கணம்தோறும் பிறக்கிறேன் 

Sunday, February 22, 2026

வட்டார வழக்கு

 வட்டார வழக்கு 


நான் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவளாக இருந்தாலும், பிறந்து வளர்ந்தது திருச்சியில். வட்டார வழக்கு குறைவாக இருக்கும் ஊர் திருச்சி என்று நினைக்கிறேன்.

தஞ்சாவூர்க்கார்கள் எண்பது என்பதை 'எம்ப்ளது' என்பார்கள்
திருச்சிக்காரர்கள் முப்பது என்பதை 'நுப்பது' என்பார்கள்.
ஒரு முறை என் அக்கா வீட்டிற்குச் சென்றபோது அக்கா மாமியார் வெளியில் இருக்கும் தண்ணீர் குழாயில் டியூபை சொருகி, இதை பாத்ரூமில் இருக்கும் கொப்பரையில் போடு என்று என் கையில் கொடுத்தார். எனக்குத் தெரிந்தது தேங்காய் கொப்பரைதான். தேங்காய் கொப்பரையில் தண்ணீர் ட்யூபை ஏன் விட வேண்டும்? என்று புரியாமல் நான் விழிக்க, என் அக்கா மாமியார்,"நாங்கள் கொப்பரை என்பதை நீங்கள் கங்காளம் என்பீர்கள்" என்றதும்தான் எனக்கு புரிந்தது.


