கணம்தோறும் பிறக்கிறேன் 

Saturday, January 11, 2020

மாட்சிமை பொருந்திய சுல்தான் காபூஸ்

மாட்சிமை பொருந்திய சுல்தான் காபூஸ்

ஓமான் நாட்டின் அரசரான மாட்சிமை பொருந்திய சுல்தான் காபூஸ் அவர்கள் மறைந்து விட்டார் என்னும் செய்தியை படித்த பொழுது மனதிற்கு மிகவும் சங்கடமாக இருந்தது. 

ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக இருந்தவர். நாடு மற்றும் நாட்டு மக்களின் நலத்தில் அக்கறை காட்டியவர். ஓமான் ஒரு இஸ்லாமிய நாடாக இருந்த போதிலும் அங்கு மற்ற மதத்தவர்களுக்கும் பாதுகாப்பும், வரையறுக்கப்பட்ட சுதந்திரமும் இருந்தது. 

ஓமானில் விநாயக சதுர்தியிலிருந்து ஆரம்பித்து இந்து மத பண்டிகைகள் அனைத்தும் விமரிசையாக கொண்டாடப்படும். அதே போல் மற்ற மதத்தினர்களும் தங்கள் தங்கள் பண்டிகைகளை கொண்டாடலாம். ஸ்வாமி சின்மயானந்தா, பூஜ்ய ஸ்ரீ தயானந்த சரஸ்வதி உட்பட பல இந்து மத ஆன்மீக பெரியோர்கள் அங்கு வருகை தந்திருக்கின்றனர். அது மட்டுமல்ல அந்த நாட்டில் மினிஸ்ட்ரி ஆஃப் ஹிந்து எண்டோமென்ட் உண்டு. சுல்தான் காபூஸ் ஒரு உண்மையான செகுலரிஸ்ட்! 

பெரும்பாலும் சலாலாவில் வசித்த அவர் மஸ்கட் வரும் பொழுதெல்லாம் எந்தவிதமான போக்குவரத்து கெடுபிடியும் இல்லாமல் அவர் செல்லும்
பாதையில் மட்டும்  கொஞ்ச நேரம் போக்குவரத்து நிறுத்தப்படுமே ஒழிய மக்களுக்கு எந்த இடையூறும் இருக்காது. தன் நாட்டு மக்களை கல்வி அறிவில் முன்னேற்ற பல நடவடிக்கைகளை மேற்கொண்டார். பெண் கல்வி ஊக்குவிக்கப்பட்டது.   

இந்திய ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா ஓமானுக்கு வருகை புரிந்த பொழுது அவருடைய மாணவனாக இவர் இருந்ததால், தான் ஒரு அரசர் என்று கூட நினைக்காமல் அவர் வந்த விமானத்திற்குள் சென்று அவரை வரவேற்று, அவர் அமருவதற்காக தன் கார் கதவை திறந்து விட்டதோடு, தானே அந்த காரை 
ஓட்டியும் சென்றார்.  சாதாரணமாக அரசியல் பிரமுகர்கள் வருகை தரும் பொழுது  அந்த நாட்டின் தலைவர்கள் இதையெல்லாம் செய்ய மாட்டார்கள். அந்த மரபுகளை அவர் பின்பற்றாததற்கான காரணத்தை அவரிடம் கேட்டபொழுது, "திரு.சங்கர் தயாள் சர்மா என்னுடைய ஆசிரியர். அவரை நான் அப்படித்தான் பார்க்கிறேன். ஒரு மாணவனாக என் ஆசிரியருக்கு நான் செய்ய வேண்டிய மரியாதையைத்தான் நான் செய்தேன்" என்று கூறினார். எவ்வளவு எளிமை!

1990, ஆகஸ்டில் சதாம் ஹுசைன் குவைட்டை கைப்பற்றி அதன் விளைவாக வளைகுடா போர் மூண்ட பொழுது, மக்கள் அச்சத்தில் சாமான்களை வாங்கி பதுக்க ஆரம்பித்தார்கள். சூப்பர் மார்கெட்டுகள் அசுர வேகத்தில் காலியாகின, காய்கறிகள் கிடைக்குமோ, கிடைக்காதோ என்ற அச்சம் ஏற்பட்டது. எல்லாம் ஒரே ஒரு நாள்தான். அடுத்த நாளே, மக்கள் அச்சப்பட தேவையேயில்லை, எல்லாம் கிடைக்கும். அத்தியாவசியப் பொருள்களை பதுக்குவோர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாணை வந்தது. இயல்பு வாழ்க்கை உடனே திரும்பியது. கோனு புயலால் பாதிக்கப்பட்ட பாலங்கள், சாலைகள் போன்றவை மிக விரைவாக சரி செய்யப்பட்டன. நாட்டு முன்னேற்றத்தின் மீதும், மக்கள் நலனின் மீதும் அக்கறை கொண்ட நிஜமான தலைவர். அவர் ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்.  




