்த பொழுதுதான் இவருடைய நகைச்சுவை உணர்வை கண்டுபிடித்த தமிழாசிரியர்,"உனக்கு நல்ல நகைச்சுவை உணர்ச்சி இருக்கிறது. பத்திரிகைகளுக்கு நகைச்சுவை துணுக்குகள் எழுதிப்போடேன்" என்று உற்சாகப்படுத்தியதால் பத்திரிகைகளுக்கு துணுக்குகள் எழுத ஆரம்பித்தாராம். 

அவருடைய முதல் ஜோக் 1978 மாலை முரசில் தமாஷ் என்ற தலைப்பில் வெளியானதாம். இப்போது அவர் நகைச்சுவை துணுக்குகள் வெளிவராத பத்திரிகைகளே இல்லை எனலாம். "எப்போதும் என் கையில் போஸ்ட் கார்டும், பேனாவும் ரெடியாக வைத்துக் கொண்டிருப்பேன். ஜோக் மனதில் தோன்றியவுடனேயே பத்திரிகைகளுக்கு எழுதிப்போட்டு விடுவேன்". என்கிறார். இப்படி சரமாரியாக ஜோக்குகளை பொழிவதால் 'சரவெடி ஸ்ரீதர்' என்னும் பட்டப்பெயர் பெற்றுள்ளார். 


தொழில்முறையில் ஆபரேஷன் தியேட்டர் அசிஸ்டென்ட் ஆன இவர் கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில் குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனை, மதுரை மீனாட்சி நர்ஸிங்ஹோம், தாம்பரம் ஹிந்து மிஷன் மருத்துவமனை போன்ற பல இடங்களில் பணியாற்றி தற்சமயம் மாம்பலம் பப்ளிக் ஹெல்த் சென்டரில் பணி  புரிகிறார்.   

பாரீஸ், லண்டன், ரோம், ஜெர்மனி, ஸ்பெயின் போன்ற பல ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றிருக்கிறாராம். ஸ்விட்சர்லாந்தில் பணி புரிந்தபொழுது அங்கு இந்தியன் ஹை கமிஷன் அலுவலகத்தில் உயர் அதிகாரியாக பணியாற்றிய ஒருவர் இவருடைய சம்பளத்தை அந்நிய செலவாணியாக பெற்றுக்கொண்டு இவரிடம் வெறும் இரண்டாயிரம் ரூபாய் மட்டும் தந்து இவரை ஏமாற்றி விட்டாராம். 'எத்தனை பெரிய மனிதருக்கு எத்தனை சிறிய குணமிருக்கு?'

பல்வேறு விருதுகள், பெற்றிருக்கும் இவர் திரு.பாக்கியம் ராமசாமி அணிந்துரையில் ஒரு நூலும், திரு ராணி மைந்தன் வாழ்த்துரையில் ஒன்றுமாக இரண்டு நகைச்சுவை நூல்களும், ஒரு சி.டி.யும் வெளியிட்டிருக்கிறார்.














பேசிக்கொண்டிருக்கும்பொழுதே நாம் சொல்லும் ஒரு வார்த்தையை வைத்து ஒரு ஜோக் சொல்லி விடுகிறார். திருமணம், போன்ற குடும்ப விழாக்களில் ஸ்டாண்டப் காமெடி செய்கிறாராம். திருமணத்தில் இரைச்சலாக லைட் மியூசிக் வைப்பதற்கு பதிலாக இப்படிப்பட்ட நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யலாமே.

இவர் பெற்றிருக்கும் விருதுகளும் பங்கெடுத்த நிகழ்ச்சிகளும்:


சிரிக்க தெரிந்தவன் பாக்கியவான், சிரிக்க வைப்பவன் அதைவிட பாக்கியவான் என்பார்கள். நண்பர் சரவெடி ஸ்ரீதரின் வாழ்க்கையில் எல்லா பாக்கியங்களும் நிறைந்திருக்க கடவுளை பிரார்த்திக்கிறேன்.

அவருடைய ஜோக்ஸ் புத்தகத்திலிருந்து சில:

ஆசிரியர்: மாணவர்களே, நானும் உங்களில் ஒருவன், என்னை வேறுபடுத்தி பார்க்க வேண்டாம் 
மாணவன்: சரிடா மச்சி! கீழே உட்காரு.

ஆசிரியர்: ப்ராகரஸ் ரிப்போர்ட்டில் உங்கப்பா கையெழுத்து மாதிரி தெரியலையே?
மாணவன்: அப்படி எல்லாம் சந்தேகப்படாதீங்க சார், வேணா இரண்டாவது வாட்டி போட்டு காட்டறேன். 

பல் டாக்டர்: என்கிட்ட எதுக்கு சார் வீடு டாக்குமெண்ட்,வங்கிப் புத்தகம் எல்லாம் காட்டுகிறீர்கள்?
பேஷண்ட்: நீங்கதானே சார் சொத்தை பார்த்த பிறகுதான் பல்லைப் பிடுங்க வேண்டும் என்று சொன்னீர்கள் 

டாக்டர் அறுவை சிகிச்சை முடித்த பிறகு,"எப்படி பண்ணியிருக்கேன்"னு கேட்டார், 
அதற்கு நர்ஸ்,"கொன்னுடீங்க டாக்டர்" என்றார்.

தோழி1: உன்னைப் பெண் பார்க்க திடீர்னு நாற்பது பேர் வந்தாங்களாமே? மாப்பிள்ளையின் பெயர் என்ன?
தோழி2: அலிபாபா 

ஆசிரியர்: வேர்ல்டு மேப்பை காட்டி ஜப்பான் எங்கு இருக்கிறது, ஆஸ்திரேலியா எங்கு இருக்கிறது? அமெரிக்கா எங்கு இருக்கிறது காட்டு பார்க்கலாம் 
யோகேஸ்வர் என்ற மாணவன் ஆசிரியர் கேட்ட எல்லா நாடுகளையும் காட்டினான்.
ஆசிரியர்: இந்தியா எங்கே இருக்கிறது காட்டு 
யோகேஸ்வர் தயங்கினான்.
ஆசிரியர்: தெரியாவிட்டால் தெரியாது என்று சொல்ல வேண்டியதுதானே?
யோகேஸ்வர்: நீங்கள் என்னை எவ்வளவுதான் மிரட்டினாலும், என் தாய் நாட்டை நான் காட்டி கொடுக்க மாட்டேன்.

பேரன்: பாட்டி, இந்தா இந்த பலூனை ஊதிக்கொடு 
பாட்டி: போடா வயசாச்சு, என்னால முடியாது 
பேரன்: அப்பாதான் சொன்னாங்க பாட்டி சின்ன விஷயத்தை கூட ஊதி ஊதி பெரிசாக்கிடுவாங்கன்னு..

இவருடைய ஜோக் புத்தகத்தை படிக்கும் பொழுது நகைச்சுவை உலகில் ஆசிரியர்-மாணவன், டாக்டர்-நர்ஸ்-நோயாளி, கணவன்-மனைவி-மாமியார் இவை வற்றாத ஜீவ நதிகள் என்று புரிகிறது.