வீட்டில் வேலை எதுவும் செய்யாமல் குறுக்கும், நெடுக்கும் நடந்து கொண்டிருந்தால் வீட்டு பெரியவர்கள்,"என்ன சாலடிக்கற? அம்சடங்க ஒரு  இடத்தில உட்கார்" என்பார்கள்.
சாலடிப்பது என்பது நெல் அறுவடைக்குப் பிறகு நடத்தப்படும் ஒருசெயல். அறுவடை செய்த கதிரை துணி துவைப்பதை போல செய்தால் அதிலிருக்கும் நெல் மணிகள் உதிர்ந்து விடும். அதையும் தாண்டி கதிரில் ஒட்டிக் கொண்டிருக்கும் நெல்மணிகளை எடுக்க, கதிரை தரையில் போட்டு அதன் மீது மாட்டை முன்னும் பின்னும் நடக்க வைப்பார்கள். அதற்குதான் சாலடிப்பது என்று பெயர். எனவே முன்னும் பின்னும் நடந்தால் "ஏன் சாலடிக்கிற?" என்று கேள்வி.
"உடம்பு நன்றாக இருக்கிறாயா?" என்பதற்கு "விச்சா இருக்கியா?" என்பார்கள்.
அப்போதெல்லாம் தினசரி சமையலுக்கே எல்லோர் வீட்டிலும் அரிசி அளக்கும் படி இருக்கும். அந்தப்படி கூட தஞ்சை ஜில்லாக்காரர்களுக்கும், மற்ற ஊரைச் சேர்ந்தவர்களுக்கும் வித்தியாசம் உண்டு.
தஞ்சை மாவட்ட ஒரு படி என்பது பட்டணம் படி அல்லது பக்கா படியில் அரைப்படிதான்.
படி என்றதும் நினைவுக்கு வருகிறது. எங்கள் வீட்டுப் பெரியவர்கள் எங்களை, " புஸ்தகத்தை எடுத்து படி" என்று சொல்ல மாட்டார்கள். "புஸ்தகத்தை எடுத்து வாசி" என்பார்கள்.
அதைப்போல நேரத்தை நாழி என்பார்கள். "இதை முடிக்க இவ்வளவு நேரமா?" என்பது, " "இதை முடிக்க இத்தனை நாழியா?" என்று கேட்கப்படும். நாழிகை என்பதன் சுருக்கமாக இருக்கலாம்?
எல்லாவற்றையும் என்பதை சப்ஜாடா என்பார்கள் ஏதோ ஹிந்தி வார்த்தையோ?
அதைப்போல வீட்டின் ஒரு அறையை 'காம்ரா உள்' என்பார்கள். பெரும்பாலும் அந்த அறை இருட்டாகத்தான் இருக்கும். எனக்கு என்னவோ அது கூட ஹிந்தியின்  மருவல் என்று தோன்றும். ஹிந்தியில் கம்ரா என்றால் அறை, அதைத்தான் காம்ரா உள் என்று மாற்றி விட்டார்களோ என்று சந்தேகம். 
பூரி(poori) என்பதை பூரி(boori) என்பார்கள்.
சப்பாத்தியில் ச வை அழுத்தி cha என்று உச்சரிக்காமல் sappathi என்பார்கள்.
ஷங்கர், ஷேகர், ஷாந்தி  எல்லோரும் சங்கர்(Sankar), சேகர்(Sekar), சாந்தி(santhi)தான். இதெல்லாம் பரவாயில்லை, Lathaவை Ladha என்பதும், Padmaவை Badma என்பதும், Prema வை Brema என்பதும் கொடுமை! 
எங்கள் வீட்டில் நாளைக்கு என்று சொல்ல மாட்டோம் பிச்சைக்காரனுக்கு என்போம். நாளை என்பது கடவுள் நமக்கு அளிக்கும் பிச்சை என்னும் உயர்ந்த பொருளில் சொல்லப்படுவது.
தஞ்சாவூர்க்காரியான நான் பாலக்காட்டுக்காரரை மணந்து கொண்டு எப்படி முழித்தேன் என்று பார்க்கலாமா?
ஏற்கனவே சொல்லி விட்டேன் நான் தஞ்சாவூர்க்காரி. என் கணவர் சென்னையில் பிறந்து வளர்ந்த அக்மார்க் பாலகாட்டுக்காரர்.
என்னை பெண் பார்க்க வந்தது என் பெரிய நாத்தனார் மற்றும் அவர் கணவர். என்னிடம் பேசிக் கொண்டிருந்த என் நாத்தனார்,"பாடுவாயா?" என்று கேட்டார். நான் மாட்டேன் என்பது போல தலையசைத்தேன். உடனே அவர் "படிக்கலையா?" என்றுதும் நான் அதிர்ச்சியடைந்தேன். அவரே மீண்டும் "பாட்டு படிக்கலையா?" என்று கேட்டதும்தான் கற்றுக்கொள்வதை இவர்கள் படிப்பது என்பார்கள் என்று புரிந்தது.
திருமணத்தின் பொழுது என் மச்சினர்களை எனக்கு அறிமுகப் படுத்தியபொழுது "இவன் ஒண்ணாமத்தவன், இவன் ரெண்டாமத்தவன், இவன் நாலாமத்தவன்" என்றார். எனக்கு சிரிப்பாக வந்தது. 
