கணம்தோறும் பிறக்கிறேன் 

Showing posts with label panchamirtham. Show all posts
Showing posts with label panchamirtham. Show all posts

Thursday, August 30, 2018

பிரசாத விசேஷங்கள்


பிரசாத விசேஷங்கள்

நங்கநல்லூர் ஆஞ்சநேயர் 
நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவில் கட்டி கும்பாபிஷேகம் ஆகி, நித்திய பூஜைகள் சிறப்பாக நடைபெற்று வந்த நேரம், அந்த கோவில் கமிட்டி மெம்பர்களில் ஒருவர் காஞ்சி மடம் மஹா பெரியவரை தரிசிக்க காஞ்சீபுரம் சென்றிருக்கிறார். 



அங்கு பெரியவரிடம் கோவில் நடைமுறைகளைப் பற்றி கூறி விட்டு, தினமும் இரண்டு வேளையும் சாம்பார் சாதம், தயிர் சாதம் போன்ற பிரசாதங்கள் வருகின்றவர்களுக்கு வயிறு நிறையும் வண்ணம் நிறைய விநியோகம் செய்வதாக பெருமையாக கூறிக் கொண்டாராம். அதைக் கேட்ட மஹா பெரியவர்," பிரசாதம் அவ்வளவு அதிகமாக கொடுக்கக்கூடாது, கொஞ்சமாகத்தான் தர வேண்டும், இதை நீயே புரிந்து கொள்வாய்" என்றாராம்.

இவருக்கு கொஞ்சம் வருத்தம். "என்னது இது? பிரசாதம் விநியோகிப்பதை குறை கூறுகிறாரே?" என்று நினைத்தாராம். எனவே வழக்கம் போல் பிரசாதத்தை ஒரு தட்டில் நிறைய வைத்து  விநியோகம் செய்வது தொடர்ந்தது. 

ஒரு நாள் மதியம் சாம்பார் சாதத்தை பெற்றுக் கொண்ட ஒருவர், " இனிமேல் சாம்பார் சாதத்தோடு ஒரு பொரியலும், தயிர் சாதத்தோடு ஊறுகாயும் வைத்துக் கொடுங்கள், தனியாக சாப்பிடுவது கஷ்டமாக இருக்கிறது" என்றாராம். அப்போதுதான் இவருக்கு மகா பெரியவர் சொன்னது புரிந்ததாம். பிரசாத அளவை குறைத்தார்களாம். 

பிரசாதம் என்பதை மிகவும் குறைவாக தொண்டைக்கு கீழ் இறங்காத அளவிற்குத்தான் சாப்பிட வேண்டும், அது விஸர்ஜனமாகக் கூடாது. அதாவது கழிவாக மாறாக கூடாது என்பார்கள். 


கோகுலாஷ்டமி பிரசாதங்கள்  
விநாயக சதுர்த்தி மோதகம் 

அக்காரவடிசல் 
நம்முடைய இந்து மதத்தில் பூஜையும்,பண்டிகைகளும்,  கோவில்களும் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் பிரசாதங்களும்.  இதோ நெருங்கி வந்து கொண்டிருக்கிறதே கோகுலாஷ்டமியும், விநாயக சதுர்த்தியும். கோகுலாஷ்டமிக்கு பதினெட்டு வகை பட்சணங்கள் செய்வார்கள். விநாயக சதுர்த்திக்கு அப்பம், வடை, மோதகம், பாயசம், அவல், மற்றும் பழங்கள். நவராத்திரியில் ஒவ்வொரு நாளும் ஒரு சுண்டல். சரஸ்வதி பூஜைக்கு சுகியன் அல்லது அப்பம், வடை, பாயசம். தீபாவளிக்கு கேட்கவே வேண்டாம். கார்த்திகை பொரி சாப்பிட்டே ஆக வேண்டும். திருவாதிரை களி, ஏழு தான் கூட்டு. கூடாரவல்லிக்கு அக்காரவடிசல். போகி அன்றும் போளி வடை உண்டு. தைப்  பொங்கல் என்றால் பால் பொங்கல், ஏழு தான் கூட்டு. பங்குனி உத்திரம், ராம நவமி போன்றவைகளுக்கு பானகம், நீர் மோர், வடை பருப்பு என்று சீதோஷணத்தை ஓட்டி பிரசாதம் மாறும். சித்திரை வருடப் பிறப்பிற்கு போளி வடை கண்டிப்பாக வேண்டும். அன்று மாலை பஞ்சாங்கம் படிக்கும் பொழுது பானகம், நீர் மோர், வடை பருப்பு உண்டு. ஆடி மாதம் அம்மனுக்கு கூழ், மாவிளக்கு, ஆவணியில் ஆவணி அவிட்டத்திற்கு போளி, வடை, காயத்திரி ஜபத்தன்று கலந்த சாதம் அவியல். வரலக்ஷ்மி நோன்பிற்கு எல்லோரும் இப்போதுதான் பாயசம், வடை, கொழுக்கட்டை, சுண்டல் என்று சாப்பிட்டிருப்பார்கள். ஓணம் என்றாலே எல்லோருக்கும் 'ஓணம் சத்யா'தான் நினைவுக்கு வரும். பச்சடி,காளன்,ஓலன், கறி, கூட்டு, அவியல், எரிசேரி, புளிசேரி, சாம்பார், புளியிஞ்சி, பப்படம், இரண்டு வகை பாயசம், உண்ணியப்பம், என்று ஒரு கட்டு கட்டியிருப்பார்கள். இப்போதெல்லாம் சென்னை, பெங்களூர் இங்கெல்லாம் கூட உணவகங்களில் 'ஓணம் சத்யா' என்று விளம்பரப் படுத்துகிறார்கள்.



