கணம்தோறும் பிறக்கிறேன் 

Sunday, April 3, 2022

சித்திரம் பேசுதடி(ரயில் பயணம்)

ரயில் பயணங்கள் எனக்கு புதிது கிடையாது. எத்தனை முறை பயணித்திருக்கிறேன். சிறு வயதில் விடுமுறைக்கு ஊருக்குச் சென்றதெல்லாம் ரயிலில்தான். 

அப்போதெல்லாம் ரயிலில் மூன்று வகுப்புகள் உண்டு. மூன்றாம் வகுப்பில் ஜன்னலில் கம்பிகள் இருக்காது. பிளாட்பாரத்தில் ரயில் வந்து நின்றதும் ரயில் ஏற்றிவிட வந்த அப்பா என்னையும், தம்பியையும் தூக்கி ஜன்னல் வழியே உள்ளே தள்ளுவார்.  அதற்குள் தங்கையோடும், பெட்டியோடும் உள்ளே வந்த வந்த அம்மா எங்கேயாவது இடம் கிடைத்தால் உட்காருவாள் அல்லது வழியில் பெட்டியையும் பக்கத்தில் வைத்துக் கொண்டு உட்கார்ந்து கொள்வாள். ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தால் கண்ணில் கரி விழும்.  டீசல் என்ஜின் வந்தபிறகு அது மாறியது. 

கல்லூரிக்குச் சென்றது ரயிலில் தான்.  ஸ்ரீரங்கத்தில் ஏறி ஜங்ஷனில் இறங்கி நேஷனல் காலேஜுக்கு நடந்து செல்வோம். டவுன் ‌‌ஸ்டேஷனில் இறங்கும் எஸ்.ஆர்.காலேஜ் பெண்களைக் கவர ஃபுட் போர்டில் பயணிப்பது, ஓடும் ரயிலில் ஏறுவது போன்ற சாகசங்களைச் செய்வோம்.  

வேலை கிடைத்து சென்னைக்கு வந்ததும் தாம்பரம் சானிடோரியத்திலிருந்த வீட்டிலிருந்து கோடம்பாக்கத்திலிருந்த அலுவலகத்திற்கு மின்சார ரயிலில் கும்பலில் கசங்கி பயணம். எல்லாமே இரண்டாம் வகுப்பில் தான். 

திருமணத்திற்குப் பிறகுதான் ரயிலில் முன்பதிவு என்று ஒன்று உண்டு என்று தெரிந்தது. என் மனைவிக்கு 58 வயதானதும் என் மகள், "அப்பா, அம்மாவுக்கு இனிமேல் கன்செஷன் உண்டு,  அதனால் ஏ.சி.கோச்சில்‌ அழைச்சுட்டு போங்கப்பா" என்றாள்.

"எனக்கு ஃபுல் ஃபேர் குடுக்கணுமே? எனக்கும் அறுபது வயதாகட்டும்" என்றேன். 

சென்ற மாதம்தான் எனக்கு அறுபது வயது நிறைந்தது. இனி நிறைய ஊர்களுக்குச் செல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். என் மனைவிக்கு ஒரு முறையாவது ஏ.சி.கோச்சில் செல்ல வேண்டும் என்று ஆசை. அவள் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

அவளுடைய ஆசைப்படி இப்போது ஏ.சி. கோப்பில் பயணிக்கப் போகிறோம். ஆனால் அது எனக்கு கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கிறது.  ஏனென்றால் நாங்கள் பயணிப்பது கேன்சர் நோயாளிகளுக்கான கன்செஷனில்.

எங்கள் அறுபதாம் கல்யாணத்திற்குப் பிறகு என் மனைவிக்கு அடிக்கடி இருமல் வந்தது. தொண்டை கரகர வென்றானது. ஒரு நாள் இருமியவள் துப்பிய பொழுது ரத்தம் வந்தது. பயந்து போய் இ.என்.டி. நிபுணரிடம் அழைத்துச் சென்றேன். பரிசோதனைகள் செய்து விட்டு தொண்டை புற்றுநோய் என்று குண்டைப் 
போட்டார். 

தெரிந்தவர்கள் பலரும், "அடையார் புற்றுநோய் மருத்துவ மனைக்கு செல்லுங்கள். குறைந்த செலவில் நல்ல மருத்துவம்" என்றார்கள். 

அதுமட்டுமல்ல கேன்சர் நோயாளிகள் மருத்துவம் செய்து கொள்ள பயணிக்கும் பொழுது இரண்டாம் வகுப்பென்றால் 100 சதவீதம் சலுகையும், இரண்டாம் வகுப்பு ஏ.சி.கோச்சில் பயணிக்க 75சதவீதம் கன்செஷனும் உண்டு. அதில்தான் அவளை அழைத்துச் செல்கிறேன். ஒரு சந்தோஷ தருணத்தில் அவளை ஏ.சி.கோச்சில் அழைத்துச் சென்றிருக்கலாம். 

பி.கு:

மேற்படி ஓவியத்திற்கு கதை எழுதச் சொல்லி மத்யமரின் சித்திரம் பேசுதடி என்னும் பகுதியில் கேட்டிருந்தார்கள். அதற்கு நான் எழுதிய கதை.