Sunday, January 5, 2020

திருவெம்பாவை பெண் போட்ட நிபந்தனை

திருவெம்பாவை பெண் போட்ட நிபந்தனை 




பாவை நோன்பு நோற்பது நல்ல கணவனை அடையவும், நல்ல மழை பொழிய வேண்டும் என்பதற்காகவும்தான். தன்னை ஒரு பெண்ணாக உருவகப்படுத்திக் கொண்ட  மாணிக்கவாசகர், தனக்கு எப்படிப்பட்ட கணவன் வேண்டும் என்று இறைவனிடம் நிபந்தனை விதிக்கிறார்.

இப்போது பரவலாக ஒரு பேச்சு என்னவென்றால் பெண்கள் திருமணத்திற்கு நிறைய கண்டீஷன்கள் போடுகிறார்கள் என்பது. ஆனால் நம் நாட்டில் அந்தக் காலத்திலேயே நிபந்தனை விதித்து திருமணம் செய்து கொண்ட பெண்களை நாம் குமார சம்பவத்திலும், மகாபாரதத்திலும் பார்த்திருக்கிறோம்.

இங்கே திருவெம்பாவை பெண் என்ன நிபந்தனை விதிக்கிறாள்? மணமகளை கைபிடித்து இன்னொருவன் கையில் ஒப்படைக்கும் தாரை வார்த்தல், அல்லது கைத்தலம் தருதல் என்னும் சடங்கினை நினைத்தால் அவளுக்கு அச்சமாக இருக்கிறதாம். வார்த்தையை கவனியுங்கள் 'உன் கையில் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்னும் அங்கம் பழம் சொற் புதுக்கும் எம் அச்சத்தால்.." என்கிறாள். நல்ல கணவனை அடைய வேண்டும் என்று நோன்பிருக்கும் பெண் திருமணத்தை நினைத்து அச்சப்படுவாளா? என்னும் கேள்வி இங்கே வருகிறது. என்னுடைய பெண்ணை உன்னிடம் ஒப்படைக்கிறேன் என்று தாரை வார்த்து கொடுப்பதை ஏன் பழம் சொல் என்கிறார்? ஏனென்றால் காலம் காலமாக இதைச் செய்து கொண்டிருக்கிறோம். மேலும் மிகவும் பழமையான வேத மந்திரங்களை ஓதித்தான்  திருமண சடங்குகளைச் செய்வது பழக்கம்.
அதனால்தான் அந்த சொற்களை கேட்கும் பொழுது அவளுக்கு அச்சம் வருகிறது.  ஒரு சிவ பக்தனின் தோள்களைத்தான் நான் தழுவிக்கொள்வேன், சிவ பக்தனுக்கே அடிமையாக சேவை செய்வேன். இந்த பரிசை மட்டும் எனக்கு அளித்து விடுவதாக நீ உறுதி கூறினால் சூரியன் எங்கே உதித்தாலும் எனக்கு கவலை இல்லை. என்று தீர்மானமாக கடவுளிடம் வரம் கேட்கும் அந்தப் பெண்ணின் பக்தியும், திடமும், உறுதியும் என்னை வியக்க வைக்கும். 

உன் கையிற் பிள்ளை  உனக்கே அடைக்கலாமென்(று)
அங்கப் பழஞ் சொல் புதுக்கும் எம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன்றுரைப்போம்  கேள்
எம்கொங்கை நின்னபரல்லாதார் தோள் சேரற்க
எங்கை உனக்கல்லா தெப்பணியும் செய்யற்க
கங்குல்  பகலென்கண் மற்றொன்றும் காணற்க
இங்கிப்பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்
எங்கெழிலென் ஞாயிறு எமக்கேலோ ரெம்பாவாய்