கணம்தோறும் பிறக்கிறேன் 

Showing posts with label வேண்டுதல். Show all posts
Showing posts with label வேண்டுதல். Show all posts

Sunday, September 11, 2022

விருத்தாசலம் விசிட்டும், மத்யமர் மீட்டும்

 விருத்தாசலம் விசிட்டும், 

மத்யமர் மீட்டும்

எனக்கு ஒரு பிராது கொடுக்க வேண்டியிருந்தது, அட! மத்யமரில் இல்லைங்க, விருத்தாசலத்தில் குடி கொண்டிருக்கும் கொளஞ்சியப்பரிடம். அதற்காக பெங்களூரிலிருந்து நானும், என் மகனும் செல்லலாம் என்று 
முடிவெடுத்த இரண்டு நாட்களிலும் செல்ல முடியவில்லை. ஆறாம் தேதி மாலை சென்னையிலிருக்கும் என் சினேகிதி ஒருவர் ஃபோனில் அழைத்து, அவரும் இன்னொரு தோழியும் எட்டாம் தேதி கொளஞ்சியப்பர் கோவிலுக்கு செல்ல விருப்பதாகவும், விரும்பினால் நானும் அவர்களோடு சேர்ந்து கொள்ளலாம் என்றும் கூறினார். அதனால் ஏழாம் தேதி பகல் 11:50 பஸ்ஸுக்கு டிக்கெட் புக் பண்ணி கொடுத்தார் மகன். 

சாதாரணமாக இரவில் கிளம்பும் பேருந்துகள் எலக்ட்ரானிக் சிட்டிக்கு கொஞ்சம் தாமதமாகத்தான் வரும். இது பகல் நேரம் என்பதாலோ என்னவோ அன்று டாணென்று வந்து விட்டது. ஆனால் (மிகப்பெரிய ஆனால்) 6:45க்கு வடபழனியை அடைய வேண்டிய பஸ் எட்டே முக்காலக்குத்தான் வட பழனியை அடைந்தது. வழியில் மழை மற்றும் வாகன நெரிசல் தாமதத்திற்கு காரணம் என்றார்கள். நான் கிண்டியில் இறங்கி வேளச்சேரியில் இருக்கும் என் தோழியின் வீட்டை அடையும் பொழுது கிட்டத்தட்ட பத்து மணியாகி விட்டது. 

மறுநாள் காலை 5:30க்கு கிளம்பினோம். வழியில் காலை உணவை முடித்துக் கொண்டோம். இதற்கிடையில் நான் விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவிலுக்குச் செல்லப்போவதை ஒரு காலத்தில் விருத்தாசலத்தில் வசித்த மத்யமராகிய திருமதி.சியாமளா வெங்கட்ராமன் அவர்களிடம் கூறியிருந்தேன். அவர் தற்சமயம் அங்கு வசிக்கும் மத்யமராகிய சந்திராவிடம் தெரிவித்திருக்கிறார்.  அவர் நான் பெங்களூரிலிருந்து வரும் பொழுதே என்னை கை பேசியில் அழைத்து நான் நேராக அவர் வீட்டிற்கு வர வேண்டும் என்று அன்போடு அழைத்தார். ஆனால் என்னோடு வந்தவர்கள் நேராக கோவிலுக்குச் சென்று விடலாம் என்றதால் நேராக கோவிலுக்குச் சென்று விட்டோம். அங்கே எங்களுக்கு முன்பே அவர் வந்து காத்திருந்தார். அந்த கோவிலின் நடைமுறைகளை எங்களுக்கு விளக்கி எங்களை உள்ளே அழைத்துச் சென்றார். விநாயகருக்கும், கொளஞ்சியப்பருக்கும் அர்ச்சனை செய்து பிறகு வெளியில் இருக்கும் முனீஸ்வரன் சன்னதிக்கு எங்களை போகச் சொன்னார்கள். முனீஸ்வரனுக்கு தீபாராதனை காண்பித்த பிறகு எங்கள் பிராது எழுதப்பட்ட சீட்டுகளை முனீஸ்வரன் சன்னதிக்கு எதிரே இருக்கும் மரத்தில் கட்டிய அர்ச்சகர் இரண்டு எலுமிச்சம் பழங்களை அங்கிருக்கும் சூலங்களில் குத்தி வைக்கப் சொன்னார். 

