கணம்தோறும் பிறக்கிறேன் 

Friday, July 21, 2023

மாவீரன் (சினிமா விமர்சனம்)

 மாவீரன் (சினிமா விமர்சனம்)


சிவகார்த்திகேயனின் பரம ரசிகையான என் பேத்தியின் ஆசையை நிறைவேற்ற அவளை மாவீரன் சினிமாவுக்கு அழைத்துச் சென்றேன். 

தினத்தீ என்னும் செய்தி தாளில் அறுபது வருடங்களாக வந்து கொண்டிருக்கும் மாவீரன் என்னும் தொடருக்கு படம் வரையும் சத்யா (SK) என்னும், யார் வம்புக்கும் போக விரும்பாத இளைஞன் எப்படி நிஜமாகவே மாவீரனாக மாறுகிறான் என்பதுதான் கதை.

சேரியில் வசிக்கும் பல குடும்பங்களை அடுக்கு மாடி குடியிருப்பில் குடியேற்றுவதாக கூறி ஆளும் கட்சியின் அடியாட்கள் வெளியேற்றுகிறார்கள். புது வீடு பார்க்க நன்றாக இருந்தாலும் குடியேறிய சில நாட்களிலேயே பாத்ரூம் தாழ்ப்பாள் கையோடு வருகிறது. சமைக்கும் பொழுது சாம்பாரில் மேல் சுவற்றிலிருந்து பூச்சு விழுகிறது. இதையெல்லாம் தட்டிக் கேட்க வீறு கொண்டு எழும் தாயை அடக்குகிறான். தங்கை குளிக்கும் பொழுது பாத்ரூமில் எட்டிப்பார்ப்பவனை கண்டிக்கும் தாய் தாக்கப்படும் போது அம்மாவின் இழிவான பேச்சால் மனம் நொந்து தற்கொலைக்கு முயல்கிறான். அப்போது காதில் அடிபட, அவனுக்கு ஒரு அமானுஷ்ய குரல் கேட்கத் துவங்குகிறது என்னும் ஃபேண்டஸி கதைதான். அதை ரசிக்கும்படி செய்திருக்கும் சுவாரஸ்யமான திரைக்கதை படத்தின் பலம்.

சிவகார்த்திகேயன் கச்சிதம். அவருடைய ஜோடியாக வரும், இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் அசப்பில் சுப்ரமணியபுரம் ஹீரோயின் ஸ்வாதியை நினைவூட்டுகிறார். நிறைவான நடிப்பு. எஸ்.கே.யின் தங்கையாக வரும் பெண், பாத்திரத்தோடு கச்சிதமாக பொருந்தி, சிறப்பாக நடித்திருக்கிறார். அம்மாவாக சரிதா. எத்தனை நாட்களாயிற்று இவரைத் திரையில் பார்த்து? சரிதாவிடமிருந்து நடிப்பு பிரவாகமாக பொங்கி வரும், அதை கண்ட்ரோல் செய்ய இயக்குனருக்கு தெரிந்திருக்க வேண்டும். இந்த இயக்குனருக்குத் தெரிந்திருக்கிறது.‌ 

நடிக்க வந்திருக்கும் மற்றொரு இயக்குனர் மிஷ்கின்! இத்தனை நாட்களாக ஸ்டைலிஷாக நாம் பார்த்திருந்த மிஷ்கின் கதர் வேஷ்டி, சட்டை, காட்சியோடு அரசியல்வாதி வில்லனாக மிரட்டியிருக்கிறார்.

பாடல்கள் பெரிதாக கவரவில்லை. முதல் பாதியில் இருந்த வேகம் இரண்டாம் பாதியில் கொஞ்சம் குறைகிறது. காதில் பூ தான், வாசமும் இருக்கிறது.