நாம் கடிகாரம் ஓடுகிறது என்போம், பாலகாட்டுக்காரர்கள் கடிகாரம் நடக்கிறது என்பார்கள். நாம் கடிகாரம் slowவாக ஓடினால், கிண்டலாக அது ஓடலை, நடக்கறது என்போம் :))
பரங்கிக்காய் என்னும் மஞ்சள் பூசணி அங்கே மத்தன்.
வெள்ளைப் பூசணி எளவன்.
எத்தனை என்பதை எத்தற என்பார்கள்.
அவிழ்ப்பது என்பதை அழிப்பது என்பார்கள். நமக்கு அழிப்பது என்றால் destroy என்றல்லவா பொருள்.
அதுகூட பரவாயில்லை, விளக்கேற்று என்பதற்கு விளக்கை கொளுத்து என்பது ரொம்பவும் அச்சாணியமாகப் படும்.
குழந்தைகள் சும்மா சுற்றிக் கொண்டிருந்தால், "என்ன வட்டக்க வட்டக்க வந்துண்டு?" என்பார்கள்.
ஊரைச் சுற்றுவதை 'தெண்டுவது' என்பார்கள். காரியமில்லாமல் ஊர் சுற்றுபவன் 'தெண்டி'
ஞாபகம் இல்லை - ஓர்மையில்ல
புரிந்ததா? - கிட்டியா? மனசிலாச்சா? வேகமாக பேசும் பொழுது நான் சொன்னேனிட்டியா? என்றாகி விடும்.
தாகம் எடுக்கிறது - தாகிக்கிறது
கும்பல் - தெரக்கு
நகரு - நீங்கு
சோம்பல் - மடி
போர்வை. - பொதப்பு
கோபம்  -  தேஷ்யம் 
கஷ்டம், கடினம்  - புத்திமுட்டு 
தேங்கா எண்ணெய்  -  வெளிச்சென்ணை 
"அவனை ஆரும் தொயரமா இருக்க விடறதில்ல" என்றால் அவனை யாரும் நிம்மதியா இருக்க விடுவதில்லை என்றாக்கம் அர்த்தம்.
"கோந்த.... சொல்லுடாப்பே" என்றால் "குழந்தை.... சொல்லுடாப்பா" என்று வாத்ஸல்யமாக சொல்வது. இதில் ஒரு விஷயம் என்னவென்றால் ஆண் குழந்தைகளைத்தான் இப்படி சீராட்டுவார்கள்.
நாம் குழந்தை குட்டிகள் என்போம். அவர்கள் குழந்தையை விட்டு விட்டு குட்டிகள் என்று மாத்திரம் சொல்வார்கள்.
நாம் குழம்பு என்பதை அவர்கள் கூட்டான் என்பார்கள். அதில் போடும் தான் 'கஷ்னம்'. அவர்களைப் பொறுத்தவரை குழம்பு என்பது தைலம்.
என்னைப் போன்ற ஒரு தஞ்சாவூர்க்காரி பாலகாட்டில் வாழ்க்கைப்பட்டு விட்டாள். அவளிடம் அவள் மாமியார், " அந்த கொழம்ப எடுத்து அள்ளைல தேய்ச்சு விடு" என்றதும் இந்தப் பெண் திடுக்கிட்டாளாம். குழம்பை ஏன் அள்ளைல தேய்க்கணும்? அள்ளை என்றால் என்ன? என்று அவள் குழம்பி, குழம்பை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு செல்ல,
"இதை ஏண்டி கொண்டு வந்த?"
"நீங்கதானேம்மா குழம்பை தேய்ச்சு விடச் சொன்னேள்..?"
"இது கூட்டானாக்கம்.. குழம்பு அலமாரில இருக்கும் பாரு"
அலமாரியில் குழம்பா..? என்று ஒரே குழப்பம். நல்ல வேளை அப்போது அவள் கணவர் வந்து குழம்பு என்றால் தைலம் என்றும், அள்ளை என்பது இடுப்பை குறிக்கும் என்றும் தெளிவு படுத்தினாரோ மாமியாரின் அள்ளை பிழைத்ததோ.
ஒரு காரியத்தை செய்து முடிப்பதை கழிச்சு கூட்டியாச்சு என்பார்கள். இந்தப் பதிவை நான் கழிச்சு கூட்டிட்டேன்னு தோணறது.:))
இந்தப் பதிவை நான் எழுதும்பொழுது முழுக்க முழுக்க பாலக்காட்டு வட்டார வழக்கில் பி.வி.ஆர். விகடனில் ஒரு தொடர் எழுதினாரே? என்ற நினைவு வந்தது. செல்வி சங்கர் அவர்கள் தனது பின்னூட்டத்தில் அந்தக் கதையை குறிப்பிட்டிருந்தார். கதையின் பெயர் 'ஆனந்த ஊஞ்சல்'என்பது அவர் சொன்னதுதான் நினைவுக்கு வந்தது. பாலகாட்டு பாஷை புரியாமல் அந்தக் கதையை படிப்பதை நிருத்திய நான் பாலக்காட்டில் வாழ்க்கைப்பட்டது வாழ்க்கையின் விந்தைதான். அந்தக் கதை யாரிடமாவது இருந்தால், படித்து விட்டுத் தருகிறேன். பி.வி.ஆரின் கதைகள் நெட்டிலும் கிடைப்பதில்லை:((