பிராது சீட்டுகள் கட்டப்பட்டிருக்கும் மரம்

ஒரு காலத்தில் கொளஞ்சி மரக்காடாக இருந்த இடத்தில் ஒரு பசு மாடு தன் காலால் ஒரு மேட்டை சிராய்த்து விட்டு பால் சொறிவதைக் கண்ட கிராம் மக்கள் அந்த இடம் தெய்வீக சக்தி பொருத்திய இடமாக இருக்க வேண்டும் என்று தீர்மானித்து, பலிபீடம் போன்ற அமைப்பை வழிபடத் தொடங்கி யிருக்கிறார்கள். உருவம் இல்லாவிட்டாலும் எந்த தெய்வ சாந்நித்தியம் கொண்டதாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள விரும்பி, ஆராய்ந்த பொழுது சுந்தரமூர்த்தி நாயனார் திருமுதுக்குன்றம் என்னும் இந்த இடத்தில் முதியவர்களாக இருக்கும் இவர்கள் நமக்கு என்ன பொருள் கொடுத்துவிட முடியும்? என்று நினைத்து வராமல் செல்கிறார். உடனே இங்கே உறையும் சிவபெருமான் தன் மகனாகிய முருகனிடம்,"சுந்தரன் என்னை மதிக்காமல் செல்கிறான், அவனை இங்கே வரச்செய்"  என்று பிராது கொடுத்தாராம். அந்த இடம் விருத்தாசல கோவிலுக்கு மேற்கே இருக்கும் மணவாளநல்லூர் எல்லை என்பது தெரிந்தது. எனவே இங்கு குடிகொண்டிருப்பது முருகன் தான் என்ற முடிவுக்கு வந்தார்களாம். தற்சமயம் அந்த பலிபீடத்திற்கு மேல் கிரீடம் ஒன்று வைத்து, வெள்ளியில் கண்களும் பொருத்தி, வேலும் சார்த்தியிருப்பதால் முருகனாக நம்மால் உருவகிக்க முடிகிறது.

சிவபெருமானே இங்கே பிராது கொடுத்திருப்பதால் மக்களும் தங்களுடைய நியாயமான கோரிக்கைகள் நிறைவேற இங்கே பிராது கொடுக்கும் பழக்கம் வந்திருக்கிறது.

திருமுதுகுன்றம் கோவில்


கண்டராதித்தன் கோபுரம் என்றதும் பொ.செ.தான் நினைவுக்கு வந்தது.

எங்கள் பிராத்தனையை அங்கு முடித்துக் கொண்டு வெளியே வந்த பொழுது நெய்வேலி ஜவஹர் பள்ளியில் கெமிஸ்ட்ரி ஆசிரியராக பணியாற்றிய திரு. நாகசாமி அவர்களும் அங்கு வந்தார். மத்தியமராகிய அவர் எங்கள் சந்திப்பை பற்றி ஏற்கனவே மத்யமரில் எழுதி விட்டார்.


நாங்கள் எல்லோரும் சந்திரா அவர்களின் வீட்டிற்குச் சென்றோம். என் தோழிக்கு முதலில் அங்கு சென்றால் நேரமாகி விடும் என்ற தயக்கம் இருந்தது. ஆனால் சந்திராவின் அன்பான உச்சரிப்பில் மனம் குளிர்ந்து விட்டார். அதிலும் தன் வீட்டில் விளைந்த வெள்ளை வெற்றிலையையும், எலுமிச்சம் பழத்தையும் சந்திரா கொடுத்த பொழுது என் தோழி குஷியாகி விட்டார். அவரிடமிருந்து வெற்றிலைக் கொடியை வேறு வாங்கிக் கொண்டார். திரு.நாகசாமி அவர்களோ, சகோதரிகளுக்கு சீர் கொடுப்பதை போல ஒரு தட்டு நிறைய பழங்களையும், பூவையும் எங்களுக்கு திருப்பாவை பாசுரம் ஒன்றைக் கூறி வழங்கினார். 

ஆழ்ந்து பிள்ளையார் கோவில்

நாங்கள் விருத்தகிரீஸ்வரர் கோவிலுக்குச் சென்று விட்டு ஊர் திரும்ப வேண்டும் என்பதால் அவர்களோடு அமர்ந்து ஆற அமர உரையாட முடியவில்லை என்பது கொஞ்சம் குறையாகத்தான் இருந்தது. இன்னொரு முறை நிதானமாக சென்று, விருத்தாசலம் மட்டுமல்லாமல் சுற்றியிருக்கும் தலங்களையும் தரிசித்து விட்டு வர விருத்தாம்பாள் சமேத விருத்தகிரீஸ்வரரும், ஆழத்து பிள்ளையாரும் அருள வேண்டும். 

பிரும்மாண்டமான விருத்தகிரீஸவரர் கோவிலையும் கூட அவசர அவசரமாகத்தான் தரிசனம் செய்தோம். திரும்பும் வழி முழுவதும் இன்னொரு தோழியாகிய ராணி ராம திலகம், "மத்யமர் இவ்வளவு பெரிசா? நாம் யார் என்றே அவர்களுக்குத் தெரியாது, மத்யமர் என்பதால் பாசத்தோடு நமக்கு இத்தனை உதவிகள் செய்திருக்கிறார்கள்!" என்று வியந்து கொண்டே வந்தார். 

யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே!’’ மத்யமரால் என்று கூறலாம்.