கணம்தோறும் பிறக்கிறேன் 

Friday, September 24, 2021

ஈசாவாஸ்ய உபநிஷத் - பாபா காட்டிய விளக்கம்

 ஈசாவாஸ்ய உபநிஷத் - பாபா காட்டிய விளக்கம் 


சென்ற வாரம் நான் விளையாட்டாய் 'ஈசாவாஸ்ய உபநிஷத்' பற்றி எ.பி.யில் கேட்க முடியுமா? என்று கேட்க, அவர்கள் ஈசாவாஸ்ய உபநிஷத் பற்றி ஜடாயு அவர்களின் விளக்கத்தை பகிர்ந்து கொண்டிருந்தார்கள். நன்றாக இருந்தது. 

நேற்று சாய் சத் சரிதம் படித்த பொழுது ஷீர்டி சாய்பாபா அவருடைய சீடரான தாஸ்கணு என்பவருக்கு ஈசாவாஸ்ய உபநிஷதத்தின் பொருளை எங்கனம் உணர்த்தினார் என்னும் சம்பவத்தை படிக்க நேர்ந்தது. 

தாஸ்கணு என்பவர் ஈசாவாஸ்ய உபநிஷதத்தை மராட்டிய மொழியில் மொழி பெயர்த்தார். ஆனால் அந்த உபநிஷத்தின் உட்பொருளை அவர் உணராததால் அவருடைய   மொழிபெயர்ப்பு அவருக்கே திருப்தி அளிக்கவில்லை. அதை குறித்து பல அறிஞர்களோடு விவாதித்தும் அவருக்கு முழு திருப்தியளிக்கும் விளக்கம் அவருக்கு கிடைக்கவில்லை. ஆத்மானுபூதி அடைந்த ஒருவரே இதற்கு சரியான விளக்கம் அளிக்க முடியும் என்று கருதிய அவர்  ஷீர்டி சாய் பாபாவை தேடி வருகிறார். பாபாவிடம் தனது வேண்டுகோளை வைக்க, அவர்,"இது ஒன்றும் பெரிய விஷயமில்லை. நீ வீட்டிற்கு திரும்பி போகும் வழியில் வில்லபார்லாவில் காகா சாஹேப் தீக்ஷித் வீட்டு வேலைக்காரி உன்னுடைய சந்தேகத்தை தீர்த்து வைப்பாள்" என்று கூறினார். இதைக் கேட்டு சிலர், படித்த ஒரு அறிஞரின் சந்தேகத்தை படிப்பறிவில்லாத ஒரு வேலைக்காரி எப்படி தீர்க்க முடியும்? என்று நினைத்துக் கொண்டார்களாம், ஆனால் தாஸ்கணுவோ பாபாவின் வார்த்தைகளில் நம்பிக்கை வைத்து பம்பாயின் புறநகரான வில்லபார்லாவில் இருந்த காக்கா சாஹேப் தீக்ஷித்தின் வீட்டில் தங்குகிறார். 

அங்கு சிறுதுயில் கொண்டிருந்த அவரை தீட்சித் வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த பெண் பாடிய பாடல் எழுப்பி விடுகிறது. கிழிந்த உடையை அணிந்து கொண்டிருந்த அச்சிறு பெண், 'கருஞ்சிவப்பு நிற உடை, அது எவ்வளவு நன்றாக  இருக்கிறது! அதன் எம்ப்ராய்டரி எவ்வளவு நேர்த்தியாய் இருக்கிறது! அதன் முந்தானையும், கரையும் எவ்வளவு அழகாய் இருக்கிறது!.." என்னும் பொருள்படும் பாடலை மிகவும் சந்தோஷமாக பாடுவதைப் பார்த்த அவர் அந்தப் பெண்ணிற்கு ஒரு பாவாடை, தாவணி வாகித் தர செய்கிறார். 

புது ஆடையை அணிந்து கொண்டு வந்த அந்தப் பெண் மிகவும் மகிழ்ச்சியோடு தன் தோழிகளோடு விளையாடுகிறாள், கோலாட்டம் ஆடுகிறாள். ஆனால் மறுநாள் அந்த புது ஆடையை  வீட்டில் பெட்டியில் வைத்து விட்டு, தன்னுடைய பழைய கந்தல் ஆடையையே அணிந்து கொண்டு வந்தாள். ஆனால் அப்போதும் அவள் மகிழ்ச்சி சிறிதும் குறையவில்லை. பழைய கந்தலை உடுத்தியும் எள்ளளவும் துன்பமோ,மனச்சோர்வோ இல்லாதபடி அவற்றை அவள் தாங்கிக் கொண்டாள். இதிலிருந்து நமது இன்ப,துன்ப உணர்ச்சிகள் எல்லாம் நமது மனத்தின் பாங்கைப் பொறுத்தே இருக்கின்றன என்பதை அவர் உணர்ந்தார். 

மேலும் இந்நிகழ்ச்சியைப் பற்றி தீவிரமாக யோசித்து இச்சந்தர்ப்பத்தில் ஏழைச்சிறுமியின் வறுமை நிலை, அவளது கந்தல் உடை, புது ஆடை, அதை அன்பளிப்பாக கொடுத்தவர்,  அதை பெற்றுக் கொண்டவள், அதனை ஏற்றுக் கொள்ளுதல் எல்லாம் கடவுளின் கூறுகளே, அவரே எல்லாவற்றிலும் ஊடுருவி பரந்து இருக்கிறார், எது நேரினும் அது கடவுளின் ஆணையே என்றும், இறுதியில் அது நமக்கு நன்மை அளிக்கும் என்று தமக்குரியவைகளிடம் திருப்தி  கொள்ளுதல் நலம் என்னும்   உபநிஷத பாடத்தின் நடைமுறைச் சான்று விளக்கத்தினை தாஸ்கணு பெற்றார். 