இது ஒரு பக்கம் என்றால் ஒவ்வொரு கோவிலையும் ஒரு பிரசாதத்தோடு இணைத்து வைத்திருக்கிறோம். திருப்பதியென்றால் லட்டு, பழனி பஞ்சாமிர்தம். திருவல்லிக்கேணி புளியோதரை, ஸ்ரீரங்கம் அரவணைப் பாயசம். குருவாயூரில் ஸ்வாமியை தரிசிக்க நிற்கும் நேரத்தை விட அதிகமான நேரம் பால் பாயசம் வாங்க காத்திருக்க வேண்டும். 

மஸ்கட்டில் சிவன் கோவிலில்தான் ஆஞ்சநேய ஸ்வாமிக்கும் தனி சந்நிதி இருக்கும். அங்கு வியாழக் கிழமை, அல்லது சனிக்கிழமை மாலையில் சென்றால் இரவு உணவை அங்கே முடித்து விட்டு வந்து விடலாம். அவ்வளவு பேர்கள் ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றுவார்கள். அதோடு கேசரி, பொங்கல்,தயிர் சாதம் என்று வகையறாக்களும் இருக்கும். தவிர இரண்டு, மூன்று பேர் வடை மாலை சாற்றுவதால் விதம் விதமான பிரசாதங்களை ருசித்து வீட்டில் வந்து தூங்கி விடலாம். பேச்சிலர்களுக்கு ரொம்ப சௌகரியம். அங்கு ஹோட்டல்களிலேயே 'ஆஞ்சநேயருக்கு வடை மாலை செய்து தரப்படும்' என்னும் அறிவிப்பை காணலாம்.     



ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் ஒருவர்,"எனக்கு ஞானம், வைராக்கியம் வர வேண்டும் அதற்கு என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டாராம். பரமஹம்சர் ,"தினமும் பகவத் கீதையின் சில ஸ்லோகங்களை படித்து விட்டு, கடவுளுக்கு திராட்சைப் பழங்களை நைவேத்தியம் செய்" என்றாராம். அந்த ஆசாமி உடனே," தினமும் எத்தனை திராட்சைப் பழங்கள் நைவேத்தியம் செய்ய வேண்டும்?" என்று கேட்டதும் ராமகிருஷ்ண பரமஹம்சர்," தினமும் எத்தனை ஸ்லோகங்கள் படிக்க வேண்டும் என்று கேட்டிருந்தால் உனக்கு ஞானம் அடைவதில் நிஜமாகவே விழைவு இருக்கிறது என்று கொள்ளலாம், நீ எத்தனை திராட்சை நைவேத்தியம் செய்ய வேண்டும் என்று கேட்கிறாய், உனக்கும், ஞான,வைராக்யத்திற்கும் வெகு தூரம்" என்றராம். 

அவர் சொன்னது ஞான வேட்கை உள்ளவர்களுக்கு, நமக்கல்ல. இன்று சங்கடஹர சதுர்த்தி, குக்கரில் கொத்து கடலை சுண்டல் வேகப் போட்டிருக்கிறேன். நம் வேலையை நாம் பார்ப்போம்.  ஞானம் லபிக்கும் பொழுது லபிக்கட்டும்.