அன்று ஈசாவாஸ்ய உபநிஷத் பற்றிய கேள்வி, அதற்கு சாய் சத் சரிதாவில் பதில் என்று நடந்ததால் இதை இங்கே பகிர்ந்து கொண்டிருக்கிறேன். மற்றபடி தாஸ்கணு அவர்கள் உணர்ந்ததை நம்மால் உணர முடியுமா? என்று தெரியவில்லை. ஆகவே இது குறித்து உங்களுக்கு ஏதாவது சந்தேகம் வந்தால் அதை பகவான் பாபா தீர்த்து வைப்பார். ஓம் சாய்ராம்! 




  


Monday, September 20, 2021

அவன் தந்த சந்தோஷமும் ஏமாற்றமும்

  அவன் தந்த சந்தோஷமும் ஏமாற்றமும் 


வீட்டிலிருந்த மைக்ரோ வேவ் அவன் பழுதானதால் புதிது வாங்குவதை சற்று ஒத்திப் போட்டு, சென்ற வாரம் வாங்கி வந்தார்கள். புதிய அவனில் ஏதாவது இனிப்பு செய்யலாம் என்று யோசித்த பொழுது, திரட்டுப்பால் செய்யலாம் என்றேன். ஒரு டப்பா கண்டென்ஸ்டு மில்க் வாங்கி வரச்சொன்னேன். அதை ஒரு கண்ணடி பாத்திரத்தில் ஊற்றி, அதனுடன் ஒரு ஸ்பூன் தயிர், ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து, அவனில் வைத்து அவனை ஸ்டார்ட் பண்ண, ஐந்தே நிமிடங்களில் வெள்ளை வெளேர் என்று சுவையான திரட்டுப்பால் கிடைத்து விட்டது.  என் மருமகளுக்கு ஒரே சந்தோஷம். 

அந்த அவனில் தயிர் என்னும் ஆப்ஷன் இருப்பதை பார்த்து விட்டு,"இதில் அரைமணி நேரத்தில் தயிர் செய்து விடலாம்" என்றாள் என் மருமகள். "தட்ஸ் கிரேட்! நமக்கு எப்படியும் இன்று தயிர் தோய்க்க வேண்டும். இதில் செய்து விடலாம்" என்ற நான், பாலக் காய்ச்சி, ஆறியதும் வழக்கம் போல் ஒரு டேபிள் ஸ்பூன் தயிர் அதில் சேர்த்து, அந்த பாத்திரத்தை அவனில் வைத்து, அரை மணி நேரத்திற்கு செட் செய்து விட்டு, அரை மணி நேரம் கழித்து திறந்து பார்த்தால், பால் அப்படியே இருந்தது.  

ஒரு வேளை அரை மணி நேரம் என்பது அரை லிட்டர் பாலுக்காக இருக்கலாம், நாம் ஒரு லிட்டர் பாலை உரைக்குத்தியிருக்கிறோம் எனவே இன்னும் ஒரு அரை மணி நேரம் வைக்கலாம் என்று மீண்டும் ஒரு அரை மணி நேரம் செட் பண்ணினேன். அப்போதும் பால் தயிராக மாறவில்லை. வெளியே எடுத்து வைத்து விட்டு கொஞ்ச நேரம் பொறுத்து பார்த்தாலும் அதே நிலை. "என்னடா இது மதுரைக்கு வந்து சோதனை?" என்று தோன்றியது. 

யூ ட்யூபில் சென்று மன்றோ வேவ் அவனில் தயிர் செய்வது எப்படி என்று பார்த்தால், நான் செய்த விஷயங்கள் சரி, ஒன்றே ஒன்றைத் தவிர, உறைகுற்றிய பால் பாத்திரத்தை அவனில் வைத்து விட்டு தயிர் என்னும் பட்டனை அழுத்தி 2:2 என்னும் ஆப்ஷனை தேர்ந்தெடுக்க வேண்டும், அது 9 மணி நேரம் என்று அவனுக்குள் வைக்க வேண்டிய கால அளவைக்காட்டுகிறது. ஆறு மணி நேரத்தில் தயராகி விடும், பிறகு மூன்று மணி நேரம் பிரீசரில் வைக்க வேண்டும். கட்டித் தயிர் ரெடியாகி விடும் என்று ஒரு ஆன்டி ஹிந்தியில் போலினார். உரை குற்றி  ஒன்பது மணி நேரம் வெளியே வைத்தாலே தயிர் ரெடியாகி விடுமே?  

அன்று மாலை மைக்ரோ வேவ் அவனை எப்படி இயக்குவது என்று செய்முறை விளக்கம் அளிக்க கம்பெனியிலிருந்து வந்தவரிடம் தயிர் மகாத்மியத்தை கூறிய பொழுது, "இதெல்லாம் மேல் நாட்டவருக்காக, நாம் எப்போதும் செய்வது போல் தயிர் பண்ணிக் கொள்வதுதான் சரி" என்கிறார். சரிதான்!  4x2 என்ற கணக்கிற்கு கால்குலேட்டரை பயன்படுத்துவது போலத்தான் என்று நினைத்துக் கொண்டேன்.